நாகரத்தினம் கிருஷ்ணா
மார்க்கெரித் துராஸ் (1914-1996)
“துராஸ், மறந்து போன பிளாட்டோவின் அச்சங்களை நமக்கு நினைவூட்டுபவர். அவரது எழுத்து எரிச்சலும் தரும், அச்சுறுத்தவும் செய்யும்; குழப்பமும் தரும், கிளர்ச்சிகொள்ளவும் செய்யும்; எனினும் உள்ளுணர்வில் நம்பிக்கை வைத்தும் முரண்களை நியாப்படுத்தியும், பொதுவான நெறிமுறைகள், வறட்டு கற்பிதங்களுக்கு எதிராக கலககுரல் எழுப்பியவர்”
– கிறிஸ்த்தியான் புலோத் -லாபரியேர்
மார்கெரித் துராஸ், சமகால பிரெஞ்சு பெண்படைப்பாளிகளுள் மிகமுக்கியானவர், இடதுசாரி, பெண்ணியல்வாதமென்ற கோட்பாடுகளுடன் எழுத வந்தவர். இவரது காதலன் -The Lover- என்ற நவீனம், மேற்கத்திய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நவீனம், இளம் வயது துராஸின் சொந்த அனுபவங்களை பேசுகிறது, 1984ம் ஆண்டு கொன்க்கூர் இலக்கிய பரிசை வென்றது, பின்னர் திரைப்படமாகவும் உருவாகி வரவேற்பினை பெற்றது. துராஸ் சிறுகதைகள், நவீனங்கள், நாடகங்கள், கட்டுரைகள், திரைப்படத்துறை என அனைத்திலும் கால் பதித்தவர். உயிர்க்கொல்லி (The Malady of Death)என்ற இச்சிறுகதை (La maladie de la mort) 1982ஆம் வருடம் வெளிவந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட இவரது படைப்புகளில், ஒன்றையும் வாசிப்புக்கு உகந்ததல்ல என்று ஒதுக்கிவிடமுடியாது. The Sea Wall, 1967; The Sailor from Gibraltar, 1966;India Song, 1976; The Rivers and the Forests, 1964; The Square; La Musica, 1975 குறிப்பிடத் தகுந்தவை.
உயிர்க்கொல்லி*
மர்க்கெரித் துராஸ்
அவளை நிச்சயம் நீங்கள் புரிந்துகொள்ளபோவதில்லை. இத்தனைக்கும் தங்கும் விடுதியில், வீதியில், இரயிலில், மதுக்கடையில், புத்தகத்தில், திரைப்படத்தில், உங்களுக்குள்ளாகவே, உங்களிடத்தில், உன்னில், எதிர்பாராதவிதமாக குறி விரைத்துக்கொள்ள எங்கே வைப்பது அல்லது அதனிடத்தில் தத்தளிக்கும் கண்ணீரை எங்கேக் கொட்டித் தீர்ப்பதென தேடிய நேரங்களிலெல்லாம் ஏற்கனவே நீங்கள் கண்டவள்தான்.
அவளுக்கான ஊதியத்தை கொடுத்தும் இருப்பீர்கள்.
இனி தொடர்ந்து ஒவ்வொரு இரவும் அவசியம் வரவேண்டுமென சொல்லியும் இருப்பீர்கள்
வெகுநேரம் உங்களைப் பார்த்திருந்திருந்துவிட்டு, அப்படியானால் அதற்கு கூடுதலாக பணம் தரவேண்டியிருக்குமே, சம்மதமா? என்றிருப்பாள்.
அப்படி உங்க மனசிலே என்னதான் இருக்கு?-அவள்.
அதற்கு, இவ்வுடலை, முலைகளை, அதன் நறுமணத்தை, அதன் சௌந்தர்யத்தை, சந்ததிகளை உருவாக்கவென்று இவ்வுடல்படும் அவஸ்தைகளை, விக்கினங்களில்லாத, பலத்தைப் பிரயோகித்திராத மாசுமருவற்ற இச்சரீரத்தை, அதன் முகத்தை, அதன் நிர்வாணத்தை, இச்சரீரத்திற்கும் அதில் வாசமிருக்கும் ஜீவனுக்கும் நேர்ந்துள்ள பொருத்தத்தைச் சோதித்து பார்த்திடவேண்டும், தெரிந்துகொள்ளவேண்டும், கற்கவேண்டும், பழகவேண்டும், என்பதே என் விருப்பமென நீங்கள் சொல்வீர்கள்.
அவ்வுடலைப் பரிட்ஷித்து பார்க்கும் விருப்பம் ஒன்றிரண்டு நாட்களுக்கானதல்ல பலநாட்களுக்கானது, என்பீர்கள்.
அநேகமாக பல வாரங்களுக்கு.
அநேகமாக, வாழ்க்கை முச்சூடும்கூட..
பரிட்ஷித்து பார்ப்பதென்றால்?- கேட்கிறாள்.
காதலிப்பது, உறவு கொள்வது, – நீங்கள்.
ஏன் இது போதாதா? -அவள்.
போதாது. இதுவரை அறிந்திராத அவ்விடத்தில் அதாவது விரிந்த யோனியில் நித்திரைகொள்ளவேண்டுமென்கிற அவா என்னிடத்தில் இன்னமும் நிறைவேற்றாபடாமலிருக்கிறது, எனவே போதாது. தவிரவும் அவ்வனுபவம் எப்படிப்பட்டதென தெரிந்துகொள்ளவும், உலகின் அக்குறிப்பிட்ட பிரதேசத்தை மாத்திரம் கண்ணீரில் நனைக்கவும் விருப்பம் – என்பீர்கள்.
உங்கள் பதிலைக்கேட்டு சிரிக்கிறாள்.
என்னிடத்திலும் அப்படிப்பட்ட ஆசை உங்களுக்கு உண்டென்று சொல்லுங்கள்? -அவள்
ஆம். அப்படித்தான் சொல்லவேண்டும். ஆனால் குழப்பமாகயிருக்கிறது. அங்கும் பிரவேசித்துப் பார்த்திட ஆசை. சொல்லப்போனால் எனது வழக்கத்திற்கு மாறான கடுமையுடன். அதனிடத்தில் எதிர்ப்புச் சக்தி கூடுதலென்று சொல்லக் கேள்வி, வெற்றிடத்தினும் பார்க்க வெல்வெட் திடமாய் எதிர்க்குமாமே.-நீங்கள்
அதற்கவள், தான் ஏதும் சொல்வதற்கில்லை, சொல்லவும் போதாது என்கிறாள்.
வேறு என்னென்ன நிபந்தனைகள் வைத்திருக்கிறீர்கள்? -அவள்
அதற்கு, அறுவடைக்குப் பிறகு, தானியக்கிடங்குகளிற் குனிந்துகுனிந்து கூன்போட்ட குடியானவப்பெண்கள், அயர்ந்து நித்திரைகொள்கிற நேரத்தில் அவர்களைத் தேடிவரும் ஆண்களிடம் மறுப்பதற்குத் திராணியற்று இணங்கிப்போவதைப்போல எதிர்ப்பேதும் காட்டாமல் உங்கள் காலடியில், உங்களின் விருப்பத்திற்குப் பணிந்தவளாக, அவளது முன்னோர்கள் காலத்துப் பெண்களைபோலவே அவளும் வாய் மூடிக்கிடக்கவேண்டும் என்கிறீர்கள். அப்படிக் கிடக்கும்பட்சத்தில் கடவுளுக்காக தங்களை அர்ப்பணித்துவாழும் மத நம்பிக்கைக்கொண்ட பெண்களைப்போலவே அவளது சரீரமும் உங்களுடையதோடு இணைந்து, உங்கள் தயவில் ஜீவிக்க வாய்ப்புண்டு என்பது அவளுக்கான நன்மையென்றும், இனி சரீரத்தை எங்கே கிடத்துவது அல்லது எந்தப் பிளவினை நேசிப்பதென்கிற அச்சம் காலப்போக்கிலே உங்களிடம் குறைவதற்கு வாய்ப்புண்டு என்பது உங்களுக்கான நன்மையென்றும் அவளுக்கு விளங்கப்படுத்துகிறீர்கள்.
அவள் உங்களை நேரிட்டுப் பார்க்கிறாள். அவ்வாறு பார்ப்பதை பின்னர் தவிர்க்கிறாள். வேறு திசைக்காய் பார்க்கிறாள். இறுதியாக உங்களுக்குப் பதில்சொல்ல முனைகிறாள்.
அப்படியென்றால், அதற்கான ஊதியம் இன்னும் அதிகம், என்றவள் அத்தொகையையும் குறிப்பிடுகிறாள்.
நீங்கள் சம்மதிக்கிறீர்கள்.
ஒவ்வொரு நாளும் அவள் கட்டாயம் வந்தாகவேண்டும். ஒவ்வொரு நாளூம் அவள் வருகிறாள்.
முதல்நாள் ஆடைகள் முழுவதையும் களைந்துவிட்டு நிர்வாணமாய், கட்டிலில் நீங்கள் கைகாட்டிய இடத்தில் நீட்டிப் படுக்கிறாள்.
அவள் ஆழ்ந்து உறங்குவதைப் பார்த்தபடி இருக்கிறீர்கள். வார்த்தைகளேதுமில்லை. ஆழ்ந்து உறங்குகிறாள். இரவு முழுக்க அவளை அவதானிக்கிறீர்கள்.
அந்தி சாய்ந்தவுடன் அவள் வரவேண்டும். அந்தி சாய்ந்தவுடன் அவள் வருகிறாள். இராத்திரி முமுக்க அவள் உறங்கியபடியிருக்க நீங்கள் கண்விழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இரண்டு இரவுகள் தொடர்ந்து அவ்வாறு பார்க்கிறீர்கள்.
அவ்விரு இரவுகளிலும் அவளிடத்திலிருந்து ஓரிரு வார்த்தைகள் கூட இல்லை.
ஒர் இரவு மௌனத்தைக் கலைத்துக்கொள்ள தீர்மானித்தவள்போல, பேசுகிறாள்.
இவ்வனுபவத்தினை எப்படி உணருகிறீர்கள். உங்கள் சரீரத்தின் ‘ஏகாந்தத்தைக்’ குறைக்க உபயோகம் கண்டிருக்கிறேனா? எனக் கேட்கிறாள். அச்சொல் உங்களது ‘இருப்பினை’ எப்படி அடையாளப்படுத்துகிறது என்பதையே சரிவர புரிந்துகொள்ளவியலாத இக்கட்டில் நீங்கள். உங்கள்வரையில் தனிமைப்படுத்தபட்டிருப்பதுபோலவும் அல்லது தனிமைப்படவிருப்பதுபோலவும் குழப்பமான மனநிலை. எனவே அவளிடத்தில், என் ‘இருப்பின்’ நிலைமையை நான் உன்னோடு இருக்கும் தருணத்திற்கு ஒப்பிடலாம்’, என்கிறீர்கள்.
அன்றிரவும் அப்படித்தான் நடுநிசியில் விழித்துக்கொண்டவள், வருடத்தின் எந்தப் பருவத்தில் நாம் இருக்கிறோமென வினவுகிறாள்.
குளிர்காலம் வரவில்லை, அதாவது இன்னமும் இலையுதிர் காலத்தில்தான் இருக்கிறோம்.- நீங்கள்.
என்னமோ இரைச்சல் கேட்கிறதே?- அவள்.
கடல்,- நீங்கள்.
கடலா..எங்கே? -மீண்டும் அவள்.
பக்கத்தில்தான், இவ்வறை சுவருக்கு மறுபக்கம்.
அப்பதிலுக்காகத்தான் காத்திருந்தவள்போல மீண்டும் உறக்கத்தில் ஆழ்கிறாள்.
இளம்பெண், இளமை பிராயத்தவள். அவளது ஆடைகளிலும், கூந்தலிலும் வாசமேதேனும் இருக்கவேண்டும். அவ்வாசத்தினால் ஈர்க்கபட்ட நீங்கள் ஒருவழியாய் அது என்னவென்று கண்டறிந்து அதற்கான பெயரையும் தேர்வு செய்யவேண்டும், ஏதோ இதிலெல்லாம் உங்களுக்குத் தேர்ச்சியுண்டென்பதுபோல,அவ்வாறே செய்யவும் செய்கிறீர்கள். ‘சூரியகாந்தியும், எலுமிச்சையும் கலந்த மணம்’ என்று நீங்கள் முடிவு செய்து அதைத் தெரிவிக்கிறீர்கள். அதற்கவள், எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள், என்ன பெயரிட்டும் அழைத்துக்கொள்ளுங்கள், எனப் பதிலிறுக்கிறாள்..
மற்றோர் இரவு, திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது, அவள் விரிந்த கால்களின் ஆரம்பத்தில், அவளது சரீரத்தைப்போலவே ஈரம் கண்டுள்ள யோனியில், திறந்துள்ள இடத்தில், முகம்வைத்து நித்திரைகொள்கிறீர்கள். மறுப்பேதுமின்றி அவளும் அதை அனுமதிக்கிறாள்.
மற்றோர் இரவு, தவறுதலாக போகத்தின் பரவசநிலைக்கு அவளை அழைத்துசென்று விடுகிறீர்கள், அவள் சத்தமிடுகிறாள்.
நீங்கள் அவளிடம் சத்தம்போடாதே என்கிறீர்கள். அவளும், இல்லை இனி சத்தமிடமாட்டேன் என்கிறாள்.
அதற்குபிறகு அவள் சத்தமிடவில்லை.
இனியுலகில் எந்தப்பெண்ணும் உங்களிடத்தில் இப்படிச் சத்தமிட்டு தானடைகிற இன்பத்தை வெளிப்படுத்தமாட்டாள்.
அக்குரலை இதுவரை உங்களுக்குக் கிட்டாத சந்தோஷமென்று நம்பி ஒருவேளை அவளிடத்திலிருந்து நீங்கள் அபகரிக்கும் முயற்சியோ என்னவோ நான் அறியேன். ஒருவேளை இப்படியும் இருக்குமா? அவளது சுவாசத்தின்போது அதாவது அவளது வாய்க்கும் வெளிக்காற்றுக்குமான பயண இடைவெளியில் வெளிப்படுகிற ஊமை முனகலேயன்றி, போகப்பரவசத்தினால் வெளிப்படுவது அல்லவென்று அக்குரலை நீங்கள் நம்புகிறீர்களோ என்னவோ, அதனையும் நான் அறியேன். உங்கள் நம்பிக்கை எதுவாயினும் எனக்கதில் உடன்பாடில்லை.
கண் விழித்தவள், நான் பாக்கியசாலி, என்கிறாள்.
அவள் பேசக்கூடாது என்பதுபோல, உங்களது கரம் கொண்டு அவளது வாயைப்பொத்துகிறீர்கள், இதற்கெல்லாம் வாய் திறக்கக்கூடாது என்கிறீர்கள்.
கண்களை மூடிக்கொள்கிறாள்.
‘இனி இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கமாட்டேன் -அவள்.
பிறகு, அவர்கள் இதுபற்றியெல்லாம் பேசுவதுண்டா, கேட்கிறாள். நீங்கள் இல்லை என்கிறீர்கள்.
வேறு என்னதான் பேசுவார்களென்று அவள் மீண்டும் கேட்கிறாள். நீங்கள், பேசுவதற்கு விஷயங்களா இல்லை, இதைத் தவிர எல்லாவற்றையும் பேசுவார்கள், என்கிறீர்கள்.
கேட்டுவிட்டுச் சிரித்தவள், மீண்டும் உறங்கிப்போகிறாள்.
சிலவேளைகளில் அறைக்குள்ளேயே கட்டிலைச் சுற்றி வருகிறீர்கள் அல்லது கடல் பக்கமிருக்கும் சுவர்களொட்டி நெடுக நடக்கிறீர்கள்.
சில சமயங்களில் கண்ணீர் விட்டு அழுகிறீர்கள்.
சில வேளைகளில் அறையைவிட்டு வெளியேறி பால்கணிக்கு வருகிறீர்கள், அங்கே இளங்குளிரில் நிற்கிறீர்கள்.
கட்டிலில் கிடக்கும் அப்பெண்ணின் உறக்கத்திற்கா¡ன பொருள் உங்களுக்கு விளங்கவில்லை.
இச்சரீரத்திலிருந்து விலகிச் செல்ல உங்களுக்கு விருப்பம். பின்னர் பிறருடைய சரீரத்திற்காகவோ அல்லது உங்களது சரீரத்திற்காகவோகூட திரும்பவும் வரவேண்டு¦ன்பதும் உங்கள் விருப்பம், தவிர அழுது கண்ணீர் சிந்துவதைவிட இப்போதைக்கு அதுவொன்றே உங்கள் கடமையாகிறது.
அவள், அறைக்குள் இருக்கிறாள், உறக்கத்திலிருக்கிறாள். அவள் உறங்குகிறாள். அவள் உறக்கத்தை நீங்கள் கலைப்பதில்லை. அவள் உறக்கம்போலவே பொல்லாத நேரமும் நீள்கிறது. ஒரு முறை தரையிலேயே கட்டிலினுடைய கால்களொட்டி நீங்களும் நித்திரை கொள்கிறீகள்.
அவளிடத்தில் எப்போதும்போல மாறாத தூக்கம். நன்கு உறங்கிய நிலையில் அவள் இதழ்களில் குறுநகை. பொதுவாக அவளது உடலையோ, மார்புகளையோ, கண்களையோ நீங்கள் தீண்டினாலன்றி விழிப்பவளல்ல. சிலவேளைகளில், எங்கிருந்து இவ்வளவு இரைச்சல்? காற்றா, கடலில் வீசும் பேரலையா இரண்டில் எது காரணம்? எனக் கேட்பதற்காக விழித்துக்கொள்வதுண்டு. சில வேளைகளில் காரணங்களின்றியும் விழித்துக்கொள்கிறாள்.
அப்படியொருமுறை விழித்துக்கொண்டவள், உங்களை சில நொடிகள் அவதானிக்கிறாள். பின்னர் நோய் மேலும் மேலும் பரவிக்கொண்டிருக்கிறது உங்கள் கண்களும், குரலும் பாதிக்கபட்டுள்ளன, என்கிறாள்.
என்ன நோய்? கேட்கிறீர்கள்.
அதைத் தெளிவாகச் சொல்ல இன்னமும் எனக்குப் போதாது -என்பது அவளது பதில்.
அடுத்தடுத்த இரவுகளில் அவளது இருண்டயோனிக்குள் பிரவேசிக்கிறீர்கள், இப்படியொரு குருட்டுத் தடத்தில் செல்லவேண்டியிருக்குமென தெரியாமலேயே அதனைச் தேர்வு செய்திருக்கிறீர்கள். எந்த நேரத்திலும் உங்கள் இருவரில் ஒருவரால் எதேச்சையாக நடக்கவிருக்கும் இயக்கத்திற்கோ, மீண்டுமொருமுறை உங்களுடைய இச்சையை அவளிடத்தில் பூர்த்திசெய்து கொள்ளவேண்டியோ, அவ்விடத்தை மீண்டும் தூர்க்கவோ, அல்லது கண்களில் நீர் தளும்ப பரவசத்திற்காகவென்று சம்போகிக்கவோ உபகாரம் செய்யும் விதத்தில் சில வேளைகளில் அங்கேயே, அவ்விடத்திலேயே நீங்கள் தங்கி விடுகிறீர்கள், உறங்கிப்போகிறீர்கள், இன்னும் சொல்லப்போனால் இரவு முழுக்கக் காத்திருக்கிறீர்கள்.
அவளுக்கு உங்கட் செய்கைகளில் இணக்கம் இருக்கிறதோ இல்லையோ கடனேயென்று இருக்கிறாள். அவள் உள்ளகிடக்கையை சரியாக அனுமானிப்பதென்பது இயலாததாக இருக்கிறது. இதுவரை உங்களால் அறியபட்டுள்ள அவளது புற சமிக்ஞைகளைக் காட்டிலும், மிகவும் புதிராகத்தான் இருக்கிறாள்.
இவ்வுலகம் குறித்து, உங்களைக் குறித்து, உங்கள் சரீரம் குறித்து, உங்கள் ஆன்மா குறித்து, உங்களைப் பீடித்திருப்பதாகச் சொல்லபடும் நோய் குறித்து அவளது பார்வை என்ன, அவளது கருத்து என்ன என்பதை அறிகிற வாய்ப்பினை உங்களுக்கோ அல்லது வேற்றுமனிதர்களுக்கோ அவள் தரப்போவதில்லை. ஏன் அவளுக்கேகூட அதுகுறித்து தெரியாது. அதனைத் தெரிவிக்கும் வகையும் அவள் அறியாள், எனவே அவளிடத்திலிருந்து எதையாவது அறிவதென்பது ஆகாத காரியம்.
எத்தனை யுகங்கள் எடுத்துக்கொண்டாலும்சரி நீ£ங்களோ அல்லது வேறொருவரோ உங்களைப் பற்றியும், இவ்விவகாரங்கள் பற்றியும் அவள் மனதில் உள்ளது என்ன? என்பதை ஒருபோதும் அறியமாட்டீர்கள். உங்கள் உயிர் வாழ்க்கைகுறித்த மறதிக்கு யுகக் கணக்கில் வயதிருக்கலாம், அத்தனையிலும் அவள் மனதில் உள்ளது என்னவென்பதை ஒருவரும் அறிந்திருக்கமாட்டார்கள் என்பதுதான் உண்மை, அவளுக்கும் அதனைத் தெரிந்துகொள்ள போதாது.
யாதொரு விபரமும் உங்களுக்கு அவளைப்பற்றித் தெரியாதென்பதால், உங்களைக் குறித்தும் யாதொன்றும் அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லையென நீங்கள் சொல்லக்கூடும். அப்படியான உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளூம் உத்தேசமும் உங்களுக்கு இல்லாதிருக்கலாம்.
எடுப்பானத் தோற்றமும், அதற்கேற்ற வளர்த்தியும்கொண்ட பெண்ணாக இருந்திருக்கவேண்டும். முதல் வார்ப்பில், ஒரே தடவையில் கடவுள் தம்கையாலேயே மிகக் கவனமெடுத்து விக்கினங்களின்றி அவளைப் படைத்திருக்கவேண்டும்.
வேறு எந்தப் பெண்ணோடும் ஒப்பிட இயலாதத் தோற்றமென்றுதான் சொல்லவேண்டும்.
முகத்திலிருந்து கால்கள் வரை மிருதுவான மேனி. அதன் கழுத்தை நெரிக்கலாம், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தலாம், கடுமையாக நடத்தலாம், அவமதிக்கலாம், ஏசலாம், இச்சைகளுக்கு பலியாக்கலாம், கொடுநோயாய் பீடித்து மரணத்திற்கு வழிகோலலாம், தற்காப்பற்ற உடல் இவற்றையெல்லாம் எதிர்பார்த்தே காத்திருக்கிறது.
நீங்கள் அவளைப் பார்க்கிறீர்கள்.
ஆக மெலிந்திருக்கிறாள், கண்ணாடிபோல கையாளவேண்டிய சரீரம். உடலின் ஏனையப் பகுதிகளோடு இணங்கிப்போகாத தனித்த அழகுகொண்ட கால்கள். அவை உடலோடு பொருந்தாமல் தனித்திருப்பதுபோல பிரமை.
நீங்கள் அவளிடத்திற் சொல்கிறீர்கள்: பேரழகியாய் நீ இருந்திருக்கவேண்டும்.
அதற்கவள்: அப்படித்தான் இருக்கிறேன், நன்றாகப் பார்த்துக்கொள்ளூங்கள். உங்கள் எதிரில்தானே இருக்கிறேன்.- என்கிறாள்.
அப்படி இருப்பதாகத் தெரியவில்லை- நீங்கள்.
பார்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள், நீங்கள் கொடுத்திருக்கும் பணத்திற்கு அவ்வுரிமையுண்டு.-அவள்.
உடலை கைகளில் வாங்கிக்கொள்கிறீர்கள், அதன் பல்வேறு பிரதேசங்களுக்கும் உங்கட் பார்வை பயணிக்கிறது, அதனைப் புரட்டிப்பார்க்கிறீகள், மறுபடியும் புரட்டுகிறீர்கள்.
இனிச் சொந்தமில்லை என்பதுபோலஅவ்வுடலை அப்படியே போட்டுவிட்டு விலகிச் செல்கிறீர்கள்.
அவ்வுடலை அநாதையாக்கபட்டுவிட்டது. அவ்வுடலைத் தீண்டுவதை நிறுத்திக்கொண்டாயிற்று.
நேற்றுவரை நீங்கள் பார்த்ததும், தீண்டியதும், உறவுகொண்டதும் எப்படி இன்றைய ராத்திரி மாயமாய் மறைந்துபோகுமென்பது உங்கள் புத்திக்கு எட்டாத புதிர். முதன்முறையாக உங்கள் பேதைமை தெரியவந்திருக்கிறது.
நீங்கள் சொல்கிறீர்கள்: என் கண்களுக்கு எதுவும் புலனாகவில்லை.
அவளிடத்தில் பதிலில்லை.
அவள் உறங்கிப்போகிறாள்.
அவளை எழுப்புகிறீர்கள். அவளொரு வேசியா? எனக் கேட்கிறீர்கள். இல்லையென தலையாட்டுகிறாள்.
அவளிடம், பின்னெதற்காக இரவு ஊழியத்திற்குப் பணம் பேசினாய், – நீங்கள்.
உறக்கத்திலிருந்து கலையாத, சன்னமான குரலில், நீங்கள் என்னிடத்தில் பேசிய அக்கணமே, உங்களை பீடித்திருப்பது உயிர்க்கொல்லி என்பதை புரிந்துகொண்டேன். முதன் முதலில் நான் வந்திருந்தபோது, உங்களுக்குக் கண்டுள்ள நோய் என்னவென்று அறியாமல்தானிருந்தேன், ஆனால் பிறகு வந்த நாட்களில் என்னால் அதைச் சுலபமாக புரிந்துகொள்ள முடிந்தது -என்கிறாள்
இன்னொரு முறை அதனைச் சொல்ல முடியுமா, கேட்கிறீர்கள். அவ்வாறே செய்கிறாள், மறுபடியும், அவ்வார்த்தையை ஒவ்வொரு சொல்லாக அழுந்த உச்சரிக்கிறாள்: உயிர்க்கொல்லி நோய்.
அந்நோயின் பெயர் உனக்கு எப்படி தெரிய வந்ததெனக் கேட்கிறீர்கள். எப்படியோ எனக்குத் தெரியும், சிலவற்றைத் தெரிந்து வைத்திருப்போம் ஆனால் எப்படி அறிந்தோமென்று நம்மால் சொல்ல முடியாது, இதுவும் அப்படித்தான் – என்கிறாள்.
நீங்கள் அவளிடத்தில், உயிர்க்கொல்லி எந்தவகையில் ஆபத்தானது? என்று கேட்கிறீர்கள்.
அதற்கவள், முதலாவதாகப் பாதிக்கபட்ட நபரிடத்தில் மரணம் சம்பவிக்கிற நோய் தம்மை பீடித்திருக்கிறது என்கிற பிரக்ஞையை அது தவிர்க்கிறது. இரண்டாவதாக உயிர்வாழ்க்கையென்றால் என்னவென்று அறியாமலேயே அந்நபரை சாகடிப்பதோடு, வேறுமரணங்கள் குறித்தோ அல்லது வேறு உயிர்வாழ்க்கை குறித்தோ தெரிந்துவைத்திராத ஞானசூன்யமாகவும் சம்பந்தப்பட்டவரை அது வைத்திருக்கிறது, என்கிறாள்.
மூடியவிழிகள் மூடியபடியே இருக்கின்றன. ஆண்டுடாண்டுகாலாமாக சேர்த்துவைத்த சோர்வுக்காக ஓய்வெடுக்கிறாளோ? அவள் உறங்கும்போது, அவளது கண்களுக்கு என்ன நிறமென்பது உங்களுக்கு மறந்து போய்விட்டது, ஏன் நீங்கள் அவளுக்கு முதல்நாள் இரவு வைத்த பெயர்கூடத்தான் ஞாபகத்திற்கு வருவதில்லை. அவளுக்கும் உங்களுக்கும் இடையூறாக இருக்கபோவது அவளது கண்களின் நிறமல்ல, என்பதைப் பின்னர் உணருகிறீகள். அநேகமாக பச்சை அல்லது சாம்பல் வண்ணத்தில்தான் அவை இருக்கக்கூடும். அதுவா முக்கியம். கண்கள் எந்த நிறத்தில் இருந்தாலென்ன, பார்வைதான் முக்கியம்.
பார்வை.
அவள் உங்களை நேரிட்டுப் பார்க்கிறாள் என்பது புரிகிறது.
நீங்கள் சத்தம் போடுகிறீர்கள், சுவருக்காய்த் திரும்பிக்கொள்கிறாள்.
அவள் சொல்கிறாள்: முடிவு நெருங்கிவிட்டது, பயப்படாதீர்கள்.
அவளை ஏந்திக்கொள்ள ஒற்றை கரம் போதும். அத்தனை மெலிந்தவள். ஏந்திக்கொள்கிறீர்கள். ஏறிட்டுப்பார்க்கிறீர்கள்.
ஆவலைத் தூண்டும்விதமாக, முலைகள் பழுப்பு நிறத்திலும், காம்புகள் ஏறக்குறைய கறுப்பு நிறத்திலும் இருக்கின்றன. அவற்றை உண்பதும் பருகுவதுமான காரியத்தில் நீங்கள் இறங்க உடலின் இதர பாகங்களிலிருந்து ஆட்ஷேபனை ஏதுமில்லை. உங்கள் லீலைகளை அனுமதிக்கிறாள், மறுப்பேதுமில்லை. நீங்கள் அவளிடத்தில் சத்தமிட மற்றுமொரு வாய்ப்பு. அப்படித்தான் ஒருமுறை, ஒரே ஒரு வார்த்தைக்காக -அதாவது உங்கள் பெயரை ஒரே ஒரு தடவையாயினும் உச்சரிக்கவேண்டுமென்பதற்காக மன்றாடுகிறீர்கள். அவள் மௌனம் சாதிக்கிறாள். அவளது மௌனம் எரிச்சலூட்டுகிறது. உரத்தக் குரலில் கண்டிக்கிறீர்கள். பிறகென்ன வழக்கம்போல அவளிடத்தில் ஏளனச் சிரிப்பு. அச்சிரிப்பு குறைந்த பட்சம், அவள் உயிரோடுதானிருக்கிறாள் என்பதை உங்களிடத்தில் உறுதிபடுத்துகிறது.
சட்டென்று சிரிப்பு மறைந்து போகிறது. நீங்கள் கேட்ட’ பெயர் அவள் வாயிலிருந்து உதிர்க்கபடுவதில்லை.
நன்றாக ஏறிட்டுப் பார்க்கிறீர்கள். உங்கள் முகம் ஊமையாய், கைகளொத்து அசைவுகளின்றி கிடக்கும் அவளது உறக்கத்தின் மீது படிந்திருக்கிறது. அவளது ஜீவன் மாத்திரம் வழக்கம்போல உடலின் விளிம்பில் தத்தளிப்பதை அவதானித்தபடி உங்கள் முகம் அவள் அங்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக தரிசித்தபடி சரீரம் முழுக்க பயணிக்கிறது. அவ்வாறு பயணிக்கையில் விழிகளும் விரல்களும், வீங்கிய வயிறும் முகமும், கால்களும் கைகளும், முலைகளும் யோனியும், சுவாசமும், இதயமும், கால வர்த்தமானமும்,பிடறியும் மொத்தத்தில் அவளோடு இணைந்த எல்லாமே ஒன்று மற்றொன்றாக, உடலின் ஏகபிரதிநிதியாக சாட்சியமளிப்பதை உங்களால் உணரமுடிகிறது.
பால்கணிக்குத் திரும்பி, கருங்கடலைப் பார்த்தபடி நிற்கிறீர்கள்.
உங்களிடத்தில் ஏன் எதற்கென்று விளங்காமலேயே விம்மல், பெருமூச்சு, பொருமல். அவை உங்களுக்குள்ளிருந்து மீண்டு வந்தவை, அழுகையாக அவதாரமெடுக்க இயலாமல், உங்களைப்போலவே வேறுவழியின்றி விளிம்பிலேயே நிற்கின்றன. கருங்கடலுக்கு நேரெதிரே, அறைக்குள் சுவருக்கு மறுபக்கம் அவள் உறங்க, கையறு நிலையில் அந்நியனைப்போல உங்களுக்காக அழுதபடி நீங்கள்.
அறைக்குள் வருகிறீர்கள். அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவ்வுறக்கத்திற்கு என்ன பொருளென்பது உங்கள் அறிவுக்கு எட்டுவதில்லை. நிர்வாணமாக, கட்டிலில், அவளுக்கான இடத்தில், அவள் உறங்குகிறாள். உங்கள் அழுகையில் அவள் அக்கறை செலுத்துவதில்லை. அப்படி அக்கரை செலுத்தாமலிருப்பதன் மூலம் தன்னை உங்களிடமிருந்து காத்துகொள்ளவும், அதனால் நடைமுறை உலகோடு மிக மோசமாக முரண்படவும் எப்படி அவளுக்குச் சாத்தியம் என்பது உங்கள் மரமண்டைக்குப் புரியாதது.
அவள் அருகிற்சென்று படுக்கிறீர்கள். தொடர்ந்து உங்களுக்காக அழுகிறீர்கள்.
பிறகு ஏறக்குறைய வைகறைப்பொழுது.. அறைக்குள் ஓரளவிற்கு இருள் குறைந்திருக்கிறது, தீர்மானமாக சொல்லமுடியாதபடி கொஞ்சம் வெளிச்சம். பிறகு நீங்கள் அவளைப் பார்த்தாகவேண்டும் என்பதுபோல விளக்குகளை ஏற்றுகிறீர்கள். அதாவது அவளை ஏறிட்டுப்பார்க்கவேண்டும். இதுவரை நீங்கள் பார்த்திராததை பார்த்தாக வேண்டும் என்பதற்காக. அவ்விளக்குகளின் தயவில் மூடிமறைக்கபட்ட யோனி உறக்கத்தில்கூட எப்படி சாமர்த்தியமாக அடுத்தவர் அறியாமல் ஒன்றை சுழித்து வாங்குகிறது அல்லது சிக்கவைக்கிறது என்பதை பார்த்தாக வேண்டும். தவிர கூந்தலில் ஆரம்பித்து முலைபாரங்களினால் மார்புவரையிலும், தோள்களொட்டியும், மூடிக்கிடக்கும் விழிமடல்கள்வரையிலும், அளவாய்ப்பிரிந்திருக்கும் வெளுத்த அதரங்களிலும் இருக்கிற அழகுத் தேமல்களைக்கூட அவ்விளக்கின் உதவிகொண்டே பார்த்தாக வேண்டும். கோடைசூரியன் காய்கிற இடத்தில், திறந்தவெளிகளில், பார்க்க வாய்புள்ள இடங்களில் பார்க்க வேண்டும். நெஞ்சோடு புலம்புகிறீர்கள்
அவள் உறங்குகிறாள்
நீங்கள் விளக்குகளை அணைத்து விடுகிறீர்கள்.
வெளிச்சம் இப்போது சற்றுக் கூடுதலாகவே இருக்கிறது.
இன்னமும் புலர்ந்தும் புலராமல் இருக்கிற வைகறை. வான்வெளியைக்காட்டிலும், நேரத்திற்கான விஸ்தீரணம் கூடுதலென்று சொல்லவேண்டும். அக்கூடுதல் நேரம் போக்கிடம் தெரியாமல் விழிக்க, நமக்கு நேரம் போகவில்லையே என்கிற கவலை. அவள் செத்தொழியவேண்டும், அவளுக்கு மரணம் சம்பவிக்க முடியும் தருவாயில் இருக்கிற இரவின் இந்த நேரந்தான் பொருத்தமானது, சிக்கலில்லாதது, எனக்கூறுகிறீர்கள், சந்தேகமில்லாமல் இவைகளெல்லாம் உங்களுக்காகத்தான் நிகழவேண்டுமென்று சொல்லக்கூட உங்களுக்கு விருப்பம் ஆனால் முடிவதில்லை.
கடலிலிருந்து வருகிற இரைச்சல் முன்னைக்கும் இப்போது கூடுதலாகக் கேட்கிறது. அந்நியப்பெண் அவளுக்கான இடத்தில், கட்டில் விரிப்பின் குவியலுக்கிடையில், கட்டிலில், படுத்திருக்கிறாள். விரிப்பின் வெண்மை அவள் உருவத்தை சற்றே கறுமைபடுத்திக் காட்டுகிறது. இறப்பினால் கைவிடப்பட்ட மனிதவிலங்கு என்பதைவிட, உயிரினால் கைவிடப்பட்ட மனிதவிலங்குபோலக் கிடக்கிறாள்.
அவள் வடிவத்திலிருந்து பார்வையை மீட்பதென்பது மிகவும் அரிதான செயல். அவ்வாறு பார்க்கும் தருவாயில், அச்சரீரத்துடைய அவஸ்தைகளின் பலம், அருவருப்பூட்டும் அதன் பலவீனம் அல்லது பலமின்மை பிறகு உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத அப்பலமின்மையை வெல்வதற்கான திராணியென அனைத்தையும் அங்கே ஒரு சேரக் காண்கிறீர்கள்.
அறையைவிட்டு வெளியேறுகிறீகள், பால்கணியில் நிற்கிறீர்கள் எதிரே கடல், அதன் வாசத்திற்கும் உங்களுக்கும் இடைவெளி அதிகம்.
வானம் தூறல்போட்டுக் கொண்டிருக்கிறது. பொழுது புலர்ந்ததின் காரணமாக வானம் வெளுத்திருக்க கீழே கடல் கூடுதலாகக் கறுத்திருக்கிறது. அதன் இரைச்சல் உங்கள் செவிகளில். கறுப்பு வண்ணத்தில் நீர் மட்டம் உயர்ந்து, முன்னோக்கி நகருகிறது, உங்கள் திசைக்காய் வருகிறது, கிட்டத்தில் வந்திருக்கிறது. தீட்டிய வாளொத்த பேரலையொன்று எழுந்த வேகத்தில் மடிந்துவிழுந்து சிதறுகிறது. எப்போதும் போல இராத்திரி நேரங்களில் மாத்திரமே நிகழ்கிற இடியும் மின்னலுமான களேபரத்துடன் வெகுதூரத்தில் வானம். அவ்விடத்தைவிட்டு அகலாமல் வெகுநேரமாக நடப்பதற்கெல்லாம் சாட்சியாக இருக்கிறீர்கள்.
நீங்களோ அல்லது கட்டிலில் கிடக்கும் அந்நிழல் பிண்டமோ செய்யாததை, கடல் செய்ய வந்திருக்குமோ என்கிற சிந்தனை உங்களுக்கு.
சிந்தனையின் முடிவாக இரவின் இவ்வந்திமக் காலத்தில் அவளுக்கு மரணம் சம்பவிக்குமெனில், உயிறற்ற உடலை, கறுமையான இக்கடல் தண்ணீருக்குள் எறிவது சுலபமென்று நினைக்கிறீர்கள். தவிரஅப்படி எறிவதால், இவ்வுலத்திலிருந்து அவள் உடலை அப்புறபடுத்த வேண்டிய காரியத்தையும் நிறைவேற்றியதுபோல ஆகுமென நினைக்கிறீர்கள். கட்டிலையும் அதனோடு ஒட்டியிருக்கும் சூரியகாந்தி மற்றும் எலுமிச்சை மணங்களை ஒதுக்கிவிட்டு, உடலைமாத்திரம் எறிவதென்றால், என்ன.. சில மணித் துளிகள் கூடுதலாகத் தேவைப்படலாம்.
மீண்டும் அறைக்குத் திரும்புகிறீர்கள். அவளெங்கும் ஓடிப்போகவில்லை. அங்குதான், எப்போதும் உறங்குகிற ஒருத்தியாக, தனக்கெனவே அமைந்த அநாதையாக்கபட்ட இராத்திரியோடும், தனக்கான மாட்சிமைகளோடும் கட்டிலில் கிடக்கிறாள்.
கடல் ஆகக் கறுத்து, நீர் அத்தனையும் திரட்டிக்கொண்டு,கொந்தளித்து அவளண்டையில் நெருங்குகிற நேரத்தில், அவளுக்கு நேரவிருக்கும் ஆபத்தானதென்பது உடலின் ஏக விருப்பத்தின்படி எந்த நேரத்திலும் உயிர்வாழ்க்கையைத் நிறுத்திக்கொண்டு, அவ்வுடலை அவளைச் சுற்றிப் பரவிக்கிடக்க அனுமதிப்பதும் அல்லது அவ்வுடலை உங்கள் பார்வையிலிருந்து காணாமற் போகசெய்வதும் ஆகும். அதனை நிறைவேற்றவே, அவளது உடல் படைக்கப்பட்டிருக்கிறதென்பது உங்கள் கண்டுபிடிப்பு. அவ்வச்சத்துடனேதான் அவளும் உறங்குகிறாள், தவிர உங்கள் அப்பிராயத்திற்குத் தன்னை உட்படுத்திக்கொள்வதும் அவ்வுறக்கத்தின் நோக்கமாக இருக்கலாம்.
- கலில் கிப்ரான் கவிதைகள் காதலியோடு வாழ்வு << குளிர் காலம் >> கவிதை -2 (பாகம் -4)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -30 << வீணாக்குபவள் நீ ! >>
- உயிர்க்கொல்லி – 1
- Tamil Literary Seminar at Yale University
- எழுத்தாளர்விழாவில் தமிழ் மாணவர்களுக்கு பயனுள்ள கருத்தரங்கு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2008ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தேர்வும் சிறுகதைக் கருத்தரங்கமும்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -3
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்…
- தார்மீக வேலிகள்
- நர்கிஸ் மல்லாரி நாவல் கட்டுரைப் போட்டி முடிவுகள்
- கடந்த வாரத்திய மொழிபெயர்ப்பு கதை குறித்து
- புத்தகச் சந்தை
- அன்புள்ள ஜெயபாரதன்
- விவரண வீடியோப் படக்காட்சி
- அரசியல்ல இதெல்லாம் சாதா……ரணமப்பா !!!
- இன்னொரு சுதந்திரம் வேண்டும் !
- கந்த உபதேசம்
- “எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”
- வந்து போகும் நீ
- யாழ்ப்பாணத்தில் அண்மைக்கால நூல் வெளியீட்டு நிகழ்வுகள்
- சங்கச் சுரங்கம் – 8 : சிறுபாணாற்றுப் படை
- பாரி விழா
- ஓட்டம்
- பாலம்
- ஐந்து மணிக்கு அலறியது
- கவிதை௧ள்
- கவிதையை முன்வைத்து…
- வேத வனம் விருட்சம் 30
- சிட்டுக்குருவி
- திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா
- சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கவிஞர் சோதுகுடியானின் கள ஆய்வியல் வரைபடம்
- சதாரா மாலதி
- நினைவுகளின் தடத்தில் – (28)
- என் மகள் N. மாலதி (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 2
- “பிற்பகல் வெயில்”
- உயிர்க்கொல்லி – 2
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்பது இரா.முருகன்
- கழிப்பறைகள்