பாரி பூபாலன்
உனக்குள் ஒரு மாற்றம். நேற்று வரை உன் வாழ்க்கையின் அர்த்தமாய் உனக்குத் தோன்றிய உணர்வுகள் இன்று காணப்படவில்லை. இன்று உனக்குள் ஒரு மாற்றம். ஒரு மகனாய், சகோதரனாய், நண்பனாய் மற்றும் வேறுபல உறவுகளைப் பாவித்த உனக்கு ஒரு தந்தையாய் உன்னை உருவகப்படுத்தும் போது, எண்ணிலடங்கா மாற்றங்கள் உனக்குள்.
உன்னைப் பற்றி நீ பெருமைப் படுகிறாய். உன் குழந்தையைப் பார்த்து நீ பெருமைப் படுகிறாய். அதன் அழகைப் பார்த்து நீ ஆனந்தப் படுகிறாய். அதன் ஒவ்வொரு அசைவுகளும், ஒவ்வொரு நாளும் அது செய்யும் புதுமைகளும் உன்னை பூரிப்படைய வைக்கின்றன. இந்தப் பெருமையால், ஆனந்தத்தால் உனக்குள் ஒரு மாற்றம். உனது அன்றாட எண்ணப் போக்குகளில் ஒரு மாற்றம். உனது எண்ணங்கள் அதனையே சுற்றிச் சுழன்று வர, உனது நடைமுறைப் போக்குகளில் பல்வித மாற்றம்.
உன் குழந்தையின் உருவில் உன்னைக் காண்கிறாய். உனது குழந்தைப் பருவத்தை ஒரு புதிய கோணத்தில் காண முற்படுகிறாய். உன் எதிர்பார்ப்புகளை நினைவு கூற முயற்சிக்கிறாய். உன் சிறு வயது ஏமாற்றங்களை எண்ணிப் பார்க்கிறாய். உன் வாழ்க்கையில் ஏற்பட்ட தவறுகளையும், உனக்கு கிடைக்காத வாய்ப்புகளையும் யோசித்துப் பார்க்கிறாய். உன் குழந்தையின் உருவில் உன்னைக் காண்கிறாய். உன் குழந்தையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முற்படுகிறாய். அதன் வாழ்க்கையில் தவறுகள் எதுவும் நடக்காத வகையில், தக்க முறையில் வழி நடத்த ஒரு ஆசானாய் அமைய முயற்சிக்கிறாய். அதன் வாழ்க்கையில் ஏமாற்றம் என்ற சொல்லொன்று இல்லாமையாக்க முற்படுகிறாய். வாழ்க்கையில் வெற்றி பெற வாய்ப்புகள் ஏற்படுத்த வழி தேடுகிறாய். இப்படியாய் உனக்குள் ஒரு மாற்றம்.
உனது எண்ணங்களிலும் கனவுகளிலும் உனது குழந்தையே எப்பொழுதும். அதன் மகிழ்வையும் கல்வியையும் குறியாய்க் கொண்டதாய் உனது அனுதின செயல் முறைகள். இப்படி உனது எண்ணப் போக்கும், செயல் முறைகளும் உனது மழலையை சுற்றிச் சுழலும் போது, இதனிடையே வரும் எந்தத் தடங்கலையும் எப்படி சமாளிக்கலாம் என யுத்தி கொள்கிறாய்.
ஒரு தந்தையாய் உன்னை உருவகப்படுத்தும் போது, உன் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் போது உன் கண்ணெதிரே தோல்வியுற்ற தந்தையரைப் பற்றி எண்ணிப் பார்க்கிறாய். வேறுபட்ட சூழ்நிலைகளில் வளர்ந்த வெவ்வேறு குழந்தைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கிறாய். பெற்றோரிடம் ஒரு குழந்தையாய் வளரும் போது, அதற்குறிய உரிமைகளுக்கும், அதற்கு அளிக்கப்படும் சலுகைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தக்க நேரத்தில் அதற்கு உணர்த்திட உன்னைத் தயார் செய்கிறாய். சலுகை அளிப்பதில் எந்த நேரத்தில் தாரளமாக இருக்க வேண்டும், எந்த நேரத்தில் இறுக்கிப் பிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாய் இருக்க முயற்சி செய்கிறாய்.
‘குழந்தை வாழும் வாழ்க்கையே, அதனை வழி நடத்தும் பாடமாகிறது ‘ என்று எங்கோ படித்த ஒன்று உனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. ‘ஒரு பாரபட்சமில்லாத சூழ்நிலையில் வளரும் குழந்தை, நேர்மையுடன் இருக்கக் கற்றுக் கொள்கிறது ‘ என்றும், ‘ஒரு உற்சாகம், தைரியம் மற்றும் ஆதரவு கொடுக்கும் சூழ்நிலையில் வளரும் குழந்தை, தன்னம்பிக்கையுடன் இருக்கக் கற்றுக் கொள்கிறது ‘ என்றும் படித்தவற்றை எப்படி நடைமுறைப் படுத்துவது என யோசித்துப் பார்க்கிறாய். அதே நேரத்தில், அன்பைக் காணக்கூடிய வகையிலான தோழமை மற்றும் அங்கீகாரம் கொண்ட சூழ்நிலையையும், பகைமையையும், விரோதத்தையும் உணர்ந்து கொண்டு அதனை தகுந்த முறையில் எதிர் கொள்ளும் ஆற்றலை உருவாக்கிக்கொள்ளக்கூடிய சூழ்நிலையையும் எப்படி அனுபவித்து உணர வைப்பது என திட்டமிட தயாராகிராய்.
இப்படி எதிர்காலத்தைப் பற்றிய பல்வேறு எண்ணப்போக்குகளிடையே, நிகழ்காலத்தில் உனக்குள் மகிழ்வும் பூரிப்புடன் கூடிய ஒரு நிறைவு. ஒவ்வொரு நாளும் புதியதொரு செயலையும், புதியதொரு வார்த்தையையும் உன் குழந்தை கற்றுக் கொண்டு செயலாக்குவதை காண்கையில், உனக்குள் உன்னால் விவரிக்க இயலாவகையில், எல்லையில்லா மகிழ்வை கொடுக்கும் வகையிலொரு மாற்றம்.