எண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்!

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

நேசகுமார்


எண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்!
சென்ற வாரம் ஒரு மானேஜ்மென்ட் கோர்ஸில் பங்கு கொண்டேன். என்னைப் போன்று வந்திருந்த ஒரு சில இளம் கிழடுகளைத் தவிர மற்றெல்லோரும் நிஜ-இளம் தலைமுறையினர் தாம். எதற்கெடுத்தாலும், awesome, amazing, astounding போன்ற வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டிருந்தார் ஒரு இளையவர். நான் பழகிய நான்கு பெண்களுமே தாங்கள் மது அருந்தியிருக்கிறோம் என்றனர். ஐந்தாவதாக வந்து எங்கள் குழுவில் இணைந்து கொண்ட பெண்ணோ தான் அருந்த விரும்புவதாக ஏனையோரிடம் கூறினார். நான் ஒரு பெண்ணிடம் கேட்டேன், எப்படி நீங்கள் மது அருந்துவீர்கள், பாருக்குப் போவதற்கு கொஞ்சம் கூச்சமாயிருக்குமே என்று. அவர் சொன்ன ஷார்ட் கட், உணவுடன் மதுவும் பரிமாறும் உயர்தர உணவு விடுதிகளுக்கு தோழிகளுடன் சென்று சாப்பிடும்போது மதுவகை எதாவது (பெரும்பாலும் வைன்) ஆர்டர் செய்வாராம். ஆச்சர்யமாய் இருந்தது, கேட்டுக் கொண்டேன்.

லஞ்ச் பிரேக்கில் நான் திருமண வாழ்வைப் பற்றி சில முத்துக்களை உதிர்த்தேன். இனிய இல்லறத்துக்கு என்ன அடிப்படை என்று கேட்டார் ஒரு பெண் – பொய், பொய், மேலும் பொய் என்று புன்னகையுடன் சொன்னேன். “அடப்பாவிகளா, இதுவும் ஒரு தாம்பத்யமா” என்ற கேள்வி அவர் முகபாவத்தில் தெரிந்தது. “ஆம், உங்களது கணவர் உங்களைப் பார்த்து நீங்கள் அழகாயிருக்கிறீர்கள் என்றால் உங்கள் தாம்பத்யத்தில் மகிழ்சி பெருகாதா” என்று கேட்டேன். பகடி புரிந்ததோ இல்லையோ, அது flattering, பொய் என்று அதை வகைப்படுத்த முடியாது என்று கூறிவிட்டு என்னுடன் சிறிய வாக்குவாதத்துக்கு தயாரானார். நான் வாதத்திற்குள் நுழையாமல், திருமணம் ஆன பிறகு உங்களுக்கு சில விஷயங்கள் புரியும் என்று சொல்லிவிட்டு “புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்றால் பொய்மையும் வாய்மையில் அடங்கும்” என்று வள்ளுவன் சொல்லியிருப்பதைச் சுட்டிக் காட்டினேன். தேவையில்லா மனச்சஞ்சலங்களிலிருந்து குடும்பத்தாரைக் காப்பது பொய்மைதான். தம்பதியரிடையே பேசாப் பொருள் நிறைய உண்டு. கடந்த காலம் பற்றிய கேள்விகள் அதில் அடங்கும். எல்லோரும் காந்தியடிகளாக முடியாது அல்லவா. வயதாக வயதாக இளைய தலைமுறை நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, மேலேறும் குட்டைப் பாவாடைகள் உட்பட.

ஒழுக்கம் பற்றிய கூப்பாடுகள் எல்லாம் நமக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் – நாம் இன்னும் கொஞ்சம் வருடம் கழித்துப் பிறந்திருக்கலாம் என்று அடிக்கடி தோன்றுகிறது இளைய தலைமுறையைப் பார்த்தால். நம்மைவிட நல்லவர்கள், இயல்பானவர்கள் அவர்கள்.

***
காந்தியடிகள் என்றவுடன் நினைவுக்கு வருகிறது, ஆர்.எஸ்.எஸ் பற்றி நான் படித்த சமீபத்தய கட்டுரை. எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியின் ஜூலை 8 இதழில் ரீடா கோத்தாரி அவர்கள் சுதந்திரத்துக்கு முந்தய ஆண்டுகளில் ( இன்றைய பாகிஸ்தானின்) சிந்து மாகாணத்தில் ஆர். எஸ்.எஸ் இருந்ததை, இயங்கியதைப் பற்றிய விரிவான கட்டுரையை எழுதியிருந்தார். கட்டுரையாளரின் முன் முடிவுகள் ஆங்காங்கே தெளிக்கப் பட்டிருந்தவிதம் உறுத்தியதென்றாலும், நல்ல கட்டுரை. மிகவும் விரிவான ஆய்வை செய்திருந்தார் ரீடா கோத்தாரி. காங்கிரஸ¤ம், ஆர்.எஸ்.எஸ¤ம் சிந்தில் இயைந்தே இயங்கின என்கிறார் கட்டுரையாளர். இது எனக்குப் புதிய செய்தி.
***

இன்னுமொரு இதழைப் பற்றிக் குறிப்பிடவேண்டும். அது – தி
எகனாமிஸ்ட். அட்டையில் India’s Horror என்று தலைப்பிட்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தார்கள். உள்ளே படித்துப் பார்த்தால், நமக்கெல்லாம் ஒரே அட்வைஸ். முஷார·ப் எவ்வளவு நல்ல மனிதர், அவர் இத்தனை முறை உங்களிடம் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியும் நீங்கள் தான் மறுத்துவருகின்றீர்கள் என்கிற ரேஞ்சுக்கு இருந்தது கட்டுரை. ஆயாசமாய் இருந்தது, மூடி வைத்தேன். கார்கில் போரால் தான் காஷ்மீர் விஷயம் உலகின் கவனத்துக்கு வருகின்றது என்று எல்லையின் இங்குமங்குமாய் மூவாயிரம் பேரைக் கொன்ற, அதைப் போர் என்று சொல்லாமல் , முஜாஹித்தீன்கள் செய்தது என்று சொன்ன, அதை இன்றளவும் நியாயப் படுத்திக் கொண்டிருக்கும் ஒரு தீவிரவாதி நேசக்கரம் நீட்டுகிறாராம் – நிலைமையின் தீவிரம் நம்மவர்களுக்கே புரியவில்லை. ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி அமர்ந்திருக்கும் எகனாமிஸ்டின் எடிட்டோரியல் டீமுக்கு எப்படி புரியும்? டோனி ப்ளேர் மட்டும் காஷ்மீர் பிரச்சினை இஸ்லாமியத் தீவிரவாதத்தின் பிரதிபலிப்பே என்று கூறியிருக்கிறார். ஆச்சர்யமான திருப்பம்தான். இவர்கள் பாதிக்கப் படும்போதுதான், இந்தியா பட்டுவரும் அவஸ்தையை கொஞ்சமாவது கவனிக்கின்றனர்.

***
இன்றைய(02.08.2006) இந்தியன் எக்ஸ்பிரஸில் இரு செய்திகள் கவனத்தைக் கவர்ந்தன. ஒன்று இஸ்ரேல் – இந்தியா இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்ளவேண்டும், அவர்களிடமிருந்து இராணுவ தளவாடங்கள் வாங்கக் கூடாது என்று சொல்லும் காம்ரேடுகள் தாம் ஆளும் மேற்கு வங்கத்தில் இஸ்ரேலிய உதவியுடன் வேளாண்மையை விருத்தி செய்ய முயல்வது குறித்த செய்தி அது. மத்தியில் உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்களே என்று கேட்டபோது, அது International Diplomacy, இது வேறு அது வேறு என்றார்களாம். இடது சாரிக்களை பிரதமராக்கினால் இந்தியாவின் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று தோன்றுகிறது, கொஞ்சமாவது பொறுப்புணர்வுடன் அரசியல் செய்வர். குறைந்த பட்சம் நேபாளத்தில் இன்று மாவோயிஸ்டுகளால் துரத்தப்படும் இந்தியர்களின் பிரச்சினையில் தலையிட்டு சரி செய்தால் கூட நல்லதே. மாவோயிஸ்டுகள் மார்வாடிகளுக்கு எதிராக மட்டுமல்ல, அங்கு சாதாரண வேலைகளில் இருக்கும் இந்தியர்களையும் வேலையிலிருந்து நீக்கும்படி நிறுவனங்களை மிரட்டி வருகின்றார்களாம்.
இரண்டாவது, அருண் ஷோரி தீவிரவாதம் குறித்து எழுதியிருந்த கட்டுரை. அப்துல் நாஸர் மதானியின் படம் போட்டு, அவருக்கு தி.மு.க அரசு வசதிகளைச் செய்து தரும் நிலையில், தீவிரவாதத்துக்கு எதிராக நாம் தொடுக்கும் ‘போர்’ எப்படிப்பட்டதாக இருக்கும், எந்த அளவுக்கு தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்று கேட்டிருந்தார் அவர். ‘தலைவர்’, ‘தளபதி’ போன்றோர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் படிப்பார்களா என்று தெரியவில்லை!
***
இஸ்ரேல், இடதுசாரிகள் என்றவுடன் வஜ்ரா சங்கர் நினைவுக்கு வருகிறார். இவர் இஸ்ரேலில் இருந்துகொண்டு வலைப்பதிவில்(Blog) எழுதிவருகிறார். அவரது வலைப்பதிவின் மூலம் இஸ்ரேலியர்கள் எப்படி சிந்திக்கிறார்கள், அவர்களது நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் அறிந்து கொள்ள முடிகிறது. சில சமயம் மிகவும் சுவாரசியமாகவும் எழுதுகிறார். கடைசியாக அவர் எழுதியிருந்தது இஸ்லாமிஸ்டுகளுக்கும் இடதுசாரிகளுக்குமான 12 ஒற்றுமைகள். மாதிரிக்குச் சில:
1. மார்க்ஸ்வாதிகள் கார்ல் மார்க்ஸ் என்கிற உலக தொழிலாளர்கள் ரட்சகரை நம்பும் கூட்டம். இஸ்மாலிஸ்டுகள், முஹம்மது என்கிற உலக இஸ்லாத்தவரை ஒன்றிணைத்த “ரட்சகரை” நம்பும் கூட்டம்.
2. மார்க்ஸ்வாதிகள் ஆயுதம் ஏந்தும் புரட்சி மூலம் தொழிலாளர்கள் பூர்ஷ்வா ஜனனாயகத்தை உடைத்து தூய கம்யூனிச உலகை உருவாக்கவேண்டும் என்று நம்புபவர்கள். இஸ்லாமிஸ்டுகள் ஆயுதம் ஏந்திய ஜிகாத் மூலம் தூய ஷரியா சட்டம் கொண்ட இஸ்லாமிய உம்மாவை உலகில் நிறுவ வேண்டும் என்று நம்புபவர்கள்.
3. மார்க்ஸ்வாதிகள், மற்றும் இஸ்மாமிஸ்டுகள், இருவரும் மிகக் கொடிய சர்வாதிகாரத்தை ஆதரிப்பவர்கள். (ஸ்டாலின், லெனின், மாவோ மார்க்ஸ்வாதி என்றால், நாஸர், இடி அமீன், பாகிஸ்தானின் ஜியா உல் ஹக், ஈரானின் கொமேனி இஸ்லாமிஸ்டுகள்.)
4. மார்க்ஸ்வாத நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது இல்லை. (சீனா, வட கொரியா), இஸ்லாமிஸ்ட் நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது இல்லை (ஈரான், சவூதி)
5. சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது எரிக்கப்பட்ட புத்தகங்கள் எத்தனையோ.. அதே போல் இஸ்லாமிஸ்டுகள் கொளுத்திய நலந்தா, தக்ஷசீலா பல்கலைக்கழகங்களில் உள்ள புத்தகங்கள் எண்ணிலடங்கா…!! மொத்தத்தில் இறுவரும் மாற்றுக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத பழமைவாதிகள், புத்தகத்தை எரிப்பவர்கள்..
சங்கரின் வலைப்பதிவு

***
இணையம் என்றாலே விவாதம் அல்லவா. சின்னக்கருப்பனின் கடந்த வாரக் கட்டுரையைப் படித்தபின்பு எனக்குத் தோன்றிய சில விஷயங்கள்:
1. ஈரான், ஈராக் போரைப் பற்றிச் சொல்லிவிட்டு, வடக்கு இஸ்ரேல், தெற்கு இஸ்ரேல் என்று தனித்தனி யூத நாடுகளாக இருந்திருந்தால் அவர்களும் கூட தமக்குள் அடித்துக் கொண்டிருப்பார்கள் என்று யூகிக்கிறார் சி.க. கொஞ்சம் கூட இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளாததன் விளைவு இது. ஷியா – சுன்னி பிளவுக்குக் காரணம், யார் அதிகமாக இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றனர் என்பதல்ல. மற்ற குழு இஸ்லாமியர்களே அல்ல என்பதே. பொது எதிரி ஒருவரை காட்டித்தான் கொஞ்சமாவது இஸ்லாமிய ஒருங்கிணைப்பைக் கொண்டு வர முயல்கின்றனர் இரு பிரிவுகளிலும் உள்ள சிலர். ஆனால், அடிப்படையில் ஒவ்வொரு இஸ்லாமிய பிரிவும் தாம் மட்டும் தான் முஸ்லிம், ஏனையோர் கா·பிர்களையத்தவர்கள் என்றே கருதுகின்றது. விவேகானந்தர் இதுபற்றி ஒரு முறை குறிப்பிடும்போது, வாளால் ஒற்றுமையை நிலைநாட்ட முற்பட்டவர்கள் வீழுமுன்னரே பிரிவினை ஏற்பட்டது என்று (அலி, பாத்திமா – அபுபக்கர், ஆயிஷா, உமர், ஹ·ப்ஸா) முகமதின் உயிர் பிரியும் முன்பே அடிதடி ஆரம்பித்துவிட்டதைக் குறிப்பிடுகின்றார். இன்றும் பார்க்கலாம், இத்தனை வேற்றுமைகளோடும் இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது. கிலாபத் பற்றிப் பேசிக் கொண்டே இன்னும் இன்னும் பிரிவினையை இஸ்லாமிஸ்டுகள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். வன்முறையின் மூலம் ஏற்படுத்தப்படும் சகோதரத்துவங்கள் நெடுநாள் நீடிக்காது என்பதற்கு நல்ல உதாரணம் இஸ்லாமிய சகோதரத்துவம்தான்.
2. கோயம்பத்தூர் குண்டு வெடிப்புகள் பற்றி விரைவான விசாரனை இல்லை என்பதைக் குறை கூறியிருக்கிறார். ஊரில் ஒரு ரவுடி பட்டப் பகலில் கொலை செய்தாலே சாட்சி சொல்ல யாரும் முன்வருவதில்லை. அவர் சொல்வதுபோல இந்தியா ஒரு மென் – ஜனநாயக நாடு. இங்கே ஜெயிலரைக் கொலை செய்வது, நீதிபதியை மிரட்டுவது, வெளிப்படையாக தாங்கள் தாம் குண்டு வைத்தோம் என்று கூறி பொதுசனங்கள் மனதில் திகிலை ஏற்படுத்துவது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மதக்கூட்டத்தை ஜனநாயக மரபுகளையும் நழுவவிடாமல் பிடித்துக் கொண்டு விரைவாக எப்படி தண்டிக்க முடியும்? என்கவுண்டர் கொலைகள் மட்டுமே சின்னக்கருப்பனின் துரித தீர்ப்பை இவர்கள் விஷயத்தில் வழங்க முடியும். அல்லது சவுதியில் இருப்பதுபோன்ற கங்காரு கோர்டுகள் இருந்தால் அது சாத்தியம்.
இந்தத் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்கு இதுவே சிறந்த முறை. உடனடியாக தீர்ப்பளித்து தூக்கில் போட்டால், சந்தோஷமாக மரணிப்பார்கள், சுவனக் கனவுகளோடு. வெளியில் விட்டால் உடன் மற்ற இடங்களில் குண்டு வைப்பார்கள், தெருவுக்கொரு அமீரை உருவாக்கி ஜிகாத் செய்வார்கள். ஆங்கிலேயரின் முறையான இந்த prolonged judicial process தான் இவர்களை செயலிழக்க வைக்கும். அதுவே இன்றைய சூழலில் சாத்தியமானதும் கூட. இல்லையென்றால், POTA போன்று PITA(Prevention of Islamic Terrorism Act) ஒன்றைக் கொண்டுவந்து இவர்களை ஒடுக்குவதற்கென்று தனி வழிமுறைகள், தனி நீதிமன்றம் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும்.

3. இன்னொரு வித்தியாசமான கணக்கைப் போட்டு நம் மனதோடு சித்துவேலை செய்துள்ளார் சின்னக் கருப்பன். இஸ்லாமியத் தீவிரவாதிகளின் எண்ணிக்கையை 150 என்று எங்கிருந்து பிடித்தார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளின் எண்ணிக்கையே அதைத் தாண்டும். தடை செய்யப் படுவதற்கு முன்பு சிமியின் உறுப்பினர்கள் மட்டும் 20,000 என்கிறது ஒரு செய்தி. இன்று அதிலிருந்து வெளியேறியவர்கள் வெளிப்படையாக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர், அந்த அமைப்பின் தீவிரவாதப் போக்கு பிடிக்காமல் தாங்கள் வெளியே வந்ததாக. இப்படி வெளியேறியவர்களின் எண்ணிக்கை சில நூறு என்றால் மற்றவர்கள்? இந்தியா முழுவதும் இயங்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களின் எண்ணிக்கையே 150ஐத் தாண்டும்.
அது ஒரு புறமிருக்கட்டும், எல்லா சமூகங்களிலும் அதைவிட அதிகமான அராஜகவாதிகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் இருக்கின்றார்கள் என்ற அடுத்த அம்பை எய்திருக்கின்றார். எதை எதோடு ஒப்பிடுவது என்ற அடிப்படை தெரியவில்லையா அல்லது நம்மை குழப்புகிறாரா என்று தெரியவில்லை. தீவிரவாதம் என்றால், அனைத்து சமூகங்களிலும் இருக்கும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை, சதவிகிதம் ஆகியவற்றை ஒப்பிட வேண்டும். ஏனைய குற்றங்களை புரிந்தவர்கள் என்றால், அந்த குற்றவாளிகளின் எண்ணிக்கை மற்றும் சதவிகிதத்தை சமூக ரீதியாக ஒப்பிடவேண்டும். இரண்டும் இல்லாமல் அங்கிருந்து தீவிரவாதிகளின் எண்ணிக்கை மற்றும் சதவிகிதத்தை எடுப்பது அதை இங்கிருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுவது என்றால் , இந்த செப்படி வித்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என்று தெரியவில்லை. “நீ அரிசியைக் கொண்டுவா நான் உமியைக் கொண்டுவருகிறேன், ஊதி ஊதி உண்ணலாம்” என்கிற மாய்மாலக் கணக்குதான் இது.
சரி, இதுவும் போகட்டும். இந்து மதத்தில் தலித்துக்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்றால் உடனே ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தைக் குற்றம் சாட்டாதீர்கள் என்ற கேள்வியை முன்வைப்பாரா சி.க? விதிவிலக்குகள் என்றாலும் சாதீயப் பிரச்சினை பூதாகரமாய்த்தான் இருக்கிறது. எப்படி இந்து சமுதாயத்தில் சாதிப் பிரச்சினை இருக்கிறதோ, எல்லாவிதமான விளக்கங்களுக்குப் பின்பும் எதோ ஒரு நியாயத்தன்மை மதத்திலிருந்து வெளிப்படுகின்றதோ, அதே போன்று, அதைவிடவும் தீவிரமாக இஸ்லாமிய சமுதாயத்தில் தீவிரவாதப் பிரச்சினை இருக்கிறது, மதத்தீவிரவாதத்துக்கான நியாயத் தன்மை அம்மதத்திலிருந்து வெளிப்படுகின்றது. இதை மூடி மறைப்பது, ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டாதீர்கள் என்று சொல்லி அங்கிருக்கும் தீவிரவாதத்தை கண்டிப்பதைத் தடுப்பது, சாதாரண முஸ்லிம்களுக்கு சுதந்திர சமூகம் செய்யும் துரோகம். ஆம், அணுகுண்டே வெடித்தால் கூட அமைதி காக்க வேண்டும் என்று சொல்கிறார் சி.க. அந்த அணுகுண்டு இங்கே வெடித்தால் ஒருவேளை நாம் அமைதிகாக்கலாம் – ஆனால், இஸ்ரேலில் வெடித்தால், அமெரிக்காவில் வெடித்தால், அய்ரோப்பாவில் வெடித்தால்? – அதைத் தொடர்ந்து இஸ்லாத்தை இந்த உலகிலிருந்தே அழித்துவிடுவர் ஏனையோர். இஸ்லாமியத் தீவிரவாதிகள் கையில் அணுகுண்டு கிடைத்தால் உடனடியான இலக்காக இருக்கப் போவது இஸ்ரேல்தான். அடுத்தபடியாய் ஒரு வேளை அமெரிக்கா வரலாம், கடைசியில் தான் இந்தியாவின் முறை வரும்(இங்கே இந்த ஜிகாத்துக்கே மண்டியிடுகின்றனர், இந்த சோப்ளாங்கிகளுக்கு எதிராக இதை ஏன் வீணடிப்பானேன் என்று நினைக்கலாம் அவர்கள்). இந்நிலையில் , இஸ்லாமிய தீவிரவாதமே இஸ்லாமிய சமுதாயத்தின் மிகப்பெரிய எதிரி என்பதே உண்மை. இதை அங்கிருக்கும் மிதவாதிகள் கூறமுடியாது, அவர்கள் heretics, ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று அவர்களை ஒழித்துக் கட்டிவிடுவார்கள் இஸ்லாமிஸ்டுகள். வெளியிலிருப்பவர்கள் அழுத்தம் கொடுத்தால்தான், கண்டித்தால்தான் உள்ளே இருக்கும் மிதவாதிகளுக்கு மூச்சுவிடும், முனகும் வாய்ப்பாவது கிடைக்கும்.
சின்னக் கருப்பனின் நடுநிலைச் சிந்தனை மீது எனக்கிருந்த நம்பிக்கை எல்லாம் அவரின் இந்தக் கட்டுரையைப் படித்தபின்பு போய்விட்டது. இத்தகைய சிந்தனைகளுக்கும், ஹோலோகாஸ்ட் டினையல் – நியூயார்க்கின் இரட்டைக் கோபுரங்களை தாக்கியது இஸ்லாமியத்தீவிரவாதிகள் இல்லை யூதர்கள் – மும்பை ரயில்களில் குண்டுவைத்தது சிவசேனா போன்ற புரட்டல்வாதங்களுக்கும், பொய்ப்பிரச்சாரங்களுக்கும் – கவனத்தை வேறு வழியில் திருப்பிவிட்டு தமது தீவிரவாதத்தை மூடி மறைக்கும் இஸ்லாமிஸ்டுகளின் செய்கைக்கும் என்ன வித்தியாசம்?
இஸ்லாமிஸ்ட் பூனைகள் தான் கண்ணை மூடிக்கொண்டு உலகமே ஜஹிலியா இருளில் ஆழ்ந்திருப்பதாக கற்பனை செய்து கொள்கின்றன என்றால், இங்கிருக்கும் காத்து கருப்புக்களும் மியாவிக்கொண்டு கண்ணை மூடிக்கொள்வதைப் பார்க்கும்போது நமக்கும் வேறு வழியின்றி தக்பீர் சொல்லத் தோன்றுகிறது – அல்லாஹ¥ அக்பர்!
&&&&&

Series Navigation

நேச குமார்

நேச குமார்