பாரி பூபாலன்
மின் கடிதங்கள் தினமும் வருவதுண்டு. அதுவும் இலவசமாய் இருப்பதால், வருவது மிக ஏராளம். வரும் கடிதங்களும் பல்வேறு வகையானவை. இந்தக் கடிதத்தை அடுத்த 5 பேர்களுக்கு அனுப்பினால் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் என்று கூறும் கடிதம் முதல், Microsoft-ம் Honda-ம் உங்களுக்கு பணமும் பரிசும் அனுப்புவார்கள் என்று கூறும் கடிதங்கள் வரை பல்வேறு கடிதங்கள். அதுவும் நம்மை யாரென்றே தெரியாத நபர்களிடமிருந்து இந்த கடிதங்கள் வந்து சேரும்.
மனதிற்குச் வியப்பைத் தரும் இந்த கடிதங்கள் வரும் அதே சமயத்தில், சிரித்து மகிழ்வதற்கும், சிந்தனையை தூண்டுவதற்குமாய் வரும் கடிதங்களும் உண்டு. அப்படி வந்த ஒரு கடிதம் இது. அது ‘உனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் ? ‘ என்ற தலைப்புடன் வந்திருந்தது. அதன் பொருள் கீழ்க்கண்டதாய் இருந்தது.
வாழ்க்கை நமக்குத் தரும் தினசரி சவால்களினால், வாழ்க்கையில் எது முக்கியமானது என்பதை சிலசமயம் நாம் மறந்து விடுகிறோம். வணக்கம், நன்றி அல்லது தயவு செய்து எனும் வார்த்தைகளைக் கூறவோ அல்லது சிலர் சிறப்புற்றதால் அவர்களை பாராட்டவோ அல்லது புகழவோ அல்லது காரணமே இல்லாமல் எதையாவது இரசிக்கத்தக்க அளவிலே செய்யவோ நாம் மறந்து விடுகிறோம்.
அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த சார்லஸ் ப்ளம்ப், வியட்னாமில் ஜெட் விமானியாக இருந்தார். சுமார் 75 தாக்குதலுக்குப் பிறகு, அவரது விமானம் எதிரிகளின் இராக்கெட்டால் அழிக்கப்பட்டது. ப்ளம்ப், விமானத்திலிருந்து வெளித்தள்ளப் பட்டு, பாராச்சூட்டுடன் கீழிறங்கி எதிரிகளின் கையில் அகப்பட்டார். சுமார் 6 வருடங்கள் கம்யூனிச வியட்னாம் சிறையிலே அவஸ்தைப்பட்டு, தற்சமயம் அந்த அனுபவங்களைப் பற்றி பல இடங்களில் பேசி வருகிறார்.
ஒரு நாள், ப்ளம்ப்பும் அவரது மனைவியும் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், பக்கத்து மேசையிலிருந்த ஒருவர் அருகில் வந்து, ‘நீங்கள் ப்ளம்ப்! வியட்னாமில் கிட்டி ஹாக் எனும் விமான தளத்திலிருந்து, ஜெட் விமானத்தை ஓட்டிச் சென்றீீர்கள். நீங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டார்கள்! ‘ என்று கூறினார். ப்ளம்ப்பிற்கு ஒரே ஆச்சரியம். ‘இவையெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் ? ‘ என ஆவலாய்க் கேட்டார். ‘உங்கள் பாராச்சூட்டினை நான்தான் தயார் செய்தேன் ‘ என அந்த மனிதர் பதிலளித்தார்.
ப்ளம்ப் ஆச்சரியுத்துடனும் மரியாதையுடனும் திக்கித் திணறினார், என்ன சொல்வதென்று தெரியாமல். அந்த மனிதர், ப்ளம்புடன் கை குலுக்கி, ‘அது வேலை சரியாகச் செய்தது ‘ என பாராச்சூட்டினைப் பற்றிக் கூறினார். ப்ளம்ப்பும், ‘நிச்சயமாக! அந்த பாராச்சூட் வேலை செய்திராவிட்டால், உங்கள் முன் நான் இப்போது இருந்திருக்க முடியாது ‘ என நன்றி தொனிக்க கூறினார்.
அன்றிரவு, ப்ளம்ப்பினால் சரியாக தூங்க முடியவில்லை. அந்த மனிதரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தார்.
ப்ளம்ப் கூறுகிறார், ‘அந்த மனிதரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். கடற்படை சீருடையில், அவரின் தோற்றம் எப்படி இருந்திருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு வெள்ளைத் தொப்பியும், கழுத்தைச் சுற்றிய துணியும், பெல்பாட்டம் கால்சட்டையும் கொண்டு அவர் தோற்றம் எப்படி இருந்திருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தேன். பல்வேறு சமயங்களில் அவரை நான் எதிர் நோக்கியிருந்திருக்கலாம். பல்வேறு சமயங்களில், அவரை நான் கடந்து சென்றிருப்பேன், ஒரு வணக்கமோ, அல்லது மரியாதை நிமித்தமாய் ஒரு தலையசைப்போ கூட இல்லாமல். ஏனெனில், நானொரு ஜெட் விமானி, அவரோ ஒரு சாதாரண மாலுமி. ‘
அந்த மனிதரின் வேலைப்பாடுகளையும், மணிக்கணக்காய் பாராச்சூட்டின் ஒவ்வொரு அடுக்கையும் பத்திரமாய் சரி செய்து, தயார் செய்து பாங்காய் செய்யும் நேர்த்தியையும், அதில் பறந்து செல்பவர் யாரென்றே தெரியாத போதிலும், அதில் பறந்து செல்பவரை மனதில் கொண்ட மனித நேயத்தையும் ப்ளம்ப் எண்ணி வியந்தார்.
‘உங்கள் பாரச்சூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் ? ‘ தற்சமயம், தன் பேச்சை கேட்க வருபவர்களிடம் கேட்கிறார் ப்ளம்ப். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வதற்கு தேவையானவற்றை யாரோ ஒருவர் செய்திருக்கிறார். எதிரியின் எல்லையிலே சுட்டு வீழ்த்தப் பட்டாலும், பத்திரமாய் திரும்பி வருவதற்கு, ப்ளம்ப்பிற்கு ஏகப்பட்ட பாராச்சூட் தேவையாயிருந்தது. தன் உடலைக் கொண்டு சேர்க்கும் பாராச்சூட்டினைப்போல, தன் மனதிற்கும், உணர்விற்கும், ஆத்மத்திற்கும் பாராச்சூட் தேவையாயிருந்தது.
அவரது அனுபவம், நாம் மேற்கொள்ளும் பயணத்திற்கு நம்மை தயார் செய்து கொள்ள நினைவூட்டும் பாடமாய் இருக்கிறது. இந்த வாரம், இந்த மாதம், இந்த வருடம் என மென் மேலும் போய்க் கொண்டிருக்கும் பொழுது, நம்முடைய பாராச்சூட்டினை தட்டி அடுக்கி தயார் செய்தவர்களை நினைவு கூர்வோம். அடையாளம் காணுவோம். அங்கீகரிப்போம்.