இந்து மதம் ஆங்கிலேயர்களின் புனைவு

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

பரிமளம்


ஆரிய திராவிடக் கருத்தாக்கங்கள் பொய்யாகப் புனைந்துருவாக்கப்பட்டவை; ஆதாரங்களற்றவை; ஆகவே நிராகரிக்கப்பட வேண்டியவை என்று சொல்பவர்கள் ஆங்கிலேயர்களின் வேறு சில புனைவுகளைப் பற்றி மெளனம் சாதிக்கின்றனர்; அல்லது அந்தப் புனைவுகளுக்காகப் போராடுகின்றனர் என்பது ஒரு முரண்.

(வேறொரு கோணத்தில் பார்த்தால் நாடு, தேசியக்கொடி, நட்டுப்பண், மொழி, தேசியம், சட்டம், கட்சி, பண்பாடு, காதல், பாசம், அன்பு போன்ற எல்லாமே, இந்தக் கட்டுரை உட்பட, புனைவுகளாகவும் ஊகங்களாகவுமே இருக்கின்றன. எல்லாமே கட்டமைக்கப்பட்டவை.)

வட அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்த பூர்வ குடி மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசும் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் அங்குச் சென்று அவர்களை வேட்டையாடிய ஐரோப்பியக் குடியேறிகளைப் பொருத்தவரை அவர்கள் எல்லாரும் ஒன்றுதான். நாகரிகமற்ற விலங்குகள்; செவ்வியந்தியர்கள்.

செவ்விந்தியர்கள் என்று ஓர் இனமில்லை. ஆனால் கெளபாய் படங்களில் மூழ்கிய உலகம் அவர்களைச் செவ்விந்தியர்கள் என்றே அழைத்தது. அமெரிக்கப் பூர்வகுடிகள் இந்தப் பெயரையே வெறுத்தனர். தென்னமெரிக்காவின் பூர்வகுடிகள் இன்றுவரை ‘இந்தியர்கள்’ என்றே அழைக்கப்படுகின்றனர்.

ஆப்பிரிக்கக் கண்டத்திலும் இதே கதைதான். பல்வேறு மொழிபேசும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ‘நீக்ரோ’ என்னும் பொதுப்பெயரால் அழைக்கப்பட்டனர். இன்று கறுப்பர்களுக்கு ‘நீக்ரோ’ என்னும் சொல் ஒரு அவச்சொல், தலித்துகளுக்குப் ‘பறையன்’ என்னும் சொல்லைப்போல.

வடதுருவத்துப் பூர்வகுடிகளுக்கு வெள்ளையர்கள் சூட்டிய பெயர் ‘எஸ்கிமோ’. வழக்கம்போல இதுவும் (‘பச்சை மாமிசம் உண்பவர்கள்’ என்னும் பொருளுடைய) ஒரு இழிசொல். வடதுருவவாசிகள் தங்கள் சொந்தப் பெயரான Inuit என்ற பெயரால் அழைக்கப்படுவதையே விரும்புகின்றனர்.

ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பூர்வகுடிகள் Aborigines என்று அழைக்கப்பட்டு வேட்டையாடப்பட்டனர். இவர்களது இயற்பெயரும் வெளியுலகத்துக்கு நீண்டகாலம் தெரியாமலேயே இருந்தது.

இதே நிலைதான் இந்தியாவிலும் ஏற்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்திலிருந்த மக்கள் பல்வேறு மொழிபேசும், பல்வேறு பண்பாட்டுப் பின்னணிகளை உடையவர்கள் என்ற விவரங்களை அறியாத, அறிந்தும் அலட்சியம் செய்த வெள்ளையர்கள் முஸ்லீம், கிறித்துவர்கள், இன்னும் சில மதங்களைத் தவிர்த்த மற்றவர்களையெல்லாம் ‘இந்துக்கள்’ என்னும் பொதுப்பெயரிட்டு அழைத்தனர். (பல ஊர்ப்பெயர்களைத் தங்கள் விருப்பத்துக்கேற்ப ஆங்கிலப்படுத்திக்கொண்டதையும் இங்கே இணைத்துப் பார்க்கலாம்)

இந்துமதம் என்பது ஆங்கிலேயர்களின் புனைவேயன்றி வேறில்லை.

***

ஆங்கிலேயர்கள் பெயர் சூட்டுவதற்கு முன்னர் இந்தியாவில் ‘இந்துக்கள்’ என்று எவருமிலர். தமிழில் ‘இந்து’ என்னும் சொல்லே இருந்ததில்லை. எனவே தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்பது தெளிவு. (இன்றும் கூட பலர் ‘ஹிந்து’ என்று எழுதுவது இதற்கு மேலும் அரண் சேர்க்கிறது). தமிழகத்தில் சமணம், புத்தம், சாக்கியம் போன்ற மதங்களும் பின்னர் சைவம், வைணவம் (இவற்றிலும் சில உட்பிரிவுகள்) போன்ற மதங்களும் இருந்தன. இந்த மதங்களுக்கிடையே பெரும் பூசல்கள் நிகழ்ந்துள்ளன. அடியார்களும் அரசர்களும் மதம் மாறியுள்ளனர். பிற்காலச் சோழர் காலத்தில் சைவம் தழைத்தது.

***

செவ்விந்தியர், நீக்ரோ, எஸ்கிமோ போன்ற சொற்கள் அவற்றைக் குறிக்கும் மக்களால் இழிசொற்களாகக் கருதப்பட, இந்தியாவில் ‘இந்து’ என்னும் சொல் அவ்வாறு கருதப்படாமைக்குக் காரணமும் இருக்கிறது.

இசுலாமிய, கிறித்துவ மதங்களைப் போல் சைவ, வைணவ மதங்கள் இறுக்கமான நிறுவனமயடையவில்லை. பற்பலக் கடவுளரும் பற்பலச் சடங்குகளும் மக்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தனர். மேலிருந்து எவையும் திணிக்கப்படவில்லை. விருப்பப்பட்டவர்களின் மதங்களாக இருந்தனவேயன்றி மக்களனைவரையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இம்மதங்கள் இறங்கவில்லை. இந்தியாவின் சாதியமைப்பு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே பெரும்பாலான மக்கள் தம் மரபுப்படி வாழ்ந்தனர்; மதப்படியல்ல. மதமின்றி இருந்தவர்களுக்கு ‘இந்து’ என்னும் சொல் ஒரு அடையாளத்தைக் கொடுக்கவே அதை ஏற்றுக்கொண்டனர். எனவே செவ்விந்தியர், நீக்ரோ, எஸ்கிமோ போன்ற சொற்கள் அவற்றைக் குறிக்கும் மக்களால் இழிசொற்களாகக் கருதப்பட, இந்தியாவில் ‘இந்து’ என்னும் சொல் ஏற்புடைய சொல்லாயிற்று. இதில் தவறேதும் இல்லை.

***

தமிழர், தமிழ்நாடு என்பனவும் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு ஏற்பட்ட புனைவுகளே. இந்தப் புனைவுகளை ஏற்பவர்கள் இந்துப் புனைவை மறுப்பவர்களாகவும், இந்துப் புனைவை ஏற்பவர்கள் இந்தப் புனைவுகளை மறுப்பவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன ? ஒன்றே ஒன்றுதான். அது தமிழ்மொழி.

தமிழை நீசமொழியென்றும், கோயிலுக்குள் நுழையத் தகுதியற்றது என்றும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது தகாதது என்றும் சொல்லிக்கொண்டிருக்கும் வரையில் இந்துக்கள் என்னும் அடையாளத்தின் கீழ்த் தமிழர்களை ஒன்றிணைப்பது சிரமம்.

தமிழைக் காக்கும் போராட்டம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஒரு பக்கம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. தமிழகத்தின் அரசியல் தமிழைவிட்டு விலக இயலாது. ஆனால் தமிழர்கள் தமிழ் உணர்வு மிக்கவர்களுமல்லர். அதோடு தமிழின் பேரைச்சொல்லிக் கட்சி வளர்த்தவர்களின் செயற்பாடுகளும் ஏமாற்றத்தையே அளித்தன. உலகமயமாதலும் இப்போது சேர்ந்துகொண்டது. ஜப்பான். பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளைப்போல் தமிழுக்குப் பொருளாதாரப் பலமும் இல்லை. சாதி உணர்வுகளும் அதிகரித்து வருகின்றன. எனவே தமிழர்கள் என்னும் அடையாளத்தின் கீழ்த் தமிழர்களை ஒன்றிணைப்பதும் இனி சிரமமே.

***

சில பின் குறிப்புகள்

***

இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் தோன்றிய மொழியும் சமய நம்பிக்கைகளும் தென்பகுதியில் பரவி ஆதிக்கம் செலுத்தினால் அது மூளைச்சலவையோ அல்லது ஆக்கிரமிப்போ அல்லது ஆதிக்கமோ அல்லது பண்பாட்டு அழிப்போ என்று பொருளாகாது. மாறாக அது மற்ற மொழிகளைச் செம்மைப்படுத்துவது, மக்களைப் பண்படுத்துவது என்று பொருளாகும். ஆனால் உலகின் வேறு பகுதிகளிலிருந்து மதங்களோ மொழிகளோ இந்தப் பகுதிக்குள் நுழைந்து பரவினால் உடனே அது ஆக்கிரமிப்பு என்றும் பண்பாட்டு அழிப்பு என்றும் இனங்காணப்படுவது நல்ல வேடிக்கை. சாம்ஸ்கி வேறொரு சூழ்நிலைக்குச் சொல்வதுபோல், பேட்டை ரவுடிக்கும், பெரிய ரவுடிக்கும் இடையே ஏற்படும் மோதல் இது.

***

பொருளாதாரக் காரணங்களுக்காக இந்தியைப் படிக்கவேண்டும் என்று வற்புறுத்துவதும் பலர் தாமாகவே விரும்பிப் படிப்பதும் மெத்தச் சரி. ஆனால் அதே பொருளாதாரக் காரணங்களுக்காக ஒரு மதத்துக்கு மாறுங்கள் என்று வற்புறுத்துவதும் பலர் தாமாகவே விரும்பி மாறுவதும் மூளைச்சலவை என்னும் பட்டியலில் சேர்ந்துவிடும்.

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்