ஹெச்.ஜி.ரசூல்
இஸ்லாத்தின் ஆன்மீக. பொருளியல். பண்பாட்டு அடிப்படைகள் மனித குலத்தின் அடிநாத லட்சியங்களான சமத்துவம். விடுதலை. முன்னேற்றம் சார்ந்த அறவியல் கோட்பாடுகளின் நடைமுறைப்படுத்தல்களை நோக்கியப் பயணமாக திகழ்கிறது. மக்கமாநகரின் அரபு பழங்குடி மக்களின் வாழ்வியல் சூழலையும், மதிநாவின் வணிக பரிமாற்றத்தோடிணைந்த மக்களின் வாழ்வும், இணக்கப்படும் விதத்திலான நடைமுறையாக ஜகாத் என்னும் ஏழைவரி கோட்பாடு அமையப் பெற்றிருந்தது. வட்டி முறை அமைப்புக்கு எதிரான நிலைப்பாடு வர்த்தகத்தில் பேண வேண்டிய நடைமுறைகள். ஏழை வரிப் பங்கீட்டு முறைகள். பித்ரா தானதர்ம வழக்கங்கள். நிலஉரிமை அனுபவித்தல். விவசாய உற்பத்தி விளைபொருட்களை பங்கீடு செய்தல் உள்ளிட்ட விவசாய செயல்பாடுகளிலும் இஸ்லாமிய பொருளியல் கோட்பாட்டின் அம்சங்கள் ஒன்று கலந்திருந்தன.
புராதான அரபு வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்ட சமூக நிலையில் யூத, கிறிஸ்தவ, சமயங்களுடனான உரையாடல்களோடு, இஸ்லாமியத்தின் எல்லை விரிவாக்கம், சிலுவைப்போர்கள் நிகழ்ந்தன. உலக யுத்தங்களின் செல்வாக்கு அது ஏற்படுத்திய பாதிப்புகள் நவீனத்துவத்தின் வெளிப்பாடுகளான தேச உருவாக்கம், ஜனநாயக சிந்தனைகளின் வெளிப்பாடு, பகுத்தறிவு சார்ந்த விஞ்ஞான தொழில் நுட்பங்களின் தாக்கம் என பல நிலைகளில் அமைவாக்கம் பெற்றிருந்தன.
பாரீஸ் கம்யூனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மார்க்சீயத்தின் நடைமுறை சாத்தியங்களை உருவாக்கிப் பார்த்த மார்க்ஸ், ஏங்கெல்ஸின் வழி லெனின் தலைமையில் சோவியத்தில் நடைபெற்ற அக்டோபர் புரட்சி, சோசலிச நாட்டின் உருவாக்கம், தொழிலாளி வர்க்கத் தலைமையிலான ஆட்சி, என்பதான முதற்காட்சி தோன்றியது. இரண்டாம் உலக யுத்ததத்தைத் தொடர்ந்து மாசேதுங் வழிகாட்டுதலில் சீனாவில் நடைபெற்ற கலாச்சாரப்புரட்சி விவசாய வர்க்கத்தின் அணிதிரட்டல்களையும் முக்கியத்துவத்தையும் பேசின. கொரில்லா யுத்த முறைச் சார்ந்து சேகுவாரா, பெடரல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூபாவின் புரட்சி, ஹோசிமின் வழிகாட்டுதலின் நிகழ்வுற்ற வியாட்நாமிய புரட்சி அனைத்தும் நடந்தேறின. ஐரோப்பிய சூழலிலும் ஆசியாவிலும் கம்யூனிச நாடுகளின் உருவாக்கமும் மார்க்சீயம், மாவோயிசம் என்கிற கொள்கைப் பரிமாணங்களும் விரிவான தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கின.
ஐம்பதுகளின் துவக்கத்தில் அரபு நாடுகளில் மார்க்சிய கோட்பாட்டின் சோசலிச பொருளியல் அம்சம் ஈர்த்தது. ஏழை எளிய மக்களின் நலன் சார்ந்த கண்ணோட்டமாக அரபு மதிப்பீடுகளின் நவீன வடிவமாக விரிவடைந்ததின் விளைவாக மேற்கின் முதலாளித்துவ உற்பத்தி முறை வாழ்க்கை நிலைக்கும், கிழக்கு நாடுகளின் கம்யூனிச சிந்தனை மரபுகளின் நிலைபாட்டுக்கும் இடையிலான ஒரு மூன்றாவது உலக கோட்பாடாக அரபு நாடுகளின் நலன்களை மையப்படுத்தி அகண்ட அரபு நாடுகளின் அரபு சோசலிசம் கோட்பாட்டின் உருவாக்கம் நிகழ்வுற்றது.
மேற்குலகின் கொள்கைத் தாக்கத்தின் விளைபொருள் சீர்திருத்த இஸ்லாத்தை அதன் மூலக் கோட்பாட்டிலிருந்து கண்டெடுக்க முயற்சி நடைபெற்றது. எகிப்து, சிரியா இராக் என நாடுகளில் சோசலிச பாதையை நோக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் முக்கியமானது நிலச்சீர்திருத்தமாகும். நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்தல் என்கிற விதமாக நிலஉரிமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவதாக தொழிற்சாலைகள், வங்கிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டன. இயற்கை எண்ணெய் வளங்கள், கிணறுகள் அரசுமயமாக்கப்பட்டன. உழைக்காமல் ஈட்டுகிற வட்டி முறை தொழில்கள் ஒழிக்கப்பட்டன. என்றாலும் இவற்றோடு அரசு சாராத தனிநபர் சொத்துரிமையும் அனுமதிக்கப்பட்டது. மேற்கின் சிந்தனைத் தாக்கத்தால் கடவுள் கொள்கையற்றவர்களாக ஆட்சியாளர்கள் ம’றிவிட்டார்கள் என்பதான குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கு முயன்ற இந்நாடுகளின் ஆட்சியாளர்கள் இவ்வகை பொருளியல் சீர்திருத்த நடவடிக்கைகளை புதுவகைப்பட்ட இஸ்லாமிய சோசலிசம் என்றழைத்தனர். ஆன்மீகம் கலந்த இஸ்லாத்தின் சோசலிச வடிவமாக இது கருதப்பட்டது. எகிப்தின் கமால் அப்துல் நாசர், பாகிஸ்தானின் மக்கள் கட்சித் தலைவர் சுல்பிகர் அலிபூட்டோ லிபியாவின் முஅம்மர் அல்-கடாபி உள்ளிட்டோர் இஸ்லாமிய சோசலிச கோட்பாட்டின் மூலவர்களாகத் திகழ்கின்றனர்.
1. நபி முகமதுவின் காலகட்டத்தில் அரபு மக்களிடையே நிலவியிருந்த மிக பெரிய சமூகக்கொடுமைகளில் ஒன்று வட்டி வாங்குதலாகும். ஏழை எளிய மக்களிடமிருந்து பணத்தையும், உழைப்பையும் அபகரிப்பதிலிருந்து மக்களைக் காப்பாற்றிட வட்டி தடை செய்யப்பட்டிருந்தது. கடன் வாங்கிய பணத்தை, அசலை வெகு சீக்கிரமே இரட்டிப்பாக்கிவிடும். வட்டிமுறை தனி நபர்களின் நலன்களுக்கு மிக எதிரானதாகும். எனவே இஸ்லாத்தின் பொருளியல் கோட்பாட்டின் ஒன்றாக கடன்பெறுவோர் நலன்களின் அடிப்படையில் வட்டி தடைசெய்யப்பட்ட ஒன்றாக விளங்குகிறது.
தனி நபர்களை பிழிந்தெடுக்கும் வட்டி தடை செய்யப்பட்டிருந்தாலும் தேசியமயப்படுத்தப்பட்ட வங்கிகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பு பணத்திற்கும் வங்கி தருகிற வட்டியை வாங்கலாமா கூடாதா என்பது குறித்தும் விவாதம் தொடர்ந்து வருகிறது. வங்கிகள் வழங்கும் வட்டியை இஸ்லாமியர்கள் வாங்கலாம் என்ற கருத்து நவீன சமூக பொருளாதார அமைப்பின் மாற்றத்திற்கு ஏற்றவாறும் முன்வைக்கப்படுகிறது.
2. இஸ்லாம் வணிகம் சம்பந்தமான சிந்தனைகளிலும் சில தீர்க்கமான முன்மொழிவுகளை எடுத்துச் சொல்கிறது. வியாபார நடவடிக்கைகளில் உண்மையாக செயல்பட வேண்டும் என வற்புறுத்துகிறது. வியாபாரத்தில் அளவுக்கு அதிகமாக லாபம் சம்பாதிப்பதை தடுக்கிறது. பொருட்களை விற்கும்போது எடைகுறைவாகவோ, அளவையில் குறைவாகவோ அளந்து கொடுத்து மக்களை ஏமாற்றுவது மிகப் பெரிய குற்றமாக கருதுகிறது. அநாதைகளின் பொருட்களை நியாயமற்ற முறையில் பயன்படுத்துவதையும் தடுக்கிறது.
3. அரேபிய மண்ணில் விவசாய வளமுள்ள நிலங்களை விளைபொருள்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தபயன்படுத்தும் முறைகள் பற்றியும், நபி முகம்மதுவின் போதனைகளும் வழிகாட்டுதல்களும் இருந்தன. நிலக்குவிப்பும், நேரடி உழைப்பில் ஈடுபடாமல் நிலத்தை குத்தகை வாரச் சாகுபடிக்கு பயன்படுத்தும் முறைகளையும் ஓரளவு கட்டுப்படுத்த நபி முகமது வழிகாட்டினார் எனக் கூறலாம். இது நிலமற்ற விவசாயிகளின் உழைப்பும், நலனும் பாதுகாக்கப்படும் விதத்தில் அமைந்திருந்தது.
4. இஸ்லாமிய பொருளாதார சிந்தனைகளில் மிக முக்கியமான ஒன்று தனிநபர்கள் சொத்துரிமை அனுமதிப்பதும், அதே சமயம் அதைக் கட்டுப்படுத்துவதுமாகும். தனி நபர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதையும் சொத்து சேர்க்க நியாயமற்ற வழிமுறைகளை மேற்கொள்ளுவதையும் முற்றிலுமாக இஸ்லாம் தடுக்கிறது. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து அதனை நல்வழியில் பயன்படுத்தாமல் இருப்போர்களைப் பார்த்துக் கண்டிக்கிறது. மறுமையில் இப்படி செலவு செய்யாமல் வைக்கப்பட்டுள்ள பொன், வெள்ளி ஆகியவற்றினை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி, அவர்களது நெற்றிகளிலும், முதுகுகளிலும் சூடுபோடப்படும் எனவும் திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.
எனவே தனிநபர் மூலதனக் குவிப்பை கட்டுப்படுத்தவும், நலிந்த மக்களை கைதூக்கி விடவும், சொத்துள்ளவர்களிடமிருந்து ஜகாத் என்னும் ஏழைவரி வசூலிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டது.
குறைந்த பட்ச சொத்தின் வரம்பு நிர்ணயிப்பின்படி 85 கிராம் வெள்ளி இருந்தாலோ அவற்றின் மதிப்பில் நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் ஜகாத் வழங்க வேண்டும்.
தங்கம், வெள்ளி இவ்விரண்டும் மேற்குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக வைத்திருந்தாலும், அல்லது அம்மதிப்புள்ள பணம் வைத்திருந்தாலும் நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும்.
விவசாய வருமானத்தைப் பொறுத்தமட்டில் புன்செய் பயிர் வருமானத்திற்கு இரண்டரை சதவிகிதமும், நன்செய் பயிர் வருமானத்திற்கு ஐந்து சதவிகிதமும் ஜகாத் கொடுக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட முறையில் வசூலிக்கப்படுகிற ஜகாத் என்னும் ஏழைவரியை சமுதாயத்தின் நலிவடைந்த மக்களின் வாழ்க்கை மேம்பாடடைய வழங்கவேண்டும், என்பதாக அறிவுறுத்தப்படுகிறது. ஜகாத் பெற்றிட தகுதி உள்ளவர்களாக, அநாதைகளைப்போல் வாழ்கிற ஏழை எளிய மக்கள், வறுமையால் இன்னல்படுவோர், அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற முயலுகிற ஒடுக்கப்பட்ட மக்கள், ஜகாத்தை பிரிக்கும் பணியில் ஈடுபட்டோர், இறைவழிப் பாதையில் தங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே அர்ப்பணித்துக் கொண்டோர் ஆகியோர் கருதப்படுகின்றனர். இவர்களுக்கு ஜகாத் பிரித்து வழங்கப்படவேண்டும்.
முப்பது நோன்பையும் கடைபிடித்துவிட்டு மறுநாள் பெருநாள் தொழுகைக்கு செல்லும்முன்பே ஜகாத்தைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு ஈதுல் பிதுர் என்னும் தான தர்மத்தையும் செய்திட இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது ஒவ்வொரு வசதியுள்ள இஸ்லாமியனுக்கும் குறிப்பாக ஆண், பெண் இருவருக்கும் கடமை. இந்த பித்ரா என்னும் தர்மத்தின் அளவு இரண்டரை கிலோ கோதுமை அல்லது அதற்குரிய பணம் என்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழாம் நூற்றாண்டுக் கால இத்தகைய இஸ்லாமிய பொருளாதார கோட்பாடு ஏழை எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டையும், வாழ்க்கை நிலையை உயர்த்துலை¨யும் அடிப்படையாகக் கொண்டே உருவாகியுள்ளது.
இஸ்லாத்தின் பொருளாதார சிந்தனையின் அடிப்படை கடனில் மூழ்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களை வட்டிக் கொடுமையிலிருந்து காப்பாற்றுவதும், அதிகம் லாபம் ஈட்டுவதை கட்டுப்படுத்துவதும் விவசாய செயல்பாடுகளில் குத்தகை வாரச் சாகுபடியை நீக்கி உழைக்கும் மக்களுக்கு நில உரிமையை அளிப்பதும், தனியார் மூலதன குவிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏழை எளிய மக்களுக்கு ஜகாத் என்னும் ஏழைவரியை அளிப்பதும் என பல கொள்கைப் போக்குகளாக அமைந்துள்ளன. இதுவே பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துவோர், அதன் கீழ் பொருளாதார வலிமையின்றி நசுக்கப்படுவோர் என்கிற ஏற்றத் தாழ்வான முரண்பாடுகளை களைந்து பொருளாதார சமத்துவத்தை நோக்கி பயணிக்க வழிகாட்டுகிறது.
எனவே தான் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கும் கம்யூனிச பொருளாதாரத்திற்கும் நடுவே மூன்றாம் சர்வதேச பொருளாதார கோட்பாடாக லிபிய அதிபர் கடாபி உள்ளிட்ட அறிஞர்களால் அரபு தேசியத்திற்கான இஸ்லாமிய சோசலிசக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.
- திண்ணை
- திருக்குறள் ஒரு சமண நூல்தான்
- காதல் நாற்பது எலிஸபெத் பாரட் பிரௌனிங் (1806-1861)
- தி. ஜானகிராமனின் மோகமுள்
- அவள் நடந்த பாதையிலே – சாருஸ்ரீ அவர்களின் ‘நான் நடந்த பாதையிலே’
- அவதூறு பரப்புதல் ஆய்வாகாது
- இப்படியும் ஒரு தமிழரா ?
- ஐயாசாமியும் தெனாலிராமனும்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 1
- உயிர்மை பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழா
- ஈசனுக்கு மறக்குமா அவள் தாட்சாயினி என்பது
- பழைய மொந்தையில் பழைய கள்
- ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல்
- பொ. கருணாகரமூர்த்தியின்இருநு}ல்கள் வெளியீடு.
- ப்ரவாஹனின் தொடரும் “போலி சாதி ஒழிப்பு” பிரச்சாரங்கள்
- கடித இலக்கியம் – 37
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 16
- ஆளுடையப்பிள்ளையின் புதியன படைத்த திறம். (பதிக எண் 71 முதல் பதிக எண் 80 வரை)
- கடவுளைப் பற்றிய கருத்தாடல்களும் கதைசொல்லல்களும்
- இலை போட்டாச்சு 7 – எள்ளுப் பொடி
- நுண் துகள் உலகம்
- காதல் நாற்பது (1) – உன்னை நேசிப்பது எவ்விதம் ?
- பெரியபுராணம் – 117 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- நடை பாதை
- யோசிக்கும் வேளையில்…
- போப் வாயாலேயே பொய்த்துப் போன புனித தோமையார் கதை
- இஸ்லாமிய சோசலிசம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:9) கிளியோபாத்ரா எகிப்துக்கு மீளல்.
- மஜ்னூன்
- மடியில் நெருப்பு – 17
- நீர்வலை (3)