ஈழ அரசியல் நிரந்தர போர்நிறுத்தம்

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

ஹெச்.ஜி.ரசூல்



தழிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம் குமரிமாவட்டத்தின் சார்பில் 31 – 01 ௨2009 அன்று நாகர்கோவில் பர்வானாஇல்லத்தில் ஈழ அரசியலும் நிரந்தர போர் நிறுத்தமும் சிறப்புக் கருத்தரங்கம்
மாவட்டச் செயலாளர் வி.சிவராமன் தலைமையில் நடை பெற்றது. தமிழ்சிந்தனையாளர் சுபாஸ்சந்திரபோஸ்,
ஈழ அரசியல் போராட்ட அரசியல் வரலாறு குறித்த தனது ஆய்வுரையை நிகழ்த்தினார். சிங்களபேரினவாதத்தின் தோற்றம்,பெளத்தம் பாசிச வடிவம் பெற்று தமிழர்கள் மீது தாக்குதல் தொடுத்த சம்பவங்கள், ஈழத்து காந்தி எனப் போற்றப்பட்ட தந்தை செல்வா,தமிழ் ஐக்கிய முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட அறிஞர்களின் மிதவாத அரசியல் நிலைபாடு,சிங்களவர் தனிச் சட்டம், தமிழர் மொழியுரிமை,வேலைவாய்ப்புரிமை பறிக்கப்பட்டபின்னர் நிகழ்ந்த தீவிரமான ஆயுதப் போராட்ட இயக்கங்களின் உருவாக்கம், போராட்டக்களங்களில் நடைபெற்ற சகோதர தமிழ்குழுக்களுக்கிடையான பகைமைகள்.முரண்கள் குறித்தும் விவாதித்தார்.தற்போது தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்தொழிக்க இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகளும், ஒத்துழைப்பும் செய்கிற ஜார்ஜியா,சீனா,இஸ்ரேல்,இந்திய நாடுகளின் செயல்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து ஹெச்.ஜி.ரசூல் ஊடக அரசியல்,ஈழப்போர் – இனப்பேரழிவு – அமைதி – பல உண்மைகளை நோக்கிய உரையாடல் என்ற தலைப்பின் கீழ் தனது கட்டுரையை வாசித்தார்.
ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படவேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளித்து இறந்த முத்துக்குமார்,பரவலாக கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டங்கள்,
வழக்கறிஞர்களின் மறியல் போராட்டங்கள், விடுதலைச் சிறுத்தைகள்,பா.மா.க.,இந்தியகம்யூனிஸ்ட்,ம.தி.மு.க
அரசியல் கட்சிகளின் கிளர்ச்சி இயக்கங்கள், கிராம அளவில் தன்னெழுச்சியாக நடைபெறும் மக்கள் போராட்டங்கள் பொது வேல நிருத்தப் போராட்ட அறிவிப்புகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான பொது மனோபாவங்களாக உருவாகி வந்துள்ளதை குறிப்பிட்டார்.ராஜபக்ஷே அறிவித்திருந்த 48 மணிநேர தற்காலிக போர் நிறுத்தத்தின் நோக்கம் என்பதே தமிழர்களை போராளிகளிடமிருந்து பிரித்து பாதுகப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து விட்டால் மிக எளிமையாக வான் தாக்குதலில் போராளிகளை அழித்துவிடமுடியும். அல்லது பாதுகாப்பு வளையத்திற்குள் வராத மக்களை எல்லாம் போராளிகள் என முத்திரை குத்தி ஒட்டு மொத்தமாக இன அழிப்பு செய்திட முடியும்.எனவே குறுகியகால போர்நிறுத்த காலக்கெடு என்பது போரைவிட மிகவும் கொடுமை வாய்ந்ததாகும். நிபந்தனைகளற்ற போர் நிறுத்தம் அரசியல்ரீதியான தீர்வுக்கான பேச்சுவார்த்தை ஆகிய கோரிக்கைகளே இன்றைய முக்கிய தேவை என்றார்.
தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளால் தமிழறிஞர் பழ.நெடுமாறனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு அமைக்கப்பட்டிருக்கிற போராட்ட அமைப்பின் பெயர் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம். இப் பெயரிடுதலில் கூட ஈழத்தமிழர் சிதைக்கப்பட்டிருப்பது.வருத்தத்திற்குரியது. 1957ல் போடப்பட்ட பண்டாரநாயக்கா,செல்வநாயகம் ஒப்பந்தம் துவங்கி 2002 பிப்ரவரியில் நார்வே சமாதானக் குழு வழிகாட்டுதலில் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் வரை மீளபரிசீலிக்கப்படவும் வேண்டும்.தற்போது முல்லைத்தீவிற்குள் இரண்டரை லட்சம் தமிழர்கள் பாதுகாப்பற்று உயிரிழிக்கும் அபாயத்தில் உள்ளனர். சர்வதேச அரசுகளின் மெளனம் இந்த பாசிச இன ஒழிப்பு வன்முறைக்கு சேவகம் புரிவதாகவே அமையும்.இந்த இன ஒழிப்புக்கு எதிராக பிற ஜனநாயகப் பதையை தேர்ந்தெடுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஈழ தமிழ் இயக்கங்களும் ,இலங்கை தமிழ் முஸ்லிம்களும்,மலையகத் தமிழர்களும்,ஜனநாயத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ள சிங்கள இடதுசாரிகள்,மற்றும் ஜனநாயக கட்சிகளும் தங்களது மனிதாபிமானமிக்க குரலை ஒங்கி ஒலிக்கவேண்டும் என்றார்.
ச.கண்ணன் இந்த உரைகள் குறித்த தனது கருத்துரையை முன்வைத்தார்.
கவிஞர்கள் ந.நாகராஜன்,நட.சிவக்குமார்,ஜி.எஸ்.தயாளன் ஆய்வாளர்கள் விஜயகுமார்,ஹாமீம் முஸ்தபா, நாவலாசிரியர் மீரான்மைதீன் சமூக செயல்பாட்டாளர்கள் பிரசாத்,அருணாசலம்,அனில்குமார்,தாமரைசிங்,எஸ்.கே.கங்கா உள்ளிட்ட பலர் பங்கு பெற்றனர். வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்