உயிர்வழிஅடையாளத்துறை (Biometrics) -((எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட 10 முக்கிய எதிர்காலத் தொழில் நுடபங்கள் – 5 )

This entry is part [part not set] of 18 in the series 20010211_Issue

ஜோஸப் அடிக் Joseph Atick


ஒரு நபரின் உடல் சம்பந்தப்பட்ட குணாதிசயங்களை வைத்து அவரை அடையாளம் காண்பது என்னும் உயிர்வழி அடையாளத்துறை ஏற்கெனவே வந்துவிட்டது.

பெரிய நிறுவனங்கள், ஒரு உபயோகிப்பாளரை அவரது கைரேகையை வைத்து அடையாளம் கண்டுகொண்டு அவர்களை கணிணி வலையத்துக்குள் அனுமதிக்கின்றன. அமெரிக்காவில் கார் ஓட்டுனருக்கான அனுமதிச்சீட்டில் ஓட்டுபவரின் முகத்தை ஒளிப்படமாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அந்த ஒளிப்படம் கணிணிக்குள் செலுத்தப்பட்டு பெரும் கூட்டத்தில் கூட ஒருவரை அடையாளம் கண்டுகொள்ளும்படிக்கு மென்பொருள் எழுதியிருக்கிறார்கள்.

கைரேகை போலவே கண்ணின் அமைப்பும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் வினோதத்தால், கண்ணின் உள்ளே இருக்கும் கருவிழியில் இருக்கும் ரேகைகளை வைத்து ஒருவரை அடையாளம் கண்டுகொண்டு அவருக்கு பணம் எடுக்க அனுமதிக்கும் தானியங்கி வங்கி, டெக்ஸாஸ் மாநிலத்தில் 1999 மே மாதத்திலிருந்து வேலை செய்கிறது. பெரும்பாலான பொதுமக்கள் இந்த தொழில்நுட்பத்தை ஒப்புக்கொள்ளத் தயங்குவதால் இன்று இந்த தொழில்நுட்பம் ராணுவம், அரசாங்கம், பெரும் பாதுகாப்பு தேவைப்படும் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலேயே பயன் படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், கணிணிமூலம் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தில் முக்கியமான நிறுவனமான விஸியானிக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஜோஸப் அடிக் சொல்வதை வைத்துப் பார்த்தால், வளர்ந்து வரும் இன்னொரு புதிய தொழில்நுட்பமான வயர்லெஸ் வெப் என்னும் கம்பியில்லா இணையம் wireless Web இதை மாற்றிவிடும்.

‘இப்போது எல்லோரும் கையில் ஒரு பாம்பைலட், சொந்த டிஜிட்டல் உதவியாளி ( Personal digital assistants (PDAs)) செல் தொலைபேசிகள் போன்றவைகளை வைத்திருக்கிறார்கள். இந்தப் பொருள்களே நமக்கு எல்லா விஷயங்களையும் சொல்லும். நாம் இவைகளின் மூலமே எல்லா விஷயங்களையும் பண்ணப்போகிறோம். எல்லா வாங்குதல் விற்றலும் இதன் மூலமே நடக்கப்போகிறது. நமது அடையாளமே இதுவாகத்தான் இருக்கப்போகிறது. ஏன் நமது பாஸ்போர்டே இதுவாகத்தான் இருக்கப்போகிறது ‘ என்றார் அடிக். இந்த சின்ன பொருள்களை இவ்வளவு நம்பி செய்வதும், அதே நேரம் இவை தொலைந்து போனால் முக்கியமான விஷயங்கள் பிறர் கையில் மாட்டக்கூடிய அபாயம் இருப்பதும் வருகிறது. ‘ஆகவே பாதுகாப்பு என்பது முக்கியமாகிவிடுகிறது ‘ என்கிறார் அடிக். ‘இதுவே உயிர்வழி அடையாளத்துறைக்கு பெரிய ஊக்கமாக இருக்கப்போகிறது ‘ என்றும் சொல்கிறார்.

அட்டிக்க் அவர்களது தூரதரிசனத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் கூட, அவரது திறமையையும் அவரது பேரார்வத்தையும் மறுக்க முடியாது. இஸ்ரேலில் படித்துக்கொண்டிருந்த அட்டிக், 15 வயதில் பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியே வந்து ‘நவீன பெளதீக ஆரம்பப்பாடம் ‘ Introduction to Modern Physics. என்ற 600 பக்கம் கொண்ட புத்தகத்தை எழுதினார். ‘எனக்கு பள்ளிக்கூடம் படு போராக இருந்தது. அதே வேளையில் நான் என்னுடைய ஆர்வங்களில் தீவிரமாக இருக்கிறேன் என்று காண்பிக்கவும் விரும்பினேன் ‘. அட்டிக் மேலும் ‘அந்தப்புத்தகத்தை எழுதியதற்காக எனக்கு மேல்படிப்பு படிக்க கல்லூரியில் இடம் கிடைத்தது ‘ என்றார். 16 வயதில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் அவரை கல்லூரியில் ஏற்றுக்கொண்டது. பெளதீகத்தில் உயர்படிப்பும், கணித பெளதீகத்தில் டாக்டரேட்டாகவும் வெளிவந்தார்.

படிப்பு முடிந்ததும், தனது கணித திறமைகளை மனித மனத்தைப் படிப்பதற்காக உபயோகப்படுத்தினார். இதற்காக ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் கணிணியியல், மூளை நரம்பியல் துறையில் இணைந்தார். இங்கு மனித மனம் எவ்வாறு தனக்கு வரும் பிம்பங்களை அலசி ஆராய்கிறது என்று அறிவதில் முயன்றார். அவரும் அவரது துணைவர்களும், ஒரு கணிணி எவ்வாறு கோப்புகளை அழுத்திச் சிறிதாக்குகிறதோ அதே போல மூளையும் தனக்கு வரும் பிம்பங்களை அழுத்தி சிறிதாக்கி அலசுகிறது என்று கண்டார்கள்.

அதாவது எல்லா மனிதர்களுக்கும் கண்கள், மூக்கு, வாய் என்று உறுப்புகள் இருக்கின்றன. எனவே மனித மூளை எவ்வாறு ஒருவனின் மூக்கு பொது மூக்கிலிருந்து வேறுபடுகிறது என்று மட்டும் சேமித்து வைத்துக்கொள்கிறது என்று கண்டார்கள். மீதத்தை இட்டு நிறப்பிவிடுகிறது என்றும் கண்டார்கள். ‘இந்த முறைக்கு பெரும் வியாபார மதிப்பு இருக்கிறது என்று சிந்தித்தோம் ‘ என்கிறார் அட்டிக். 1994இல் அவரும் அவரது தோழர்களான பால் கிரிஃபின், நோர்மன் ரெட்லிக் ஆகியோரும் சேர்ந்து விஸியானிக்ஸ் Visionics என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள்.

நியூஜெர்ஸியில் உள்ள ஜெர்ஸி நகரத்தில் விஸியானிக்ஸ் என்ற இந்த நிறுவனம் இருக்கிறது. FaceIt என்ற முகம் அடையாளம் காணும் மென்பொருளை தயாரித்து விற்கிறார்கள். மற்ற மென்பொருள்கள் போல முகம் அனைத்தையும் ஒப்பீடு செய்யாமல், முகத்தில் வித்தியாசமான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அலசி ஒரு முகத்தை அடையாளம் காண்கிறார்கள் இந்த மென்பொருளில். இந்த முறை சமீபத்தில் இங்கிலாந்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், மெக்ஸிகோவில் தேர்தல் ஆள்மாறாட்டங்களை அடையாளம் காணவும் பயன்பட்டிருக்கிறது.

மின்னடோங்கா என்ற நகரத்தில் இருக்கும் உயிரியல் அடையாளம் காணும் நிறுவனமான Digital Biometrics என்ற நிறுவனத்துடன் கூட்டு ஏற்படுத்தியிருக்கிறார்கள். இருவரும் இணைந்து இண்டெர்நெட்டில் இருக்கும் பலகோடி புகைப்படங்களில் உள்ள மனிதர்களின் முக அடையாளங்களை அலசவும் ஒரு பெரும் செய்தித்தளத்தை உருவாக்கவும் முனைந்திருக்கிறார்கள். இண்டெர்நெட் மூலம் வியாபாரம் செய்யும் பல நிறுவனங்கள் தங்களது கஸ்டமர்களை அடையாளம் காண இந்த மென்பொருள்களை உபயோகிக்க வாய்ப்பு இருக்கிறது. ஜப்பான் ஐரோப்பா போன்ற இடங்களில் உள்ள நிறுவனங்கள் இந்த நிறுவனத்தை அணுகியிருக்கின்றன. இதன் மூலம் ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால், உங்கள் முகத்தை உடனே ஒரு ஒளிப்படம் எடுத்து விற்கும் நிறுவனத்துக்கு அனுப்பினால் அவர்கள் உங்கள் முக அடையாளத்தை இந்த மென்பொருள் மூலம் சரி பார்த்து உங்களுக்கு வேண்டிய விஷயத்தை அனுப்ப ஏதுவாகும்.

பாஸ்வர்ட் போன்ற விஷயங்கள் மறைந்து உங்கள் ஒளிப்படம் மட்டுமே போதுமானதாக இருக்குமா ? இருக்கலாம். அட்டிக் சொல்வதுபோல, முகமற்ற வியாபாரங்கள் போய், முகத்தை பார்த்து வியாபாரம் செய்யும் பழைய முறை மீண்டும் வரலாம்.

உயிரியல் அடையாளத்துறையில் வேலை செய்யும் மற்றவர்கள்

Visage Technology (Littleton, Mass.) Face recognition விஸாஜ் டெக்னாலஜிஸ் – முக அடையாளம்

Iridian Technologies (Marlton, N.J.) Iris recognition இரிடியன் டெக்னாலஜிஸ் – கண் அடையாளம்

DigitalPersona (Redwood City, Calif.) Fingerprint recognition டிஜிட்டல் பர்ஸெனா – கைரேகை அடையாளம்

Cyber-SIGN (San Jose, Calif.) Dynamic signature verification சைபர் சைன் – மின் கையெழுத்து அடையாளம்

T-NETIX (Englewood, Colo.) Voice recognition டி-நெட்டிக்ஸ் – குரல் அடையாளம்

Series Navigation