கோபால் ராஜாராம்
உலக வர்த்தக அமைப்புக் கூட்டம் சியாட்டிலில் நடந்திருக்கிறது. இதற்கு எதிராக அணி திரண்டவர்களில் பல ரகமானவர்களும் உள்ளனர்.
1. அமெரிக்கத் தொழிலாளிகள் அமைப்பு இதனை எதிர்க்கிறது. காரணம், அமெரிக்காவின் வேலைவாய்ப்புப் பறிக்கப் பட்டு, மலிவாக உழைப்பு கிடைக்கிற வளரும் நாடுகளுக்கு தொழிற்சாலைகள் போய் விடும் என்கிற அச்சம். வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே இதை ஓரளவு நிறைவேற்றி விட்டது.
2. சுற்றுச் சூழல் பாதுகாக்கவேண்டும் என்று கோரிப் போராட்டம் நடத்தும் அமைப்புகளும் உலக வர்த்தக அமைப்பை எதிர்க்கின்றன. உலக வர்த்தக அமைப்பு சுற்றுச் சூழல் பற்றிக் கவலை கொள்வதில்லை. வர்த்தக வளர்ச்சிக்கு சுற்றுப் புறத் தூய்மை பற்றிய கருத்துகள் தடையாய் இருப்பதாய் உலக வர்த்தக அமைப்பு கருதுகிறது. ஆம்பூரில் தோல் பதனிடும் தொழிற்சாலையின் மணத்தைச் சுவைத்தவர்களுக்கு, தோல் பதனிடும் தொழிற்சாலை வளர்ந்த நாடுகளில் இப்போது இல்லை என்கிற செய்தியை நினைவு படுத்த வேண்டும்.
4. உலகத் தொழிலாளர்களுக்கு உலக வர்த்தக அமைப்பு ஏதும் பயன் தரவில்லை. குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியோ, தொழிலாளர்கள் அடிப்படை உரிமை பற்றியோ உலக வர்த்தக அமைப்பிற்குக் கவலை இல்லை. இந்த அமைப்பினால், ஒரு சில தொழிற்சாலைகள் வளரும் நாடுகளில் திரக்கப் படலாம் என்பது உண்மை தான் எனினும், நீண்ட காலப் பலனாக பெரும் மாறுதல் ஏதும் நிகழாது. வளரும் நாடுகள் உள்ளூர் தொழில்களுக்கு முன்னுரிமை அளிப்பது உலக வர்த்தக அமைப்பால் தடுக்கப் படும். கொத்தடிமைத் தொழிலாளர்களாகவும், மிக மோசமான, வசதிகள் ஏதுமற்ற முறையில் தொழிற்சாலைகள் அமவது பற்றி வர்த்தக அமைப்பு ஏதும் கவலைப் படவில்லை.
5. எவரும் எங்கிருந்தும் எதையும் தருவித்துக் கொள்ளலாம் என்கிற ‘உன்னதமான ‘ உலக மயமாக்கல் கொள்கையில், மக்கள் ஒரு நாடிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பிழைப்புத் தேடிச் செல்கிற சுதந்திரம் பெற்று, உண்மையான உலகக் குடிமகன்களாக வேண்டும் என்பது மட்டும் யாருமே சொல்வதில்லை. அப்படியான சுதந்திரம் இருந்தால் தான், அது உண்மையான் உலகமயமாதல். மற்ற படி உள்ளதெல்லாம் வளர்ந்த நாடுகளின் கொழுத்த கம்பெனிகளின் லாபக் குவிப்புத் தான். இந்த லாபத்தின் பயன் எந்தநாடுகளினால் ஈட்டப் பட்டதோ அந்த நாடுகளுக்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும் என்கிற முனகல் கூட எங்குமே எழவில்லை.
6. மலிவான உழைப்பைப் பயன் படுத்திப் பொருள்களை உற்பத்தி செய்து, கொள்ளை லாபத்திற்கு விற்பதன் மூலம், பெரிய கம்பெனிகள் இன்னும் கொழுத்துப் போவதற்கும், கம்பெனிகள் நாட்டின் உள்நாட்டுப் பிரசினைகளைத் தம் இஷ்டத்திற்கு வளைத்துக் கொள்ளவும் தான் இந்த அமைப்பு உதவும்.
7. இறக்குமதி செய்யப் படும் பொருள்களின் தரம் பற்றிய பேச்சையும் வர்த்தக அமைப்பு விவாதிக்கவில்லை. அந்தந்த நாடுகள் தமக்கேற்ப தரத்தை நிர்ணயம் செய்யவும் முடியாது.
8. மலிவான உழைப்பை அளிக்க முன்வரும் நாடுகள் பெரும் பயனை அடையவும் வழியில்லை. ஆசியப் புலிகள் என்று அழைக்கப் பட்ட கொரியா போன்ற நாடுகள் இரண்டாண்டுக்கு முன்னால் பெரும் சிக்கலில் அகப்பட்டதையும் பார்த்தோம்.
-தொடரும்