என் மூலையில் – கறுப்பு

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

கே. ஆர். மணி


[^^^^^^^^^^^^^^^^^^^^]

விசித்திரமான வியாபார கேந்திரமது.
கண்ணுக்குத் தெரியாமல் தொங்கும்
வெளவால்கள்,
நூலாம்படையில்லாமலே அந்திரத்தில்.

என் அறையின் அந்த மூலையில்
எப்போதும் கருப்பாய் அவன்
பயமுறுத்திக்கொண்டேயிருக்கிறான்.

இத்தனை வெளிச்சத்திலும்
அவன் இருட்டை
விற்றுக்கொண்டேயிருக்கிறான்.

A – இறந்துபோனதாய் நினைத்தோம்.
முற்றுப்புள்ளியாய் போய்விட்டதாய் நினைத்து
தூக்கிலிட்டுக்கொள்ள முயன்று
கமாவில் கால் இடறி விழுந்து
செமிக்கோலனாய் மாறிப்போனான்.
A – அவன் இறந்துவிட்டதாய் நினைத்தோம்
திரும்பிவந்துவிட்டான்.
[. , ;]

B – பாவம் நன்றாயத்தானிருந்தான்.
பின் ஏன் இறந்துபோனான்.
[ ! ! ! / / —– ]

C- சமவெளியில்தான் ஓடிக்கொண்டிருந்தான்.
தீடீரென மூச்சிரைத்து இடையில் உடைந்துபோனான்.
[ # # # ]

உட்கார்ந்திருந்தவர்களை விட
ஓடிப்போய் இறந்தவன் பரவாயில்லையென
தோன்றும்போதெல்லாம் என் அறைமூலையின்
கறுப்பு சிரிப்பது போலிருப்பது பிரமையா என்ன ?
[ ? ? ? ? ]

இப்படி நிறைய இறப்பின், பிழைப்பின்
மற்றும் பலவற்றின் பிரதிநிதியாய்
ஞாபகத்தீட்டலாய் மெளனமாய்
அவன் கறுப்பாய் அமர்ந்திருக்கிறான்.
[^^^^^^^^^^^^^ ]

நான் கவிதை எழுதும்போது,
இலக்கியம் படிக்கும்போது அவன்
என்னருகில் போர்வை உதறிவருகிறான்.
நான் வேகமாய் திரைமூடி மின்னஞ்சல் திறப்பேன்.
[@@@@@@@]


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி