எம்.ரிஷான் ஷெரீப்
ராத்திரி கனக்க மழை பெய்திருக்கவேணும்.நல்லாக் குளிரடிச்சது.அம்மா,வெள்ளனையோட திறந்து விட்ட ஜன்னல்லிருந்து வெயில் வரேக்க எவ்வளவு சுகமாக்கிடக்குது.இண்டைக்கு இன்னும் அவளைக் காணேல்ல.வழக்கமா இந்த நேரத்திற்கெல்லாம் அவளிண்ட கூட்டத்தோட வந்து இந்த ஜன்னலடியில நிண்டு கத்திக்கொண்டிருப்பாள்.
அங்க பாருங்கோ.றோட்டிலை பிள்ளையளெல்லாம் ஸ்கூல் போறது தெரியுதில்லே?இப்படித்தான் நானும் முன்ன ஸ்கூலுக்குப் போய்க்கொண்டிருந்தனான்.வடிவா வெள்ளச்சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு போவன்.அம்மாதான் எண்ணையெல்லாம் வச்சு,ரெண்டு பின்னல்லயும்,கறுப்பு ரிப்பன் வச்சுக் கட்டியனுப்பிவிடுவா.சைக்கிள்ல போகேக்க ரிப்பன் பறக்கும் தெரியுமே? அவ்வளவு கெதியா நான் ஸ்கூலுக்குப் போவன் அப்பயெல்லாம்.
*****
“வாங்கோ சிவாண்ணை,எப்படியிருக்கிறியள்? வெளிநாட்டிலிருந்து வந்துட்டியளெண்டு கேள்விப்பட்டனான் தான்.நாங்களே வரவேண்டுமெண்டு இருந்தம்.வயசுப்பிள்ளை ரோஷினியை எங்கே விட்டுட்டு வாரதெண்டுதான் யோசிச்சுக் கொண்டிருந்தனான்.
உவள் ராஜமக்கா வரேல்லியே? ”
“வந்தவள்.உவள் கோவிலடியில நிறைய ஊர்ப் பொண்டுகளோட கதச்சுக்கொண்டு நிக்குறாள்.கன நாளைக்குப் பிறகெல்லே ஊருக்கு வாரது.அதுவும் உந்தப் பொண்டுகள் சேர்ந்து கதைக்கத் தொடங்கிட்டுதெண்டால் நேரம் போறதே தெரியும்?அதுதான் நான் தங்கச்சி வீட்டுல நிக்குறன்.நீர் கதைச்சுப் போட்டு ஆறுதலா அங்க வந்து சேருமெண்டு சொல்லிப் போட்டு இங்க வந்தனான் ”
*****
ஏன் இண்டைக்கு மட்டுமிவள் இவ்வளவு தாமதமெண்டு தெரியேல்ல.நீங்கள் பார்த்தனீங்களே அவளை?
தினமும் அம்மா தார இரவுச் சாப்பாட்டின்ர மிச்சம் மீதிகள இந்த ஜன்னலைத் திறந்து சட்டென்று வெளியே கொட்டிட்டு மூடிவிடுவன்.ராவில ஜன்னலைத் திறந்து வச்சுக் கொண்டு நிண்டமெண்டா பேய்,பிசாசு,ஆவியெல்லாம் வீட்டுக்குள்ள வந்திடுமெண்டு தெய்வானப்பாட்டி சொல்லியிருக்கிறவ.போன கிழமை குண்டடிபட்டுச் செத்த சரோ அக்காவின்ற ஆவியும் வருமாம்.
அவளும் நானும் நல்ல சினேகம்.எங்கட வீட்டுக்கு அயலிலதான் அவளிண்ட வீடுமிருக்குது.அவ வீட்டுல வெள்ளைக் கொய்யா இருக்குது பாருங்கோ.அது பறிச்சதெண்டால் எனக்கும் நாலஞ்சு காய் சொப்பிங் பேக்ல போட்டுக் கொண்டு வந்து தருவா.
*****
” இஞ்சருங்கோ.சிவாண்ணை வந்திருக்கிறார்.நீங்க உட்காருங்கோ அண்ணை.அவர் முத்தத்துல கோடறிக்குப் பிடி போட்டுக்கொண்டு நிக்கிறாரெண்டு நினைக்கிறேன்.பிள்ளைகள் வரேல்லியே?”
” இருக்கட்டும்.அவர் வேலை முடிஞ்சு மெதுவா வரட்டும்.நானும்,ராஜமும் விடிய முன்னமே வெளிக்கிட்டு வந்துட்டம்.கோயில்ல சனம் கூட முன்னம் சேவிச்சுட்டு வந்துடனுமெண்டுதான் கெதியா வந்தம்.பிள்ளையள் தூங்கிக் கொண்டிருந்தவை.இரவே சொல்லியிருந்தம்.அதாலை தேட மாட்டினம்.”
“உந்த பெரிய அப்புச்சிப் பாட்டி,கிணத்தடியில வழுக்கி விழுந்து இடுப்பொடச்சிக் கொண்டவையில்லே.அப்ப இந்த ரோஷினியை சரோக்கிட்ட விட்டுட்டு ஓடிப்போய்ப் பார்த்துட்டு வந்தனான்.உங்கட பிள்ளையள் அங்கே நிண்டிச்சினம்.மாமி,மாமியெண்டு வடிவாக் கதச்சினம்.ஒரு நாளைக்கு இங்க கூட்டிக் கொண்டு வாங்கோவன் அண்ணை.சொந்த பந்தங்களையெல்லாம் அவையளும் தெரிஞ்சிக் கொள்ளவேண்டுமெல்லே.”
“ஓமோம்.இப்ப பரீட்சை சமயமெல்லே.அதனாலதான் விட்டுட்டு வந்தனாங்கள்.அவையளுக்கும் இங்க வரவேணுமெண்டுதான் கொள்ளை ஆசை.அதுகளை நாங்கள் கூட்டிக் கொண்டு போனாத்தானே உண்டு.எங்கேயும் தனியா அனுப்பப் பயமாக் கிடக்கு.”
*****
உங்களுக்குத் தெரியுமே…?உவள் சரோ கடைசியா வந்த நேரம்,நான் அம்மாக்கிட்ட மருதோண்டி வச்சு விடச் சொல்லி அடம் புடிச்சுக் கொண்டிருந்தனான்.உவள்தான் அரச்சு,சிரட்டையில கொண்டு வந்து,எண்ட உள்ளங்கைகள நீட்டச் சொல்லி வடிவா வட்டம் வட்டமா வச்சுவிட்டவள்.பாருங்கோ எவ்வளவு வடிவாச் சிவந்திருக்குதெண்டு.
என்னோடது வடிவான வெள்ளக் கையல்லோ.டக்கெண்டு சிவந்திடுமெண்டு அம்மம்மா சொன்னவ.நான் ஸ்கூலுக்குப் போற காலத்தில இப்படி மருதோண்டி வச்சுக் கொண்டு போனேனெண்டால் எண்ட வகுப்புல எல்லோரும் கைய நீட்டச் சொல்லி அழகு பார்ப்பினம்.அதுல உவள் ஜோதி..அதுதான் செல் விழுந்து குடும்பத்தோட செத்துப் போனாளே.உவள் என் கையை முகந்தும் பார்ப்பாள்.அவளுக்கும் என்னை மாதிரி மருதோண்டி வாசமெண்டால் கொள்ளைப் பிரியம்.
இப்பயும் எனக்கு சரோ அக்கா ஞாபகம் வரேக்கை இந்தக் கை ரெண்டையும் பார்த்துக் கொண்டிருப்பன்.வடிவா,சிவப்புச் சிவப்பா குட்டிக் குட்டி நிலாக்கள் மாதிரி இருக்கா? இது மாதிரித்தான் இப்ப சரோ அக்காவும் வானத்தில இருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருப்பா எண்டு அம்மா சொன்னவ.
*****
“வாங்கோ மச்சான்.எப்படியிருக்கிறியள்? முத்தத்துல கொஞ்சம் வேலையா இருந்தனான்.வந்து கனநேரமே? ”
“இல்லையில்லை.இப்பத்தான் வந்தனான்.என்ன மச்சானிது? கனக்க மெலிஞ்சு போய் நிக்குறியள்?”
“அதையேன் கேக்குறியள்? வாரத்துக்கு மூணு முறை கடைக்குச் சாமான் வாங்க டவுனுக்குப் போகவேண்டிக் கிடக்கு.மாசத்துக்கு ரெண்டு முறை உவள் ரோஷினியை கூட்டிக் கொண்டு மருந்தெடுக்க டொக்டரிட்ட போகவேண்டியிருக்கு.கடும் அலைச்சல் கண்டியளே.
ஏண்டாப்பா இங்கேயே நிக்குறீர்? போய்த் தேத்தண்ணி ஊத்திக் கொண்டு வாரும்.”
“ஓமோம்.குசினிக்குப் போகத்தான் இருந்தனான்.உவள் ராஜமும் வரட்டுமெண்டு இருந்தன்.இங்க பக்கத்துக் கோவிலடியில நிக்குறாளாம்.சரி.அவள் ஆறுதலா வரட்டும்.கதைச்சுக் கொண்டிருங்கோ.நான் தேத்தண்ணியோட வாறன்”
*****
என்னடாப்பா இது? காக்கை கரையுது முத்தத்துல.உந்தக் காக்கைச் சத்தம் கேட்டதெண்டால் என்றை சினேகிதி வரமாட்டாள்.முதல்ல உந்தச் சனியனை விரட்ட வேண்டும்.
“ச்சூ…ச்சூ…”
போற மாதிரித் தெரியேல்ல.என்ன பார்த்துக்கொண்டிருக்கிறியள்? கொஞ்சம் விரட்டிவிடுங்கோவன்.உதைக் கண்டால் அவள் வரமாட்டாள்.இந்த வீணாப்போனவையளக் கண்டா அவளுக்குச் சரியான பயம்.அதுலயும் கருப்பெண்டா எனக்கும் பயம்தான்.ராவைக்குக் கூட அம்மா பக்கத்துல படுத்தாலும் இருட்டில படுக்கமாட்டேன்.
இருங்கோ,இந்தப் பேனையால அவையளுக்கு வீசியடிக்கப் போறேன்.
*****
“பிள்ளைகள் வரேல்லியே?”
“இல்லை மச்சான்.உவள் ராஜமிண்ட தங்கச்சி செண்பகம் ஊரிலையிருந்து இடம்பெயர்ந்து வந்து இப்ப எங்கட வீட்டுலதான் தங்கியிருக்கிறவ.அவக்கிட்ட பிள்ளையளப் பார்த்துக்கொள்ளச் சொல்லிப் போட்டு வந்தனாங்கள்.”
“ஓமோம்.அது நல்லது.உவள் 19 வயசுப் பெட்டை சரோ,இந்த மூன்றாம் வீட்டு அறிவுத்தம்பியோட மகள் உப்படித்தான்.போன கிழமை அவரிண்ட கிழக்கு வளவுக்குள்ளயிருந்து தென்னஞ்சூள பொறுக்கிக்கொண்டு வாரனெண்டு போனவள்.ரொம்ப நேரமாகியும் காணேல்லயெண்டு எல்லா இடத்திலயும் தேடித் தேடிக் கடைசில ராத்திரி குண்டடி பட்டுப் பிணமாக்கிடந்தவள சுடுகாட்டிலிருந்து தூக்கிவந்தம்.வல்லுறவுக்குமாளாக்கியிருந்திச்சினம்.வீட்டிலிருந்தாளெண்டால் உவள் இங்கேதான் ரோஷினியோட விளையாடிக் கொண்டிருப்பாள்.நாங்கள் எங்கேயாவது போறதெண்டால் கூட ரோஷினியை உவள் கிட்டத்தான் விட்டுட்டுப் போவம்.பாவம் நல்ல பிள்ளை.”
“இந்தாங்கோ அண்ணை.தேத்தண்ணி ஊத்தேல்ல.வேப்பமரத்துல உந்த சாத்தாவாரி கனக்கக் கிடந்துச்சு.அதுதான் இடிச்சுக் கஞ்சி வச்சனான்.இந்தப் பனங்கருப்பட்டியோட குடிங்கோ அண்ணை.உடம்புக்கு நல்லது.வெளிநாட்டுல குடிச்சேயிருக்க மாட்டியள்.”
“ஓம் தங்கச்சி.இதையெல்லாம் கனநாளைக்குப் பிறகு குடிக்கிறனான்.முன்னம் அம்மா சுவையாச் செஞ்சுதருவா இதுபோல.வெளிநாட்டுல சோறே ஒழுங்காக் கிடைக்காது.”
*****
அட,பேனை வீசியடிக்கக் காக்கை பறந்திட்டுது.இங்க வாங்கோ.பாருங்கோ.அந்தக் கரண்ட் கம்பியில நிண்டு வெறிச்சுப் பார்த்துக்கொண்டு இருக்குதில்லே.உந்தக் கருப்பன்தான்.அடாடா பாருங்கோ.அதே கரண்ட் கம்பியில ஒரு வௌவால் தலைகீழாய்ச் செத்துக்கிடக்கு.உந்தக் காக்கைக்கு ஷொக் அடிக்காதே? மனுசருக்கெண்டால் ஷொக் அடிக்கும் தெரியுமே? நான் பார்த்திருக்கிறனான்.
உங்களோட கதைச்சுக் கொண்டு நிண்டதுல உவளை நான் மறந்துட்டன்.இன்னும் காணேல்லை.எனக்கு கவலையாக் கிடக்கு.பாருங்கோ,நீங்க இண்டைக்கு வந்த நேரமாப்பார்த்து இவள் வரேல்ல.தினசரி வாரவ.சிலநாள் நான் எழும்பமுன்னமே வந்து ஜன்னலடியில நிப்பாள்.பருப்புக் கடலை இருக்கேல்ல.அவளுக்கு அதுல கொள்ளை ஆசை.அவள் வந்தால் நான் அதத்தான் குடுப்பன்.
இண்டைக்கு உங்களுக்குக் காட்டோனுமெண்டு நினச்சன்.பாருங்கோ,இன்னும் வரேல்ல.
*****
“உவள் ரோஷினி எங்கே காணேல்ல? முன்னாடி நான் வந்தனெண்டால் மாமா,மாமாவெண்டு சொல்லிப் பின்னாலேயே திரிவாள்.இப்ப பதினேழு வயசு முடிஞ்சிருக்குமென்ன? என்ர பிள்ளை வாசனை விட ஒரு வயசுதானே குறைச்சல்? ”
“ஓமண்ணை.பதினேழு வயசு முடிஞ்சிட்டுது.கேள்விப்பட்டிருப்பியள்.ஸ்கூலுக்குப் போயிட்டுவரேக்க ‘ஐடிண்டி கார்ட் இல்ல,விசாரிக்கவேணும்’எண்டு ஆர்மியால தடுத்துநிறுத்தி முகாமுல கொண்டு போய் விசாரிச்சிருக்கினம்.கரண்ட் ஷொக் எல்லாம் கொடுத்திருக்கினம்.அதுல பிள்ளை நல்லாப் பயந்து போய் புத்தி பேதலிச்சுப் போயிட்டுது.பிள்ளை உயிரோட கிடைச்சதே போதுமெண்டு கூட்டிவந்துட்டம்.டொக்டரிட்ட காட்டிக் கொண்டிருக்கிறம்.”
*****
கேட்குதே? உங்களுக்குக் கேட்குதே? அவள் வந்திட்டாள்.கேளுங்கோ.உந்த சத்தத்தைக் கேளுங்கோ.பூ நெல்லி மரத்தடியிலிருந்து கொண்டு சத்தம் போடுறவை.இப்பப் பாருங்கோ.இஞ்சையும் வரும்.அந்தப் பருப்புக்கடலையை பக்கத்துல வச்சிருப்பமென்ன?அவளுக்குக் கொடுக்க வேணும்?
நான் எழும்பிக் கனநேரமாயிட்டுது.இன்னும் மூஞ்சைக் கூடக் கழுவேல்ல.உதுகளப் பாருங்கோ.வெள்ளனையே எழும்பி எவ்வளவு வடிவா என்னைத் தேடி வந்திருக்கெண்டு.அவள் வந்தால் நான் அவள் கூடக் கதைப்பன்.நீங்களும் கதையுங்கோ.சரியே?
*****
“குழப்படியேதும் பண்றவவே?”
“இல்லையண்ணே.அவளும் அவளிண்ட பாடுமெண்டு ரூமுக்குள்ளேதான் கிடப்பாள்.தனக்குத்தானே சத்தமா கதைச்சிக்கொண்டு இருப்பாள்.உங்களுக்கும் சத்தம் கேட்குதில்லே? உவள்தான் கதைக்கிறவள்.ராமு வீட்டு நாயைக் கண்டா மட்டும் கத்திக் கூச்சல் போட்டுடுவாள்.நீங்கள் வந்திருக்கிறது தெரியாதெண்டு நினைக்கிறேன்.இருங்கோ கூப்பிடுறேன்.
ரோஷினி,பிள்ளை இங்க வாங்கோ.யாரு வந்திருக்கினமெண்டு வந்து பாருங்கோ.”
*****
உவள் பெயரென்ன எண்டு கேட்க மாட்டியளே? முன்னம் நான் உவளை பாமா எண்டு கூப்பிட்டேன்.அவள் எனக்கு ஸ்கூல்ல நல்ல சினேகிதி.ஒருநாள் காணாமல் போயிட்டா.கடத்திட்டுப் போயிட்டினமாம்.அப்ப அவள் நினைவா பாமா எண்டு கூப்பிட்டேன்.இப்ப சரோ எண்டு கூப்பிடறனான்.
பாருங்கோ அந்த சாம்பல் குருவிதான்.நீங்களும் சரோவெண்டே கூப்பிடுங்கோ.இருங்கோ.அம்மா கூப்பிடுறா.யாரோ வந்திருக்கினமாம்.நான் ஓடிப்போய்ப் பார்த்துட்டு வாரன்.நீங்க சரோகிட்ட பேசிக்கொண்டிருங்கோ.அதுல இருக்கிற பருப்புக் கடலைய ஒவ்வொண்ணாப் போடுங்கோ.நான் கெதியா வாரேன்.சரியே?
****************
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
சொற்களின் விளக்கங்கள் :-
# கனக்க – அதிகமாக
# வெள்ளனை – காலைநேரம்
# பொண்டு – பெண்கள்
# கன நாள் – நீண்ட நாட்கள்
# ராவு – இரவு
# முத்தம் – முற்றம் / வீட்டின் வெளிப்புறம்
# கொள்ளை ஆசை – மிக விருப்பம்
# வடிவு – அழகு
# தேத்தண்ணி – தேனீர்
# குசினி – சமையலறை
# காக்கை – காகம்
# சாத்தாவாரி – ஒரு வகைக்கீரை
# கெதியாக – விரைவாக
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது !
- தாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு !
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் ? (கட்டுரை: 36)
- National Folklore Support Center – July 29th
- இசை பிழியப்பட்ட வீணை
- மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்
- வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”
- டிரைவருக்கு சலாம்
- OH! presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- பட்டிமன்றம்
- ‘a river flowing deep and wide’ premiere screening
- இவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி
- முனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி
- படைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்
- புத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்
- ‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா
- கண்ணதாசன் ரசித்த கம்பன் – 1
- “உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்
- சொல்லப்படாத மௌனங்களினூடே
- என் ஜன்னலின் சினேகிதி !
- கவிதைகள்
- சாவுகிராக்கி
- வழிப்போக்கன்
- நாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..
- திண்ணையர்கள்
- வயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்!
- தாஜ் கவிதைகள்
- வெயில் பிடித்தவள்
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்
- குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்