கோபால் ராஜாராம்
இந்த வருடத்திய சரஸ்வதி சம்மான் விருது இந்திரா பார்த்தசாரதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திரா பார்த்தசாரதி 25ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் சிறப்பாக எழுதிவரும் நாவலாசிரியர், நாடகாசிரியர்.
இந்தப் பரிசு ‘ராமனுஜர் ‘ நாடகத்துக்காக வழங்கப்பட்டிருக்கிறது.
தில்லி வாழ் தமிழ்மக்களும் வைணவமக்களுமாய் உலவும் அவருடைய படைப்புகளில் குறிப்பிடத்தக்கதாய் தந்திர பூமியும்,சுதந்திர பூமியும் நாடகங்களில் ஒளரங்கசீப்பும், நந்தன் கதையும் குறிப்பிடப்பட வேண்டும்.
தமிழ் எழுத்தை நவீனப்படுத்தியது சுஜாதாவின் முக்கிய பங்களிப்பு என்றால், நவீன வாழ்க்கையைச் சித்தரித்தது இந்திராபார்த்த சாரதியின் பங்களிப்பு. காலவெள்ளம் தொடங்கி ராமனுஜர் வரையில் இரண்டு போக்குகள் அவரிடம் காணப் படுகின்றன. ஸ்ரீரங்கம் வைணவர்களின் வாழ்க்கைக் கீற்றுகள் -சுயசரிதைத்தன்மை தோய்ந்த வேர்ப்பற்று மற்றும் முதல் நாவலான காலவெள்ளம் போன்ற படைப்புளால் வெளியாகியுள்ளன. அவருடைய யதார்த்தவாதப்படைப்புகள் என்று இவற்றைத்தான் சொல்ல வேண்டும். இவற்றிலும் வைணவர்களின் அன்றாட சடங்குகளை விட்டு விலகி அவர்களின் பலம் பலவீனம் இரண்டையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இரண்டாவது வகைப் படைப்புகளில் வெளிப்படுவது நகர் சார்ந்தவர்களின் குமைச்சல்கள். அவருடைய கதாபாத்திரங்கள் எல்லாமே உளவியல் தளத்தில் பரிசோதனைக்குள்ளாவதால் நடப்பியல் யதார்த்தம் சார்ந்த தளத்திலிருந்து சற்று விலகியவர்களாகத் தோன்றுகிறார்கள். தந்திரபூமி , மற்றும் சுதந்திர பூமியின் பேச்சு உரையாடல்மொழியை, கதாபாத்திரங்களின் அன்றாடப்பேச்சு மீறிய நாவலாசிரியரின் புத்திசாலித்தனம் சார்ந்த வெளிப்பாடாகவும் காணவேண்டும். இது போலித்தனம் கொண்டு விடக்கூடிய அபாயம் உள்ளது. ஆனால் இ.பாவின் பாத்திரத் தேர்வுகளினால்,பெரும்பாலும் இந்த அணுகல் வெற்றி பெறுகிறது.
அவருடைய மனவியல் சார்ந்த பாத்திரப்படைப்புகள் இன்னமும் கூட தமிழ் விமர்சகர்களால் சரியாக உள் வாங்கிக்கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். யதார்த்தம் சார்ந்த கதைகளுக்கே பழகிப் போன மனப்பழக்கத்தால், வெறும் கதைப் போக்கில் லயிப்பது தாண்டிய பாத்திரச்சித்தரிப்பு பலருக்குப் பிடிப்பது இல்லை. குருதிப்புனல் நாவலில் வெறும் வர்க்கப் போராட்டமாய் அல்லாமல் வேறு காரணங்களும் கீழ்வெண்மணிக்கொலைகளுக்குக் காரணமாய் இருக்கலாம் என்று சொன்னது பலருக்கு உவப்பாயில்லை.
அவருடைய நாடகங்களில் ‘மழை ‘, ‘போர்வைபோர்த்திய உடல்கள் ‘ அவ்வளவாய் வெற்றி பெற்றவை என்று சொல்லமுடியாது. ‘மழை ‘யை,ஜெயகாந்தனின் ‘ஆடும்நாற்காலிகள் ஆடுகின்றன ‘வுடன் ஒப்பிட்டால், ஜெயகாந்தனின் வலிமையான இலக்கியவெற்றி புலப்படும். இரண்டு நாடகங்களிலுமே, தம் உறவுகளை மீறி வெளிவரமுடியாத சிறைப்பட்ட நபர்கள் வெளிப்படுகிறார்கள். ‘ஆடும்நாற்காலிகள் ‘-இல் உள்ள அசல்தன்மை இ.பாவின் ‘மழை ‘யில் இல்லை.
நாடகங்களைப் பொறுத்தவரையில் அவருடைய ‘ஒளரங்கசீப் ‘ முக்கியமான நாடகம். கிரீஷ் கார்னாடின் ‘துக்ளக் ‘போன்ற பரந்த அங்கீகாரத்தை இந்த நாடகம் பெறாதது ஒரு துரதிர்ஷ்டம். அரசியலில்,பரந்த மனப்பான்மை, ஜனநாயகத்தன்மை இவை ஒரு பக்கமும், குறுகிய பார்வை, வரட்டு லட்சியவாதம் மறுபக்கமுமாக நடக்கும் போராட்டம் இன்றும் பொருந்தக்கூடியதே.
‘நந்தன் கதை ‘ இன்னொரு மிகச் சிறப்பான நாடகம். பக்தியே அழகியலின் இன்னொரு வடிவம்தான் என்பதாகவும், கோயில்பிரவேசமறுப்பு என்பது ஒரு கலாச்சாரரீதியானபுத்துயிர்ப்பை ஒருவகுப்பினருக்கு மறுக்கிற ஒருசெயல் என்பதாகவும் கொண்டுள்ள வெளிப்பாடு கருதத்தக்க ஒன்று. அதன் இயல்பு மீறிய கவிதைநடையிலான உரையாடல்கள், இந்தக் கதையின் மையத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. நந்தனின் தேடல் வெறுமே சிதம்பரம் சென்று சாமிதரிசனம் என்ற ஆசை மட்டுமல்ல, ஒரு சுதந்திரவேட்கையின் வெளிப்பாடு ஆகும். தன் எல்லைகளைத்தாண்டி சிறகுகளை விரிக்கிற ஒரு மானுடத்தாபம் அது. கறுப்பர் இலக்கியங்களில் வெளிப்படும் உக்கிரமான விடுதலை வேட்கை போன்றது.
சரஸ்வதி சம்மான் படைப்பாளிகள் அவரவர் மொழியைத் தாண்டி மற்ற மொழிகளில் தெரியவேண்டுவது அவசியம்.
*** கோபால் ராஜாராம், 28 Feb, 2000
திண்ணை
|