விழி. பா. இதயவேந்தன்.
சுற்றிலும் வெட்டவெளி குடிவந்த புதிதில் அக்கம் பக்கம் கூப்பிட ஒரு ஆள்கூட கிடைக்காத ஓர் தனிமை அப்புறம் வருசா வருசம் இங்கொன்றும் அங்கொன்றுமாய் கான்கிரீட் கட்டிடங்கள் உதயமானது.
மழைக்காலங்களில் மேட்டிலிருந்து நீர் வழியும். எங்கள் வீட்டு வாசல் பக்கம் நீரோடையாகப் போய் அருகிலுள்ள ஏரியில் சேரும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் வானம் பார்த்த பூமி மாதிரிதான் தோற்றம். தூரத்தில் சில வீடுகளில் தென்னை மரம், மாமரம் என கிளைகள் அசையும். நகர்புறத்து தொலைக்காட்சி மின் அணு கோபுர உச்சியில் இரவு நேரத்தில் சிவப்பு விளக்கு எரிவது தெரியும்.
அங்குமிங்கும் வீடுகள் உருவான போது பக்கத்திலேயே வந்து வீடு கட்ட ஆரம்பித்ததும் எங்களுக்கு இன்னும் சந்தோஷம்.
யாரோ எவரோ பேச்சுத்துணைக்காகிலும் ஆள் கிடைத்ததே என்று சந்தோசம். சின்னதாய் ஓட்டு வீடு கட்டி வந்ததும் முதலில் அவ்வளவாகப் பேச்சு இல்லை.
கொஞ்ச நாள் ஆக ஆக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்கள். மக்களைப் பெற்ற மகராசி போல் நிறய பேர் பிள்ளைகள் இருந்தார்கள். சுத்தி வேணும் கொறடா வேணும் என்று மாறி மாறி வந்து விடுவார்கள். மாடியில் மிளகாய் காயவைக்க வத்தல் போட வந்து போவார்கள்.
நலிந்து ஒடுங்கிப் போன அவர்கள் குடும்ப சூழலை அடிக்கடி எடுத்துச் சொல்லும்போது நாங்களும் அனுபவித்த பல ஆண்டுகளின் நினைவில் கேட்பதற்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும். நம்மால் கேட்கத்தான் முடிகிறதேயொழிய உடனடியாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. வழி சொல்வதும் சுலபம்தான்.
ஒரு நாள் பெரிய மகள் பிடாகத்திலிருந்து வந்து கொண்டிருந்தாள். கையில் கைக் குழந்தை கூடவே கணவனும் ரெண்டு பிள்ளைகளும் வந்து கொண்டிருந்தார்கள். வெட்ட வெளியில் அவளது நடையும் பிள்ளைகளின் சட்டையும் வைத்து பக்கத்து வீட்டு அம்மாள் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னாள்.
‘பெரியவதான் வர்றா ‘
அவளுக்கு முகம் சுருங்கி இறுகியது. முகத்தில் சந்தோசக்களை இல்லை. எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பெத்த புள்ள வரும்போது ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருந்தது.
‘போய் புள்ளய வாங்குங்க ‘
‘ம்க்கும் ‘
‘ஊர்லேர்ந்து வர்றாங்க இல்ல ‘
‘தொல்லையோடு வருவாம்மா ‘
அவள் சொல்லிவிட்டு நகர்ந்தாள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் வீட்டருகே நெருங்கியதும் ஓடிவந்து குழந்தையை அவள் அம்மாவிடம் கொடுத்தாள். மீண்டும் வேகமாக ஒரு குழந்தையைப் போல் ஓடினாள். தாய் வீட்டைப் பார்க்கும் ஆவலில் அப்படி செய்வதாக நாங்கள் திரும்பிக் கொண்டோம்.
மறுநாள் வீட்டில் அடிக்கிற பைப்பு பழுதாகிப் போனதால் பக்கத்து வீட்டு பைப்பில் தண்ணீர் அடித்து வரப்போனாள் மனைவி.
‘இது என் செருப்பு கழட்டு ‘
பெரியவள் ஓடிவந்து மறித்தாள். மனைவிக்கு தூக்கி வாரிப்போட்டது.
‘திருடிகினியா மூஞ்சப்பாரு ‘
அவள் திரும்பக் கேட்டதும் மனைவிக்கு ஆத்திரம் எழுந்தது. புதுச்செருப்பு. வாங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. கையில் பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. அவளது வார்த்தை நெருப்பாய் சுட்டது.
‘இது என் செருப்பு ‘
‘இல்ல என் செருப்பு ‘
அவள் தொடர்ந்து வேகமாகக் கத்துவதைப் பார்த்து அவள் அம்மாவும் மற்றப் பிள்ளைகளும் தோட்டத்துப் பக்கம் ஓடிவந்தார்கள்.
‘ஏய் கனகா பேசாம வா ‘
அவளைப் பிடித்து இழுத்துப் போனார்கள். மனைவிக்கு மேலும் குழப்பம் அதிகமானது. கனகாவின் பேச்சும் நடந்த சூழலும் கேள்வி மேல் கேள்வி கேட்டவாறு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். என்னிடம் வந்து சொன்னதும் எனக்கும் அதிர்ச்சியானது.
பார்ப்பதற்கு கருப்பாய் இருந்தாலும் லட்சனமாய்தான் இருந்தாள் அவள். அம்மா வீட்டிற்கு வரும்போது பார்த்தது. குழந்தைப்பிள்ளை மாதிரி முகத்தில் குறும்பு தெரிந்தது.
கொஞ்ச நேரத்தில் பக்கத்து வீட்டிலிருந்து கனகாவின் அம்மா பர்வதம் மூச்சிரைக்க வந்து நின்றாள். மின்னல் கொடி போல் மயிரை வாரி முடித்திருந்தாள். வெளிறிய முகத்தில் குங்குமப்பொட்டு.
‘எதயும் மனசுல வெச்சுக்காதேம்மா ‘
‘…. ‘
‘நேத்தே சொன்னேன்ல, தொல்லன்னு ‘
‘என்ன சொல்றீங்க ‘
‘அவளுக்கு கொஞ்சம் கொன பேதகம் ‘
அவள் சொல்லவே சங்கடப்பட்டாள். பேச்சில் இழுப்பு தெரிந்தது.
‘என்ன, என்னாச்சு ‘
‘என்னான்னே தெரியலைப்பா. இப்பதான் நாலைஞ்சு வருசமா பயித்தியம் புடிச்ச மாதிரி…. ‘
எங்களுக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது. கேட்காவிட்டாலும் அவர்களும் தன்னிலை விளக்கம் தராமல் போக மாட்டார்கள் எனத்தெரிந்தது.
‘உட்டு உட்டு வருது; புள்ளக் குட்டிய வெச்சு கஷ்டப்படுறா; கோச்சுக்காதம்மா ‘
‘பரவாயில்லங்க ‘
அவள் சொல்லிவிட்டுப் போனாள். எங்களுக்கு சிந்தனை முழுக்க அதிலேயே இருந்தது. பிள்ளைக் குட்டியோடு அவள் கணவன் வைத்து கஷ்டப்படுவதை நினைத்தால் வேதனையாகத்தான் இருந்தது.
மறுநாள் காலை விடிந்ததும் வெளியே வந்ததும் தன்னை அறியாமல் பார்வை அந்த வீட்டுப் பக்கம் திரும்பியது.கும்பலாய் அவளை ஏழெட்டுபேர் அழைத்து வந்தார்கள். புரியாத புதிராய் வீட்டோரம் போய் விசாரித்தேன்.
‘ஏம்ப்பா கேக்குற, வெளிய போறன்னு காலைல சொன்னா, கொஞ்ச நேரம் பாத்தம் வர்ல ‘
‘அப்புறம் ‘
‘ஏரிக்கரை முள்ளுதோப்பு பக்கம் தேடினம்; கடசியிலே மெயின் ரோட்டுப்பக்கம் ஓடிட்டா ‘
‘அய்யய்யோ இன்னாச்சு ‘
‘இன்னாச்சு எல்லா பஸ்ஸ்உ லாரியவும் நிறுத்திட்டா, அப்புறம் புடிச்சு இழுத்தாந்தம் ‘
எல்லோரும் சப்சப்பென்று உச்சுக் கொட்டினார்கள்.
‘அப்பப்ப இந்த மாதிரி வந்து போனா கொழுந்தைங்க. படிப்பு இன்னாவுறது….. ‘
பர்வதம் புலம்பினாள்.
‘இவளுக்கு இறுமாப்பிடி, வேணும்னே செய்யுறாடா, ‘
‘இல்லடி, அவள பேய் புடுச்சி ஆட்டுது ‘
‘அடி நீ ஒன்னு; எப்ப எத பேசணும்னு தெரில. பேயாவது நாயாவது, எவனோ வென வெச்சுறுக்காண்டி….. ‘
ரோட்டுப்பக்கம் இருந்து கூடவே வந்த உறவுக்காரப் பெண்கள் சொன்னார்கள்.
‘அவ வூட்டுக்காரன் பாக்காத வைத்தியமில்ல; போவாத கோயில் இல்ல ‘
பர்வதம் எல்லாவற்றையும் சொல்லி புலம்பும்போது கேட்பவர்களுக்கு சங்கடமாகிப் போய்விட்டது.
‘தலயில ஏதாச்சும் அடிபட்டுதா ‘
‘அப்படி ஒன்னும் தெரியல்லப்பா ‘
‘ஏய் உனக்கு அறிவிருக்கா, நல்லா வாயில வருதுடி, தேவிடியா.. ‘
பேசிக் கொண்டிருந்த போது கனகா உள்ளேயிருந்து ஓடிவந்து பர்வதத்தை வாயில் வந்தபடி அசிங்கமாகத் திட்டினாள். இதுவெல்லாம் புதுசுஇல்லை என்பதைப் போல அவள் அலட்டிக் கொள்ளாமல் சாவகாசமாக உட்கார்ந்திருந்தாள்.
கனகாவின் கணவன் முருகேசன் சென்னையில் பழவியாபாரம் செய்கிறவன். சீசனுக்குத் தகுந்த மாதிரி பழத்தை மண்டியிலிருந்து எடுத்து அன்றாடம் விற்றுவிட்டு வருவான். மாதாமாதம் ஊருக்கு போவான்.
கையில் சேர்த்துக் கொண்டு வரும் பணத்தைக் கொண்டு வீட்டைக் கட்டி பிள்ளைகளை படிக்க வைத்திருந்தான். ஒண்ணு நாலாவது. மற்றொன்று ஏழாவது. தற்போது பெரும்பாலும் அங்குமிங்கும் வைத்தியத்திற்கும் கோயிலுக்குமாகவே செலவழித்தான்.
ஒரு நாள் வீட்டில் உட்காரவைத்து மந்திரம் சொல்வது கேட்டது. கூடவே உடுக்கைச் சத்தம் எங்கள் சுவரை இடித்துப் பறந்தது. வாசலில் வந்துஅவர்கள் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தோம்.
‘விஞ்ஞான யுகத்தில் இப்படியா, சே ‘
மனைவி என்னிடம் புலம்பினாள். பெரிய மீசையும் தாடியும் பின்புறம் குடுமியும் வைத்திருந்தான் அந்த பூசாரி. நெற்றியில் திருநீற்றை முழுக்க அப்பியிருந்தான். பெரிய வட்டத்தில் குங்குமப்பொட்டு, கையில் உடுக்கையோடு ஏதேதோ முணுமுணுக்கத் தொடங்கினான்.
அவள் முன்பாக நெருப்பும் சாம்பிராணி புகையும் கிளம்பியது. அருகே பழங்கள் வெற்றிலைப் பாக்கு, பூ, தேங்காய், வத்தி, கற்பூரம் என படையல் சாமன்கள் ஒரு புறம். எலுமிச்சைப்பழம் இரண்டாக அறுத்து குங்குமத்தில் தோய்த்து வெளியே வந்து திசையெங்கும் கைகளை சுழற்றி வீசிவிட்டுப் போனான். எல்லாவற்றையும் வாரி எடுத்துக் கொண்டு பணத்தை எண்ணிக் கொண்டு கிளம்பினான்.
நான் முருகேசனை அழைத்து விசாரித்தேன். அவன் லேசாக புன்சிரிப்பு சிரித்து நின்றான்.
‘சென்னையிலே தொழில் செய்யிறயே, உனுக்கு தெரியாதா ‘
‘இதெல்லாம் மாமியாரோட வேல ‘
‘ஆஸ்பத்திரில எவ்ளோ வசதியிருக்கு; இல்லாட்டி தனியார் கிட்டயும் காட்டலாமே ‘
‘…. ‘
‘ஆரம்பத்துலயே பாத்தா நல்லதாச்சே ‘
பேசிக்கொண்டிருந்தபோது பர்வதம் எட்டிப் பார்த்தாள்.அவள் பின்னாடியே கனகாவும் வந்து கணவனை பின்புறம் பிடித்து நின்றாள். அங்குமிங்கும் கண்களை சுழற்றினாள். என்னையும் வெடுக்கென்ற ஒரு பார்வை பார்த்தாள். நானும் கொஞ்சம் மனசில் கிலிபிடித்து நின்றிருந்தேன்.
முருகேசனின் தோளைப் பின்புறமாக பிடித்தபடி அவனைத் தள்ளிக் கொண்டு இரயில் வண்டி மாதிரி போனாள். மீண்டும் கொஞ்சம் தூரம் போய் திரும்பி வந்து நின்று நறுக்கென்ரு அவன் தோளில் கடித்தாள். அவன் ஆவென கத்திக் கொண்டு நகர்ந்தான்.
‘இப்படிதாம்பா புள்ளைங்கள வெச்சுகிட்டு பயமா இருக்கு ‘
‘கொஞ்சம் ஜாக்கிரதயா இருங்க ‘
‘ஒரு தடவ சரியா கவனிக்காம உட்டுட்டோம். ஊரை விட்டே ஓடிட்டா. மறுநாள் நெனவு தெரிஞ்சு அவளாகவே பாண்டியிலிருந்து திரும்பி வந்தாள். யாரோ நெத்தியிலே கல்லால அடிச்சு தோ பாரு ‘
அவள் காண்பித்த இடத்தில் பெரிய வடு இருந்தது. அவள் கணவனை அடிக்கடி கடித்து காயப்படுத்தியதை அவன் அந்த நேரத்தில் சட்டையைக் கழட்டி காண்பித்ததும் கஷ்டமாகிப் போய்விட்டது.
‘இன்னொரு தடவ அப்பிடிதாம்பா, இரயிலேறி ராமேசுவரம் போயிட்டா ‘
‘ம் ‘
‘எங்கெல்லாம் செலவு பண்னி தேடி கடைசியில மனசுதெளிஞ்சு அவளாதான் வந்தாள் ‘
‘இப்படியே வெச்சுக்கிட்டிருந்தா எப்பிடி ‘
‘எவ்ளோ செலவு பண்ணி அழியறோம்; எங்களுக்கு விமோசனமே பொறக்கில ‘
‘மொறயா செஞ்சிங்கன்னா வழிபொறக்கும்….. ‘
‘காலத்துக்கும் நாங்க இதனால செத்துப் பொழைக்கிறோம்; தூங்கி எழுந்திரிக்கிறதே பெரிசு, பேசாம செத்துப் போலான்னு தோனுதுப்பா ‘
‘அப்படியெல்லாம் பேசாதீங்க ‘
‘அவளுக்கு புத்தி தெளிஞ்சு இப்படி நடந்தத சொன்னதும், அவ ஓன்னு அழுதுட்டு தூக்குமாட்டிக்க போறா ‘
எல்லாநேரமும் அவளுக்கு இப்படி இருப்பதில்லை. விட்டுவிட்டு வந்து போகும் போது நினைத்து கலங்குவாள். புருசன், புள்ளைக்குட்டி, பர்வதம் என்று அவள் வீட்டில் எல்லோருடைய பேச்சும் சர்வசாதாரணமாக மரணம் பற்றி முடிவாகவே தெரிந்தது. கண்களில் இடைவிடாத சோகம் அப்பியிருந்தது.
‘நீதான் படிச்ச புள்ளையாச்சே டாக்டரு வெலாசம் தாயேன் ‘
பர்வதத்தின் கேள்விக்கு பதில் தேடி ஊரின் பல தெரிந்த மருத்துவர்களை அணுகி ஒருவழியாய் மனநோய் மருத்துவரின் முகவரியைக் கொண்டுவந்து கொடுத்ததும் அவளுக்கு எங்கோ தொலைந்த உயிர் வந்து சேர்ந்த மாதிரி இருந்தது.
‘உனுக்கு புண்ணியம்பா ‘
பர்வதத்தின் குரலில் நம்பிக்கை இழையோடிக் கொண்டிருந்தது.
‘அப்படியெல்லாம் பேசாதீங்க; நடக்க வேண்டியதப் பாருங்க ‘
கை கால் ஊனமென்றால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். வேறு ஏதாவது ஊனமென்றால் கூட முடிந்த அளவு சமாளித்துக் கொள்ளலாம். மனசே ஊனமாகி ஒவ்வொருவரும் அலைவதைப் பார்ப்பதற்கு கஷ்டமாகிப் போனது.
நம்பிக்கையோடு பணத்தைப் புரட்டிக் கொண்டு அவர்கள் கிளம்புவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்றவர்கள். தொலைதூரம் வரை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டும் கையை அசைத்துக் கொண்டும் சென்றாள் கனகா.
பிள்ளைகள் இரண்டு அழுதுகொண்டே நின்றது. கடைசிக் குழந்தை பாலுக்காக எக்கி எக்கி கை நீட்டுவதை அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
தொலைதூரம் போய் கரும்புள்ளியாய் மறைந்தாள் கனகா.
- காதல் புனிதமென்று
- மூன்று பேர் – 3 (தொடர் நிலைச் செய்யு:ள்)
- துணை
- கருப்புச் செவ்வாய்
- புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள்
- முட்டை — ரவாப்பணியாரம்
- சிக்கன் பெப்பர் மசாலாக்குழம்பு
- உலகத்தின் வரலாறு
- வாடகை வாழ்க்கை…
- விடிவெள்ளி
- சேவல் கூவிய நாட்கள் – 3 (குறுநாவல்)
- சித்ர(தே)வதை
- எங்கிருந்தாலும் வாழ்க
- இயற்கையைச் சுகித்தல்
- டி.எஸ் எலியட்டும் கள்ளிக்காட்டுக் கனவுகளும்………(5)
- நட்பை நாகரீகமாக்குவோம்…
- மலேசியப்பாவாணர் ஐ. உலகனாதனின் கவிதைகள்
- இந்த வாரம் இப்படி — செப்டம்பர் 16, 2001
- உலக வர்த்தக மையம் மீது தாக்குதல்
- இன்னொரு மனசு.
- சலனம்
- பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு.