K.ரவி ஸ்ரீநிவாஸ்
2005ல் உச்ச நீதிமன்றம் இனாம்தார் வழக்கில் தனியார் கல்லூரிகளில் அரசு தனக்கென இடங்களைத் தர ஆணையிட முடியுமா என்ற கேள்விக்கு விடை தந்திருந்தது. அப்போது அதைப் பற்றி திண்ணையில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பும் என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தேன். அதில் கூறப்பட்டவற்றை அனைத்தையும் மீண்டும் இங்கு எடுத்துரைக்கத் தேவையில்லை. ஆனால் கிட்டதட்ட இரண்டாண்டுகளுக்குப் பின்னும் உயர் கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு இடங்களை தர ஆணையிட முடியுமா, முடியாதா, ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்சினை நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகள் மூலம் ‘தீர்த்து’ வைக்கப்படுமா என்ற கேள்விகளுக்கு தெளிவான விடைகள் இல்லை. இந்த ஆண்டு தமிழகத்தைப் பொறுத்த வரை தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கை விலக்கிக் கொண்டுள்ளதால் தற்காலிகமாக ஒரு தீர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு என்ன நிலை நிலவும் என்பதை இப்போது கூற இயலாது.
இனாம்தார் வழக்கின் தீர்ப்பின்னை நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அரசியல் சாசன திருத்தம் கொண்டு வந்தது, அது சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்து முழு விலக்கு அளித்தது. அந்த அரசியல் சாசனத் திருத்தம், மற்றும் ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த சட்டம் – இவை செல்லத்தக்கன அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் வரும் தீர்ப்புகளைப் பொறுத்து அடுத்த ஆண்டின் நிலவரம் அமையும்.
உச்ச நீதிமன்றம் அந்த அரசியல சாசனத் திருத்தம் செல்லத்தக்கது அல்ல என்று சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த திருத்தமே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை செயல்படுத்தாலிருக்க கொண்டு வரப் பட்ட திருத்தம். இனாம்தார் வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பு அதற்கு முன்பு வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புகளின் மேல் எழுந்த சில கேள்விகளையொட்டி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு. எனவே உச்ச நீதிமன்றம் இந்த திருத்தத்தினை செல்லத்தக்கது என்று அறிவிக்காது என்று கூற முடியும். அப்படி ஒரு தீர்ப்பு வந்தால் அதை அனைத்துக் கட்சிகளும் கண்டிக்கும். மீண்டும் ஒரு அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வரப்படுமா என்பதை இப்போது கூற முடியாது. அப்படி கொண்டு வரப்பட்டு அதனடிப்படையில் சட்டம் நிறைவேற்றி ஒன்பதாம் அட்டவணையில் சேர்த்து நீதிமன்றத் தலையீடு இல்லை என்ற தீர்வும் இப்போது சாத்தியமில்லை. ஏனெனில் ஒன்பதாம் அட்டவணை குறித்த தீர்ப்பு அதற்கான வாய்ப்புகளை தடுத்து விட்டது. இந்தத் தீர்ப்பு குறித்தும் ‘எதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு’ என்ற தலைப்பில் திண்ணையில் எழுதியிருக்கிறேன். அப்படியே ஒரு அரசியல் சாசனத் திருத்தம், சட்டம் கொண்டுவரப் பட்டு அது ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கபட்டாலும் அது செல்லுமா செல்லாதா என்பதை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரம் உச்ச நீதி மன்றத்திற்கு இருக்கிறது. ஆகையால் இன்னொரு அரசியல் சாசனத் திருத்தம், அதனடிப்படையில் ஒரு சட்டம் என்பது தீர்வாக இராது. ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் பிற்படோருக்கான இட ஒதுக்கீடு, அதற்கு வேராக இருக்கும் அரசியல் சாசனத் திருத்தம் இவை குறித்த தீர்ப்பினை மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதைப் பொருத்தே அடுத்த ஆண்டு என்ன நிலை நிலவும் என்பது அமையும்.
இனாம்தார் தீர்ப்பு அரசு தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை போன்றவற்றில் அரசு ஒரு போதும் தலையிடவே கூடாது, கட்டண நிர்யணம் போன்றவற்றில் அரசு எதுவும் செய்ய முடியாது என்று கூறவில்லை. அதே போல் அது தனியார் கல்வியை முழுக்க முழுக்க வணிகமயமாக்குவதையும் ஆதரிக்கவில்லை. எனவே இந்த வகையில் அத்தீர்ப்பினைக் குறித்து வைக்கப்படும் விமர்சனங்கள் தவறானவை(1). நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்ட ஒன்றினை நான் ஏற்கனவே எடுத்துக் காட்டியிருக்கிறேன். அதை இங்கு மீண்டும் தருகிறேன்.
It is for the Central Government, or for the State Governments, in the absence of a Central legislation, to come out with a detailed well thought out legislation on the subject. Such a legislation is long awaited. States must act towards this direction. Judicial wing of the State is called upon to act when the other two wings, the Legislature and the Executive, do not act. ( emphasis added)
அரசுகள் செய்ய தவறியதற்கான பழியை நீதிமன்றங்கள் மேல் போட முடியாது. இட ஒதுக்கீடு, அரசு இடங்களைப் பெறும் உரிமை என்பதாக மட்டும் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை முன்னிறுத்துவது வேறு பல பரிமாணங்களை மறைப்பதாகும். இதையும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பும் என்ற கட்டுரையில் கூறியிருக்கிறேன். இது வரை மத்திய அரசு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை, கட்டண நிர்யணம் போன்றவை குறித்து ஒரு மாதிரி சட்ட வடிவைக் கூட முன் வைத்து மாநிலங்களுடன் விவாதிக்கவில்லை. நிகர் நிலைப் பல்கலைகழகங்களைப் பொறுத்த வரை மாநில அரசுகளின் அதிகாரம் என்ன, அவற்றில் மாணவர் சேர்க்கை, படிப்புகளுக்கான அங்கீகாரம் போன்றவற்றில் AICTE, UGC எந்த அளவு தலையிட முடியும் போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடைகள் இல்லை. நிகர் நிலைப் பல்கலைகழகங்களில் சட்டபடிப்பு துவங்குவது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் முரண்படும் தீர்ப்புகளை அண்மையில் அளித்துள்ளனர். ஆண்டுதோறும் இது போன்ற கேள்விகள் எழுகின்றன, தொடர்கின்றன. இந்தக் கேள்விகளுக்கும், பிரச்சினைகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் விடைகள் காண முடிந்தால் நிச்சயம் விடைகள் காண முடியும். ஆனால் இட ஒதுக்கீட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இவற்றிற்குக் கொடுக்கப்படுவதில்லை, அரசியல் கட்சிகளுக்கும் இட ஒதுக்கீடில் உள்ள அக்கறை இக்கேள்விகளுக்கும், பிரச்சினைகளுக்கும் விடை காண்பதில் இல்லை.
சிறுபான்மையினரின் உரிமைகள், சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களில் எந்த அளவிற்கு அரசு தலையிட முடியும், சிறுபான்மையினர் தாங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் எந்த அளவிற்கு தங்களுக்கென இடங்களை ஒதுக்கி நிரப்ப முடியும், பிறருக்கு எந்த அளவு இடங்களை ஒதுக்கலாம் போன்றவை குறித்து இங்கு நான் விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. இருப்பினும் சில சமீபத்திய போக்குகளை, செய்திகளை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.
உச்ச நீதிமன்றம் 1992ல் செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி குறித்த வழக்கில் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அந்தப் பிரிவு சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு அதிகபட்சம் 50% இருக்கலாம் என்று கூறியது. 50% இட ஒதுக்கீடு என்பதை கட்டாயமில்லை, அதற்கு அதிகமாக இருக்ககூடாது. அது 20% ஆக இருந்தாலும் அது செல்லத்தக்கதுதான். சிறுபான்மையினர் அல்லாதோர் கல்வி நிறுவனங்கள் அரசு உதவி பெறும் போது அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை செய்ய வேண்டும், ஆனால் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் அரசு நிதி உதவி பெற்றாலும் மாணவர் சேர்க்கையில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை தரலாம், இடங்களை அதிகபட்சம் 50% சிறுபான்மையினருக்கு ஒதுக்கலாம் என்று இருக்கிறது. இந்நிறுவனங்கள் 50% மதிப்பெண் பெற்ற சிறுபான்மை மாணவருக்கு இடம் தரலாம், 90% பெற்ற சிறுபான்மை அல்லாத மாணவருக்கு இடம் தர மறுக்கலாம், மேற்கூறிய விதிகளுக்குட்பட்டு. உதாரணமாக ஒரு கிறித்துவ கல்வி நிறுவனம் கிறித்துவ மாணவர் 50% பெற்றிருந்தாலும் கிறித்துவ மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் காலி இருந்தால் சேர்த்துக் கொள்ளப்படுவார், ஆனால் இந்து/இஸ்லாமிய மாணவர்கள் 80% பெற்றிருந்தாலும் மீதமுள்ள 50% இடங்களில் காலி இருந்தால் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று விதி வகுக்க முடியும். அரசு இதில் தலையிட முடியாது, அக்கல்வி நிறுவனம் 100% அரசு நிதி உதவி பெற்றிருந்தாலும். (அரசிடமிருந்து 100% நிதி உதவி பெற்றிருந்தாலும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் அரசு அவற்றில் பலவற்றில் தலையிட முடியாது).
புது தில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி கிறித்துவ மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை அதிகரித்துள்ளது, தலித் கிறித்துவர்களுக்கும் முதன் முறையாக 10% இட ஒதுக்கீடு தர முடிவு செய்துள்ளது. அரசின் நிதி உதவியை முழுவதுமாகக்/மிகப் பெரும்பான்மையாகக் கொண்டு நடத்தப்படும் கிறித்துவ கல்வி நிறுவனங்கள் இவ்வாறு செய்வது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. ஸ்டீபன்ஸ் கல்லூரியும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிதான், அதன் மொத்த செலவில் 90- 95 % அரசு நிதியாக கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.ஸ்டீபன்ஸ் கல்லூரியின் முடிவினை விமர்சித்து ராமச்சந்தர குகா அவுட்லுக்கில் எழுதினார். தி ஹிந்துவில் ஸ்டீபன்ஸ் கல்லூரி முதல்வர் வலசன் தம்பு இந்த முடிவினை நியாயப்படுத்தி எழுதினார். கத்தோலிக்க பிரிவினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் கிறித்துவருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும், தலித் கிறித்துவருக்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவற்றிற்கான எதிர்வினைகளில் ஹிந்துக்கள் பலர் இது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தனர்.கிறித்துவர் அல்லாதோருக்கு இடங்கள் தொடர்ந்து இப்படி குறைந்து கொண்டே போவது, அவர்கள் புகழ்பெற்ற, தரமான கல்வி வழங்கும் கிறித்துவ கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை பாதிக்கும் என்று அச்சம் தெரிவித்திருந்தனர். இதை மிகையான அச்சம் என்று புறந்தள்ளி விட முடியாது. அரசின் நிதி உதவியைப் பெற்று நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மையினர் உரிமைகள் என்ற பெயரில் இப்படி இட ஒதுக்கீடு செய்வதும், அதை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவதும் நியாயம்தானா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தலித் கிறித்துவர் என்ற பாகுபாட்டினை அரசியல் சட்டமும், அரசும் அங்கீகரிக்காத போது இப்படி அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது முறையா போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இப்படியெல்லாம் இட ஒதுக்கீடு அளிப்பது, அதை அதிகரிப்பது மத மாற்றத்தினை ஊக்குவிக்கவா என்ற ஐயமும் முன் வைக்கப்படுகிறது. இந்து அமைப்புகள் அரசு உதவி பெற்று நடத்தும் கல்வி நிறுவனங்களில் இந்துக்களுக்கு முன்னுரிமை தர முடியாது, ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அரசு 100% நிதி உதவி செய்தாலும் 40% இடங்களை சிறுபான்மையினர் என்ற பிரிவில் ஒதுக்க முடியும்,சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்து முற்றிலுமாக விதிவிலக்கு என்பவை இந்தியாவில் சிறுபான்மை உரமைகள், மதச்சார்பின்மை போன்றவை இந்துக்களை பாரபட்சமாக நடத்த பயன்படுவதாக இந்துக்கள் அஞ்சினால் அதை முற்றிலுமாக அர்த்தமற்றது என்று ஒதுக்கி விடமுடியாது.
மத்திய அரசு சிறுபான்மையினர் யார் என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்க வகை செய்யும் சட்டத்தினை கொண்டு வரவுள்ளது. மாநில அளவில்தான் சிறுபான்மையினர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் அகில இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் கிறித்துவர்கள், இஸ்லாமியர் சிறுபான்மையினர் என்ற நிலை மாறிவிடும். மக்கள் தொகை அடிப்படையில் என்று எடுத்துக் கொண்டால், 50% மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள பிரிவினர் சிறுபான்மையினர் என்று வரையரை செய்தால், பஞ்சாபில் இந்துக்கள் சிறுபான்மையினர், மிசோரத்தில் கிறித்துவர் அல்லதோர் சிறுபான்மையினர், ஜம்மு காஷ்மீரில் முஸ்லீம்கள் சிறுபான்மையினர் அல்லர் என்பதாக இது அமையும். இப்போது இப்படி நிர்யணப்பது குறித்து குழப்பங்கள் உள்ளன. தேசிய அடிப்படையில் இஸ்லாமியர் சிறுபான்மையினர் என்று கருதப்பட்டாலும், ஜம்மு காஷ்மீரில் அவர்கள் சிறுபான்மையினர் அல்ல
என்பதால் அவர்களுக்கு தேசிய அளவில் செயல்படுத்தப்படும் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் பொருந்துமா
என்பது போன்ற கேள்விகள் இருக்கின்றன. சிறுபான்மையினரை மறுவரையரை செய்யும் அதிகாரத்தினை மாநிலங்களுக்கு மத்திய அரசு தருவதற்கு பலத்த எதிர்ப்பு இருக்கிறது. நாடாளுமன்ற மழைக்காலத் தொடரில் இது குறித்த சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
இப்போது சிறுபான்மையினர் என்பதை மாநில அளவில் தீர்மானிக்கும் போது, சென்னையிலுள்ள ஒரு கல்வி நிறுவனம் (உ-ம் லயோலா கல்லூரி) சிறுபான்மை மாணவர் என்ற வகையில் தமிழ்நாட்டிலுள்ள கிறித்துவர்களை மட்டும் சிறுபான்மையினர் என்று கருத வேண்டுமா, அல்லது பிற மாநிலங்களில் உள்ளதையும் கணக்கில் கொள்ள வேண்டுமா போன்ற கேள்விகள் எழும்.உதாரணமாக மிசோரத்தில் கிறித்துவர்கள் சிறுபான்மை இல்லை என்றால் அங்கு படித்த/படிக்கும் கிறித்துவ மாணவர்களுக்கு சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டில் லயோலா கல்லூரியோ இல்லை தில்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியோ இடம் தர முடியுமா, முடியாதா என்ற கேள்வியும் எழும்.
சிறுபான்மை என்பதை எப்படி வரையரை செய்வது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. மத சிறுபான்மையினர் தவிர மொழி சிறுபான்மையினர் என்பதையும் அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினர் யார் என்பதை வரையரை செய்வதற்கான விதிகள்/அளவுகோல்கள் குறிப்பிடப்படவில்லை. அரசியல் சாசனம வகுக்கப்பட்ட போது இது குறித்து விவாதம் எழுந்தாலும் ஒரு தெளிவான வரையரையை அம்பேத்கார் முன் வைக்கவில்லை. எனவே நீதிமன்றங்கள் தீர்ப்புகளில் கூறியுள்ளவை வழிகாட்டும் கோட்பாடுகளாக/விதிமுறைகளாக உள்ளன, குறிப்பாக மத ரீதியான சிறுபான்மையினர் யார் என்பதை அடையாளம் காண.
மத்திய அரசு கொண்டுவரவுள்ள சட்ட முன் வடிவிலும் எந்த அடிப்படையில்/அளவுகோலின் பெயரில் சிறுபான்மையினர் என்று தீர்மானிப்பது குறித்த விளக்கம் இல்லை. அதைப் பின்னர் தீர்மானிப்பது என்று விடப்பட்டுள்ளது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இந்த வரையரை செய்யும் அதிகாரத்தினை தருவதன் மூலம் குழப்பங்கள் அதிகரிக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. எனவே இது குறித்து வழக்குகள் தொடரப்பட்டு உச்ச நீதிமன்றம் மாநில அளவில் யார் சிறுபான்மையினர் என்று தீர்மானிப்பதில், சில விதிகளை/அளவுகோல்களை முன் வைத்தால் தெளிவு பிறக்கலாம். ஏற்கனவே இருக்கும் சர்ச்சைகள், குழப்பங்களுடன் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை, அதில் அரசு இடங்களை எடுத்துக் கொள்ள முடியுமா என்பதில் உள்ள சர்ச்சைகள், குழப்பங்கள் கூடும் என்று எதிர்பார்க்கலாம். சிறுபான்மையினர் இப்போதுள்ள மத்திய அரசின் செல்லக் குழந்தைகளாக உள்ளனர்.அவர்களை திருப்திப்படுத்த பல சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. எனவே அவர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி இந்த சட்டம் கொண்டுவரப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
உயர் கல்வியில் அந்நிய முதலீட்டினை, பிற நாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து மத்திய மனிதவளத் துறை கொண்டுவரவிருந்த சட்ட முன் வடிவு இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் தற்போது கொண்டுவரப்படாது என்று தெரிகிறது. இடதுசாரிகள் தேசிய அறிவு கமிஷன் அறிக்கையையும் விமர்சித்துள்ளார்கள். நடைமுறையில் வெளி நாட்டு பல்கலைகழகங்கள் வழங்கும் பட்டம் என்ற பெயரில் முறைப்படுத்தப்படாத கல்வி நிறுவனங்கள் பட்டம் தருகின்றன. இவற்றை முறைப்படுத்துவது தேவையாகிறது. மேலும் அந்நிய நாட்டுப் பல்கலைகழகங்கள் இந்தியாவில் கல்வி நிறுவனங்களை துவங்குவதில் சாதகங்களும், பாதகங்களும் உள்ளன. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி, ஆராய்ச்சி செய்ய வெளி நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியாவிற்குச் செல்கின்றனர். இந்தியாவில் வாய்ப்புகளை அதிகரிக்காவிட்டால் இப்போக்கு அதிகரிக்கவே செய்யும். உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகமாக்குதல், இருக்கின்றவற்றில் இடங்களை அதிகரித்தல் உட்பட பல நடவடிக்கைகள் தேவை என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டாலும் இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக கருத்தொற்றுமை உருவாக வாய்ப்புகள் குறைவு. தேசிய அறிவு கமிஷன் உயர்கல்வியில் ஒரு ஒழுங்குபடுத்தும் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்றுக் கொண்டாலும் வேறு சில அமைச்சகங்களின் எதிர்ப்பால் (சுகாதாரம், விவசாயம்) இந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகியுள்ளது. இது தவிர GATS (General Agreement on Trade in Services) பேச்சுவார்த்தைகளில் இந்தியா கல்விச் சேவை குறித்து எத்தகைய நிலைப்பாடு எடுக்க வேண்டும், எந்த அளவு இதில் பிற நாட்டு முதலீடு போன்றவற்றை அனுமதிக்க வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை இல்லை. வணிகத் துறை எடுக்கும் நிலைப்பாட்டினை மனித வளத் துறை எதிர்க்கிறது. இடதுசாரிகளும் வணிகத்துறையின் நிலைப்பாட்டினை விமர்சித்துள்ளனர்.
சில முக்கியமான கேள்விகளுக்கும், சிக்கல்களுக்கும் இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்குள் தீர்வுகள் காணப்படாவிட்டால் குழப்பங்கள்தான் அதிகரிக்கும். தீர்வுகள் காண்பதில் கருத்தியல் ரீதியான வேறுபாடுகள் தடையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. உதாரணமாக உயர்கல்வியில் தனியாரின் பங்கு எதுவாக இருக்க முடியும், அரசின் பங்கு எதுவாக இருக்க முடியும் என்பதில் கருத்தியல் ரீதியாக பல வேறுபாடுகள் இருக்கின்றன. இடது சாரிகள் அரசு கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும், உயர்கல்வி மிகப் பெருமளவிற்கு அரசின் கண்காப்பில், நிர்வாகத்தில் இருக்க வேண்டும், கல்விக்கான கட்டணங்களை அரசு உயர்த்தக் கூடாது, கல்விக்கான மான்யங்களின் அளவு அதிகரிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். தேசிய அறிவுக் கமிஷன் உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட சதவீத வருவாயை கட்டணங்கள் மூலம் மாணவர்களிடமிருந்து பெற வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறது. இந்திய அரசு உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டுமா அல்லது அனைவருக்கும் ஆரம்பக் கல்வி, எழுத்திறிவின்மையை ஒழிக்க முன்னுரிமை தர வேண்டுமா என்று பல கேள்விகள் உள்ளன. மேலும் உயர்கல்வியை அரசே தரவும், அதில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் 1950களில், 1960களில் இருந்தது, இன்று அவ்வாறில்லை என்பதால் இதில் அரசின் பங்கு குறைவாகவும், தனியாரின் பங்கு அதிகமாகவும் இருப்பதே இன்று பொருந்தக் கூடிய நிலைப்பாடு என்ற கருத்தும் உள்ளது. அரசு உயர்கல்வியை முழுதுமாக வணிகமயமாக்கலை அனுமதிக்கக் கூடாது, அதே சமயம் தனியார் உயர்கல்வி வழங்குவதை நெறிப்படுத்தலாம் என்ற கருத்தும் உள்ளது.
எது எப்படியாயினும் தீர்வுகள் காணப்பட வேண்டிய காலகட்டத்தில் இந்தியா இருக்கிறது. இன்று தீர்வுகளை தவிர்ப்பது நாளை வேறு பல பிரச்சினைக்களுக்கே வழி வகுக்கும் என்பதுதான் கசப்பான உண்மை. உயர்கல்வியை பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை கூட்டுதல் உட்பட
பல நோக்கங்கள் செம்மையாக நிறைவேற தீர்வுகள் காணப்பட்டேயாக வேண்டும். அதை அரசுகள் சரியாக செய்ய வேண்டிய போது செய்யுமா என்பதுதான் மிக முக்கியமான கேள்வியாக நிற்கிறது.
(1) உ-ம் காலச்சுவடு ஆகஸ்ட் 2007 தலையங்கம் ‘நீதிமன்றங்கள் இழைக்கும் அநீதி’.
http://kalachuvadu.com/issue-92/page3.asp
ஏதோ அந்த தீர்ப்பால்தான் கல்விச் சூழலே நாசமாகிவிட்டதாக கருதுவது உண்மைக்கு மாறானது. பிரச்சினையை திசை திருப்புவது. கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது மாநிலங்களுக்கு கல்வியில் அதிகாரம் இல்லை என்பதாக இல்லை. மாநிலங்கள் உயர்கல்வியைப் பொறுத்தவரை வரம்பின்றிச் செயல்பட முடியாது என்பது உண்மை. ஆனால் இதன் பொருள் மாநிலங்களுக்கு கல்வியில், குறிப்பாக உயர் கல்வியில் அதிகாரமே இல்லை என்பதல்ல. சிலர் இதை மாநில சுயாட்சியுடன் தொடர்புபடுத்துகின்றனர். இப்போதுள்ள அதிகாரங்களை மாநிலங்கள் சரியாகப் பயன்படுத்துகின்றனவா, அடுத்த கட்ட நிர்வாக அமைப்புகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் கிராமப் பஞ்சாயத்துகள், ஒன்றியங்கள், பேரூராட்சிகளுக்கு மாநில சுயாட்சி கோருவோர் அதிகார பங்கீட்டினை எந்த அளவு தந்துள்ளனர் என்ற கேள்வியையும் நாம் எழுப்பியாக வேண்டும்.
ravisrinivas@rediffmail.com
- என் மூலையில் – கறுப்பு
- பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும்
- நேற்று அரேபியா! இன்று தேரிக் காடு!!
- சுதந்திரப் போராட்டமும் தமிழ் எழுத்தாளர்களும் – 2
- விவேகானந்தா கல்விக் கழகம், சென்னை 84 – 13-வது பண்பாட்டு நாடக விழா
- இஸ்லாமிய கலாச்சாரம்-கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் படைப்பு குறித்த ஒர் உரையாடல்.சென்னையில் நிகழ்வு
- அரிமா விருதுகள் 2006
- கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் ஊர்விலக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது
- திகம்பர மாமியார்!
- மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா…
- ஒருவிதம்
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 6
- கவிஞர் சதாரா மாலதியும் சிலப்பதிகார மாதவியும்
- இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909 -03.01.1972)
- பிழைதிருத்தம் தொடர் 14 நிலைபாடு – நிலைப்பாடு
- சல்லா ராதாகிருஷ்ண சர்மா: சுற்றி வளைத்து எழுதாத தெலுங்குக் கவிஞர்
- தோப்பில் முகமது மீரானின் சமீப சிறுகதைகள்: நினைவுக் கிடங்கும், ஆறாத ரணங்களும்
- நுண்கலை : கோரம் தவிர்த்து உக்கிரம் காட்டுதல்
- ‘யுகமாயினி’ வரும் அக்டோபர் 2007 வெளியாகிறது
- அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ? -1
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 2 பாகம் 1
- கடிகாரங்கள்
- காதல் நாற்பது – 37 என் ஐயமும் அச்சமும் !
- கிளிநொச்சி
- முதல் மரியாதை
- அறிந்தும்.. அறியாமலும்…
- வாழ்க்கைக் கணக்கு
- இந்தியாவின் தேசிய விருதுகள்
- உயர் கல்வி: அரசு,தனியார்,சிறுபான்மையினர்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்…
- தண்டனை
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 22
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 26
- கவர்னர் பெத்தா