(இந்தக் கட்டுரையில் அரவிந்த் கணேசன் எழுதிய கட்டுரையின் சில தகவல்கள் உபயோகிக்கப் பட்டுள்ளன.)
எல்லாப் பிரசினைகளுக்கும் ஒரே தீர்வாக உலகமயமாதல் இன்று எல்லோராலும் முன்வைக்கப் படுகிறது. உலகம் மிகச் சுருங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். உலகமயமாதல் என்பது உலகின் செல்வங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ எல்லது வாய்ப்புகளை எல்லா நாடுகளும் பெற வழி வகுப்பதோ அல்ல என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது. ஒரு புறம் ‘மனித உரிமைகள் ‘ என்று பேசிக் கொண்டே மனித உரிமைமீறல்கள் சகஜமாக நிகழும் நாடுகளுடன் வளர்ந்த நாடுகள் உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளன. இதற்குச் சொல்லப் படும் காரணம் இப்படி அந்த நாடுகளுடன் உறவு கொள்வதன் மூலம் தான் அவற்றைத் தனிமைப் படுத்தாமல், அவற்றின் ஜனநாயக நடைமுறைகளை வளர்த்தெடுக்க முடியும் என்பதும் ஒரு வாதமாக வைக்கப் படுகிறது. இதன் பொய்மை உடனேயே உணரத் தக்க ஒன்று.
‘நைகி ‘ செருப்புத் தயாரிக்கும் கம்பெனியின் தாய்லாந்து தொழிற்சாலையில் தினக் கூலி பெறுபவனுக்கும் , அமெரிக்காவில் உள்ள தொழிலாளிக்கும் உள்ள பொருளாதார மற்றும் வசதி வித்தியாசம் சொல்லத் தக்கதல்ல. கழிவுகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும், மலிவு விலையில் கிடைக்கிற தொழில் திறனையும் பயன் படுத்தி வளரும் (வளராத என்று தான் சொல்வது சரியாக இருக்கும்.) நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களால் பயன் அடைவது யார் என்பது விசாரிக்க வேண்டிய ஒரு விஷயம் .
உதாரணமாக 10 டாலருக்கு விற்பனையாகும் சட்டையை அமெரிக்காவில் உற்பத்தி பண்ணினால் 50 டாலருக்கு மேல் ஆகும். எனவே ‘லாப ‘ நோக்கில் வளரும் நாடுகளின் தொழில் திறன் பயன் படுத்தப் படுகிறது. இது சில ஏழைகளுக்கு வருமானம் தருவது உண்மை தான் என்றாலும் இதன் தொடர்ச்சி தான் சுவாரஸ்யமானது.
இந்த வளரும் நாடுகள் சம்பாதிக்கும் டாலர் எதற்குப் பயன் படுகிறது ? மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும், அடிப்படைக் கல்வி தரவும் பயன்படுத்தப் படுகிறதா ? இல்லை. இதற்கு டாலர்கள் தேவையில்லை. மனித வளம் நிரம்பப் பெற்ற நாடுகள் வளரும் நாடுகள். இந்த டாலர் எதற்குத் தான் பயன் படுகிறது ? கடனை அடைக்கவும், ஆயுதங்கள் வாங்கவும், தொழில் திறன் மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களை விற்கிறோம் என்று சொல்லி மீண்டும் இந்தப் பணம் வளர்ந்த நாடுகளின் மடியிலேயே போய் விழுகிறது. கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கிக் கொண்டு ‘நான் ஆசியப் புலி ஆகப் போகிறேனாக்கும் ‘ என்று வளரும் நாடுகள் கனவு கான வேண்டியது தான். உலக வங்கியின் கடன் கொள்கைகளும் மீண்டும் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தை வளர்க்கும் வழியிலேயே செயல் படுகிறது.
சரி, வளரும் நாடுகளின் தலைவர்கள் இது தெரியாமலா இருக்கிறார்கள் ? அவர்களுக்கு நன்றாகவே தெரியும். உலகம் முழுதும் உள்ள ஜெயலலிதாக்களுக்கு சுகர்தோ என்றும் பெயருண்டு. இரான் மன்னர் ஷா என்றும், மார்க்கோஸ் என்றும் பெயர் உண்டு. இவர்கள் வளர்ந்த நாடுகளிடம் தமக்குள்ள ‘உறவை ‘ப் பலமாக வைத்துக் கொண்டு , நாடு எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று உலா வருகிறார்கள்.
1997ம் வருடம் சூன் மாதம், 3-ம் தேதி வேல்தூர் என்ற கடலோரக் கிராமத்தில் சாதனா பாலேகரின் கதவு தட்டப் படுகிறது. கதவைத்திறந்த பெண்ணின் உடைகள் களையப் படுகின்றன. தெருவில் அவளைத் துரத்தி போலீஸ் – ஆமாம் போலீஸ் – அடிக்கிறது. போலீஸ்க்குப் பணம் கொடுத்தவர்கள் என்ரான் என்ற அமெரிக்க மின்சார உற்பத்திக் கம்பெனி. சாதனாவின் குற்றம் ? ஒன்றுமில்லை. என்ரான் கம்பெனியை எதிர்க்கும் ஆள் அவள் கணவன்.
இந்தோனேசியாவில் அசே தீவில் கிளர்ச்சி வெடிக்கிறது. இந்தோனேசியப் படை வீரர்அல் அசே மக்களைச் சுட்டுத் தள்ளினர். அவர்களைப் புதைக்க ‘புல் டோஸர் ‘களைக் கருணையுடன் தந்து உதவிய கம்பெனி : மொபில் எண்ணெய் கம்பெனி.
‘டோடல் ‘ என்ற பிரெஞ்சுக் கம்பெனி பர்மாவில் இயற்கை வாயுவிற்கான குழாய்களை இடுகிறது. குழாய்களை இடும் வழியில் உள்ள ஏழைஜனங்களின் குடியிருப்புகள் சின்னாபின்னமாக்கப் படுகின்றன. பர்மியப் படை வீரர்கள் அந்த கிராமத்து மக்களைச் சித்திரவதை செய்து, குழாய் இடுவதற்கு அடிமைத் தொழிலாளர்களாய்ப் பயன் படுத்திக் கொள்ள வழி வகுக்கிறார்கள்.
நைஜீரியாவில் எண்ணெய்க் கம்பெனிகள் நுழைந்த பிறகு ஆட்சி இன்னமும் கடுமையானதாகவும் கொடூரமானதாகவும் ஆகியுள்ளது.
கஸாக்ஸ்தான் ஜனாதிபதி நூர்சுல்தான் நாஸர் பேவ் செவ்ரான் என்ற எண்ணெய்க் கம்பெனி நாட்டுக்குள் நுழைந்தவுடன் எதிர்க் கட்சிகளைக் கடுமையாக அடக்கத் தொடங்கியுள்ளார்.
டச்சு அர்சாங்கம் சீனாவின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வந்திருக்கிறது. ஆனால் சென்ற வருடம், இது பற்றி ஏதும் பேசவில்லை. ஏன் ? டச்சு ஷெல் கம்பெனி 450 கோடி டாலருக்கு சீன அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்தவுடன் டச்சு அரசின் விமர்சனம் காற்றோடு போய் விட்டது.
என்ரானும் துர்க்மினிஸ்தான் அரசும் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டவுடன், அமெரிக்க அரசாங்கம் சொல்லிற்று: இனி துர்க்மினிஸ்தான் பலகட்சிகளைக் கொண்ட ஜனநாயக நாடாகத் திகழும். துர்க்மினிஸ்தானத்து ஜனாதிபதி சபர்முராத் நியாஸேவ் உடனே மறுப்புத் தெரிவித்தார் : ‘இங்கே எதிர்க் கட்சி என்று எதுவும் கிடையாது. ‘.
இதுதான் உலகமயமாதலின் கொடூர முகம்.
உலகமயமாதல் தவிர்க்க முடியாதது தான். ஆனால் எந்த எல்லைகளுக்குள் இவை செயல் பட வேண்டும் என்ற தெளிவில்லை என்றால், நிச்சயம் நாடுகள் வளர்ச்சியடிஅய முடியாது.
(டாலர்ஸ் அண்ட் சென்ஸ் என்ற பத்திரிகையில் வெளிவந்த அரவிந்த் கணேசனின் கட்டுரையிலிருந்து தகவல்கள் – சூன் 1999)
திண்ணை
|