எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

ஆஸ்ரா நொமானி (Asra Q. Nomani) (தமிழில் : ஆசாரகீனன்)


[அஸ்ரா நொமானி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் செய்தியாளராகப் பணிபுரிந்தவர். இஸ்லாத்தில் பெண்கள் பற்றி இவர் எழுதியிருக்கும் Daughters of Hajira என்ற புத்தகம் HarperSanFrancisco வெளியீடாக வர இருக்கிறது. இவரைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கான சுட்டி: http://www.asranomani.com/site/about.htm. இக் கட்டுரை டிசம்பர் 28, 2003 வாஷிங்டன் போஸ்ட் மாகஸினில் வெளியானது]

மோர்கன் டவுன், மேற்கு வெர்ஜினியா, அமெரிக்கா.

சமீபத்திய புனித ரமலான் மாதத்தின் 11-ஆம் நாள் அன்று, அதிகாலை நிலா வெளிச்சத்தில், என் அம்மா, என் உடன்பிறந்தவரின் மகள், மகன், என் அப்பா, என் கைக்குழந்தை ஆகியோருடன் நானும் எங்கள் ஊரிலிருக்கும் மசூதியில் முன் வாயில் கதவு வழியாக நடந்தோம். என் வயிறு கலங்கத் தொடங்கியிருக்க, நாங்கள் சேர்ந்து தொழுகை செய்வதற்குப் படிகளேறி ஒரு பெரிய அறையினுள் நுழைந்தோம்.

மசூதிகளில் ஆண்களும் பெண்களும் நேரிடையாக ஒருவருக்கு அருகில் மற்றவர் இருந்து தொழுவதை இஸ்லாமியப் போதனைகள் அனுமதிப்பதில்லை. ஆனால், பெரும்பாலான அமெரிக்க மசூதிகள் இந்தச் சாதாரணத் தடைக்கு மேலே வெகு தூரம் சென்றுள்ளன. பெண்கள் தொழுவதற்கும், கற்பதற்கும் முழுச் சமத்துவம் தராத, பாரபட்சம் காட்டும் அரபுப் பண்பாட்டிலிருந்து ஒரு ஏற்பாட்டை இவை இறக்குமதி செய்துள்ளன- அதாவது, ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியான இடங்களை ஒதுக்கியுள்ளன. இவ்வாறு பெண்கள் விலக்கப்படுவது, ஏழாவது நூற்றாண்டில் முகமது நபியே பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் புறக்கணிப்பதாகும். நபியின் மறைவுக்குப் பிறகு தலை தூக்கிய ‘புதிய ஏற்பாடு ‘களின் வழிப் போவதாகும். இத்தகைய அநீதிகளுடன் சில காலம் மல்லுக்கட்டிய பின், இறுதியில் நான் ஒரு நிலைபாட்டை எடுக்க முடிவு செய்தேன்.

குகை போன்ற அறையின் முன் பகுதியில் உட்கார்ந்திருக்கும் ஆண்களுக்குப் பக்கத்தில் அமர்ந்துதான் தொழ வேண்டும் என்பது என் நோக்கமல்ல. எனக்கு வேண்டியது முக்கியத் தொழுகைக் கூடத்தில் ஓர் இடம், அவ்வளவுதான். ஆண்கள் வரிசையிலிருந்து சுமார் 20 அடிகள் பின்னால் என் அம்மாவும், என் உடன்பிறந்தவரின் மகளும், நானும் உட்கார்ந்த போது, அமைதியைக் குலைத்தபடி ஒரு பலத்த ஆண் குரல் எழுந்தது. ‘சகோதரி தயவு செய்யுங்கள், தயவுசெய்து போய் விடுங்கள்! ‘, மசூதியின் தொழுகை வழிகாட்டிகளில் ஒருவர் பலத்த குரலில் என்னை நோக்கிக் கத்தினார், ‘மேல் தளத்திலிருந்து தொழுவதே பெண்களுக்கு நல்லது ‘. பொதுவாகப் பின் பக்கக் கதவு வழியாகப் பெண்கள் நுழைந்து, மேல்தளத்துப் பலகணியில் தொழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கீழ்த் தளத்தில் நடப்பவற்றில் பெண்கள் பங்கு பெற விரும்பினால், அது பற்றிய குறிப்பைக் குழந்தைகளிடம் கொடுத்தனுப்ப வேண்டும். அதை அவர்கள் பெரும்பாலும் காலியாகவே இருக்கும் கீழ்த் தள அறையில் உள்ள ஆண்களிடம் சேர்ப்பார்கள். ‘மசூதியை மூடி விடுவேன் ‘, என்று இடி முழக்கம் செய்தார் அந்தப் பெரியவர். அவரது மிரட்டல் பலிக்கக் கூடியதா என்பதைப் பற்றி அப்போது எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனாலும், எங்களது கீழ்ப்படிய மறுக்கும் அந்தச் செயல், கூடிய சீக்கிரம் அப் பள்ளி வாசலிலும், என்னுடைய குடும்பத்திலும் மோதல்களை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனாலும், என் மனது உறுதியாகவே இருந்தது.

நான் அழுத்தமாகச் சொன்னேன், ‘நன்றி சகோதரரே, இங்கிருந்து தொழுவதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது. ‘

உண்மையிலேயே, ரமலான் ஆரம்பித்த பின் முதல் முறையாக, அப்போதுதான் நான் தொழுகையின் போது மகிழ்சியாக இருந்தேன். அன்று துவங்கி சுமார் இரண்டு மாத காலத்தில், முன்வாசல் கதவு வழியாக மசூதியில் நுழைந்து அந்தப் பிரதான அறையில் கிட்டத்தட்ட 30 தடவைகளாவது தொழுதிருப்பேன். எனது சகோதரரின் மனைவி உட்பட வேறு மூன்று பெண்களும் என்னோடு சில நேரம் கலந்து கொண்டாலும் கூட- நான்கு பெண்களே என்னோடு சேர்ந்து கொண்டனர். ஒரு வகையில் எனது போராட்டத்தை நான் தனித்து தான் நடத்தினேன். இருந்தும் கூட, வெற்றி பெற்றதாகவே நான் உணர்கிறேன்.

ஒரு விதத்தில், எனது கலகத் தன்மைக்கான விதைகள் என் குழந்தைப் பருவத்திலேயே விதைக்கப்பட்டு விட்டன. நான் பம்பாயில் பிறந்து, மேற்கு வெர்ஜினியாவில் வளர்க்கப்பட்ட 38-வயது முஸ்லிம் பெண். என் அப்பாவும், வேறு சில ஆண்களும் சேர்ந்து மார்கன் டவுனின் முதல் மசூதியை, மொனான்கலியா மாவட்டச் சிறைக்கு எதிர் வாடையில் வாடகைக்கு எடுத்த ஓர் அறையில் ஆரம்பித்தார்கள். எங்கள் இளம் பருவத்தில், எனது சகோதரன் அவர்களுடன் தொழுகையில் சேர்ந்து கொள்வான். ஒரு தடவையாவது நான் அழைக்கப்பட்டதாக நினைவில்லை. எனக்கு நினைவிலிருப்பதெல்லாம், ஒரு முஸ்லிம் பண்டிகை நாளை வேறு சில பெண்களுடன் சேர்ந்து ஓர் ஒற்றை அறைக் குடியிருப்பில் அடைபட்டு இருந்து கொண்டாடியதும், அதே நேரத்தில், ஆண்கள் அனைவரும் வேறு ஒரு விசாலமான இடத்தில் பரவலாக வைக்கப்பட்டிருந்த பல உணவு வகைகளுடன் அதைக் கொண்டாடிக் கொண்டிருந்ததும் தான். நான் வளர வளர, மிகவும் தனிமைப்பட்டுப் போனவளாக உணர்ந்தேன். இதற்குக் காரணம், மன உறுதியும், பரந்த சிந்தனையும் கொண்ட பெண்ணான எனக்கு என் மதத்தில் பாதுகாப்பான ஓரிடம் கிட்டும் என்று என்னால் நினைக்க முடியவில்லை.

கடந்த வருடம், நான் திருமணம் ஆகாமலேயே கருவுற்ற போது, திருமணமாகாமல் குழந்தை பெறும் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டுமென்று சொல்லும் சில முஸ்லிம்களின் கட்டளைகளோடு நான் போராட வேண்டியிருந்தது. இத்தகைய தீர்ப்புகள் இஸ்லாமியத் தன்னை அற்றவை என்பதை இதே பக்கங்களில் எழுதி இருக்கிறேன் (http://www.washingtonpost.com/wp-dyn/articles/A60458-2003May30.html). என் கருத்தை ஆதரித்துப் பல முஸ்லீம்களும் எனக்குத் துணை நின்றனர் என்பது என் நம்பிக்கைக்குப் புத்துணர்வு தந்தது. என் மகன் ஷிப்லியை ஒரு முஸ்லிமாக வளர்க்க, இஸ்லாத்துடன் இணக்கமாக வாழ நான் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

ரமலான் மாதத்தின் முதல் சில தினங்கள், இருப்பு நிலையை ஒப்புக் கொண்டு மேல்தளத்திலிருந்து தொழுதபடியும், ‘சகோதரர்களுக்கு ‘ மட்டும் சொல்லப்படும் நற்செய்திகளைக் கேட்டுக் கொண்டும் இருந்தேன். பல வருடங்கள் இவற்றிலெல்லாம் கலந்து கொள்ளாமல் விலகி இருந்த நான், எதிர்ப்பு தெரிவித்தால் அத்து மீறி நுழைந்தவளாகக் கருதப்படக்கூடும் என்பதை உணர்ந்தேன். ஆனால் என் நெற்றி தரை விரிப்பைத் தொட்டபோதெல்லாம் அடிமைப் படுத்தப் பட்டதாக நான் உணர்ந்தது எனது தொழுகையில் குறுக்கிட்டது. மசூதியின் பின் பக்கம் வழியாக நுழையுமாறு என்னைப் பணித்த ஆண்களை நான் அடியோடு வெறுத்தபடி, ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கையில் படுத்திருந்தேன். என் நண்பர், ஜியார்ஜியா பல்கலைக் கழக மதக் கல்வித் துறைப் பேராசிரியர் ஆலன் காட்லாஸிடம் நான் என் உள் மோதலைப் பற்றிச் சொன்னபோது, ‘உன் கோபம் ஆழ்ந்த வலியையே வெளிப்படுத்துகிறது ‘ என்றார் அவர்.

அது உண்மைதான். முஸ்லிம் சமூகத்தின் பல பகுதிகளிலும், பெண்கள் ஓரம் கட்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், என் பெற்றோர்கள் நான் ஒடுக்கப்படுவதற்காகப் பிறந்த ஒருத்தி அல்ல என்பதைச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். இஸ்லாம் அதைத்தான் என்னிடம் எதிர்பார்க்கிறது என்றும் நான் நம்பவில்லை. நான் இப்பிரச்சினையைப் பற்றி ஆராயத் தொடங்கிய போது, பெண்களை முக்கியத் தொழுகை வெளியில் பங்கு பெற விடாமல் தடுக்கும் மசூதிகள் எதுவும் இஸ்லாமியத் தன்மை அற்றவையே என்பதற்கான மறுக்க முடியாத, அறிவார்ந்த சான்றுகள் கிடைத்தன. அவை, இஸ்லாம் தோன்றுவதற்கு முன் காலத்திய அரேபியாவில் இருந்த அறியாமை அல்லது ஜஹிலியா(Jahiliya) என்ற காலகட்டத்தையே பிரதி பலிக்கின்றன. நோட்டர் டேம் பல்கலைக் கழக அரபு மற்றும் இஸ்லாமியத் துறைப் பேராசிரியர் அஸ்மா அஃப்ஸருத்தின் இதைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘பெண்களை மசூதிகளில் ஓரமாக ஒதுக்கும் இன்றைய போக்கு, இஸ்லாம் பெண்களுக்கு உறுதி செய்து கொடுத்ததற்கும், இஸ்லாத்தின் தோற்றுவாய் நூற்றாண்டுகளில் பெண்களுக்குக் கைவரக் கிட்டியவற்றிற்கும் இழைக்கும் துரோகம் ஆகும் ‘ என்கிறார்.

ஆகச் சொன்னால், பெண்களை ஓரம் ஒதுக்கும் இந்தப் போக்கு இன்னமும் மோசமாகி வருகிறது. CAIR என்னும் அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் பற்றிய அமைப்பு (Council on American-Islamic Relations), 2000-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்த நாட்டில் (அமெரிக்காவில்) ‘பெண்களை திரை அல்லது ஒரு தடுப்புக்குப் பின்னாலிருந்தோ அல்லது மற்றொரு அறையில் இருந்தோ மட்டும் தொழ அனுமதிக்கும் போக்கு மிகவும் பரவலாகி வருகிறது ‘ என்று முடிவாகச் சொல்கிறது. 2000-ஆம் ஆண்டில், தொழுகை நடத்தும் பெண்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்து, உள்ள அமெரிக்காவிலிருக்கும் 66 சதவீீத மசூதிகளில் அவர்கள் ஒரு திரையின் பின்னால் இருந்தோ அல்லது வேறு ஓர் அறையிலிருந்தோ தொழுதது தெரிய வருகிறது. ஒப்பீட்டில் இத்தகைய போக்கு 1994-ல் 52 சதவீதமாகத்தான் இருந்தது என்பது நாடு முழுவதும் இருந்த 416 மசூதிகளின் தலைவர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.

அமெரிக்க முஸ்லிம் அமைப்பாகிய ASMA சங்கத்தின் செயல் இயக்குனர் டெய்ஸி கான், ‘மசூதி என்பது கற்றுக் கொள்வதற்கான இடம்…பெண்களைக் கற்க விடாமல் ஆண்கள் தடுக்கும் பட்சத்தில், அவர்கள் எப்படி கடவுளுக்கு பதில் சொல்லப் போகிறார்கள் ? ‘ என்று கேட்கிறார்.

இஸ்லாமிய உம்மா அல்லது சமுதாயத்தை முகமது நபி உருவாக்கியபோது, மசூதி என்பது ஆண்களின் சங்கமாக அமைக்கப்படவில்லை. குரானில் எங்குமே பெண்கள் மசூதிக்குள் நுழைவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. முகமது நபி ஆண்களிடம் சொல்கிறார்: ‘அல்லாவின் பெண் ஊழியர்கள் அல்லாவின் மசூதிகளுக்கு வருவதைத் தடுக்காதீர்கள். ‘

நபி பெருமானாரே பெண்களுடன் சேர்ந்து தொழுதிருக்கிறார். ஓர் அழகான பெண்ணுக்குப் பக்கத்தில் அமர சில ஆண்கள் போட்டி போட்டதைப் பற்றி அவர் அறிந்தபோதும், ஆண்களைக் கண்டித்தாரே தவிர, பெண்கள் வராமல் தடுப்பதை ஒரு விடையாகக் காணவில்லை. மெதினாவில், நபியின் கால கட்டத்திலும் அதற்குப் பின்னர் சில ஆண்டுகளிலும், நபி பெருமானாரின் மசூதியிலேயே, பெண்களையும் ஆண்களையும் பிரிக்கும் எந்தத் தடுப்பும் இன்றியே பெண்கள் தொழுகை நடத்தினர். மசூதிகளில் பெண்கள் இடம் பெற்றிருந்தது, கல்வி கற்றது, அரசியல் மற்றும் இலக்கிய விவாதங்களில் கலந்து கொண்டது, பிரசங்கத்துக்குப் பின்னர் நபியிடம் கேள்விகள் கேட்பது, மத அறிவைப் பரப்புவது, சமூக சேவை செய்வது போன்றவற்றிலும் பெண்கள் ஈடுபட்டிருந்ததை எல்லாம் வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். நபியின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி ஆயிஷா, நபியின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி, அந்த மசூதியில், வரலாற்றைப் பதிவு செய்வாரிடம் உரை ஆற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், இரண்டாவது கலிஃபாவாகிய ஓமார் பின் அல்-கட்டாப்பின் மகனும், நபியின் நெருங்கிய சகாவும், அல்லது இஸ்லாத்தின் தலைவருமாயிருந்த அப்துல்லா பின் உமர், பெண்களை மசூதிக்குச் செல்ல விடாமல் தடுக்க முயன்றதற்காக தன் சொந்த மகனையே வன்மையாகக் கண்டித்தார். ‘இஸ்லாத்தின் மூன்றாம் நூற்றாண்டு வாக்கில், அண்டைக் கிழக்கு நாடுகளின் [அமெரிக்காவில் அண்டைக் கிழக்கு என்று குறிப்பது இன்று அரபியரின் பகுதிகளாகவும் மேற்கு ஆசியாவாகவும் கருதப்படுவன- மொ.பெ.] முந்தைய காலத்து மதிப்பீடுகளானவை….பெண்ணின் ‘இயல்பு ‘ என்பன, மேலும் பெண்களை ஒதுக்கி வைப்பது போன்றன…வேரூன்றி விடவும், பெண் உரிமைகள் பலவும் சிறிது சிறிதாய்ப் பறிக்கப்பட்டன ‘, என்றும் அஃப்ஸருத்தின் குறிப்பிடுகிறார்.

வட அமெரிக்க இஸ்லாமியக் கூட்டமைவிற்குச் (Islamic Society of North America – ISNA) மார்க்கச் சட்ட வழித் தீர்ப்புகளை வழங்கும் வட அமெரிக்க ஃபிக் ஆலோசனைக் குழு (The Fiqh Council of North America), மசூதிகளுள் பெண்களுக்கான உரிமைகளை ஆதரிக்கிறது. இந்த ஃபிக் அமைப்பின் நிர்வாக உறுப்பினர் முஜாமில் எச். சித்திக், ‘ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளும் கூட்டங்களை மசூதிக்குள் நடத்துவது இஸ்லாமிய முறைப்படி சரியானதே ‘ என்கிறார். மேலும், ‘இவர்களைத் திரை, தடுப்பு அல்லது சுவர் மூலம் பிரிக்காமல் இருப்பது, தொழுகை அல்லது வேறு எந்த இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் ‘ என்கிறார் இவர்.

எனினும், பெரும்பாலும் அமெரிக்காவில் மசூதி என்பது ‘பெண்களும் குழந்தைகளும் வரவேற்கப்படாத ஆண்களின் சங்கமாகவே இருக்கிறது ‘ என்கிறார் ஹார்ட்ஃபோர்ட் மத போதகர் பயிற்சிக் கூடத்தின் இஸ்லாமிய அறிஞரும், வட அமெரிக்க இஸ்லாமிய அமைப்பின் துணைத் தலைவருமான இங்ரிட் மேட்ஸன்.

அமெரிக்க மசூதிகள் பலவற்றைப் பழமைவாதிகளான பாரம்பரிய முஸ்லிம்கள், இவர்களுள் பலர் அரபு நாடுகளைச் சார்ந்தவர்கள், கட்டுப்படுத்தத் தொடங்கி இருப்பது அமெரிக்க முஸ்லிம் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளுள் முக்கியமானதும் – முஸ்லிம் சமூகத்தினருக்கு வெளியே அதிகம் பேசப்படாததுமான- ஒன்று. இவர்கள் பெரும்பாலும் குடியேறிகள், பலரும் மாணவர்கள். மேலும் பொது வாழ்விலிருந்து பெண்களை ஒதுக்கித் தனிமைப்படுத்தும் வஹாபி மற்றும் ஸலாஃபி வகை இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள். இவர்கள், வஹாபிய போதனைகள் கோலோச்சும் சவுதி அரேபியாவில், சவுதி அரசு வெளியிட்ட புத்தகங்களைக் கொண்டு மசூதிகளின் நூலக அலமாரிகளை நிரப்புகிறார்கள். எனது ஊராகிய மார்கன் டவுனில் ஒரு பத்து வருடங்களுக்கு முன், சவுதி அரேபியா மற்றும் எகிப்திலிருந்து வரும் மாணவர்களை – இவர்களில் பலரும் ஆண்கள், பழமைவாதிகள்- காண்பதே மிகவும் அரிது. இன்னும் சரியாகச் சொல்வதானால், மொத்தமே மூன்று பேர்கள்தான் இருந்தனர். இன்று இருப்பதோ 55 பேர்கள். இவர்களின் மனைவியர் நீளமான கருப்பு அங்கியை (அபயா) அணிந்தபடி உள்ளூர் வால்-மார்ட்டில் வலம் வருவதை அன்றாடம் பார்க்க முடிகிறது. (இதில் நகைப்பானது என்னவென்றால், சவுதி அரேபிய அரசாங்கமோ மசூதிகளில் தடுப்புகளோ, தனித்தனி அறைகளோ இருப்பது தேவையில்லை என்று சொல்கிறது.)

வருந்தத் தக்க வகையில், இந்த மாணவர்களால் பெரிதும் உந்தப்படும் (அல்லது சில இடங்களில் மன வலுவை இழக்கும்) அமெரிக்க மசூதித் தலைவர்களில் பலர், பெண்களுக்கு எதிரான இத்தகைய அநீதியை நியாயப் படுத்தவும் முயல்கிறார்கள். இதற்காக அவர்கள் ஹதிஸ் எனப்படும் நபி மொழிகளுள் ஒன்றான ‘அவர்களுக்கு வீடுகளே சிறந்தவை என்றாலும், உங்கள் பெண்களை மசூதிக்குச் செல்ல விடாமல் தடுக்காதீர்கள் ‘ என்பதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அறிஞர்கள் இதை ஓர் சலுகையாகக் கருதுகிறார்களே தவிர ஒரு தடையாகக் கருதுவதில்லை. ஒரு முறை நபி, மசூதியில் தொழுகை செய்யும் முஸ்லிம் 27 மடங்கு அதிகமான அருளைப் பெறுகிறார் என்று குறிப்பிடுகையில், அவரிடம் பெண்கள் புகார் செய்யவும், அதன்பின் நபி சொன்னவையே இந்த வார்த்தைகள்.

பெரும்பாலும், பெண்களைப் ‘பாதுகாப்பது ‘ என்ற போர்வையிலேயே இத்தகைய அநீதிகள் இழைக்கப் படுகின்றன. பெண்களும், ஆண்களும் ஒன்றாக இருக்க அனுமதித்தால், மசூதி என்பது காமம் நிறைந்த ஓர் இடமாகவும், பெண்களுக்கு அபாயகரமானதாகவும், ஆண்களின் கவனத்தைக் குலைப்பதாகவும் ஆகிவிடும் என்றும் வாதிடப்படுகிறது. எங்கள் மசூதியில், நம்பிக்கையாளர்களிடம் பேச ஒலிபெருக்கியை உபயோகிக்கும் வாய்ப்பு ஆண்களுக்கு மட்டுமே தரப்படுகிறது. நான் இது ஏனென்று மசூதியின் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது அவர், ‘மசூதியில் ஒரு பெண்ணின் குரல் கேட்கவே கூடாது ‘ என்று அழுத்தமாகச் சொன்னார். அவர் சொன்னதன் உட்கருத்து, தொழுகையின் பொருட்டு எழுந்தால் கூட ஒரு பெண்ணின் குரல் என்பது ஆண்களுக்குக் காமக் கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது என்பதாகும். பல பெண்களும் இத்தகைய முடிவுகளை ஒப்புக் கொண்டு விடுகிறார்கள்; அவர்களது கவலையற்ற போக்கு, இத்தகைய விதி முறைகளை நடைமுறையாக்கி விடுகின்றன.

சில முஸ்லிம் ஆண்களும் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுவது எனக்கு மிகுந்த ஆறுதல் தருகிறது. அந்த ரமலான் மாதத்தின் 11-ஆம் நாளன்று, பிரதான அறையில்தான் தொழுகை நடத்துவேன் என்று நான் தெளிவாக்கிய போது, நான் அந்த இடத்தை விட்டு நீங்கும் வரை தொழுகை கிடையாது என்றார் ஒரு பெரியவர். அப்போது, எனக்கு உறுதுணையாக நின்றது என் 70-வயது அப்பாவே.

‘அவள் எதையும் தவறாகச் செய்யவில்லை, உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அவளிடம் பேசுங்கள் ‘, என்று உறுதியாகச் சொன்னார் என் அப்பா. நான்கு ஆண்கள் குதித்தெழுந்து என்னிடம் வந்து பேசத் தொடங்கினர், ‘சகோதரி, ரமலானை முன்னிட்டு உங்களிடம் கேட்கிறோம். தயவு செய்து போய் விடுங்கள். நீங்கள் இங்கிருந்தால் எங்களால் தொழ முடியாது ‘. நான் அவர்களிடம் உறுதியாகச் சொன்னேன், ‘மெக்காவிலிருந்து ஜெருசேலம் வரை நான் இப்படித் தொழுதிருக்கிறேன். இஸ்லாமிய முறைப்படி இது சரியானதே. ‘

மறு நாள், ஆண்களை மட்டுமே உறுப்பினராகக் கொண்ட மசூதியின் நிர்வாகக் குழு கூடி, பிரதான அறையையும், முன் வாயில் நுழைவையும் ஆண்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தது. என் அப்பா அதை ஏற்கவில்லை. இந்த முடிவு உட்குழுவின் சட்டபூர்வமான பரிசீலனைக்கு உட்படுத்தப் பட்டுக் கொண்டிருந்த நாட்களில், நான் பிரதான அறையில் தொழுகை நடத்துவதை மசூதியின் தலைவர்கள் தடுக்கவில்லை. ‘புன்முறுவலுடன் இதைப் பொறுத்துக் கொள். இந்த நிலை ஒரு நாள் மாறும் ‘ என்று என்னிடம் அமெரிக்க முஸ்லிம் தலைவர் ஒருவர் சொன்னார். இதைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டாம் என்று கெஞ்சினார் என் மசூதியைச் சார்ந்த மற்றொரு பெண். ஆனால், மென்மையான வழி முறைகள், நமது மசூதிகளில் நிலவும் பால்-ஒதுக்கல் வெறியைப் போற்றவே உதவும். இதைத் தொடர விடுவதன் மூலம் ஒருவருக்கும், குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஒரு பயனும் விளையப் போவதில்லை. எனவே, எனது மசூதியை எதிர்த்து முஸ்லிம்களின் குடி உரிமைகளைப் பாதுகாக்க வழி செய்யும் CAIR-இடம் புகார் செய்தேன்.

ரமலான் மாத இறுதியில், வலிமை தரும் இரவு என்று கருதப்படும் ஓர் இரவில், என் அப்பா எனக்கு ‘எய்தி ‘ எனப்படும் பரிசை – ரமலான் மாத முடிவைக் குறிக்கும் பண்டிகையான ‘ஈத் ‘-இன் போது பெரியவர்கள் வழங்கும் பரிசு ஒன்றைக் கொடுத்தார். மசூதியின் முன் பக்கக் கதவுக்கான சாவியே அது. முதல் நாள் இரவு நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் விற்கப்பட்ட சாவி அது. அதை நான் உடனடியாக சுதந்திர தேவியின் உருவம் பொறித்த என் சாவிக் கொத்தில் பிணைத்துக் கொண்டேன். இதற்குக் காரணம், இங்கு அமெரிக்காவில் மட்டுமே, இஸ்லாமிய நெறிகளுக்கு எதிரான புரட்டுப் பழக்க வழக்கங்களிலிருந்து முஸ்லிம்கள் விடுதலை பெற முடியும் என்பதே.

‘எல்லாப் புகழும் இறைவனுக்கே, மாற்றங்களைக் கொண்டு வரும் வலிமையை அல்லா உனக்குத் தந்துள்ளார் ‘ என்றார் அப்பா.

சாவிக் கொத்தை எடுக்க முயன்றான் என் மகன். அதை அசைத்து ஒலி எழுப்பியபடியே அவனிடம், ‘ஷிப்லி, மசூதியின் சாவி நம் கையில். ஒரு மேலான உலகத்தின் சாவி நம் கையில் ‘ என்றேன்.

கட்டுரையாளரின் மின்னஞ்சல் முகவரி: asra@asranomani.com

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்