இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

இப்னு பஷீர்


காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பயங்கரவாதத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ். 1948-ல் காந்தி கொலைக்கு பிறகு, 1975-ல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது ம் , பிறகு 1992-ல் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பிறகும், இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட மதவெறி இயக்கம்தான் இது . இந்த இயக்கத்தில் பயிற்சி பெற்று வந்த அத்வானி, (சுட்டி: http://en.wikipedia.org/wiki/Rashtriya_Swayamsevak_Sangh ) ‘சிமி போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தடயமே இல்லாத அளவிற்கு இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்’ என்று சொல்கிறார். இந்தத் துவேஷத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

இந்திய ஜனத்தொகையில் சுமார் 15% சதவிகிதமே இருக்கும் ஒரு சிறுபான்மை சமுதாயத்தினர் இந்திய முஸ்லிம்கள் . இந்தச் சமுதாயத்திற்கு எந்த மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கு இல்லை, சமுதாயத்தை ஒருங்கிணைத்து வழிநடத்த வலிமையான தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் இல்லை. பொருளாதாரத்தில் மிக நலிவடைந்த பிரிவினர் இவர்கள். கல்வியறிவிலும் இச்சமூகம் மிகவும் பின் தங்கியிருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தினரால் நடத்தப்படும் கல்லூரிகளில் கூட முஸ்லிம்களைவிட முஸ்லிமல்லாத மாணவர்கள் எண்ணிக்கையே அதிக அளவில் உள்ளது . ஊடகங்களும் இச்சமுதாயத்திற்கு எதிரான போக்கையே வெளிப்படுத்துகின்றன . இத்தகைய எளிய, ஒடுக்கப்பட்ட சமுதாயம்தான் இந்திய முஸ்லிம் சமுதாயம். இச்சமுதாயத்தின் மீது அத்வானி போன்றவர்களுக்கு குரோதம் ஏற்படக் காரணம் என்னவாக இருக்கும் ?

இக்கேள்விகளுக்குப் பேரா. அ. மார்க்ஸ் பதிலளிக்கிறார்:

“இந்தியாவைப் பொருத்தமட்டில் சென்ற ஒரு நூற்றாண்டு காலமாக இங்கே உருப்பெற்ற இந்துத்துவ சிந்தனைகள் முதன்மையாக இஸ்லாத்தையே குறிவைத்து இயங்கின. இந்தியா-பாகிஸ்தான் தேசப் பிரிவினையை ஒட்டிய கொடிய வகுப்புக் கலவரங்கள் மத்தியில் இந்தியா சுதந்திரமடைந்தது.

அன்று தொட்டு இந்திய முஸ்லிம்களை இந்தியாவிற்கு விசுவாசமற்றவர்களாகவும், சந்தேகத்திற்குரியவர்களாகவும் பார்க்கக்கூடிய பார்வை ஒன்றை இந்துத்துவ சக்திகள் தவிர, காங்கிரசிலிருந்த இந்துத்துவ ஆதரவு சக்திகளும் உருவாக்கி வளர்த்தன .

காந்தி கொலையை ஒட்டி ஏற்பட்ட அவப்பெயரின் விளைவாகச் சற்றே பதுங்கியிருந்த இந்துத்துவ சக்திகள் 1980களில் மீண்டும் தீவிரமாக முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்ளத் தொடங்கின. 1982 மீனாட்சிபுரம் மதமாற்றத்தை ஒட்டியும், பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவது என்கிற திட்டத்தை முன்வைத்து விசுவ இந்து பரிசத் தீவிரமாக இயங்கத் தொடங்கியதற்குப் பின்பும் முஸ்லிம் வெறுப்புப்பிரச்சாரம் தீவிரமாகியது .

1992-ல் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்த வன்முறைகளில் இஸ்லாமியர்களின் உடைமைக்கும், உயிருக்கும் நாடெங்கிலும் உத்தரவாதமில்லாத நிலை ஏற்பட்டது. 1990களின் பிற்பகுதியில் ஆட்சியில் அமர்ந்த இந்துத்துவம் அரசதிகாரத்துணையோடு இந்திய முஸ்லிம்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியது. இதனுடைய உச்சக் கட்டமாக 2002ல் குஜராத் வன்முறைகள் அரங்கேறின. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்து எழுபதினாயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடு வாசலிழந்தனர். அதிகாரத்திலிருந்தோர் பொறுப்பற்று பேசினர். குற்றவாளிகள் கம்பீரமாக உலா வந்தனர்”. (அ. மார்க்ஸ் எழுதிய ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ – பக்கம் 12)

பேரா. அ.மார்க்ஸ் மேலும் சொல்கிறார்;

‘ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாத்தை குறி வைப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

முதலில்: (இந்தியாவில்) இந்து மதத்திற்கு அடுத்த பெரிய மதம் இஸ்லாம். சில மாவட்டங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மையாகக் கூட உள்ளனர். அடுத்தது: வரலாற்று ரீதியாய் இஸ்லாமியரை ‘எதிரி’யாக நிறுத்துவது எளிது. கடைசியாக: இந்துமதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம், சாதிக்கொடுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான். கிறிஸ்தவம் உட்படப் பிறமதங்கள் சாதிக்குப் பலியானபோது இஸ்லாம் மட்டுமே சாதியை வென்றது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் குரு கோல்வல்கர், “நான்கு வருணம் என்கிற நமது சமூக அமைப்பில் முதலில் தலையிட்ட மதம் இஸ்லாம்தான். இந்தியாவில் நுழைந்த இஸ்லாம் நமது சாதி வர்க்கச் சமூக அமைப்பிற்கு சவாலாக இருந்தது” என வயிறெரிந்தார். ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா போன்றவை வருணாசிரமத்தை பேணுபவை. ‘இமாசலப் பிரதேச’ மாநில பாரதீய ஜனதா அரசு பதவியிலிருந்த கொஞ்ச காலத்தில் செய்த காரியங்களிலொன்று ‘மணலி’ என்ற இடத்தில் ‘மனு’ கோயிலைப் பல கோடி ரூபாய் செலவு செய்து புதுப்பித்தது. இவர்கள் இஸ்லாமை முதன்மை எதிரியாக கருதாமல் வேறென்ன செய்வார்கள்?” ( அ.மார்க்ஸ் எழுதிய ‘இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள்’ – பக்கம் 28)

“இந்த நாட்டுடனும் அதன் கலாச்சாரத்துடனும் அடையாளம் காணுவதெப்படி என்கிற பாடத்தை இசுலாமியருக்கு நாம் சொல்லிக் கொடுத்தாக வேண்டும்…. அதற்காக நாம் வன்முறையைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் ” – இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் 1970 ஜூன் 11-ல் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி. இது பின்னர் ஆர்கனைஸரிலும் வெளிவந்தது. (நன்றி: ஆட்சியில் இந்துத்துவம் – பேரா. அ. மார்க்ஸ்)

இந்துத்துவ வெறியர்கள் முஸ்லிம்கள் மீது பழிபோட வேண்டும் என்பதற்காக எத்தகைய காரியத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் காந்தி கொலையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சில கலவரங்களும்.

“காந்தியை கொன்றபோது கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருந்தான். ஒரு முஸ்லீம்தான் காந்தியை கொன்றது என்று கூறி முஸ்லீம்களுக்கு எதிராக மக்களைத் தூண்டலாம் என்கிற சதித் திட்டம். தங்களது மதவெறிக் காட்டுமிராண்டித் தனத்திற்கு தடையாக இருந்த காந்தியையும் கொல்வது, அதை வைத்தே முஸ்லீம்களை வேட்டையாடுவது. இதிலிருந்து தெரிவது என்னவெனில், எல்லாக் கலவரங்களுக்கும் முஸ்லீம்களே காரணம் என்ற தங்களது பொய்யை உண்மையாக்க சகல சகுனித்தனத்தையும் கையாளும் சங்பரிவாரிகளே கலவரங்களை ஆரம்பிப்பவர்கள்.” (எம்.அசோகன் எழுதிய ‘சாவர்க்கர் உண்மைச் சித்திரம்’ – பக்கம் 7)

இந்தச் சதித் திட்டம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதுகிறார், ‘கோட்சேயை விட்டு காந்தியை கொன்று விட்டு, காந்தியை கொன்றவன் ஒரு முஸ்லிம் என ஒரு விஷமப் பிரச்சாரத்தை பார்ப்பனர்கள் பரப்பிவிட்டார்கள். அதன் விளைவாக, திருவண்ணாமலை, ஈரோடு, வாணியம்பாடி போன்ற ஊர்களில் கலவரம் நடந்தது. அச்சமயத்தில் முதலமைச்சராக இருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தந்தை பெரியார் அவர்களை அழைத்து, ‘இவரை பேச வைத்தால்தான் அமைதியை உருவாக்க முடியும்’ என்று கருதி, அவரை வானொலியில் பேசச் செய்தார். வானொலியில் பேசிய தந்தை பெரியார், ‘மக்கள் அமைதி காக்க வேண்டும், யாரும் நிதானத்தை இழக்கக் கூடாது’ என வேண்டுகோள் விடுத்தார்.
இது 1948-ல் நடந்தது. இன்றைக்கும் அசோக் சிங்கால் போன்றவர்கள் இப்படி அவதூறு சொல்லித் தூண்டி விடுகிறார்கள்’ (கி. வீரமணி எழுதிய ‘காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு – ஏன்? எதற்கு? எப்படி?’ – பக்கம் 102)

இஸ்லாம் மீதான துவேஷப் பிரச்சாரம் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாம் வளர்ந்தால் உயர் ஜாதியினரான தமது இருப்பு, செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை பாதிக்கப்படும் என அஞ்சும் இந்த வகுப்புவாதிகள், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷப் பிரச்சாரத்தை முழுமூச்சாக செய்து வருகிறார்கள்.

இந்திய ஊடகங்களில் பெரும்பகுதி அவர்கள் கைவசம் இருப்பதை( http://bhaarathi.net/sundara/?p=278 ) சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்கள் மனதில் இஸ்லாம் குறித்த ஒரு தவறான பிம்பம் வலிந்து உருவாக்கப் படுகிறது. ஊடகங்களின் துணை கொண்டு முஸ்லிம்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் பயங்கரவாதச் செயல்களாகப் பிரகடனப்படுத்தப்படும் அதே வேளையில் இந்துத் தீவிரவாத இயக்கங்களின் பயங்கரவாத செயல்கள் மறைக்கப்படுகின்றன. ‘ஒருவேளை சிலவகை வன்முறைச் செயல்கள் நியாயப் படுத்தப் படுகின்றனவா?’ என கேள்வி எழுப்புகிறார் Indo-Asian News Service -ன் தலைமைச் செய்தி ஆசிரியர் எம்.ஆர்.நாராயண் சுவாமி. ( http://www.indianmuslims.info/news/2006/july/13/articles/when_is_violence_terror_and_when_is_it_not.html )

‘கொலையை யாரும் ஒருபோதும் நியாயப் படுத்த முடியாது, அது மும்பை, டெல்லி, கோவை அல்லது கோத்ரா என எந்த இடத்தில் நிகழ்ந்ததாக இருந்தாலும் சரிதான். ஆனால், நம் நாட்டு மக்களை மதரீதியில் பிரித்து வைத்து அவர்களின் தேசிய அடையாளத்தை இழக்கச் செய்வதன் மூலம் ஒரு மனப்பிம்பம் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் விளைவாக, ‘பயங்கரவாதம் என்றால் என்ன’ என்பதை நன்கு புரிந்தவர்கள் கூட இந்து மதவாத கும்பல்களின் வன்முறைச் செயல்கள் நியாயமானவை எனக் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.’ என்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான எம்.ஆர். நாராயண் சுவாமி.

கடந்த ஏப்ரல் மாதம் 7 தேதி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாந்தேடில் நடந்த குண்டு வெடிப்பைப் பற்றிய உண்மைத் தகவல்கள் மாநிலத்திற்கு வெளியே ஒருவரும் அறிந்திருக்கவில்லை. விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக காவல்துறையும், இந்துத்துவ அமைப்புகளும், பத்திரிக்கைகளும் கடும் முயற்சி செய்தனர். காரணம் குண்டு வெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர்கள் சங்பரிவார் அமைப்பினர்.

தீவிர ஆர்.எஸ்.எஸ் இயக்கவாதி ஒருவரின் வீட்டில் பைப் வெடிகுண்டுகளைப் தயாரிக்கும் பொழுது குண்டுகள் தவறுதலாக வெடித்ததில் 2 பஜ்ரங்தள் உறுப்பினர்கள் அதே இடத்தில் வெடித்துச் சிதறினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தான் இதுவரை மறைவாக நடந்து கொண்டிருந்த உண்மைத் தீவிரவாதிகளின் சதித்திட்டங்களை வெளிக் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து பதினைந்து ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டனர். நாந்தேடிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த 3 வருடங்களாக நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் மூளையாகச் செயல்பட்பவர்கள் யார் என்பது பைப் வெடிகுண்டுகள் வெடித்ததன் மூலம் தெளிவாகி விட்டது. ( http://www.pucl.org/Topics/Religion-communalism/2006/nanded.htm ) மும்பை குண்டு வெடிப்பிலும் இதே கும்பல் செயல்பட்டிருக்காது என்பது என்ன நிச்சயம்?

” 2 இந்து பயங்கரவாதிகள் குண்டு வெடித்து சாவு ”
” மகாராஷ்ட்ராவில் இந்துத் தீவிரவாதக் கும்பல் பிடிபட்டது ”
” பள்ளிவாசல்களை குண்டு வைத்து தகர்க்கும் சதித்திட்டம் அம்பலம் ”
இப்படியெல்லாம் எந்தப் பத்திரிக்கையிலும் தலைப்புச் செய்தியை பார்த்த நினைவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ஸின் சுவடே இல்லாமல் இந்தியாவிலிருந்தே இதை ஒழித்திட வேண்டும் என்று எந்த அரசியல்வாதியும் முழக்கமிடவில்லை. காரணம் தெரிந்ததுதான்!

இன்றைக்கு முஸ்லிம்களை ‘தீவிரவாதிகள்’ என பட்டம் சூட்டி ஒழித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிச் செயல்படும் சங்பரிவார் அமைப்பினர்தான் இந்தியாவில் தீவிரவாதத்திற்கு ஊற்றுக் கண்ணாக இருந்தவர்கள் என்பதற்கும் அவர்களது வன்முறைச் செயல்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கும் வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன. உண்மை வெகு காலத்திற்கு உறங்கிக் கொண்டிருக்காது.

****

இந்துத்துவ மதவெறி அமைப்புகள், ஊடகங்களின் துணையுடன் ‘இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மார்க்கம்’ என துவேஷப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையில் பணிபுரியும் சிலரும் நிர்ப்பந்தத்தினாலே அல்லது வேறு காரணங்களினாலோ இதற்கு துணை புரிகின்றனர். இம்மூன்று சக்திகளின் குரல் ஒருமித்து உரத்து ஒலிக்கிறது. உரக்க சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா?

இவர்கள் சொல்வது போல் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மார்க்கமா?

விளக்கம் பகுதி – 3ல்..

(தொடரும்)

http://ibnubasheer.blogsome.com

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்