தமிழவன்
சமீபத்தில் நான் இலங்கையிலிருந்து வந்த ஒரு மனிதவியல் துறைசார்ந்த இதழைக் கண்ணுற்றேன்.அதன் பெயர் ‘பனுவல் ‘.இதனைக் கண்டபோது தமிழகத்தில் மனிதவியல் சார் துறை ஏன் வளராமல் உள்ளது என்ற கேள்வி உதித்தது.அதுபோல் இலங்கையிலும் கூட தமிழைவிட சிங்களத்தில்தான் மனிதவியல் என்னும் Humanities அதிகம் வளர்ந்துள்ளது என்றே தெரிகிறது.இந்த இதழ் கூட சிங்களத்தில் வரும் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது.
மனிதவியல் என்று நான் கூறுவது சமூகவியல், மானுடவியல்,தத்துவம்,வரலாறு,தொல்லியல்,பொருளாதாரம்,அரசியல் போன்றவைகளையாகும்.
இந்தத் துறைகள் தமிழில் வளராததால் அகில உலக அறிவு வளர்ச்சிக்கு வருங்காலத்தில் தமிழ் தகுதி இல்லாத மொழியாகிக் கொண்டு வருகிறது.தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் சமூகவியல்,தத்துவம்,மானுடவியல்,வரலாறு,பொருளாதாரம்,அரசியல் போன்ற துறைகள் போதிக்கப்படுகின்றன.ஆனால் ஒரு பல்கலைக் கழகத்தில் கூட தமிழில் ஆய்வு இதழ் ஒன்று இந்தத் துறைகளில் இருந்து வருவதாகத் தெரியவில்லை.உயர் ஆராய்ச்சி என்பது எல்லா இடத்திலும் ஆங்கிலம் வழி நடத்தப் படுவதே என்ற எண்ணம் உள்ளது. அப்படி ஆங்கிலத்தில் வரும் கட்டுரைகள் கூட உயர்ந்த தரம் உடையனவாக இல்லை.அவ்வப்போது, தமிழ்ப் பல்கலைக் கழகம் மட்டுமின்றிப் பிற பல்கலைக் கழகங்களிலும் தமிழ்ப்பேராசிரியர்கள் துணைவேந்தர்களாகப் பதவி ஏற்றுள்ளார்கள்.ஏதும் பயனில்லாத நிலை.
தமிழில் மனிதவியல் துறைகள் வளராததால் விளையும் இன்னொரு பெரிய ஆபத்து எல்லாரீதியான பண்பாட்டுக் கட்டுரைகளும் சோ என்ற ஹாஸ்ய நடிகர் நடத்தும் பத்திரிகையின், அல்லது ஏதோ ஒரு அரசியல் பத்திரிகையின் மொழி நடையைக் கொண்டிருக்கின்றன. இதனால் அரசியல் கட்டுரையென்பது கோபதாபத்தைத் தாண்டாத தனிநபர் அகந்தையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.ஒரு சமூகவியல் துறைப் பேராசிரியர் பெரியார் பற்றிக்கட்டுரை எழுத ஏன் தயங்கவேண்டும் ?.ஒரு தத்துவத்துறைப் பேராசிரியர் ஏன் தயங்க வேண்டும் ?சமூகவியல் துறைசார் பயிற்சிகள் கொண்டவரின் கட்டுரைகள் முற்றிலும் வேறாக இருக்கும் என்று சொல்லத்தேவையில்லை.அதுபோல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரசியல் துறை இருக்கிறது.தத்துவத்துறை இருக்கிறது.அனைத்துலக வெளியுறவுத்துறை இருக்கிறது.இவைகளில் பிறமொழியினர் இருந்தாலும் இருக்கும் கொஞ்சநஞ்ச தமிழர்களும் தாங்கள் செய்யும் ஆய்வுகளைத் தமிழ் மொழியில் வெளியிட முன்வராததற்கான காரணங்கள் எவை ?
என் கையில் இருக்கும் பனுவல் இதழ் தலையங்கத்தின் ஒரு பகுதி இது. ‘சர்வதேச மட்டத்திலும் பிராந்திய ரீதியாகவும் சமூக விஞ்ஞானம், மனிதப் பண்பியல் போன்ற துறைகளின் ஆய்வுப் புலம், கோட்பாடுசார் அணுகுமுறை,ஆய்வுமுறையியல்,கதையாடல் முறைமைகள்,வாசிப்புக்கள்,வாசிப்பின் அரசியல் ஆகியனவற்றில் பல்வித போக்குமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன ‘
இந்த இதழைப்பற்றியும் இதழை நடத்துபவர்களின் குறிக்கோள் பற்றியும் தெளிவாக விளக்கும் மொழிநடை. இந்தியத் தமிழின் பத்திரிகையியல் மொழிநடையிலிருந்து மாறுபட்ட நடை.அதாவது எதையும் படிப்பறிவில்லாதவர்களின் நோக்கில் பார்க்கும் இந்திய அரசியல் கட்சிகளின் நடையிலிருந்து மாறுபட்ட நடை. இந்தியத் தமிழில் பத்திரிகையியல் நடையின் நோக்கம் நமக்குத் தெரியும்.படித்தவர்களையும் படிக்காதவர்களாய் கற்பனை செய்து கொள்வது இதன் நோக்கம்.கீழ்த்தரமான
அரசியல்வாதியின் நோக்கு இது என்று சொல்லத் தேவை இல்லை.புரியாத நடை என்று சிறு பத்திரிகை மொழிநடையைக் கேலி செய்பவர்கள் இந்தப் பத்திரிகைத் தனத்தை விமரிசிப்பது இல்லை.பத்திரிகைத்தனம் மொழிநடையில் புகுவதை எப்போதும் விமரிசிக்கும் உஷார்குணம் நம்மிடம் இருக்கவேண்டும்.
நான் மொழிநடை என்று கூறுவது, சொல்வதை அழகாகக் கூறுவதை அல்ல. இது அலங்காரம் சார்ந்தது.நான் நடை என்பது இது அல்ல. சொல்வதை பொருள்வலிமையுடன் கூறுவது பற்றி.கடந்த பத்தாண்டுகளில் தமிழ் வாக்கிய முறையில் எந்த அளவு பொருள்கனம் வந்துள்ளது என்று யோசித்துப் பாருங்கள்.ஏதும் இல்லை. இத்துடன் சிறுபத்திரிகையில் ஒரு குழுத்தன்மை, அதாவது ஒருபோக்குக் குணங்கொண்ட மொழிநடை தோன்றியுள்ளது.குழுத்தன்மை வேறு, குழுத்தன்மை மொழிநடை வேறு. சிறுபத்திரிகைக் குழுத்தன்மை ஒருவகையில் ஆரோக்கியமானது.நான் அது பற்றிப் பேசவில்லை.குழுத்தன்மையே மொழிநடையாவது ஆரோக்கியமானது அல்ல. இது எதையும் நல்லது அல்லது கெட்டது என்று மட்டும் பிரித்துப் பார்ப்பது.
ஒருமுறை ஒரு பல்கலைகழகம் ஏற்பாடு செய்த பாரதிதாசன் பற்றிய கருத்தரங்கில் கட்டுரை படிக்க அழைதிருந்தார்கள்.அங்கு நான் இப்படி ஒரு வாக்கியத்தைச் சொன்னேன்: ‘நான் புதுக் கவிதை நோக்கில் கவிதை அழகியலைப் புரிந்திருப்பதால் முன்பு பாரதிதாசன் கவிதைகள் தேறாதவை என்று நினத்திருந்தேன்.இப்போது அப்படி நினக்கவில்லை. ‘ இந்த வாக்கியத்தைக் கேட்ட ஒரு பழந்தமிழ் பண்டிதர் எனக்குப் பதில் சொன்னார்.அவர் பதில் இது: ‘இப்படிப் பேசக்கூடியவர்களையெல்லாம் இங்கே யார் அழைத்தது ? ‘ அதாவது பாரதிதாசனைப் புகழக்கூடியவர்கள் மட்டுமே பாரதிதாசன் கருத்தரங்குகளுக்கு அழைக்கப்படவேண்டும் என்பது அந்த நபரின் கருத்து.
அதாவது பல்விதமான கருத்துக்கள் கருத்தரங்குகளில் வரவேண்டும் என்ற கருத்துக்குப் பதிலாகப் புகழ்பாடுதலை எதிர்பார்ப்பவர்களையே பார்வையாளர்களாகக் கொண்டிருக்கிறோம்.இந்த மொனோநிலை எப்படி வந்தது ?இது அரசியல் கட்சிகள் கொடுத்த மனநிலை என்று சொல்லலாமா ? எதையும் அரசியலாக்கிப் பார்க்க மட்டும் நமக்குத் தெரியும் என்பது சரியா ? அல்லது மதமனோநிலையா இது ?
இந்த மனநிலையை நான் மொழிநடை என்று நீட்சிப் படுத்தப்பட்ட அர்த்தத்தில் பயன் படுத்துகிறேன். இந்த மனநிலை மிகுந்த ஆபத்தானது.ஏன் ஆபத்தானது என்றால் பாரதிதாசனையே அடிப்படையில் கொச்சைபடுத்துகிறது என்பதுதான் என்வாதம்.பாரதிதாசன் வீரவழிபாட்டுக்கு வழிவைக்கிறது இந்த பார்வை.இன்று வரை ஒரு புத்தகம் கூட பாரதிதாசன் கவிஞர் என்ற நோக்கில் வராததற்கு இந்த வழிபாட்டுப் பார்வையே காரணம்.
ஒரு மொழியின் மொழிநடை புதுப்பிக்கபடாவிட்டால் அம்மொழியில் இந்தப் பழைய மத மனோநிலையும் கட்சி மனோநிலையும் தான் தொடரும்.சமீபத்தில் தமிழகத் தமிழில் பெரியார் பற்றிய விவாதம் நடைபெறுகிறது.அதில் இரு தரப்பினரும் மீண்டும் மீண்டும் ஒரே கருத்துக்களையே -ஒரே மொழிநடைலேயே- கூறுவதற்குக் காரணம் சமூக விஞ்ஞானத்தின், உணர்ச்சி கலக்காத விரிவான முறையியல்களின் பிண்ணணி இக்கட்டுரைகளில் இல்லை.ஒருவர் பெரியார் பயன் படுவார் என்று கூறுகையில் இன்னொருவர் பயன்படமாட்டார் என்பார்.இது கட்சிகட்டும் வேலையாகக் கடைசியில் கொச்சைப்பட்டுப் போகும்.இலங்கை சிங்களக் கருத்துருவம் அதன் ஒருபோக்குத் தன்மையால் தமிழர்களுக்கு எதிராய் போவது பற்றிய ‘பனுவல் ‘ கட்டுரைகளைப் படிக்கும் போது மனிதவியல் துறை களின் அறிவு வெளிச்சத்தில் மிகுந்த உணர்ச்சிவயப்படும் விஷயத்தைக் கூட சில சிந்தனை அளவு கோல்களை அடிப்படையாய் வைத்துப் பேசமுடியும் என்று புரிகிறது.உணர்ச்சி சார்ந்த ஒரு தலைப்புக் கூட பொதுமைப் பண்புகளை உருவாக்கி ஒரு விஞ்ஞான அடிப்படையை ஏற்படுத்தமுடியும்.
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் சமூகவிஞ்ஞான ஆய்வுக்குரிய நிறுவனங்களை மார்க்சீய அரசுகள் கட்சிப் பார்வையையும் தாண்டி, உருவாக்கியுள்ளன.இதுபோல் சிம்லாவில் உள்ள மனிதவியல் ஆய்வு நிறுவனம் ஒன்று உலகத்தரத்தில் ஆய்வாளர்களைக் கவர்ந்துள்ளது.டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு நினைவு நூலகம் வரலாறு மற்றும் மனிதவியல் ஆய்வுக்கு ஊக்கம் கொடுக்கிறது.ஆஷிஷ் நந்தி போன்றோர் இருக்கும் மனிதவியல் ஆய்வு நிறுவனம் டெல்லியில் உள்ளது. அதாவது வடக்கு, மனிதவியல் ஆய்வில், வாழ்கிறது.அந்த வகையில் தமிழகத்தில் மனிதவியல் துறைகள் வளராததற்குத் திராவிடக் கட்சிகளின் அறியாமைதான் காரணம். திராவிட மனிதவியல் ஆய்வுகள் ஒரு தனிக்குணத்துடன் அனைத்துலகத்தையும் கவரும் விதத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு உருவாகப் போகிறது என்று அப்பல்கலைக் கழகம் வந்தபோது நினைத்தவர்கள் ஏமாற்றப்பட்டார்கள்.
carlossa253@hotmail.com
- தெருவொன்றின் குறு நேர வாழ்வு
- சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்
- கீதாஞ்சலி (23) உனக்காகக் காத்திருக்கிறேன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:5)
- கடிதம்
- ஞானவாணி மற்றும் தமிழ்ப்பரிதி விருதுகள் -அறிவிப்பு
- சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்
- தமிழ் வாழ்க!
- கவிதைகளின் திசைக்காட்டி
- குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி – பகுதி 3
- பூமியில் மறைந்து கிடக்கும் புதையல் களஞ்சியங்கள்
- பெரிய புராணம் – 41 திருநாளைப்போவார் நாயனார் புராணம் (தொடர்ச்சி)
- ‘தறு ‘
- பாடங்கள்
- எறும்புக்கடி.
- ஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை ?
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி….
- மாநிலத்திலும் கூட்டாட்சி!
- ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் -கடைசிப் பகுதி
- உறவின் முறிவு
- புண்ணும் மீன்களும்
- வாமனர்கள்
- உதவி
- ஈஸுக்கா ரூமி