இவர்கள் அறிவீனர்கள்

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

ஹமீது ஜாஃபர்


சானியா மிர்ஜா – ஒளிருகின்ற சினிமா தாரகையுமல்ல, சின்னத் திரை சீரியலில் வரும் நட்சத்திரமுமல்ல. 110 கோடி மக்களின் ஒளி வீசும் ஒரேயொரு டென்னிஸ் வீராங்கனை. இந்திய திருநாட்டிற்குப் பெருமைத் தேடி தரும் ஒரேயொரு வீர மங்கை.

அந்த பெண் விளையாட்டிற்காக அணிந்துள்ள உடையைப் பார்த்துவிட்டு பொருக்க முடியாத மார்க்க அறிஞர்கள் என்று பறைச் சாற்றிக்கொள்ளும் சிலர், அந்த உடை இஸ்லாத்திற்கு விரோத மானது, அணியக்கூடாதது, தடை செய்யப்படவேண்டியது, அப்படி இப்படி என்று ஃபத்துவா கொடுத்துள்ளார்கள் என்ற செய்தியை சன் தொலைக்காட்சியில் கேட்டபோது ஆயிரக்கணக்கான உள்ளங்களுடன் நானும் அதர்ச்சி அடைந்தேன்.

இவர்கள் அடிப்படைவாதிகளா ? இல்லை இல்லை, இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கவந்த அறிவீனர்கள், அபு ஜஹில்கள். படிக்கவேண்டும் அறிவைத் தேடவேண்டும் என்ற உண்மையான ஆர்வத்துடன் மதரஸாவுக்குச் சென்றிருந்தால் நல்ல கருத்துக்கள் வெளிவரும். எதோ வறுமைக்குப் பயந்து அங்கேயாவது நல்ல சோறு கிடைக்குமே என்ற எண்ணத்தில் ஐந்தேழு ஆண்டுகள் பெஞ்சைத் தேய்த்துவிட்டு வெளிவந்தால், இவர்களிடமிருந்து என்ன வெளிவரும் ? இப்படிப்பட்ட தீர்ப்புகள்தான்! இவர்களுக்கு அல்லாஹ்வையும் தெரியாது, ரசூலையும் தெரியாது, குர்ஆனும் புரியாது, ஹதீஸும் விளங்காது.

பெண்கள் படிக்கக்கூடாது விளையாடக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது என்று எங்கேயாவது இறைவன் சொல்லியிருக்கிறானா ? இல்லை அவனது தூதர் ரசூல் (சல்) அவர்கள்தான் சொல்லியிருக்கிறார்களா ? எதையும் சிந்தித்துப் பார்க்காமல் நீங்களாக ஒரு முடிவு எடுத்து ஃபத்துவா கொடுப்பதல்ல! பெரியப் பெரிய தலைப்பாவும் நீண்ட தாடியும், கையில் தஸ்பிஹ் மணியும் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது ? ஆழ்ந்த சிந்தனையும் தெளிவான அறிவும் வேண்டும். இப்படிப்பட்டவர்கள் ஏமாற்றுகாரர்கள் என்று அப்போதே இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்களும் தக்களை ஞானி பீர் முஹம்மது அப்பா அவர்களும் சொல்லிவிட்டார்கள்.

பெண் என்பவள் ஆணுடைய இச்சையைத் தணிக்கக்கூடிய வடிகால் அல்ல; பிள்ளை பெற்று கொடுக்கக்கூடிய இயந்திரம் அல்ல; அடுப்படியில் அடங்கிக்கிடக்கும் அடிமையும் அல்ல. அவள் மென்மையானவள். இறைவனுடைய படைப்புகளிலேயே மிக புனிதமானப் படைப்பு பெண். இதை இந்த அறிவீனர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். உன்னிடம் வீரமிருந்தால் அவளிடம் விவேகம் இருக்கிறது; உன்னிடம் கோபம் இருந்தால் அவளிடம் சாந்தம் இருக்கிறது; உன்னிடம் ஆனவம் இருந்தால் அவளிடம் அரவணைப்பு இருக்கிறது; எல்லாவற்றிற்கும் மேலாக தன்னையே தியாகம் செய்யும் அந்த தாய்மை இருக்கிறது.

ஒரு பெண் விளையாடுகிறாள் என்றால் அதற்கென்று தனி பயிற்சி, தனி உடை இருக்கிறது. முஸ்லிம் பெண் என்பதற்காக புருக்கா அணியமுடியாது; ஹிந்து பெண் என்பதற்காக புடவைக் கட்டமுடியாது; கிருஸ்துவ பெண் என்பதற்காக நீண்ட அங்கி அணியமுடியாது. அவள் விளையாடும்போது நீ ஏன் அவளது அங்கங்களைப் பார்க்கிறாய் ? அவள் முகத்தில் தெரியும் உணர்ச்சியைப் பார்; கண்களில் தெரியும் கூர்மையைப் பார்; பந்து எடுக்கும் லாவகத்தைப் பார்; அதை அடிக்கும் வேகத்தைப் பார். அப்போது புரியும் அவளது திறமை, துணிவு, சக்தி, வீரம், சாதுர்யம், அடக்கம் இவை அனைத்தும்.

முடிந்தால் எங்களுடன் சேர்ந்து அவள் வெற்றி மேல் வெற்றி பெற்று உலகில் முதலிடத்தைப் பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். இல்லாவிட்டால் ஒதுங்கி இருங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது, இஸ்லாத்திற்கும் நல்லது.

அருஞ்சொற்கள்:

ஃபத்துவா – மார்க்க தீர்ப்பு

அபு ஜஹில் – அறிவீனனின் தந்தை, பெருமானார் காலத்து இஸ்லாத்தின் எதிரி

தலைப்பா – தலைப்பாகை

தஸ்பீஹ் – இறை திருநாமத்தை துதிக்க உபயோகப்படுத்தும் 100 மணிகள் கொண்ட மாலை

மதரஸா – அரபி பாடகசாலை

(சல்) – சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்

(ரஹ்) – ரஹ்மத்துல்லாஹி அலைஹி

Hameed Jaffer

e.mail: maricar@emirates.net.ae

Series Navigation

ஹமீது ஜாஃபர்

ஹமீது ஜாஃபர்