கோபால் ராஜாராம்
இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த போதும் சரி, இப்போது ஆங்கில எதிர்ப்புப் போராட்டம் நடக்கும் போதும் சரி, ஒரே விதமான எதிர்வினைகளும், ஒரே விதமான வாதங்களும், ஒரே விதமான போக்குகளும் காணப் படுகின்றன. தமிழ் நாட்டின் சாபக் கேடு இது தான் போலும். சொந்த மொழியில் பாடம் சொல்லிக் கொடு என்று போராட வேண்டும். சொந்த மொழியில் பாட்டுப் பாடு என்று போராட வேண்டும். சொந்த மொழியில் பேசு என்று போராட வேண்டும்., சொந்த மொழியில் கையெழுத்துப் போடக் கூட போராட வேண்டும். சொந்த மொழியில் பூசை செய்யவும் போராட வேண்டும். பல பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் அழ வேண்டும். பிள்ளைகளை ஆங்கிலேயர்களாய் வளர்ப்பதில் அப்பா அம்மாக்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவ்வளவு அக்கறை.
ஆங்கிலத்தை அறவே விலக்கி வைக்கக் கூட யாரும் கேட்க வில்லை. முதல் வகுப்பு முதல், ஐந்தாவது வரையில் தமிழ் மொழியில் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கிற அரசு ஆணையை எதிர்த்து, மெட்ரிக் பள்ளிக் கூட வியாபாரிகள் நீதி மன்றத்திற்குப் போயிருக்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். இந்த மடமையை ஆதரிப்பதில் முன்னணியில் இருப்பது. ‘ஹிண்டு ‘ ஏடு. தினமும் கடிதங்களை வெளியிட்டு, ஆங்கிலப் பாட போதனைக்கு ஆதரவாக கருத்துகளை உருவாக்க முயல்கிறது. வரும் கடிதங்களில் ஒரு கடிதம் கூட தமிழ் போதனா மொழிக்கு ஆதரவாக இல்லை என்பது ஆச்சரியம். கடிதம் வரவே இல்லையா அல்லது இவர்கள் அது போன்ற கடிதங்களை வடிகட்டி விடுகிறார்களா என்று தெரியவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதும் கூட ஏறத்தாழ இதே போலத் தான் கருத்தை உருவாக்க முயன்றது இந்த ஆங்கில ஏடு. தமிழகத்தின் அவமானச் சின்னம் என்று இதனைச் சொல்வது மிகையாகாது. மற்ற மாநிலத்தில் உள்ள ஆங்கில ஏடுகள், அந்தந்த மாநிலத்தில் உள்ள கலை, கலாசார, இலக்கியப் போக்குகளுடன் தம்மை இணைத்துக் கொள்ள முயல்கிற வேளையில் ‘ஹிண்டு ‘ மட்டும் தமிழையும், தமிழ்ப் போக்குகளையும் இளக்காரத்துடன் தான் பார்த்து வந்திருக்கிறது. என். ராமுக்குப் பிடித்தமான ஆசிரியர் ஜெய காந்தனோ, புதுமைப் பித்தனோ அல்ல, ஆங்கிலத்தில் எழுதுகிற ஆர். கே. நாராயண் என்பது தற்செயலானது என்று நான் கருத வில்லை. ‘ஹிண்டு ‘வின் பொதுப் போக்கின் ஓரங்கமாக இதனைக் காண வேண்டும்.
ஆக இவர்கள் என்ன சொல்கிறார்கள் ?
ஆங்கிலம் படிப்பதால் வேலை வாய்ப்புப் பெருகும்.: பள்ளி இறுதி வகுப்புடன் நிறுத்தி விடுபவனுக்கு ஆங்கிலப் படிப்பினால் என்ன வேலை வாய்ப்புப் பெருகக் கூடும் ? இந்தியாவில் ஆங்கில போதனாமொழியில் படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்தாகி விட்டதா ? பத்து வருடம் முன்பு வரை ஆங்கில போதனா மொழி பள்ளிகளில் இல்லை. கல்லூரியில் தான் இருந்தது. அந்த ஒரே காரணத்தால், எத்தனை பேர் வேலை வாய்ப்பை இழந்தார்கள் ? புத்திசாலித் தனத்துக்கும் ஆங்கில போதனா மொழிக்கும் என்ன சம்பந்தம் ? உலகம் முழுவதும் உள்ள கல்வியியல் வல்லுனர்கள் அனைவருமே ஒருமித்த குரலில் தாய் மொழிதான் அடிப்படைக் கல்விக்குச் சிறந்தது என்று நிரூபித்து இருக்கிறார்கள். ஐந்து வகுப்பு வரை சிறுவர் சிறுமியர் யாரும் ராக்கெட் விஞ்ஞானம் பயில்வதில்லை. அடிப்படை அறிவியலைத் தான் கற்கிறார்கள். அதில் ஆங்கிலம் நுழைந்ததால் நெட்டுருப் போடும் பழக்கம் தான் வளர்ந்திருக்கிறதே தவிர கருத்துகள் மனதில் ஏறியதாய்த் தெரியவில்லை.
சமஸ்கிருத மணிப்பிரவாளம் ஒரு காலத்தில் ‘மேன்மைக் குறியாய் ‘ இருந்தது போல இன்று ‘தமிங்கிலம் ‘ விளங்குகிறது. ஆங்கிலத்துக்கு ஆதரவாக இந்த விகடத் தமிழ் இன்று தமிழ்நாட்டின் வீதிகளில் புழங்கக் கேட்கலாம். தப்புத் தப்பாய் ஆங்கிலம் பேசுவது, சரியான தமிழில் பேசுவதை விடவும் சிறப்பான விஷயமாய் எல்லாராலும் அங்கீகரிக்கப் பட்டு விட்டது. தமிழும் சரியாய்த் தெரியாமல், ஆங்கிலமும் ஒழுங்காய் வராமல் இரண்டுங்கெட்டான் தமிழர்கள் தமிழ் நாட்டில் பல்கிப் பெருகியுள்ளனர். இதற்கு, விகடன் போன்ற ‘தமிங்கில ‘ப் பத்திரிகைகள் மூல காரணம். ‘ஹாஸ்பிடலுக்கு ஒன் விசிட் ஐ வில் மேக் ‘ என்பது அங்கீகரிக்கப் பட்ட தமிழ் விகட வாக்கியம். இப்படிப் பட்ட சூழலில் வளர்கிற பையனும், பெற்றோரும் ஆங்கில அறிவு தப்புத் தப்பாய் இருந்தாலும் பெருமை என்று எண்ண நேரிடுகிறது.
நான் பெற்றோரைக் குறை சொல்ல மாட்டேன். பெற்றோர் தம் குழந்தைகளுக்கு நல்ல வாழ்வு அமையவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தில் தான் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். அரசாங்கத்தின் வார்த்தையையோ, அரசியல் வாதியின் வார்த்தைகளையோ அவர்கள் நம்பத் தயாராய் இல்லை. கருத்தை உருவாக்க வல்ல ‘விகடன் ‘ களும், ‘ஹீண்டு ‘க்களும் பெற்றோரை பயமுறுத்துவதில் முன்னணியில் நிற்கின்றன. இதற்கு சரியான முறையில் உண்மையை எடுத்துச் சொல்வதற்கு அரசியல் சந்தர்ப்ப வாதிகள் பயன் பட மாட்டார்கள். தமிழ் நாட்டின் விஞ்ஞானிகளும், துணை வேந்தர்களும், அறிவுத் துறையில் செயல் படுபவர்களும் செய்ய வேண்டிய விஷயம் இது.
எத்தனை பேர் கல்லூரி செல்கிறார்கள் ? கல்லூரியில் எப்படியும் ஆங்கில போதனை உள்ளதே. ஏன் புரியாத மொழியில் அடிப்படை விஞ்ஞானத்தையும், வரலாற்றையும் கற்க வேண்டும் ? சேர சோழ அரசர்களைப் பற்றிய அறிவை சேரா அண்ட் சோலா கிங்ஸ் என்று படிப்பதில் என்ன பெருமை ? கல்லூரிப் படிப்புள்ளவர்களுக்குத் தான் ஆங்கில அறிவு வேலை வாய்ப்புக்காகப் பயன் படும் – அதிஉல்ம் ந்டுற்றுக்கு இருவர் அல்லது மூன்று பேருக்குத் தான். ஆங்கிலத்தில் படித்த எல்லாருக்கும் வேலை கிடைத்திருக்க வேண்டுமே கிடைத்து விட்டதா ? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதும் இதையே தன் சோ போன்ற அதி புத்திசாலிகள் சொன்னார்கள். உத்திரப் பிரதேசம், பீஹாரில் வேலை பார்க்கச் செல்ல இந்தி அறிவு வேண்டும் என்று சொல்லப் பட்டபோது, உ. பி யிலும் பீஹாரிலும் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டதா என்று கேட்கப் பட்டது. இன்னமும் சோ போன்றவர்கள் இதற்குப் பதிலளிக்க வில்லை.
தமிழினால் வேலை கிடைக்குமா ? என்பது தான் எல்லோருடைய நியாயமான பயம். ஆனால் தமிழினாலோ, ஆங்கிலத்தாலோ மட்டுமே வேலை கிடைக்காது. தொழில் திறனும், முனைந்து நின்று தம்மை நிரூபிக்கும் வகையில் செயல் படுவதனால் மட்டுமே வேலை கிடைக்கும்.
ஆங்கில ஆசிரியர்கள் பலர் வேலை இழந்து விடுவார்கள் : இந்த வாதத்தைக் கேட்டவுடன் ஐயோ பாவம், இங்கிலாந்திலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான , ஆங்கிலம் தவிர வேற்று மொழியறியாத, ஏ ஃபார் ஆப்பிள் பி ஃபார் பிஸ்கட் சொல்லிக் கொடுக்கிற , ஆயிரமாயிரம் பெண்மணிகள் வேலை இழந்து போவார்கள் என்று மிகவும் பரிதாபப் பட்டேன். பிறகு தான் தெரிந்தது, இந்த ஆசிரியர்கள் நம் தமிழ் நாட்டுக் காரர்கள் தான் என்று. தமிழ் அவர்களுக்குத் தெரியும் என்று தான் நினைக்கிறேன். தெரியாவிட்டாலும் என்ன – குழந்தைகளோடு குழந்தையாய் உட்கார்ந்து அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா என்று சொல்லிக் கொடுத்து விட்டால் போயிற்று.
பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.: அரசாங்கம் இதில் தலையிடக் கூடாது என்று ஒரு வாதம். ஓகோ, அப்படியா ? பெற்றோர்களின் விருப்பத்திற்கு இணங்க இந்தக் கல்வி வியாபாரிகள் யாராவது, அன்பளிப்பில் ஒரு ரூபாய் குறைத்து வாங்கிக் கொள்ளத் தயாராய் இருக்கிறார்களா ? பெற்றோர்கள் விருப்பத்திற்கு இணங்க, பொறியியல் கல்லூரியிலும் பணம் இல்லாமல் படிப்பு சொல்லித் தரப் போராடுவார்களா ? ஆங்கில மோகத்தை ஊட்டி ஊட்டி வளர்த்து விட்டு, ஆங்கிலம் படித்தால் ஏதோ மேன்மக்களாக்கும் என்ற உணர்வைச் சுற்றிலும் பரவ விட்டு, இப்போது பெற்றோர்கள் விருப்பத்திற்காகப் போராடுகிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்த அபத்தமான பணப் பேய்களின் வலையில் கிராமத்துப் பெற்றோர்கள் கூட விழுந்து அவதிப் படுகிறார்கள்.
கட்டாயப் படுத்தாமல், யார் தமிழ் மூலம் கற்க ஆசைப் படுகிறார்களோ அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றலாம். யார் ஆங்கிலம் வழி கற்க ஆசைப் படுகிறார்களோ அவர்கள் ஆங்கிலம் வழி கற்க வேண்டும். இது தான் ஜன நாயகப் பாதை என்று சிலர் அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். ஜன நாயகத்தின் மீது இவர்களின் அன்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இதே போல் ஜன நாயக ரீதியாக, ரஷ்யன் , ஃப்ரெஞ்ச் மொழி போதனைக் கும் எல்லா இடங்களிலும் ஏற்பாடு செய்து விட்டு அப்புறம் இவர்கள் ஜன நாயகம் பற்றிப் பேசலாம்.
உண்மையில் ஆங்கில போதனாமொழிப் பள்ளிகள் , வெளி மாநிலங்களிலிருந்து, வேலை மாற்றல் பெற்று வந்தவர்களுக்கான ஒரு தற்காலிக ஏற்பாடாய்த் தான் இருந்து வந்தன. அதில்லாமல், சுதந்திரம் அடையும் போது இருந்த ஆங்லேயர்களுக்கான பள்ளிகள் தொடர்ந்து செயல் பட அனுமதிக்கப் பட்டன. ஆனால், மெள்ள மெள்ள , மூளை கெட்ட கல்வி அமைச்சர்களும், கல்விக் கொள்கை இன்னதென்று தெளிவில்லாத முதலமைச்சருமாய்ச் சேர்ந்து, மெட்ரிக் பள்ளிகள் திறக்க, சகட்டு மேனிக்கு அனுமதி வழங்கியதனால் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வந்த விஷச் செடி இப்போது ஆலமரமாய் நிற்கிறது. இதில் பணம் பண்ணிய புண்ணிய வான்கள், எந்தச் சகதியில் மக்களை இறக்கி விட்டோம் என்று சிறிதும் கவலைப் படவில்லை. திராவிடக் கட்சிகள் தாம் இந்த அசிங்கமான போக்கிற்கு முழு முதல் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழ் வழிக் கல்வியை விஞ்ஞானிகளாலும், வல்லுனர்களாலும் வளர்ப்பதை விட்டு விட்டு, அறிவியல் உணர்வற்ற தமிழ் வாத்தியார்களின் கையில் ஒப்படைத்ததால் கல்வித் தரமும் குட்டிச் சுவர். உண்மையில் திறமையான ஆசிரியர்களும், தம் முன்னேற்றமும் , வசதியும் கருதிய நியாயமான தேர்வாக ஆங்கிலப் பள்ளிகளில் இணைந்து கொண்டனர். தமிழ்க் கல்வியின் தரம் குறைந்து போனது.
ஒரே துரதிர்ஷ்டம் இந்த மொழிப் போரில் மீண்டும் தமிழ் வாத்தியார்கள் முன் நிற்பது தான். மீண்டும் தமிழனைக் கற்காலத்திற்குக் கொண்டு செல்கிறார்கள் இவர்கள் என்ற கூற்றை மெய்ப்பிப்பது போலத் தான் இந்த வாத்தியார்களின் முன்னாள் போக்கு இருந்து வந்திருக்கிறது. இவர்களை முன் நிறுத்தாமல், இடது சாரிகளும், கல்வி வல்லுனர்களும் , சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டவர்களும் இந்த மொழிப் போரை முன் நடத்த வேண்டும். ‘ஹிண்டு ‘ போன்ற தமிழ்த் துரோகிகளையும், ‘விகடன் ‘ போன்ற தமிங்கிலப் பத்திரிகைகளையும் பகிஷ்கரிப்பது அதன் முதல் படியாகலாம்.
தமிழின் போதனாமொழித் தரத்தை உயர்த்தி, ஆங்கிலத்தை சரியான முறையில் சொல்லிக் கொடுக்கலாம். ஆங்கிலம் நமக்கு உலகத்தைக் காட்டும் சாளரம். அதன் அறிவு மிக மிகத் தேவைதான். இரண்டாவது மொழியாகவும், உயர் கல்விகளில் இணை போதனா மொழியாகவும் ஆங்கிலம் நம்மிடையே இருப்பது மிக மிக அவசியம் தான். ஆனால், ஐந்தாவது ஆறாவது படிக்கிற மாணவனின் தலையில் ஆங்கில மொழியில் அறிவியலையும், புவியியலையும் திணிப்பது, கல்விக்கு நல்லதல்ல. மாணவனுக்கும் நல்லதல்ல. கல்வித் தரத்திற்கும் நல்லதல்ல. தரமான கல்விக்கான போராட்டம், தாய்மொழிக் கல்விக்கான போராட்டம்.
Gopal Rajaram, Thinnai, December 12 1999
திண்ணை
|