என் கணவரின் மனைவி!

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

ஜோசப்


“நீ என்னதான் விளக்கம் சொன்னாலும் நீ செஞ்சத என்னால ஒத்துக்க முடியலை தமி. மும்பையிலருந்து கைக்குழந்தையோட தனியா.. வர்ற வழியில ஏதாவது நடக்கக் கூடாதது நடந்திருந்தா உன் மாமனார் வீட்டுக்கு யார் பதில் சொல்றது.. ? நீ உன் புருஷன் வீட்டுக்கு உடனே திரும்பிப் போறதுதான் நல்லது.. வந்ததுக்கு வேணும்னா ஒரு பத்து நாள் இருந்துட்டு போ.. உன் மாமனார் கிட்ட நானே ஃபோன்ல சொல்லிக்கறேன். என்ன சொல்றே ?”

தமி என்ற கெளத்தமி ஒன்றும் பேசாமல் மெளனமாய் தூணைப் பிடித்துக்கொண்டு நின்றாள். என்னத்த சொல்றது.. ? தானே முடிவு பண்ணிட்டு மத்தவங்க எல்லாம் என்ன, ஏதுன்னு கேட்காம அத செஞ்சிதான் ஆகணும்னு அப்பா பிடிவாதம் பிடிக்கறது ஒன்றும் புதுசில்லையே..

“என்னடி பதிலே பேசாம நிக்கறே ? மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்தியா.. இல்ல..”

“அவர் டூர் போயிருக்கார்.. நான் வரும்போது ஊர்ல இல்லை..”

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு தன் மனைவி வாசுகியைப் பார்த்து முறைத்தார் மூர்த்தி, ‘பார்த்தியாடி உன் பொண்ணு செஞ்சிருக்கற காரியத்தை.. ‘ என்பதுபோல்.

‘பொறுமையா இருங்க ‘ என்பதுபோல் பதிலுக்கு கெஞ்சிய மனைவியை கண்டுக்கொள்ளாமல் மகளைப் பார்த்தார்.

“உங்க மாமனாரும் இல்லையா ஊர்ல ? அவருக்காவது தெரியுமா, இல்லையா ?”

“நானும் ரமேஷும் தனியாத்தான் இருக்கோம்..”

“என்னடி சொல்றே ?” என்றனர் மூர்த்தியும் வாசுகியும் கோரசாக..

கெளத்தமி அதிர்ந்து போய் இருவரையும் மாறி, மாறி பார்த்தாள். “எதுக்கு இப்ப ரெண்டு பேரும் கத்தறீங்க ? தனியா போறது என்ன அவ்வளவு பெரிய குத்தமா ? அவங்க வீட்ல எல்லாருமே அப்படித்தானே இருக்காங்க.. ?”

மூர்த்திக்கு தலையைச் சுற்றியது. என்ன சொல்கிறாள் இவள்.. ? சம்மந்தி நான், என்னோட மூணு மகன்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகளெல்லாரும் கூட்டுக் குடும்பமா ஒரே வீட்ல இருக்கோம். உங்க மகளும் அப்படித்தானிருக்கணும்னு சொல்லித்தானே சம்மந்தம் பேசினாரு.. பின்ன எப்படி ?

“எவ்வளவு நாளா இது நடக்குது.. ?” என்றார் தன் மகளைப் பார்த்து..

“எது ?” என்று மெத்தனமாக கேட்ட மகளை எரித்து விடுவதுபோல் பார்த்தார்.

“தனிக்குடுத்தனம்.. ?”

“ஆறு மாசமாகுது..”

“அப்படான்னா போன வாரம் ஃபோன் பண்ணப்போ ஏன் சொல்லலை ?”

கெளத்தமி எரிச்சலுடன் தன் பெற்றோரைப் பார்த்தாள்.

“ஏம்பா, நான் இங்கருந்து போயி ரெண்டு வருஷமாகுது.. இப்பத்தான் வந்திருக்கேன். வந்தவளை ஹால்லயே நிக்க வச்சி இன்னும் எத்தனைக் கேள்வி கேப்பீங்க ? இந்த ரெண்டு வருஷத்துல ஒரு தடவையாவது என்னை வந்து பார்த்திருப்பீங்களா ? மாசத்துக்கு ஒருதரம் ஃபோன் பண்ணவேண்டியது. பேசிக்கிட்டிருக்கும்போதே பில் ஏறிடும் வச்சிடுறேன்னு கட் பண்ணவேண்டியது.. இங்கருக்கற மும்பைக்கு ஃபோன் பண்ணா ஆயிரம், ஆயிரமாவா பில்லு வந்துரும் ? எல்லாம் என் தலையெழுத்து..”

“ஏங்க, போறுங்க.. பேரப்பிள்ளை பயந்து போய் பாக்கறத பாருங்க.. நீங்க ஆஃபீசுக்கு போயிட்டு வாங்க, சாயந்திரம் பேசிக்கலாம்.. தமி, சுரேஷை என்கிட்ட குடுத்துட்டு நீ போய் குளிச்சிட்டு வா..”

“எல்லாம் நீ குடுக்கற இடம்.. ஏய் தமி, உன் மாமனார் வீட்டு ஃபோன் நம்பரைக் குடு.. நீ இங்க இருக்கற விஷயத்தை கூப்பிட்டு சொல்ல வேணாமா.. ? நீதான் எடுத்தேன், கவுத்தேன்னு வந்துட்டே.. ஃபோன் நம்பரைக் குடுத்துட்டு குளிக்க போ.. ஏய் வாசுகி.. பேரப்பிள்ளைக்கிட்ட அப்புறம் கொஞ்சிக்கலாம்.. போய் பலாரத்தை எடுத்துவை.. எனக்கு இன்னைக்கி ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.. ஏய் தமி, என்ன, ஃபோன் நம்பர் எங்க ?”

“நீங்க என் மாமனார் வீட்டுக்கு ஃபோன் பண்ண வேணாம்.. ரமேஷோட செல்லுக்கு பண்ணா போறும்.. இந்தாங்க நம்பர்..”

என்ன கொழுப்பு இவளுக்கு ? புருஷன் மட்டும்தான் வேணும்.. அவரோட குடும்பம் வேணாம்னு நினைக்கற பொண்ணுங்கபோலதான் போல இருக்கே இவளும் ? எவ்வளவு புத்திமதி சொல்லி அனுப்பினேன்.. ?

மாலை அலுவலகத்திலிருந்து வந்ததும் பேசிக் கொள்ளலாம் என்ற முடிவுடன் கெளத்தமி நீட்டிய டைரியிலிருந்த நம்பரைக் குறித்துக்கொண்டு தன் அறையை நோக்கி நடந்தார் மூர்த்தி..

அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்த கெளத்தமி தன் தாயைப் பார்த்தாள். “பத்மா எங்கேம்மா ? வந்ததிலேருந்து பாக்கவேயில்ல ?”

‘அவ கம்ப்யூட்டர் க்ளாசுக்கு போயிருக்கறா தமி. வர்றதுக்கு சாயந்திரம் மூனு மணி ஆயிரும். நீ போயி குளிச்சிட்டு வா.. நான் பலாரம் எடுத்து வைக்கிறேன். ‘

அவள் குளியலறையை நோக்கி செல்ல, அவளுடைய தாய் பேரனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு சமையலறையை நோக்கி நடந்தாள்.

***

கெளதமி குளித்துவிட்டு வருவதற்குள் அவளுடைய தந்தை புறப்பட்டு போயிருந்தார்.

அவளுடைய தாய் உணவு மேசையில் எடுத்து வைத்திருந்த பலகாரத்தை மெளனமாக சாப்பிட்டு முடித்தாள்.

சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று சிங்க்கில் வைத்துவிட்டு கைகளைக் கழுவினாள்.

‘இப்பல்லாம் அப்பா பகல் உணவையும் கையிலேயே கொண்டு போய்டறாரு தமி. அதனால காலையிலேயே எல்லாருக்குமா சேர்த்து சமையல முடிச்சிருவேன். பத்மாவும் பகல் சாப்பாட்டுக்கு கொஞ்சம் போல தயிர் சாதம் எடுத்துக்கிட்டு போயிருவா. அதனால பகல் முழுசும் நான் ஃப்ரீதான். இன்னைக்கி உனக்கு வேண்டியத செய்யறேன். உனக்கு என்ன வேணும் சொல்லு. மார்க்கெட்டுக்கு போய்ட்டு வரேன். ‘ என்ற தன் தாயைப் பார்த்தாள்.

அம்மாவுக்கு எப்பவும் சாப்பாட்டு யோசனைதான். உலகமே தெரியாத அப்பாவி. அப்பா என்ன சொன்னாலும் சரிங்க என்று தலையாட்டும் ஒரு சராசரி வீட்டுத் தலைவி.

அதனால்தானோ என்னவோ அப்பா கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில் வீட்டில் தான் வைத்ததுதான் சட்டம் என்றும் தனக்கு என்ன சரி என்று தோன்றியதோ அதுதான் வீட்டிலிருந்த எல்லோருக்கும் நல்லது என்பது போலும் நடந்துக் கொள்வார்.

அப்படித்தான், கெளதமி மூன்று வருட பி.காம் படித்து முடித்தவுடன் சி.ஏ.வுக்கு படிக்கலாம் என்ற ஆசையை வெளியிட்டபோதும் நடந்துக் கொண்டார்.

‘ஏய் என்ன நீ ? எத்தனை நாளா இந்த பழக்கம் ? நீயா முடிவெடுத்துட்டு அப்ளிகேஷனையெல்லாம் வாங்கிட்டு வந்து நிக்கறே ? அப்ப, வீட்ல நான் எதுக்கு இருக்கேன் ? அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. வீட்ல ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வைக்கறேன். பேசாம வீட்லருந்தே எதையாவது படி. இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு அம்மாவோட சமையல் பக்குவத்தையெல்லாம் படிச்சிக்கோ. அதுக்கப்புறம் கல்யாணம். சொல்லிட்டேன் ‘ என்றார் கோபத்துடன்.

கெளதமிக்கு கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டாள். ‘என்னப்பா நீங்க ? பி.காமுக்கும் கம்ப்யூட்டருக்கும் என்ன சம்பந்தம் ? எனக்கு சி.ஏ. படிச்சிட்டு ஒரு வேலைக்கு போணும். இருபத்தியேழு வயசு வரைக்கும் வேலை செய்யணும். அட்லீஸ்ட் பத்மா படிச்சி முடிச்சி வேலைக்கு போற வரைக்கும். அதுக்கப்புறம் நீங்க யார சொல்றீங்களோ அவரையே கல்யாணம் பண்ணிக்கறேன். ப்ளீஸ்ப்பா. ‘ என்று கெஞ்சினாள்.

மூர்த்திக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. என்ன கொழுப்பு இவளுக்கு ?. இவளா முடிவு பண்ணதுமில்லாம என் மூஞ்ச பார்த்து பேசறதுக்கு என்ன தைரியம் ? இத முளையிலேயே கிள்ளியெறியலே, அவ்வளவுதான். இவளைப் பார்த்து பத்மாவும் கெட்டாலும் கெட்ருவா.

சிறு வயதிலிருந்தே கெளதமி தன்னை மாதிரிதான் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. அவர் என்ன சொன்னாலும் கேட்காமல் அடம் பிடித்து அடி வாங்குவாள். ஏழு வயதிலேயே தன்னுடைய ஓங்கிய கையை எட்டிப் பிடித்துக் கொண்டு அடியிலிருந்து தப்பி விடுவாள். படிப்பில் படு சுட்டியாக இருந்ததாலும், அடிக்கடி நோய்வாய் பட்டு மெலிந்த தேகத்துடன் இருந்ததாலும் அவளை அவர் அதிகமாக அடித்ததில்லை.

பத்மா அதற்கு நேர் எதிர். அவள் அச்சாய் பார்ப்பதற்கு மட்டுமல்ல குணத்திலும் தன் தாயைக் கொண்டிருந்தாள். அடிக்க கை ஓங்குவதற்கு முன்பே அடங்கி ஒடுங்கி மூலையில் உட்கார்ந்துக் கொண்டு அழுவாள். மூர்த்திக்கு, பாசாங்கா பண்றே என்று மேலும் அடிக்கத்தான் தோன்றும்.

மூர்த்தி தன் எதிரில் நின்ற கெளத்தமியைப் பார்த்தார். அவளுடைய முகத்திலிருந்த உறுதியைக் கண்டு சற்றே பயந்தார். இவ சரிவர மாட்டா. எவ்வளவு சீக்கிரம் கல்யாணத்த பண்ணி அனுப்பறமோ அவ்வளவுக்கு நமக்கு நல்லது. தோளுக்கு மேல வளர்ந்த பொண்ண எப்படி கை நீட்டி அடிக்கறது ? தீவிரமா மாப்பிள்ளைப் பார்க்க வேண்டியதுதான். அதுவரை அவள் போக்கிலேயெ செல்வோம் என்று நினைத்தார்.

‘சரி.. நீ அந்த அப்ளிகேஷன ஃபில் பண்ணி குடு. போட்டு பாக்கலாம். ‘ என்றார்.

கெளதமி சந்தேகத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள். என்ன இது ? என்னைக்குமில்லாம.. முதல்ல வேணான்னுட்டு இப்ப சரிங்கறார். அப்பா கண்ணைப் பார்த்தா என்னமோ திட்டம் போடறாப்பல இருக்கு ? சரி. தெரிஞ்சா மாதிரி காட்டிக்க வேண்டாம். என்னதான் பண்றாங்கன்னு பார்ப்போம் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

அப்புறம் தனக்கு நுழைவுத் தேர்வுக்கு அழைப்பே வரவேயில்லையே என்று விசாரிக்க சென்றபோதுதான் தெரிந்தது தன்னுடைய படிவத்தை அப்பா அனுப்பவேயில்லை என்பது.

இதற்கிடையில் அவளை பெண் பார்க்க வந்தபோதும் அப்பா தான் சி.ஏ. படிக்க விரும்பியபோது சம்மதித்தாரே என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு பெண் பார்க்க வந்த மும்பை வீட்டார் முன்பு நல்ல பெண்ணாய் நடந்துக் கொண்டாள்.

சி.ஏ. வுக்கான விண்ணப்பப் படிவத்தை அனுப்பவேயில்லை என்பதையறிந்த கெளதமி அன்று மாலை அவளுடைய தந்தை வரும்வரைக் காத்திருந்து சண்டைக்கு போனாள்.

ஆனால் மூர்த்தியோ ஒன்றுமே நடவாதது போல், ‘ஆமா அனுப்பலை. அதுக்கென்ன இப்போ ? உன்னைப் பெண் பாக்க வந்தவங்க ரொம்பவும் நல்லவங்களா தெரிஞ்சாங்க. அவங்க உன்னைப் பிடிச்சிருக்குன்னும் சொன்னவுடனேதான் அனுப்ப வேணாம்னு தோனிச்சி.. அனுப்பலை.. ‘ என்றார் சர்வசாதாரணமாக.

‘சுத்தப் பொய் ‘ என்று அலற வேண்டுமென்று தோன்றியது கெளதமிக்கு. ஆனால் பயன் ஒன்றுமில்லையென்று தெரியும். துக்கத்தை மென்று மிழுங்கினாள். பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு இந்த வீட்டிலிருந்து போனால் போதும் என்ற முடிவுக்கு வந்து அவர் பார்த்த மாப்பிள்ளையையே திருமணம் செய்துக் கொண்டு போனாள்.

‘என்ன தமி, என்னம்மா யோசிக்கறே.. நான் கேட்டது கூட உன் காதுல விழல போலருக்கு. ‘

கெளதமி தன் நினைவுகளிலிருந்து மீண்டு தன் தாயை நோக்கினாள். ‘எ.. என்னம்மா கேட்டாங்க ? ‘

வாசுகியின் முகத்தில் கவலையின் சாயல் படிந்தது. தன் மகளையே கலக்கத்துடன் நோக்கினாள். நாம பேசுறது கூட கேக்காம அப்படியென்ன யோசனை இவளுக்கு ?

‘உனக்கு வேண்டியத மார்கெட்டுக்கு போயி வாங்கிட்டு வந்து சமைக்கறேன்னு சொன்னேனே தமி.. ‘

‘ஒன்னும் வேணாம்மா.. இருக்கறதே போறும். அப்பா வந்த பிறகு பார்க்கலாம். ரமேஷ் அப்பாகிட்ட என்ன சொல்றார்னுங்கறத பொறுத்திருக்கு.. இப்ப மனசும் உடம்பும் ரொம்ப அசதியாயிருக்கும்மா.. என்ன இப்ப எதுவும் கேக்காதீங்க.. அப்பா வரட்டும், விளக்கமா சொல்றேன். இப்ப நான் போய் தூங்கறேன். பத்மா கட்டில்லயே படுத்துக்கறேம்மா. அவ வந்ததும் எழுப்புங்க.. ‘

‘தமி.. நில்லும்மா.. என்னன்னு எங்கிட்ட சொல்லேன்.. ‘

தான் சொல்லுவது கேட்காதது போல் சென்ற அவளையே பார்த்துக் கொண்டு நின்றாள் வாசுகி..

‘உடம்பும், மனசும் அசதியாயிருக்கும்மா.. ரமேஷ் அப்பாகிட்ட என்ன சொல்றாருங்கறத பொறுத்திருக்கு.. ‘ என்ற கெளதமியின் வார்த்தைகள் அவளையே சுற்றி, சுற்றி வந்தன..

தொடரும்..

(2)

மூர்த்தி அன்று அலுவலகத்திலிருந்து வீடு வந்து சேர்ந்தபோது வழக்கத்தை விட வெகு நேரமாகியிருந்தது..

கெளத்தமியும் பத்மாவும் அவர்களுடைய படுக்கையறையிலமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை அறியாத அவர் வரவேற்பறையிலிருந்த சோபாவில் அமர்ந்து தன் மனைவியை அழைத்தார்.

சமையலறையில் வேலையாயிருந்த வாசுகி கைவேலையை அப்படியே போட்டுவிட்டு ஹாலுக்கு விரைந்தாள்.

தன் கணவனுடைய முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் எந்த மனநிலையில் இருக்கிறார், எதை, எப்படி பேசினால் அவருடைய கோபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று இந்த முப்பது வருடத்தில் தெரிந்து வைத்திருந்த வாசுகிக்கு இன்று அவருடைய முகத்தில் தெரிந்த அபிரிதமான கவலை ஒருவித அச்சத்தையே அளித்தது..

ஒன்றும் பேசாமல் அவரெதிரே போய் நின்று அவரே பேசட்டும் என்று காத்திருந்தாள்.

மூர்த்தி தன் காலனியையும் சாக்சையும் கழற்றி அவளிடம் கொடுக்க அவள் வாயிலருகே இருந்த அதற்குரிய அலமாரியில் வைத்து கதவை சாத்திவிட்டு திரும்பி வந்தாள்.

மூர்த்தி சோபாவில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டிருந்தார்..

வாசுகி இத்தனை வருடத்தில் அவரைக் கோபத்துடன் பார்த்திருக்கிறாள். ஆனால் இத்தனை வருத்தத்துடன் பார்த்ததில்லை..

இருப்பினும் அவரே சொல்லும்வரை தானாக கேட்க வேண்டாம் என்று காத்திருந்தாள்.

‘நாம மோசம் போயிட்டோம்னு நினைக்கிறேன் வாசுகி.. ‘ குரல் நடுங்க துடிக்கும் உதடுகளை மிகவும் சிரமப்பட்டு கடித்தவாறே தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தார் மூர்த்தி..

‘என்னங்க சொல்றீங்க ? ‘

மூர்த்தி பதில் பேசாமல் பத்மாவின் அறையை நோக்கி பார்த்தார். ‘தமி பத்மாகூட இருக்காளா ? ‘

வாசுகியும் பத்மாவின் அறையைப் பார்த்தாள். ‘ஆமாங்க.. பத்மா க்ளாஸ்லருந்த வந்ததிலருந்து குசுகுசுன்னு பேசிக்கிட்டே இருக்கா.. நா போனப்போ பத்மா நீங்க போங்கம்மான்னு விரட்டி விட்டுட்டா.. என்னன்னே தெரியலை.. அதான் நீங்க வந்ததும் பேசிக்கலாம்னு விட்டுட்டேன்.. நீங்க மாப்பிள்ளைக்கி ஃபோன் போட்டாங்களா ? ‘

மூர்த்தி தன் மனைவியைப் பார்த்தார். ‘போட்டேன். பிடி குடுக்காமயே பேசறார். கொஞ்ச நாளைக்கு தமி உங்க கூடவே இருக்கட்டும்னு சொல்றார். ‘

‘கொஞ்ச நாளைக்குத்தானேங்க.. அப்புறம் என்ன ? ‘

மூர்த்தி விரக்தியுடன் சிரித்தார். ‘நானும் அப்படித்தான் நினைச்சி ரெண்டுவாரம் கழிச்சி நீங்க வந்து கூட்டிக்கிட்டு போறீங்களா, மாப்பிள்ளைன்னேன். ‘

வாசுகி பதில் பேசாமல் அவரையே பார்த்தாள். என்னவோ நடந்திருக்கு.. இவர் சொல்லமுடியாமல் தடுமாறுகிறார்..

‘என்னங்க சொல்லுங்களேன்.. எதுக்கு யோசிக்கறீங்க ? ‘ என்றாள் அவருடைய அருகில் அமர்ந்து..

மூர்த்தி அவளுடைய கைகளைப் பிடித்து தன் கைகளில் பொதிந்துக் கொண்டார்… ‘நீ நினைக்கிறா மாதிரி அவ்வளவு சின்ன விஷயம் இல்லேடி வாசுகி.. ‘ குரல் மீண்டும் தடுமாற அவளுடைய கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டு லேசாக விசும்ப வாசுகி பதறிப் போனாள்.. அவருடைய முகத்தை நிமிர்த்தி தன்னை நோக்கி திருப்பினாள்.

‘என்னங்க.. ஏங்க… ? சொல்லுங்க.. என்னதான் சொல்றார் ? சொல்லுங்களேன். ‘

‘சொல்றேன்.. அவர் ஏதோ நோட்டாஸ் அனுப்பியிருக்காராம். அதுக்கு தமி என்ன சொல்றாளோ அதுப்படி நடக்கலாம்னு சொல்லிட்டு டிஸ்கனெக்ட் பண்ணிட்டார்.. ‘

வாசுகி பதறிப் போய் எழுந்து நின்றாள். ‘நோட்டாசா.. என்ன சொல்றீங்க ? எனக்கு ஒன்னும் புரியலை.. தமிய கூப்டு கேக்க வேண்டியதுதானே.. ‘ என்றவள் பத்மாவின் அறையை பார்த்தாள் ‘ஏய் தமி.. ‘ என்று குரலெழுப்பி கூப்பிட்டாள்.

தன் தாயின் குரல் கேட்டு பத்மாவின் அறையிலிருந்து வெளியே வந்த கெளத்தமி சோபாவில் தலை குனிந்து அமர்ந்திருந்த தன் தந்தையைப் பார்த்தாள். அறைக்குள் திரும்பி பத்மாவை ‘வா. அப்பா வந்துட்டார். ‘ என்று அழைத்து அவள் வெளியே வந்ததும் அவளுடன் சேர்ந்து தன் தந்தையை நோக்கி வந்தாள்..

மூர்த்தி நிமிர்ந்து தன் இரு மகள்களையும் பார்த்தார். ‘நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க. நான் கூப்பிட்டதுக்கப்புறம் வந்தா போதும்.. ஊம், போங்க.. ‘

வாசுகி ஒன்றும் புரியாமல் திரும்பி அவரைப் பார்த்தாள். ‘என்னங்க நீங்க.. ‘ என்று பேச வாயெடுத்தவளை தன் வலது கரத்தை உயர்த்தி தடுத்தார். பிறகு பத்மாவின் அறைக் கதவு அடைக்கப்படும் வரை காத்திருந்தார்.

பிறகு எழுந்து தன் மனைவியைப் பார்த்தார். ‘நீ இங்க வா.. ‘ என்று அழைத்துக் கொண்டு தங்கள் படுக்கையறையை நோக்கி நடக்க வாசுகி ஒன்றும் விளங்காமல் சமையலறைக்குள் சென்று எரிந்துக் கொண்டிருந்த ஸ்டவ்வை அணைத்துவிட்டு தன் கணவனை தொடர்ந்து அவர்களுடைய படுக்கையறைக்கு சென்றாள்.

அவள் உள்ளே வந்ததும் அறைக் கதவுகளை அடைத்து தாளிட்ட மூர்த்தி தன் மனைவியைப் பார்த்தார்.

‘இங்க வந்து படுக்கையில உக்கார். ஏன்னா நா இப்ப சொல்லப் போறது உனக்கு பெரிய அதிர்ச்சியா இருக்கும். ‘

வாசுகி போய் அவரருகே அமர்ந்து அவருடைய கைகளைப் பிடித்துக் கொண்டாள். ‘என்னங்க பெரிய குண்டா தூக்கிப் போடறீங்க ? ‘

மூர்த்தி தன் கைகளை விடுவித்துக் கொண்டு எழுந்து நின்றார். ‘அநேகமா மாப்பிள்ளை அனுப்பற நோட்டாஸ் விவாக ரத்து நோட்டாசாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. ‘

வாசுகி திடுக்கிட்டு என்ன பேசுவதென தெரியாமல் அவரையே பார்த்தார். என்ன சுளுவா சொல்றார் ? ஏன்.. ஏன் ? ஐயோ எம் பொண்ணுக்கு முழுசா முப்பது வயசு கூட ஆவலையே.. எல்லாம் இந்த வீம்பு பிடிச்ச மனுஷனால வந்த வினை.. எவ்வளவு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்.. அவ்வளவு தூரத்துக்கு போயி பொண்ண குடுக்கணுமா.. பொண்ண கண்ணுக்கு தெரியறா மாதிரி குடுக்கணும் பையனுக்கு கண்ணுக்கு தெரியாத எடத்துலருந்து எடுக்கணும்னு சும்மாவா சொன்னாங்க ? கேட்டாத்தானே ? எல்லாம் எனக்கு தெரியும்டின்னு அப்ப என் வாய அடைச்சிட்டு இப்ப எவ்வளவு ஈசியா.. விவாகரத்துன்னு சொல்றார்..

‘நீ என்ன யோசிக்கறேன்னு தெரியுது.. நீ எவ்வளவோ சொல்லியும் சரியா விசாரிக்காம கொள்ளாம பொண்ண கொடுத்ததுக்கு எனக்கு தண்டனை கிடைச்சாலும் பரவால்லையே.. எம் பொண்ணுக்கில்லே.. ‘ மேலே தொடர முடியாமல் சுய பச்சாதபத்தால் முகத்தை மூடிக்கொண்டு விசும்பிய கணவனையே பார்த்தாள் வாசுகி..

அழுங்க.. இப்ப அழுது என்ன பிரயோசனம் ? அழ வேண்டியது எம் பொண்ணாச்சேங்க.. இப்ப நா எங்க போயி சொல்லி அழறது.. எங்க வீட்ல என்னாடி பெரிசா நாங்க பார்த்த சம்பந்தத்தையெல்லாம் வேணாம், வேணாம்னு கழிச்சிட்டு போயும் போயும் கழனி பானையில கொண்டு போய் தலைய விட்டுட்டு முழிக்கறீங்களேம்பாங்களே..

தன் கணவனை வெறுப்புடன் பார்த்தாள். ‘இத நீங்களா சொல்றீங்களா..இல்ல மாப்பிள்ள சொன்னாரா ? ‘

மூர்த்தி தன் மனைவியைப் பார்க்க தைரியமில்லாமல் எதிரிலிருந்த சுவரைப் பார்த்தவாறு பேசினார். ‘அவர் நேரடியா சொல்லலைன்னாலும் மறைமுகமா சொல்லிட்டார். இதுல கொடுமை என்னன்னா.. நம்ம தமியோட நடத்தைய சந்தேகப்படுறாங்கடி.. அதைத்தான் என்னால தாங்க முடியலே.. அவர்கிட்ட பேசினதுமே ஆஃபீஸ்ல இருக்க முடியாம எழுந்து வந்துட்டேன்.. ஆனா வீட்டுக்கு வர தைரியமில்லாம பார்க்ல போய் உக்காந்திட்டு வரேன்.. என்னால தாங்க முடியலைடி.. தாங்க முடியலை.. நாம தமியை வளர்த்த விதம் என்ன.. இப்ப அவ வாங்கிட்டு வந்திருக்கற பெயர் என்ன ? நமக்கு ஏண்டி இந்த சோதனை.. ? ‘

வாசுகி தன் காதுகளையே நம்ப முடியாமல் தன் கணவனைப் பார்த்தாள். ‘என்னங்க சொல்றீங்க ? நம்ம தமியோட நடத்தையில சந்தேகமா ? அப்படான்னா ? ‘

மூர்த்தி திரும்பி தன் மனைவியைப் பார்த்தார். ‘மாப்பிள்ளை வீட்ல தமிக்கு பிறந்த குழந்தை மாப்பிள்ளையோடதில்லேங்கறாடி. ‘

‘ஐயையோ இதென்ன கொடுமை ? ‘ வாசுகி தன் இரு காதுகளையும் பொத்திக் கொண்டு மூடியிருந்த அறை வாசற்கதவைப் பார்த்தாள். எங்கே கெளத்தமி மூடிய கதவுக்கு அந்த பக்கம் நின்றுக் கொண்டிருப்பாளோ என்ற பயம்..

பிறகு தன் கணவனருகில் சென்று அமர்ந்தாள். குரலைத் தாழ்த்தி கேட்டாள். ‘ஏங்க உங்க கிட்ட மாப்பிள்ளையே இதெல்லாம் சொன்னாரா ? ‘

‘இல்லடி.. அவர் ரொம்ப சுருக்கமாத்தான் பேசினார். ‘

‘அப்புறம் ? உங்களுக்கெப்படி இதெல்லாம் தெரிஞ்சது ? ‘

‘மாப்பிள்ளை நான் ஆஃபீஸ்ல இருக்கேன். நீங்க வேணும்னா அப்பாக்கிட்ட பேசிக்குங்கன்னு வீட்டு ஃபோன் நம்பர குடுத்துட்டு உடனேயே வச்சுட்டார். அப்புறம் சம்பந்தி வீட்டுக்கு ஃபோன் பண்ணேன். ‘

‘சம்பந்தியா இப்படியெல்லாம் பேசினார் ? ‘

மூர்த்தி வழிந்தோடிய கண்ணீருடன் தன் மனைவியைப் பார்த்தார். ‘ஏய் வாசுகி.. இதுவரைக்கும் நான் கேக்காத வார்த்தைகளையெல்லாம் சொல்லி நம்ம குடும்பத்தையே கேவலமா பேசிட்டாங்கடி சம்பந்தியும் அவர் சம்சாரமும். காது குடுத்துக் கூட கேக்க முடியாம பாதியிலேயே வச்சிட்டேன்.. சரியான கேடு கெட்ட குடும்பமா இருக்கும் போலருக்கு.. நாமதான் சரியா விசாரிக்காம சாக்கடையில போய் விழுந்துட்டோம்.. மேல மேல கிளறுனம்னா நாத்தம்தான் வீசும்.. நமக்கு நம்ம தமியும் அவ குழந்தையும்தான் முக்கியம்.. அங்கருந்து என்ன லெட்டர் வருதுன்னு பாப்பம்.. அதுக்கப்புறம் என்ன செய்யலாம்னு முடிவு பண்ணலாம். அதுவரைக்கும் நான் சம்பந்திகூட பேசின விஷயம் நம்ம ரெண்டு பேருக்குள்ளயே இருக்கட்டும்.. என்ன நான் சொல்றது விளங்குதா ? ‘

வாசுகி பதில் பேசாமல் அவரையே பார்த்தாள்.

அடுத்த ஐந்து நிமிடம் படுக்கையறை சுவரில் இருந்த கடிகாரத்தின் பெண்டுலத்தின் டிக், டிக் ஓசையைத் தவிர வேறு சப்தம் எதுவுமில்லாமல் அறை நிசப்தமாய் இருந்தது..

மூர்த்தியும் வாசுகியும் அவரவர் நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தனர்.

பிறகு, ஒரு நீண்ட பெருமூச்சுடன் வாசுகி எழுந்து தன் கணவனைப் பார்த்தாள். அவர் இருந்த கோலத்தில் மேலும் பேசி அவர் மனதை நோகடிக்க செய்ய விரும்பாமல் முகத்தைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்துக்கொண்டு சமையலறையை நோக்கி சென்றாள்.

போகும் வழியில் தன் மகள்கள் இருந்த படுக்கையறைக் கதவைப் பார்த்தாள். மூடி இருந்த கதவு அவளுக்கு லேசான நிம்மதியைக் கொடுத்தது.. ‘தமி நாம பேசினத கேட்டிருக்க மாட்டாள்.. பாவம் குழந்தை.. யார் செய்த பாவமோ… முருகா.. ஏம்பா அந்த குழந்தைக்கு இந்த சோதனை.. ‘ என்று முனகியவாறு என்ன செய்து தன் மகளின் வருத்தத்தைப் போக்கலாம் என்று சமையலறையைச் சுற்றி ஒருமுறைப் பார்த்தாள். வயித்துக்கு என்ன போட்டு என்ன பிரயோசனம் ? மனசுலருக்கற பாரம் குறையவா போவுது ? என்றும் ஓடியது அவளுடைய சிந்தனை..

சமைக்கப் பிடிக்காமல் விளக்கை அணைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள். நடு ஹாலில் ஊஞ்சலில் எந்த சிந்தையுமில்லாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த பேரனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

சிறிது நேரத்தில் தனக்குப் பின்னால் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு திரும்பி தமியும் பத்மாவும் அவர்களுடைய அறையிலிருந்து வெளியே வருவதைப் பார்த்தாள். அவர்களிருவரையும் பார்த்து புன்னகை செய்ய முயன்று தோற்றாள்.

தமியும் பத்மாவும் அழுது கலங்கிப் போயிருந்த தன் தாயின் கண்களைப் பார்த்துவிட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

‘அப்பா எங்கம்மா ? ‘ என்றாள் பத்மா.

வாசுகி சிறிது நேரம் பதில் பேசாமல் தன் பேரனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

‘என்னம்மா அப்பா எங்கேன்னு கேட்டேனே ? ‘ என்றாள் பத்மா மீண்டும்.

‘அப்பாவுக்கு லேசா தலைய வலிக்குதாம். தூங்கப் போறேன்னுட்டார்.. ‘

பத்மா தன் தமக்கையைப் பார்த்தாள்.

‘அப்பா இவ்வளவு சீக்கிரம் தூங்கப் போய் நான் பார்த்ததே இல்லையே.. தலைய வலிக்குதுன்னா ஒரு மாத்திரைய கூட போடாம காப்பிய மட்டும் குடிக்கறவராச்சே அப்பா.. ‘

வாசுகிக்கு சட்டென்று கோபம் வர திரும்பி தன் இளைய மகளை முறைத்தாள். ‘என்னடி கேள்வி இது ? போய் ராத்திரிக்கு எதையாவது செய்.. எனக்கும் தலைய வலிக்குது.. என்னால சமையல் ஒன்னும் பண்ண முடியாது.. ‘

பத்மா வியப்புடன் தன் தாயைப் பார்க்க தமி ஒன்றும் பேசாமல் சமையலறையை நோக்கி நடந்தாள்.

வாசுகி, ‘தமி.. நீ எங்க போறே.. ஊர்லருந்து வந்த மொத நாளே நீ சமைக்கணுமா ? எல்லாம் பத்மா பாத்துக்குவா.. இருக்கற நாள்ல நிம்மதியா இருந்துட்டு போ.. அப்புறம் சம்பந்தி வீட்ல எங்கள ஏதாச்சும் சொல்லப் போறாங்க.. நீ இங்க வந்து ஊஞ்சல்ல உக்கார்.. ஏய் பத்மா, என்ன சிலையாட்டம் நின்னுக்கிட்டிருக்கே.. போடி.. அலமாரியில கோதுமை மாவு வச்சிருக்கேன். ஆளுக்கு மூனு சப்பாத்திக்கு எவ்வளவு வேணுமோ எடுத்து செய், போ.. சப்பாத்திக்கு உருளை கிழங்குன்னா தமிக்கு ரொம்ப பிடிக்கும்.. கூடயைில நேத்து வாங்குன கால் கிலோ கிழங்கு அப்படியேத்தான் இருக்கு.. கழுவி குக்கர்ல வை.. ‘ என்று மூச்சு விடாமல் பேசிவிட்டு கண்களில் பெருகி வந்த கண்ணீரை மறைக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

சமையலறையை நோக்கி நடந்த தமி தன் தாயின் குரல் கேட்டு நின்று திரும்பி பத்மாவைப் பார்த்தாள்.

பத்மா தன் தாயைப் பார்த்தாள் ‘என்னம்மா சொன்னீங்க… அக்கா இங்க இருக்கற வரைக்குமா ? அது எத்தனை நாள்மா ? இல்ல மாசமா ? தப்பு, தப்பு. வருஷமா ? ‘

வாசுகி கலங்கிய கண்களுடன் ‘அப்போ உனக்கும் தெரியுமா ? ‘ என்பதுபோல் தன் இளைய மகளைப் பார்த்தாள்..

‘ஆமாம்மா.. நீங்களும் அப்பாவும் ரூம பூட்டிக்கிட்டு பேசினதையெல்லாம் அக்கா என் கிட்ட விளக்கமாவே சொல்லிட்டா ? சரி அது இருக்கட்டும்.. இப்ப என்ன செய்யறதா உத்தேசம் ? இல்ல அப்பாவையே கேட்டுரட்டுமா ? ‘

‘போ.. போய் அந்த மனுஷனையே கேளுடி… கேட்டு ஏற்கனவே நொந்து போய் வெளிய வர பயந்துக்கிட்டு உள்ள கிடக்கற மனுஷனை கொன்னுறு.. ஏற்கனவே ப்ரஷர்.. இன்னும் கொஞ்சம் ஏறி ஆஸ்பத்திரியில கொண்டு போட்டுரு.. அப்புறம் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் ஓடறதுக்குத்தான் சரியாயிருக்கும்.. போடி.. போய் ராத்திரி சமையல் வேலையைப் பாரு.. இது ஒரு நா அழுது தீர்த்துக்கற விஷயமில்ல.. எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்கறதுக்கு.. இங்க பார் தமி.. அப்பா எல்லாத்தையும் சொன்னார்.. ஆரம்பத்துல அதிர்ச்சியாத்தான் இருந்தது.. ஆனா இப்ப அம்மா ரொம்ப தெளிவா இருக்கேன்.. என்ன வந்தாலும் வரட்டும்.. பார்த்துருவோம்.. நீ தைரியமா இரு.. மனச தளர விட்டுறாதே.. ‘ மூச்சு விடாமல் உச்ச ஸ்தாயியில் பேசிவிட்டு ஊஞ்சலில் அமர்ந்து மூச்சு விட முடியாமல் தடுமாறிய வாசுகியை நோக்கி ஒடி சென்றனர் பத்மாவும், தமியும்..

என்னம்மா.. என்னாச்சி.. ‘ என்றனர் கெளத்தமியும் பத்மாவும் ஒரு சேர.

இருவரின் குரலையும் கேட்டுவிட்டு கதவைத் திறந்துக் கொண்டு மூர்த்தியும் ஓடி வந்தார்..

வாசுகி மூவரையும் மலங்க, மலங்க பார்த்தாள்..

‘ஒன்னுமில்லைங்க.. கொஞ்சம் படபடப்பா வருது.. ஏய் பத்மா.. போய் கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வா.. ‘ என்ற வாசுகி அப்படியே நினைவிழந்து ஊஞ்சலில் சாய்ந்தாள்..

மூர்த்தி விரைந்து வந்து அவளைத் தாங்கிக் கொள்ள பத்மா சமையலறைக்குள் ஓடிச் சென்று அடுத்த நொடியே ஒரு குவளை குடிநீருடன் ஓடிவந்தாள்.

மூர்த்தி நினைவிழந்து கிடந்த தன் மனைவியின் முகத்தில் நீரை தெளிக்க சில நொடிகளில் வாசுகி கண் விழித்து எதிரில் இருந்த மூவரையும் பார்த்து பலஹீனமாக புன்னகை செய்தாள். பிறகு, தன் கணவனின் கையிலிருந்த குவளையை வாங்கி குடிக்க முயல.. கெளத்தமி அதை வாங்கி மெள்ள தன் தாயின் வாயில் ஊற்றினாள்..

‘எனக்கு ஒன்னுமில்லைடி.. நா அவ்வளவு சீக்கிரம் போயிட்டா நீங்கல்லாம் என்னடி பண்ணுவீங்க.. ‘ மேலே தொடர முடியாமல் குலுங்கி, குலுங்கி அழ ஆரம்பித்த வாசுகியைக் கட்டிப் பிடித்துக் கொண்டனர் பத்மாவும், கெளத்தமியும்..

‘பேசாம இருங்கம்மா… மறுபடியும் ஏதாவது ஆயிரப் போவுது.. நானும் அக்காவும் தைரியமாத்தான் இருக்கோம்.. நீங்களும் அப்பாவும்தான் இப்ப தைரியமா இருக்கணும்.. நீங்க அப்படியே படுத்திருங்க. நான் காப்பி போட்டு கொண்டுவரேன்.. அப்பா, நீங்க அம்மா பக்கத்துலயே இருங்க.. தமி நீ என் கூட வாயேன்.. ‘ என்றவாறு பத்மா சமையலறையை நோக்கி நடக்க கெளத்தமி அவளைப் பின் தொடர்ந்தாள்..

தொடரும்

(3)

‘இப்ப என்ன பண்றதா உத்தேசம் தமி ? ‘

காப்பிக் கோப்பைகளை தன் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சுவரில் சாய்ந்து நின்றிருந்த கெளத்தமி பதில் ஏதும் கூறாமல் சிறிது நேரம் தன் தந்தையையும் உடனிருந்த தன் தாயையும் பார்த்தாள்.

என்ன சொல்லணும்னு அப்பா எதிர்பார்க்கிறார் ? நான் மனசுல நினைச்சிக்கிட்டிருக்கறத சொன்னா அத தாங்கிக்கக் கூடிய சக்தி இவங்களுக்கு இருக்கான்னு தெரியலையே ?

‘என்ன தமி ? என்ன யோசிக்கறே ? ‘

‘நான் என் மாமனார் மேல கேஸ் போடலாம்னு பாக்கறேம்பா. ‘

மூர்த்தி அதிர்ச்சியுடன் தன் மகளையே பார்த்தார். ‘என்ன தமி சொல்றே ? ‘

கெளத்தமி தன் பெற்றோரின் அருகில் அமர்ந்திருந்த தன் தங்கையைப் பார்த்தாள். ‘கோ அஹெட். ‘ என்பதுபோல் தன் உதடுகளை அசைத்தாள் பத்மா.

‘ஆமாம்ப்பா. ஏற்கனவே கல்யாணம் ஆன ரமேஷ த்ரெட்டன் பண்ணி என்னை கல்யாணம் பண்ண வச்சதே அவர்தாம்ப்பா. ரமேஷ் அவரோட டிசிஷனுக்கு ஒத்துக்காம நிறைய போராடியிருக்கார். அவரோட ப்ரதர்சும் இதுக்காகவே அவர்கிட்ட சண்டைப் போட்டுக்கிட்டு பிரிஞ்சி போயிருக்காங்க. ஆனா அவர் எல்லாத்தையும் நம்மக்கிட்டருந்து மறைச்சி வெறும் பணத்துக்காக இந்த கல்யாணத்த பண்ணி வச்சிருக்கார். ‘

மூர்த்தி தன் காதுகளையே நம்பாமல் திரும்பி தன் மனைவியைப் பார்த்தார்.

நான் ஃபோன்ல கூப்டப்போ உங்க மக நடத்தை மேல நாங்க சந்தேகப்படறோம். அவளுக்கு பொறந்தது என் பையனோட குழந்தையான்னே எங்களுக்கு சந்தேகமா இருக்கு. ரெண்டு நாள்ல டைவர்ஸ் நோட்டாஸ் வரும். மரியாதையா இதுக்கு கன்செண்ட் பண்றேன்னு உங்க பொண்ண கையெழுத்துப் போட்டு அனுப்ப சொல்லுங்க. இல்லேன்னா உங்க பொண்ணோட நடத்தை சரியில்லைன்னு சொல்லி கோர்ட்ல ஆர்க்யூ பண்ண வேண்டிவரும்னு சொன்னானே. சே.. இவ்வளவு மோசமான ஆளா ? காலையிலேயே தமி மேல கோபப்படாம நிதானமா பேசியிருந்தா இந்த உண்மைய முதல்லயே தெரிஞ்சிக்கிட்டிருக்கலாம். அந்த ஆள ஃபோன்ல உண்டு இல்லைன்னு ஆக்கியிருக்கலாமே.

‘சரிம்மா. அதுக்கு எதுக்கும்மா கேசு கோர்ட்டுன்னு.. அந்த கேடு கெட்ட குடும்பத்துக்கும் நமக்கும் ஒன்னுமில்லைன்னு ஆய்ட்டா போறாதா தமி ? ‘ என்ற வாசுகி திரும்பி தன் அருகில் அமர்ந்திருந்த கணவரைப் பார்த்தாள். ‘என்னங்க, கேஸ்லாம் வேணாங்க. ‘

மூர்த்திக்கும் இது தேவையா என்று தோன்றியது. இருந்தாலும் தன் மனைவியின் கேள்விக்கு பதில் ஒன்றும் கூறாமல் தன் மகளையே பார்த்தார்.

‘நிச்சயமா வேணும்மா. ரமேஷ் இப்பவும் என்னோட வாழ தயாராயிருக்கார். அவரோட ஃபர்ஸ்ட் வொய்ஃப், அவங்களுக்கு தெரியாம என் கல்யாணம் நடந்திருக்குன்னாலும் எங்க ரெண்டு பேரையும் கல்யாணம் ஆன புதுசுல ரொம்ப நல்லா ட்ரீட் பண்ணாங்க. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னா மும்பையிலருந்து போயிருங்கன்னு என் கிட்ட பலதடவை சொல்லியிருக்காங்க. ரமேஷும் ரொம்பவும் நல்லவர்ம்மா. ஆனா அப்பாவ எதிர்த்து பேச தெரியாத கோழை. அவ்வளவுதான். அவர ப்ரெய்ன் வாஷ் பண்ணி, மிரட்டிதான் ரெண்டாவது கல்யாணம் பண்ண வச்சிருக்கார். அதுமட்டுமில்லப்பா. நான் கல்யாணம் முடிஞ்சி அவங்க வீட்டுக்கு போன ரெண்டாவது நாளே தாலியத் தவிர என் நகையை எல்லாம் வாங்கி அவர் பேர்லருக்கற லாக்கர்ல வச்சிட்டார். ரமேஷ் எதுக்குப்பா, அதான் என் பேர்லயே லாக்கர் இருக்கே அதுல வச்சிக்கறோம்னு சொன்னப்ப என் எதிர்லயே அவர கை நீட்டி அடிச்சிட்டார்ப்பா. ‘

‘என்ன தமி சொல்றே ? ‘ என்றார் மூர்த்தி. ‘ அப்புறம் ஏன் நாங்க ஃபோன் பண்ணப்பல்லாம் சிரிச்சிக்கிட்டு நான் நல்லாருக்கேம்பான்னு சொன்னே ? ‘

பத்மா குறுக்கிட்டு, ‘நாம ஃபோன் பண்ணப்பல்லாம் அக்காவோட மாமனார் பக்கத்துலயே வந்து நின்னுக்குவாராம்ப்பா. அக்கா பாவம் பயந்துக்கிட்டே சிரிக்கிறா மாதிரி நடிச்சிருக்கா. அதுமட்டுமில்லப்பா, அக்கா கர்ப்பமானதும் நாம எங்க நம்ம வீட்டுக்கு பிரசவத்துக்கு அனுப்புங்கன்னு சொல்வோமோன்னு நினைச்சி குழந்தை பிறக்கற வரைக்கும் நம்மக் கிட்டருந்து மறைச்சிருக்காங்க. குழந்தை பிறந்ததுக்கப்புறம் இது என் பையனோட குழந்தையே இல்லன்னு சொல்லி அக்காவ அவங்க வீட்ட விட்டே வெளிய அனுப்ப ட்ரை பண்ணியிருக்காங்க. ஆனா அதுவரைக்கும் கோழையா இருந்த அக்கா அத்தானோட அன்ணன்மார்ங்க சப்போர்ட்டோட அவர கூட்டிக்கிட்டு தனியா குடித்தனம் போயிருக்கா.. அன்னைலருந்து அக்கா யார்கிட்டயும் சொல்லிக்காம நம்ம வீட்டுக்கு ஓடி வர்ற வரைக்கும் அத்தான் ஊர்ல இல்லாதப்பல்லாம் ரவுடிகள வச்சி கொலை பண்ணிருவேன்னு மிரட்டியிருக்கார்ப்பா.. அதனாலதான் நானும் சொல்றேன், அவர சும்மா விடக்கூடாது. ஒன்னு இங்கருக்கற போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணணும். இல்லே கோர்ட்ல சட்டப்படி இந்த ரெண்டாவது கல்யாணம் செல்லாதுன்னு சொல்லி கேஸ் போடணும். நாம மட்டும் சும்மா இருந்தா மகனுக்கு மறுபடியும் இன்னொரு கல்யாணத்த பண்ணாலும் பண்ணுவாருப்பா. முதல்ல அக்காவும் எதுக்கு பத்மான்னுதான் சொன்னா. ஆனா நாந்தான் பிடிவாதமா இருக்கேன். அவர சும்மா விடக்கூடாது.. நீங்க சரின்னு சொன்னா அவங்க டைவோர்ஸ் நோட்டாஸ் வர்றதுக்குள்ள நாம அவர் மேல கேஸ் குடுத்துரலாம். என்னப்பா சொல்றீங்க ? ‘ என்றாள்.

மூர்த்தி தன் இரு மகள்களையும் மாறி மாறி பார்த்தார். பத்மாவுக்கு இந்த அளவுக்கு கோபம் வந்து அவர் பார்த்ததில்லை. தமி தன்னைப்போல் சட்டென்று கோபப்படுபவள். ஆனால் பத்மா அப்படியல்ல. கோபமே வராது. எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பாள். குரலை உயர்த்தாமலே பேசுவாள். அக்கம்பக்கதிலிருந்த அனைவரையும் தன்னுடைய மென்மையான புன்னகையாலேயே கவர்ந்து விடுவாள்.

ஆகவே முகத்தில் கடுங்கோபத்துடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவை திகைப்புடன் பார்த்தார் மூர்த்தி. தன்னுடைய எந்த சமாதானமும் அவளை அவளுடைய முடிவிலிருந்து மாற்றப் போவதில்லை என்பதை உணர்ந்தார்.

‘என்னப்பா ஒன்னுமே சொல்லாம உக்காந்துக்கிட்டிருக்கீங்க ? ‘

‘யோசிச்சி செய்யலாம்மா. இப்ப ரொம்ப நேரமாயிருச்சி. போய் படுங்க. நாளைக்கு எங்க கம்பெனி வக்கீல் சார்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து சொல்றேன். ‘

கெளத்தமி தன் தங்கையை நோக்கிச் சென்று அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டு நன்றியுடன் புன்னகைத்தாள். பிறகு தன் தாயின் கரங்களைப் பற்றிக் கொண்டு கவலைப்படாதீங்கம்மா என்பது போல் ஆதரவாய் அழுத்திக் கொடுத்தாள்.

வாசுகி தன் கண்களில் பெருகி வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் மகள்கள் இருவரையும் அணைத்தவாறே அவர்களுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.

தொடரும்

(4)

அடுத்த நாள் காலையில் மூர்த்தி அவசர அவசரமாக அலுவலகத்தற்கு செல்வதில் முனைப்பாயிருந்த நேரத்தில் வீட்டு வாசலில் ஒரு வாடகைக் கார் வந்து நிற்கும் ஒலி கேட்கவே எட்டிப் பார்த்தார்.

வண்டியிலிருந்து ஒரு ஆணும் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணும் இறங்குவதைப் பார்த்தார்.

திரும்பி சமையலறையில் வேலையாயிருந்த தன் மனைவியை அழைத்தார். ‘வாசுகி, இங்க யார் வந்திருக்காங்கன்னு பார். என் கண்ணாடிய பெட் ரூம்லயே வச்சிட்டேன் போலருக்கு. யார்னு முகம் சரியா தெரியமாட்டேங்குது. ‘

சமையலறையில் அவருக்கு வேண்டி சமைத்துக் கொண்டிருந்த வாசுகி கையை சேலைத் தலைப்பில் துடைத்தவாறு வாசலை நோக்கிச் சென்றவள் பாதி வழியிலேயே திரும்பி ஓடி வந்தாள்.

‘என்னங்க, மாப்பிள்ளையும் கூட ஒரு பொண்ணும் வந்திருக்காங்க.. உங்களுக்கு தெரியுதான்னு பாருங்க ? ‘

மூர்த்தி அதிர்ச்சியுடன் தன் மனைவியைப் பார்த்தார். ‘என்னடி சொல்றே ? மாப்பிள்ளையா ? நேத்து ஃபோன்ல பேசினப்பக் கூட இங்க வர்றதைப் பத்தி ஒன்னும் சொல்லலையே.. நீ போய் தமிய கூப்டு ‘ என்றவாறு அணிந்துக் கொண்டிருந்த ஷூவை அவசரமாக அணிந்துக் கொண்டு வாசலை நோக்கி விரைந்தார்.

காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் எப்படி நுழைவதென தயங்கி நின்ற ரமேஷயையும் அவனிடமிருந்து சற்றுத் தள்ளி அடக்கத்துடன் நின்றுக்கொண்டிருந்த பெண்ணையும் பார்த்த மூர்த்தி பதற்றத்துடன், ‘வாங்க மாப்பிள்ளை.. ஏன் அங்கேயே நிக்கறீங்க ? தயங்காம வாங்க. ‘ என்றவர் உடன் நின்ற பெண்ணை சலனமில்லாமல் பார்த்தார். ‘வாம்மா.. ‘

அதற்குள் தன் தாயின் குரலைக் கேட்டு தன் படுக்கையறையிலிருந்து வெளிவந்த கெளத்தமி வாசலை நோக்கி விரைந்தாள்.

அங்கே.. தன் கணவரையும் அவருடைய முதல் மனைவியையும் ஒரு சேரக் கண்டு ஒரு விநாடி திகைத்து நின்றாள். பிறகு சுதாரித்துக்கொண்டு புன்னகையுடன், ‘வாங்க ரமேஷ்.. வாங்க மாலதி ‘ என்றாள் இப்ப இவங்கள எங்க கூட்டிக்கிட்டு வந்திருக்கார்.. என்ற நினைப்புடன்.

‘ஹாய் எப்படி இருக்கே கெளத்தமி ? ‘ என்றவாறு பாசத்துடன் அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்ட அப்பெண் மூர்த்தியைப் பார்த்தும் பாசத்துடன் புன்னகைத்தாள்.

‘இது யாருடி பொண்ணு ? உன் மூத்தாவா ? ‘ என்று தன் காதில் கிசுகிசுத்த தன் தாயை ‘என்னம்மா நீ ? வந்ததும் வராததுமா ‘ என்றாள் அடிக்குரலில். பிறகு ‘ அம்மா, இவங்கதான் மாலதி.. ரமேஷோட.. ‘ என்று எப்படி முடிப்பதென தெரியாமல் விழித்தாள்.

வாசுகிக்கு புரிந்தது. இவள எதுக்கு மாப்பிள்ளை கூட்டிக்கிட்டு வந்திருக்காரு.. கொஞ்சம் கூட விவஸ்தையில்லாம.. அக்கம்பக்கத்தாளுங்களுக்கு முன்னால நம்ம மானத்த வாங்கவா ?

ரமேஷ் அவர்கள் மூவரையும் பார்த்து பொதுவாக புன்னகைத்தான். என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கி நின்றான்.

‘அங்கிள், நாந்தான் மாலதி.. உங்க மூத்த பெண் மாதிரின்னு வச்சிக்குங்க.. ஒரு முக்கியமான விஷயமாத்தான் நான் உங்க மாப்பிள்ளையை கடத்திக்கிட்டு வந்திருக்கேன்.. ‘ என்று கலகலவென சிரித்த அப்பெண்ணைப் பார்த்து விழித்தவாறு நின்றனர் மூர்த்தியும் அவருடைய மனைவியும்..

கெளத்தமி குறுக்கிட்டு மாலதியின் கையைப் பிடித்து ஹாலுக்கு அழைத்துச் சென்று ஊஞ்சலில் உட்காரவைத்துவிட்டு ரமேஷைப் பார்த்தாள்.

‘ஏங்க நிக்கறீங்க ? உள்ள போய் பையை வைச்சிட்டு குளிங்க.. ‘

ரமேஷ் அப்போதும் தயக்கத்துடன் தன் மாமனாரைப் பார்த்தான்.

மாலதி தன் அழகிய புருவங்களை உயர்த்தியவாறு தயங்கி நின்ற ரமேஷையும் விட்டேத்தியாய் நின்றுக்கொண்டிருந்த அவனுடயை மாமனாரையும் பார்த்தாள், ‘இங்க பாருங்க ரமேஷ். நீங்க இன்னமும் இந்த வீட்டு மாப்பிள்ளைதான்னு நினைச்சீங்கன்னா கெளத்தமி சொன்னா மாதிரி உள்ளே போங்க.. இதுதான் இனி நீங்க நிரந்தரமா தங்கப் போற வீடு.. உங்க வீடு.. உங்க கெளத்தமியோட வீடு.. தயங்காம உள்ள போங்க.. ‘

அவள் பேசுவதன் பொருள் விளங்காமல் மூர்த்தியும், வாசுகியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ரமேஷ் மேலும் அங்கு நிற்க சங்கடப்பட்டு கெளத்தமி காட்டிய அறையை நோக்கி நகர்ந்தான்.

எல்லோருடைய பேச்சுக் குரலையும் கேட்டு அவசர அவசரமாய் குளித்து முடித்து குளியலறையிலிருந்து வந்த பத்மா ரமேஷையும் ஹாலில் ஊஞ்சலில் அமர்ந்தவாறு ஆடிக்கொண்டிருந்த அழகிய பெண்ணையும் பார்த்து கெளத்தமியைப் பார்த்து புருவங்களை உயர்த்தினாள்.

அவளைப் பார்த்து ‘இங்க வா ‘ என்று சைகை செய்த கெளத்தமி, ‘மாலதி, இவதான் என் தங்கை.. பேரு பத்மா.. ஷி ஈஸ் டூயிங் எ ஷார்ட் டேர்ம் கம்ப்யூட்டர் கோர்ஸ்.. ஷி ஈஸ் நாட் லைக் மி.. வெரி ஸ்மார்ட்.. ‘ என்றாள்.

மாலதி அவளையும் பார்த்து பாசத்துடன் புன்னகைத்து அவளுடைய இரு கரங்களையும் பற்றிக்கொண்டாள்.

பிறகு மூர்த்தியைப் பார்த்து.. ‘அங்கிள் உங்கள அப்பான்னு கூப்டணும்போலருக்கு… உங்களுக்கு அப்ஜெக்ஷன் ஏதும் இல்லையே ? ‘ என்று வினவ மூர்த்தி ‘என்ன இந்த பெண் ? ‘ என்பதுபோல் தர்மசங்கடத்துடன் கவுத்தமியைப் பார்த்தார்.

கெளத்தமி தன் தந்தையைப் பார்த்து, ‘அப்பா, மாலதிய ஏன் ஒரு விரோதிய மாதிரி பாக்கறீங்க ? நான் நேத்து சொன்னா மாதிரி என் கல்யாணத்துல நடந்த குழப்பத்துக்கு இவங்க காரணமே இல்லப்பா. இவங்கள மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கறதுக்கு நீங்க குடுத்து வச்சிருக்கணும்.. சரின்னு சொல்லுங்கப்பா.. ‘ என்றாள்.

பத்மா கோபத்துடன் குறுக்கிட்டாள். ‘என்னக்கா நீ முட்டாத்தனமா பேசிக்கிட்டிருக்கே ? இவங்க இப்ப எதுக்கு இங்க வந்திருக்காங்க ? ஒரே வீட்லருந்து நாம ரெண்டு பேருமா இவருக்கு பொஞ்சாதியா இருக்கலாம்னு சொல்லவா ? ‘

‘ஏய் என்ன நீ.. வீட்டுக்கு வந்திருக்கறவங்கக் கிட்ட மரியாதையில்லாம பேசறே ? ‘ என்று குறுக்கிட்ட கெளத்தமியை தடுத்து நிறுத்தினாள் மாலதி..

பிறகு, ஊஞ்சலிலிருந்து எழுந்து ஹாலை ஒட்டி ஒடிய தாழ்வாரக் கூரையைத் தாங்கி நின்ற மரத்தூண்களில் ஒன்றைப் பற்றிக் கொண்டு தனக்குப் பின்னால் நின்றுக் கொண்டிருந்த நால்வரையும் பார்க்காமலே பேசினாள்.. படுக்கையறைக்குள் நுழைந்து உடை மாற்றிக்கொண்டு குளியலறைக்கு செல்ல வெளியே வந்த ரமேஷும் பத்மாவின் கோபக் குரலைக் கேட்டுவிட்டு அங்கேயே நின்றுக் கொண்டான்.

‘நீ கோபப்படுறதுல தப்பே இல்லை பத்மா.. உன் இடத்துல நான் இருந்திருந்தாலும் எனக்கும் உன்னை மாதிரித்தான் வரும்.. கோபம், ஆத்திரம்.. ஏன் கை நீட்டி அடிச்சிருந்தாலும் அடிச்சிருப்பேன்.. அப்படியொரு காரியத்தைத்தான் நானும் ரமேஷும் பண்ணியிருக்கோம்.. ‘ என்ற மாலதி திரும்பி மூர்த்தியைப் பார்த்தாள். ‘என்னப்பா.. நீங்க எங்கயோ கிளம்பிக்கிட்டிருக்கீங்க போல.. நான் சொல்ல வந்ததை கேட்டுட்டு போணும்னு நினைச்சீங்கன்னா… அது இப்போதைக்கு முடியாது.. அதுக்காக நீங்க ஆஃபீஸ்லருந்து வந்ததுக்கப்புறம் பேசிக்கலாம்னாலும்.. அதுவும் சாத்தியமில்லை… ஏன்னா நான் மதியானம் மூனு மணி ஃப்ளடை¢டுல பம்பாய் போயாகணும்.. ‘

மூர்த்தி ஒன்றும் விளங்காமல் கெளத்தமியைப் பார்த்தார். கெளத்தமிக்கும் ஒன்றும் புரியவில்லை. அவள் திரும்பி ரமேஷைப் பார்த்தாள்..

ரமேஷ் தயக்கத்துடன் மாலதியைப் பார்த்துவிட்டு பேசினான்.

‘ஆமாம் தமி.. மாலதியும் நானும் ம்யூச்சுவல் டைவோர்சுக்காக நேத்தைக்கி பேப்பர்ச பம்பாய் ஃபேமிலி கோர்ட்ல சப்மிட் பண்ணிட்டுத்தான் ஃப்ளைட் புடிச்சோம்.. இன்னும் ரெண்டு மூனு மாசத்துல டைவோர்ஸ் கிடைச்சிரும்னு வக்கில் சொன்னார்.. ‘ அவன் மேலே தொடர முடியாமல் தயங்க மாலதி அவன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள்.

மூர்த்தி, வாசுகி, பத்மா மற்றும் கெளத்தமி அப்போதும் ஒன்றும் விளங்காமல் தங்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றிருந்த மாலதியையே பார்த்தனர்.

‘அப்பா.. ரமேஷும் நானும் ஒருத்தரையொருத்தர் டாப்பா லவ் பண்ணோம்.. எனக்கு அப்பா, அம்மான்னு யாரும் இல்லை.. இருந்தாங்களான்னும் தெரியாது.. நான் ஒரு ஆர்ஃபனேஜ்ல வளர்ந்தவ.. ஆனா என்னை காலேஜ்வரைக்கும் படிக்க வச்சி எனக்கு ஒரு நல்ல வேலையையும் வாங்கி குடுத்தவங்க எங்க ஆர்ஃபனேஜ் மாடம்.. ரமேஷ நான் முதல் முதலா சந்திச்சப்போ என்னவோ அவருக்கும் எனக்கும் பூர்வஜன்ம உறவு இருந்தா மாதிரி ஒரு நெருக்கம் பார்த்த முதல் பார்வையிலேயே எனக்கு பட்டது.. ஆனா அவர் அப்பாவுக்கு பயந்த கடைசிப் பிள்ளை.. எம்.பி.ஏ முடிச்சிட்டு கைநிறைய சம்பாதிச்சிக்கிட்டிருக்கற பணங்காய்ச்சி மரம். ரமேஷோட அப்பாவ சந்திக்கறவரைக்கும் எதுக்கு இப்படி அப்பாவைப் பார்த்து பயப்படற பையனை சந்திச்சி அவன்கிட்ட மனச பறிகொடுத்தோம்னு தோணும்.. ஆனா அவர சந்திச்ச முதல் சந்திப்பிலேயே இந்த மாதிரி வில்லன் அப்பாவுக்கு பயப்படாம இருக்கறதுதான் கஷ்டம்னு நான் நினைச்சேன்.. அநாதையா, சக வயசு ஆம்பிளை பசங்களோட வளர்ந்த எனக்கு ஒரு ஆணைப் போல, ஏன் கொஞ்சம் அதிகமாவே தைரியம் இருந்ததுனால ரமேஷோட அப்பாவையும் மீறி ஒரு நாள் ரமேஷ கடத்திக்கிட்டுப் போயி கம்பெல் பண்ணி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.. கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகியும் அவர் தைரியமா அப்பா கிட்ட சொல்லவும் முடியாம என்னோடு சேர்ந்து வாழவும் முடியாம என்னை என்னோட ஹாஸ்டல்ல வந்து அடிக்கடி சந்திக்கறதும் அவர் டூர் போகும்போதெல்லாம் என்னையும் கூட கூட்டிக்கிட்டுப் போயி ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கறதுமா ஏறக்குறைய ஒரு வருஷம் பேருக்கு குடும்பம் நடத்துனோம்.. ‘

‘ஐயோ போறுமே இந்த கண்றாவியெல்லாம்.. இப்ப எதுக்கு வந்திருக்கான்னு கேட்டு சொல்லு தமி.. ‘ என்று கோபத்துடன் குறுக்கிட்ட வாசுகியைப் பார்த்து புன்னகைத்தாள் மாலதி..

‘என்னம்மா.. இப்படி கேட்டுட்டாங்க ? உங்க மாப்பிள்ளைய உங்கக்கிட்ட ஒப்படைச்சிட்டு போகத்தான் வந்திருக்கேன்.. இனி அவரோட வாழ்க்கையில குறுக்கிடமாட்டேன்னு சொல்லிட்டு போகத்தான் வந்திருக்கேன்.. ‘

‘என்ன மாலதி சொல்றீங்க ? அவர் டைவோர்ஸ்ங்கறார். நீங்க ரமேஷை என்கிட்ட ஒப்படைச்சிட்டு போறேங்கறீங்க ? அவசரப்பட்டு எதுக்கு இந்த முடிவு ? ‘ என்றாள் கெளத்தமி..

மாலதி பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் குறுக்கிட்டாள் பத்மா. ‘என்னக்கா நீ முட்டாத்தனமா பேசறே.. அவங்கதான் ரொம்ப தெளிவா சொல்லிட்டாங்களே.. ஏற்கனவே கல்யாணம் ஆயிருக்கறதை மறைச்சி வெறும் பணத்துக்காக உன்னை அத்தான் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு இவங்களும்தானே உடந்தையா இருந்திருக்காங்க.. இவங்க நினைச்சிருந்தா போலீசுக்கு போயி உன் கல்யாணத்தையே நிறுத்தியிருக்கலாமே.. அதுக்கு இந்த தண்டனை நியாயம்தான்.. அவங்க செய்ய வந்தத செஞ்சிட்டு போட்டும்.. நீ வேற குறுக்கிட்டு கெடுத்துறாத.. ‘

ரமேஷ் மாலதியைப் பார்த்து ‘பேசாமலிரு ‘ என்பதுபோல் கை அசைத்துவிட்டு பத்மாவைப் பார்த்தான்.

‘நீ கோபப்படுறதிலயும் நியாயம் இருக்கு பத்மா. ஆனா என்னை நிர்பந்தப்படுத்தி, மாலதியை ஆளை வச்சி கொன்னுருவேன்னு மிரட்டி, உங்கக்காவ கல்யாணம் பண்ண வச்சது எங்கப்பாதான்.. என்னோட கல்யாணம் நடக்கப் போறதே இவளுக்குத் தெரியாது.. இவங்களோட கம்பெனி இவள ட்ரெயினிங்க்னு சொல்லி ஒரு ஆறு மாசத்துக்கு நாக்பூருக்கு அனுப்பி வச்சத தெரிஞ்சிக்கிட்டு அந்த நேரம் பார்த்து என்னை கம்பெல் பண்ணி இங்க கூட்டிக்கிட்டு வந்து தமிய பொண்ணு பார்க்க வச்சி அடுத்த ஒரு மாசத்துலயே ஒரு பெரிய பொய்ய சொல்லி மாமாவ ஏமாத்தி, நாடகமாடி, இந்த கல்யாணத்த நடத்தி முடிச்சது எங்கப்பா.. ‘

அதுவரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த மாலதி பத்மாவை நெருங்கி வந்து அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டாள். ‘பத்மா.. உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை.. நீ என் மேல கோபப்படுறதுல எந்த தப்பும் இல்லை.. ஆனா நான் சொல்ல வந்ததை கேட்டுட்டு கோபப்படு.. அவ்வளவுதான் கேட்டுக்கறேன்.. ‘

பத்மா அப்போதும் திருப்தியடையாமல் அவளுடைய கரங்களை உதறி விட்டாள்.

மாலதி அதே புன்னகை மாறாமல்.. ‘இந்த மாதிரி ரிசப்ஷந்தான் இந்த வீட்ல கிடைக்கும்னு தெரிஞ்சி இவர் இங்க வர்றதுக்கு பயப்பட்டார்.. நாந்தான் எந்த எதிர்ப்பு வந்தாலும் சந்திக்க நானே தயார்னு நிக்கறப்போ உங்களுக்கு என்ன ரமேஷ்ன்னு இழுத்துக்கிட்டு வந்தேன்.. ‘ என்றாள்..

‘ஆமாம் தமி.. ‘ என்று தொடர்ந்தான் ரமேஷ்.. ‘அப்பா எனக்கு ரெண்டாவதா ஒரு கல்யாணத்தப் பண்ணி வைக்கப் போறார்னு தெரிஞ்சதுமே அதுவரைக்கும் அப்பாவ எதிர்த்துப் பேசாத என் அண்ணா ரெண்டு பேருமே தைரியமா அவர எதிர்த்து பேசினாங்க. அம்மாவும் பெண் பாவம் பொல்லாததுங்கன்னு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாங்க.. ஆனா ‘சீ..வாயை மூடு. அஞ்சி பைசா டவுரி வாங்காம கல்யாணம் பண்றதுக்காடி இவனை எம்.பி.ஏ வரைக்கும் பத்து பன்னிரண்டு லட்சம் செலவு பண்ணி படிக்க வச்சேன் ? இவன் படிச்ச பிசினஸ் ஸ்கூல்ல இவன் கூட படிச்சவன்க எல்லாம் கல்யாணம் பண்ன இடம் எங்கே… யாரையோ ஆஃபீஸ் காண்டான்ல பார்த்தானாம்.. பார்த்ததும் காதல் வந்துதாம்.. அவ கடத்திக்கிட்டு போயி கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சினாளாம் இவரு ஒத்துக்கிட்டாராம்.. அதுக்கு பேரு கல்யாணமாடி… ‘ன்னு எங்க வீட்லருக்கற எல்லாரையும் மிரட்டி.. அப்புறம் எப்படியோ குட்டிச்சுவரா போங்கன்னும் ரெண்டு அண்ணாவும் அடுத்த ரெண்டு வாரத்துல வீட்டை விட்டு போயும் அப்பா அவரோட பிடிவாதத்துலருந்து இறங்கி வரவே இல்ல.. ‘

‘அவரோட அப்பா சொன்னத அப்படியே ஞாபகம் வச்சிக்கிட்டு சொல்றார் பார்.. கெளத்தமி.. ‘ என்று குறுக்கிட்ட மாலதியை நெருங்கி அவளுடைய தோளை ஆதரவாய் தொட்டாள் கெளத்தமி..

‘சே.. சரியான எமோஷனல் ஃபூல் இந்த அக்கா.. ‘என்று தனக்குள் எரிச்சலுடன் முனகினாள் பத்மா..

மூர்த்தியும் வாசுகியும் ஏதோ கதை கேட்கும் குழந்தைகளைப் போல் நின்றனர்..

தன்னருகில் வந்து நின்ற கெளத்தமியின் கரங்களைப் பற்றி தன் கரங்களில் பொதிந்துக் கொண்ட மாலதி தொடர்ந்தாள்..

‘அப்புறம், ஊர்லருந்து நான் திரும்பி வந்ததும் ஒரு நாள் என்னை வந்து பார்த்து நான் ஊர்ல இல்லாதப்போ நடந்ததையெல்லாம் என்கிட்ட சொல்லி அழுதார் ரமேஷ்.. எனக்கு முதல்ல அதிர்ச்சியாயிருந்தாலும் என்னால வேறென்ன செய்ய முடியும்னு யோசிச்சேன்.. எனக்கும் ரமேஷுக்கும் நடந்த ரிஜிஸ்ட்ரார் சர்டிஃபிகேட்ட காண்பிச்சி போலீஸ் கம்ப்ளெய்ண்ட பண்ணா என்னன்னும் யோசிச்சேன்.. ஆனா அடுத்த ரெண்டுநாள்ல தற்செயலா ரமேஷையும் கெளத்தமியையும் சேர்த்து ஷாப்பிங் மால்ல பார்த்ததும் என் மனச நான் உடனே மாத்திக்கிட்டேன்.. ‘ என்று நிறுத்திய மாலதி கெளத்தமியைப் பார்த்தாள்.. ‘ஆமா கெளத்தமி.. நீங்க ரெண்டு பேரும் அவ்வளவு பொருத்தமா, அம்சமான ஜோடியா இருந்தீங்க.. உன்னோட முகத்த பார்த்ததும் ‘ஐயோ குழந்தை மாதிரி இருக்கற இந்த பொண்ண ஏமாத்தி கட்டிக்க உனக்கு எப்படிறா பாவி மனசு வந்துச்சுன்னு ரமேஷ் மேல அதுவரைக்கும் நா வச்சிக்கிட்டிருந்த மதிப்பு, மரியாதை ஏன் காதல்கூட போயிருச்சு.. அப்பா பிள்ளை, அப்பா பிள்ளைங்கற ஒரு போர்வைக்குப் பின்னால ஒளிஞ்சிக்கிட்டு இந்த மோசமான விளையாட்ட இவரும் சேர்ந்தே விளையாடறாரோன்னு கூட எனக்கு அவர் மேல சந்தேகம் வந்திருச்சி.. அந்த வெறுப்பு அடுத்த நாலாம் மாசமே நீ கற்பம்னு வந்து எங்கிட்ட சொன்னப்போ இன்னமும் ஜாஸ்தியாயி அவர்மேல ‘சீ ‘ன்னு ஆயிருச்சி.. அவரோட சட்டைய பிடிச்சி ஏண்டா உங்கப்பாவுக்காக, உங்கப்பாவுக்காகன்னு சொல்லி என்னை இதுவரைக்கும் நம்ப வச்சி.. இப்ப சூட்டோட சூடா ஒரு பிள்ளையையும் உருவாக்கிட்டு வந்து நடிக்கறயாடான்னு.. கேக்கணும்னு தோனிச்சி.. அதான் நான் அன்னைக்கி அவர தனியா சந்திச்ச கடைசி நாள்.. உன் கல்யாணத்துக்கப்புறமும் அவர் என்னை தொடறதுக்குச் சம்மதிச்சிக்கிட்டிருந்த நான் நீ உண்டாயிருக்கேன்னு தெரிஞ்சதும்.. ‘சீ.. உன் உறவும் ஒரு மண்ணும் வேண்டாம்னு ‘ தீர்மானிச்சேன்.. இனிமே என்ன வீட்ல வந்து பாக்கற வேலை வேண்டாம்னும் சொல்லிட்டேன்.. அதுக்கப்புறம்தான் உன்னை சந்திச்சி பேசணும்னு ஆசைப்பட்டு உன்ன கூட்டிக்கிட்டு வரச்சொன்னேன்.. அதுக்கப்புறம் நடந்ததெல்லாம்தான் உனக்குத் தெரியுமே ? ‘

தன் கரங்களைப் பற்றிக் கொண்டிருந்த கெளத்தமியின் கரங்களை அவள் விலக்கிக்கொள்ள முயன்றதை உணர்ந்த மாலதி அவளைத் திரும்பிப் பார்த்தாள். ‘என்ன கெளத்தமி, என் மேல கோபம் வருதா ? ‘

கெளத்தமி இல்லை என்று தலையை அசைத்தாள்.. இருப்பினும் அவளுடைய அழகான சிவந்த முகமே அவளுடைய உள் உணர்வுகளைக் காட்டிக் கொடுத்தது..

‘உன் கல்யாணத்துக்கப்புறமும் அவர் என்னை தொடறதுக்கு.. ‘ என்று மாலதி கூறியதைக் கேட்ட மூர்த்தி, வாசுகி மற்றும் பத்மா ஒரு சேர முகத்தில் அருவெறுப்புடன் ரமேஷைப் பார்க்க அவன் அவமானத்தால் தலைகுனிந்து நின்றான்.

இதையெல்லாம் கவனியாத மாலதி தொடர்ந்தாள்.. ‘கெளத்தமி, நீ கர்ப்பமாய்ட்டாயேங்கற பொறாமையிலயோ அல்லது என்னால தாய்மையடைய முடியலையேங்கற தாழ்வு மனப்பான்மையிலயோ ரமேஷ் மேல எனக்கு கோபம் வரலை.. ஏதோ உலகத்துல என்ன மட்டுமே அவர் நேசிக்கற மாதிரியும்.. என்னை கொன்னுருவேன்னு அவரோட அப்பா பயமுறுத்தனதுனால மட்டுமே உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரியும் உங்க கல்யாணத்துக்கப்புறமும் என்னை நம்ப வச்சி நாடகமாடிக்கிட்டிருந்தார் பார்.. அதனாலதான்.. ‘

மாலதியின் வாயிலிருந்து வந்து விழுந்த ஒவ்வொரு வார்த்தையும் கெளத்தமிக்கு தன் கணவன் மேலிருந்த மதிப்பை, மரியாதையை.. ஏன் காதலையும் கூட கொஞ்சம் கொஞ்சமாக இழக்க வைத்தது. அவளையுமறியாமல் அவளுடைய கண்களில் ததும்பி நின்ற கண்ணீர் அவளுடைய கரங்களைப் பற்றியிருந்த மாலதியின் கரங்கள் மேல் விழ அவளை திரும்பிப் பார்த்தாள் மாலதி..

‘ஏய்.. கெளத்தமி, நீ ஏன் அழறே ? எனக்காகவா ? ‘

இல்லை என்பதுபோல் தலையை அசைத்த கெளத்தமி ரமேஷைத் திரும்பிப் பார்த்தாள்.. ‘உங்களுக்காக இல்ல மாலதி.. எனக்காக.. நான் ஏமாந்து போய்ட்டேனேன்னு முதல் முறையா உணர்றேங்க.. ‘

மாலதி வியப்புடன் அவளைப் பார்த்தாள். ‘நீ என்ன சொல்றே ? ‘

கெளத்தமி தன் தந்தையையும் தாயையும் பார்த்தாள். பிறகு திரும்பி மாலதியைப் பார்த்து விரக்தியுடன் சிரித்தாள்..

‘நீங்க மட்டும் இவர்கிட்ட ஏமாறலை மாலதி, நானுந்தான்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கப்புறமும் உங்கள வந்து பார்த்து, உங்கள தொட்டு… மறுபடியும் என் கூட வந்து… சீ… சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு.. இப்படி ஒரு ரெட்டை வாழ்க்கையை என்னை கல்யாணம் பண்ணி நான் கற்பமா ஆவற வரைக்கும்… நாலு மாசமா.. இவர் வாழ்ந்திருக்கார்.. அதப்பத்தி ஒரு நாள் கூட என்கிட்ட இன்னவரைக்கும் இவர் சொன்னதில்லை.. அதுக்கப்புறமும் நீங்க இவரை என்னைத் தொடற வேலை இனிமே வேணாம்னு தடுத்திருக்கலேன்னா ஒரு வேளை இன்னைக்கி வரைக்கும்… நினைச்சிப் பார்க்கவே அருவெறுப்பா இருக்குங்க மாலதி.. I just can ‘t imagine that.. உங்களுக்கு எப்படி எங்க ரெண்டு பேரையும் ஜோடியா முதல் தடவை பார்த்தப்போ அவர் மேலருந்த காதல் போச்சோ அதே போல எனக்கும் இப்ப தோனுது.. இனியும் இப்படியொரு வாழ்க்கை எனக்கு வேணுமான்னு தோனுது.. அத நினைச்சப்போதான் என்னையுமறியாம ரெண்டு சொட்டு தண்ணி கண்ணுலருந்து… இப்படி இருக்கும்போது இவர எதுக்கு இங்க கூட்டிக்கிட்டு நீங்க வந்தீங்கன்னு எனக்கு புரியலை மாலதி… ‘

‘நான் சொல்றத கேளு கெளத்தமி .. ‘ என்று குறுக்கிட்ட மாலதியை தன் பிடியை லேசாக அழுத்தி தடுத்து நிறுத்தினாள் கெளத்தமி..

‘நான் பேசி முடிச்சிடறேன் மாலதி.. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமில்லேங்க.. நீங்க இவர்கிட்டருக்கற உறவ முடிச்சிக்கிட்டு என்னோட உறவை சிமெண்ட் பண்றதுக்காக இவர டைவோர்ஸ் பண்ணணும் நினைச்சிருந்தீங்கன்னா அது வேஸ்ட்.. உங்களுக்காவது இவர்கூட நீங்க பண்ணிக்கிட்ட மேரேஜுக்கு ரிஜிஸ்ட்ராரோட சர்டிஃபிக்கேட் இருக்கு.. எனக்கு ? ‘ என்ற கெளத்தமி திரும்பித் தன் தந்தையைப் பார்த்தாள்.. ‘ஏம்பா நா அன்னைக்கி சொன்னப்போ நீங்க என்ன அதிகப்பிரசங்கி மாதிரி பேசாதேன்னு சொல்லி என் வாய மூடிட்டாங்க.. உங்க சம்மந்தியும் அவசர அவசரமா அதெல்லாம் எதுக்கு.. வேண்டாம்னார்.. ரமேஷும் அத கேட்டுக்கிட்டு சும்மா நின்னார்… இப்ப புரியுதாப்பா அவங்க ஏன் அப்படி செஞ்சாங்கன்னு ? என்னோட கல்யாணத்த மட்டும் அன்னைக்கி ரிஜிஸ்டர் பண்ணியிருந்தோம்னா இவரும்.. இவரோட அப்பாவும் இன்னைக்கி ஜெயிலுக்கு போவேண்டியிருக்கும்.. ஆனா இப்ப ? அவருக்கும் மாலதிக்கும் நடந்த கல்யாணம்தாம்பா சட்டப்படி செல்லும்.. எனக்கு வப்பாட்டி ஸ்தானமும் என் குழந்தைக்கு ? அப்பா பேர் சொல்ல முடியாத… ‘ மேலே தொடர முடியாமல் சேலைத் தலைப்பால் தன் முகத்தை மூடிக்கொண்டு தன் படுக்கையறையை நோக்கி ஓடிய கெளத்தமி அறை வாசலில் நின்றுக்கொண்டிருந்த ரமேஷைப் பார்த்தாள்..

‘Just leave us alone Ramesh.. Take your wife and leave. Now. ‘ என்று அழுகையினூடே கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து ரமேஷுடைய பையையும் துணிமணிகளையும் வெளியே வீசியெறிந்துவிட்டு கதவை அறைந்து சாத்தினாள்..

ஹாலில் இருந்த அனைவரும் கெளத்தமியின் குமுறலைக் கண்டு திகைத்துப்போய் செய்வதறியாமல் நிற்க.. மாலதி முதலில் சுதாரித்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.. அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு சில நொடிகள் என்ன செய்வதென தெரியாமல் நின்றுக்கொண்டிருந்த ரமேஷ் தரையில் இறைந்துக் கிடந்த தன் துணிமணிகளையும், பையையும் எடுத்துக் கொண்டு தலை குணிந்தவாறே மாலதியைத் தொடர்ந்தான்..

மாலதியை ஏற்றிச் செல்ல காத்திருந்த டாக்சி சற்று நேரத்தில் புறப்பட்டு செல்லும் ஓசையைக் கேட்ட மூர்த்தி திரும்பி வாசுகியையும் பத்மாவையும் பார்த்தார்…

அவர்கள் இருவரும் திருப்பி அவரைப் பார்த்த பார்வையின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் முதல் முறையாக அவர்கள் முன் பேச்சற்று தலை குனிந்து நின்றார் மூர்த்தி…

அது வரை ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டிருந்த வாசுகி மெள்ள எழுந்து தன்னுடைய படுக்கையறையை நோக்கி நடக்க.. முன்னும் பின்னும் ஆடிய ஊஞ்சலின் கிறீச், கிறீச் சப்தம் அறையின் நிசப்தத்தை கிழித்தது…

மூர்த்தி வாசுகி அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்வதைப் பார்த்தார்.. அப்படியே சரிந்து தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினார்.. கண்களில் ததும்பி நின்ற கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடுவதையும் உணராமல் அப்படியே சிலையாய் அமர்ந்திருந்தார்..

தான் காரில் ஏறுவதற்கு ஓடி வந்ததைக் கண்டபிறகும் சட்டை செய்யாமல், ‘நீங்க வண்டிய எடுங்க டிரைவர்.. எனக்கு நேரமாச்சு. ‘ என்று கிளம்பிச் சென்ற மாலதியின் கார் சென்று மறையும் வரை பார்த்தவாறு அதிர்ச்சியுடன் வெகு நேரம் நின்றிருந்த ரமேஷ் அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து பார்த்தவர்களின் பார்வையிலிருந்த வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மெல்ல சாலையில் இறங்கி நடக்கலானான்..

முற்றும்.

tbrjoseph@csb.co.in

Series Navigation

ஜோசப்

ஜோசப்