இலக்கியம் : உதவுதலும் ஊக்குவித்தலும் ஒன்றல்ல

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

மலர்மன்னன்


தற்காலத் தமிழ் இலக்கிய முயற்சிகளில் எனது பங்கு மிக மிகக் குறைவுதான். முன்பே ஒரு வாசகர் திண்ணை இதழ் ஒன்றில் குறிப்பிட்ட மாதிரி எனக்கு எவ்வித இலக்கிய அங்கீகாரமும் கிடையாது, அது எனக்குத் தேவையும் இல்லை. ஆனாலும் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஈடுபடும் சில வாய்ப்புகள் எனக்கு வரவே செய்தன.

எழுபதுகளின் பிற்பாதியில் ஒரு நேர்முகத் தேர்வுக்காக தில்லி சென்றிருந்தபோது காந்தி அமைதி இல்லத்தில் தங்கியவாறு (ஆம், தீனதயாள்ஜி பெயரால் பின்னர் அறியப்பட்ட பூசா ரோடு காந்திஜி அமைதி இல்லம்தான்; காந்திய சிந்தனைகள் பலவற்றோடு எனக்கு உடன்பாடு உண்டு) கணையாழி ஆசிரியர் கி கஸ்தூரி ரங்கன் உள்ளிட்ட பல நண்பர்களுடன் தினசரி பொழுதைக் கழிக்க நேர்ந்தது ( 1970 லிருந்தே கணையாழியுடன் எனது தொடர்பு தொடங்கிவிட்டிருந்தது). பிறகு சென்னை திரும்புகையில் நானும் அவரும் சேர்ந்தே பயணித்தோம். கணையாழி ஆசிரியர் குழுவிலேயே நான் இடம்பெற்றுத் தினமும் கணையாழி அலுவலகம் சென்று ஆசிரியப் பகுதியில் சிறிது நேரம் தங்கி வேலை செய்யவேண்டும் என அப்போது கஸ்தூரி ரங்கன் விருப்பம் தெரிவித்தார். நன்றாக எழுதக்கூடியவர்கள் என்று என் மனதுக்குப் பட்ட முன் பின் தெரியாத பலரின் படைப்புகளைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பாக அது அமைந்தது. இவ்வாறு புதியவர்களை ஊக்குவிக்கும் செயலை தமிழ் இலக்கியச் செழுமைக்கான எனது கடமையாகக் கருதினேனேயன்றி, படைப்பாளிகளுக்கு உதவும் செயலாக அதனை நினைத்ததில்லை. ஒரு படைப்பாளியின் தரமான படைப்பை அடையாளங்கண்டு
அதனை வெளியிடச் செய்வது அவருக்குச் செய்யும் உதவி என நினைப்பதே அந்தப் படைப்பாளியை அவமானப்படுத்துவதாகும் என்பதை அறிந்திருக்கிறேன்.

கணையாழிக்கு வரும் படைப்புகளைப் பரிசீலிக்கும் வாய்ப்புக் கிடைத்த சமயத்தில் சிறப்பாக வாசகர் கடிதம் எழுதுபவர்களைக் கூட விரிவான கட்டுரை எழுதுமாறு நானாகவே வேண்டியதுண்டு. அதெல்லாம் அவர்களுக்குச் செய்த உதவியல்ல. மாறாகத் தமிழ் வசன வளர்ச்சிக்கு வேண்டுமானால் அது உதவியாக இருக்கக்கூடும். இவ்வாறு கட்டுரை எழுத முன்வந்தவர்கள் பின்னாளில் தினமணியில் தொடர்ந்து கட்டுரை எழுதும் வாய்ப்பினையும் பெற்றார்கள்.

1970 வாக்கில் வாரா வாரம் ஆனந்த விகடனுக்கு வந்து குவியும் சிறுகதைகளிலிருந்து ஒரு கட்டு எனக்கும் பரிசீலனைக்காக வந்துகொண்டிருந்தது. அந்தச் சமயத்திலும் என் மனதுக்கு நன்றாக இருப்பதாகப்பட்ட வற்றைத் தேர்வு செய்து, வெளியிட்டாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துக் குறிப்பும் எழுதியதுண்டு. அதையெல்லாம் உதவி என்கிற எண்ணத்தில் செய்ததில்லை.

ஆனந்த விகடன், கல்கி முதலான பத்திரிகைகள் என்னிடம் கதை கேட்டுக் கடிதம் எழுதி வந்த நாட்களில் என்னைவிடச் சிறப்பாக எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள் என்று சில பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களிடம் கதை கேட்குமாறு பதில் எழுதியதுண்டு.
இதையும் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கு உதவும் என்கிற எண்ணாத்தாலன்றி, எழுத்தாளருக்கான உதவி என்கிற நினைப்பில் செய்யவில்லை.

ப. சிங்காரம் எழுதிய மிகச் சிறந்த நாவலான புயலிலே ஒரு தோணி வெளிவர நான் காரணமாக இருந்தேன் என்பதாக மோகனோ மணியோ ஆவணப்படுத்தியிருப்பதாக அறிகிறேன் . அது சிங்காரத்திற்குச் செய்யப்பட்ட உதவியல்ல. மாறாகத் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கக்கூடும்.

ஒரு படைப்பாளியின் படைப்பை வெளிவரச் செய்யும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் எழுத்தைத்தான் பார்த்திருக்கிறேனே யன்றி எழுதியவரை அல்ல. அதேபோல் நல்ல படைப்பாக எனது கணிப்பில் தென்படுவனவற்றை நானாகவே பாராட்டிப் பத்திரிகைகளில் எழுதி ஊக்குவிக்கவும் தவறியதில்லை. இவ்வாறு பாராட்டப்படுகிறவர்களுள் தம்மை முற்போக்கு என்று சொல்லிக்கொள்பவர்களும், ஈ வே ரா அவர்களைப் போற்றுபவர்களும் வெவ்வேறு சமயம் சார்ந்தவர்களும் உண்டுதான். ஆனால் படைப்பைப் பார்க்கையில் இதெல்லாம் கண்ணில் படுவதில்லை. சொல்லப்போனால் இப்படி ரிஷி மூலம் பற்றிப் பேசுவதே முறையில்லைதான். ஆனால் நோக்கம் கற்பிக்கப் படுகிறபோது இதையும் சொல்ல வேண்டியதாகிவிடுகிறது.

சமயத்தைப் பற்றிப் பேச்சு வந்துவிட்ட பிறகு அதுபற்றியும் சிறிது யோசிக்க வேன்டியதாகிறது.

ஆன்மிக முன்னேற்றத்திற்குச் சமயம் என்பது தவிர்க்க இயலாத முதல் படிக்கட்டுதான். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அது அவசியப்படுவதில்லை. சொல்லப்போனால் தடைக்கல்லாகவும் கழுத்தில் கட்டிக் கொண்ட கல்லாகவுங்கூட அது ஆகிவிடுகிறது. ஆகவே, சமயம் மீது நான் கவனம் செலுத்துவதில்லை. சமயம் சார்ந்த சரியை, கிரியை எதனையும் நான் பின்பற்றுவதில்லை. ஹிந்துத்துவம் குறித்து நான் எழுதுவது, பேசுவதெல்லாம் சமூகக் கண்ணோட்டத்துடன்தானே யன்றி, சமய உணர்வுடன் அல்ல. தொன்மையான ஹிந்து கலாசாரமும், சுதந்திர சிந்தனைப் பெருக்கும், ஆழ்ந்த தத்துவ ஞானமும் இன்று எதிர்நோக்கியுள்ள பெரும் சோதனையைக் கண்ணுறும்போது படைப்பிலக்கியத்தில் ஈடுபடும் தூண்டுதல் தோன்றுவதில்லை. அவ்வளவு ஏன், எழுதவோ படிக்கவோ கூடத் தோன்றுவதில்லை. உருப்படியான செயல் எதிலேனும் இறங்க வேண்டும் என்கிற ஆவேசம்தான் வருகிறது. ஹிந்து சமூகத்திற்கு வரும் சோதனைகள் ஒட்டுமொத்த ஹிந்து கலாசாரத்திற்கே வருகின்ற சோதனைகள்தாம். மதத்தின் பெயரால் நிகழும் முகமதிய பயங்கர வாதச் செயல்களும், நக்சலைட் போர்வையில் நடைபெறும் கிறிஸ்தவ பயங்கரவாதச் செயல்களும், ஹிந்துஸ்தானம் முழுவதும் கேட்பாரின்றித் தங்கு தடையில்லாமல் முழு மூச்சில் நடைபெற்றுவரும் முகமதிய, கிறிஸ்தவ மயமாக்கலும் கண்ணெதிரே தெரிகையில் படைப்பிலக்கியத்தில் முயற்சி செய்வது நீரோ ராஜன் யாழ் வாசித்தது போலாகும் எனத் தோன்றுகிறது.

ஹிந்து சமூகம் ஒரு குழப்பமும் இல்லை என்பதுபோலச் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. சரியான கும்பகர்ணத் தூக்கம். யானையின் காலில் முள் குத்தியது போலத்தான். புரையோடிப் புரையோடி இறுதியில் உயிருக்கே அது உலைவைக்கும். போதாக்குறைக்குச் சுபாவமாகவே ஹிந்துக்களின் மரபணுவி லுள்ள தற்கொலைப் போக்கும் சோதனைகளுக்குச் சாதமாகவே உள்ளன.

தென்கிழக்கு ஆசியா முழுவதும் வேரூõன்றியிருந்த, வட மேற்கிலும் மத்தியக் கிழக்கு நோக்கி வியாபித்திருந்த ஹிந்து கலாசாரம் இன்று எங்கே? அந்த வேரூன்றல் மெய்யாகவே மெய்யாகவே மிகவும் இயல்பாக அமைந்ததேயன்றி படையெடுப்புகளாலோ, சாமர்த்தியமான மத மாற்ற நடவடிக்கைகளாலோ அல்ல. ஆங்காங்கே தாமாகவே முளைத்தெழுந்த வீரிய விதைகள் அவை. அவற்றால் வளர்ந்தோங்கி நின்ற அடர்ந்த காடுகள் யாவும் வெட்டி எறியப்பட்டன.

தொன்மையான ஹிந்து கலாசாரம் இன்றைக்கு உள்ள ஹிந்துஸ்தானத்தையாகிலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆதங்கம் காரணமாக , ஹிந்து சமூகத்தை முடிந்தவரை உலுக்கி உலுக்கி எழுப்பி உட்காரவைக்கப் பார்ப்பதுதான் தற்சமயம் விவரம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய காரியம். காதுள்ளவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்