இந்தியாவின் தாமஸ் பெயின்: பெரியாரின் அறிவியக்கம்

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

கோபால் ராஜாராம்


பெரியாரின் இயக்கம் அறிவியக்கம் அல்ல என்ற ஜெயமோகனின் கருத்து மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு அவருக்குச் சொல்ல பதில்கள் ஏதும் இல்லை.

ஜெயமோகன் ஒரு புறம் ‘விஷ்ணுபுரம் மீட்க விரும்பும் தரப்பு எது ? அது அதிகமாகப் பேசுவது பெளத்தம் மற்றும் லோகாயத மரபுகளைப் பற்றி ‘ என்கிறார். இரண்டு பாரா தள்ளி ‘ஹெகல் இன்றி எப்படி மார்க்ஸியம் இல்லையோ அப்படியே சங்கரர் இல்லாமல் இந்திய மறுமலர்ச்சி சிந்தனைகளும் இல்லை. ஹெகல் குறித்து பேசும் நாம் சங்கரர் குறித்துப் பேசினால் அது பழமைவாதம் என்கிறோம் ‘ என்ற ஈ எம் எஸ்ஸின் கூற்றை இணக்கத்துடன் மேற்கோள் காட்டுகிறார். இது தான் எனக்குப் புரியவில்லை.

உண்மையில் பெளத்தம், சமணத்திலிருந்து மீட்டெடுத்து சனாதன தர்மத்தை நிலைநாட்டவும், சமூகச் செயல்பாடுகள் கொண்ட பெளத்தத்திலிருந்து சமூகத்தை மீண்டும் தூய தத்துவமரபென ஒரு புறமும், சாதியத்தை மறுவார்ப்புச் செய்ததென இன்னொரு புறமும் இயங்கிய சங்கரரின் தத்துவம் எப்படிப் பழமைவாதம் இல்லாமல் போகும் ? அத்வைதம் என்ற உயர்வான தத்துவத்தை பாவித்து எல்லா உயிர்களும் சமம் என்று சொன்னவன், சமூக தளத்தில் சாதியம் போன்ற ஒன்றைத் துரும்பு கூட அசைக்காதது மட்டுமல்ல, சாதியத்திற்கு எதிரான மதச் சிந்தனைகளை வெற்றி கொண்டு இந்தியாவை அறுநூறு ஆண்டுகள் பின்தள்ளிச் செல்ல வைத்ததென்ன ? சங்கரரின் தத்துவமும், பெளத்தரின் தத்துவமும் இரு வேறு துருவங்கள் இல்லையா ? பெளத்தத்தை மீட்க விரும்புகிற ஒருவர் எப்படி பெரியாரின் சிந்தனைகளை அறிவியக்கம் இல்லையென்று சொல்ல முடியும் ?

பெரியாரின் இயக்கம் அறிவியக்கம் அல்ல என்றால், அறிவியக்கம் என்பதற்கு என்ன விளக்கம் என்று ஜெயமோகன் சொல்ல வேண்டும். பெரியாரின் இயக்கம் சாக்ரடாஸ் முதல் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் வரை தொட்டுச் சென்றிருக்கிறது என்று , நான் சொன்னது அங்கங்கே ஓரிரு வரிகளை தெளித்துச் சென்றது அல்ல. பிரக்ஞை பூர்வமான, அறிவின் அடிப்படையிலான மனிதப் பகுத்தறிவை அழுத்தத்துடன் கைக்கொள்கிற ஓர் இயக்கம் அது. மனிதனின் சமத்துவம் பற்றிய அழியாத நம்பிக்கைகொண்ட ஓர் இயக்கம் அது. நால்வருணத்தை எல்லோரும் பூசி மெழுகி அதன் இயல்புகளுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது , பெரியார் ஒருவர் தான் வருணாசிரம தர்மத்தின் குப்பையை வீசியெறிந்தால் தான் இந்திய சமூகம் மறுவாழ்வு பெற முடியும் என்று சொன்னவர். பெரியாரின் இயக்கம் அறிவியக்கம் இல்லையென்றால், தாமஸ் பெய்ன் தொடங்கி, ரஸ்ஸல் வரையில், வால்டேர், ரூஸ்ஸோ தொடங்கி சார்த்ரே வரையில் எழுந்த தத்துவவாதிகள் எல்லோருமே தத்துவவாதிகள் இல்லையென்று ஆகிவிடும். அறிவுவாதம்(Rationalism), காட்சிபிரமாண வாதம்( Empiricism), Logical Positivism , பொருள்முதல்வாதம் (Materialism) எல்லாம் தத்துவப் போக்குகள் இல்லையென்று ஆகிவிடும். இப்படிப்பட்ட கருத்தாக்கங்களின் அழுத்தமான சாயல்கள் , தமிழ்நாட்டின் சமூகச் சிந்தனையுடன் இணைந்து தான் பெரியாரின் இயக்கத்தில் காணக்கிடைக்கின்றது. அப்படியொரு தனிப்பெயரிட்டு அழைக்கச் சந்தர்ப்பம் இல்லையென்பதைத்தவிர, பெரியாரின் இயக்கம் அறிவியக்கம் என்பதில் யாருக்கும் ஐயம் எழ வேண்டிய அவசியமில்லை – ஜெயமோகன் போன்றோர் தவிர.

பெரியாரைத் தூஷிப்பவர்கள் என்னென்ன வார்த்தைகளை உபயோகித்து திட்டுகிறார்களோ அதைவிடவும் மோசமாக மதவாதிகளாலும், குறுகிய தேசியப்பார்வை கொண்டவர்களாலும் தாமஸ் பெயினும், ரஸ்ஸலும் திட்டப் பட்டார்கள். ரஸ்ஸல் நியூயார்க் நகரப் பல்கலைக் கழகத்தில் வேலை பார்க்க வருகிற வாய்ப்பு இருந்தபோது அவர் மத விரோதி , ஒழுக்கம் கெட்டவர் என்று வசை பொழிந்தார்கள்.

உலகச் சிந்தனை மரபில் எந்த அறிவுஜீவியுடன் பெரியாரை ஒப்பிட முடியும் என்று பார்த்தால், அமெரிக்கச் சுதந்திரச் சிந்தனையின் தந்தை என்று போற்றப் படும் தாமஸ் பெயினுடன் தான் ஒப்பிட வேண்டும். இப்படி ஒப்பிட்டுத் தான் பெரியாரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளல்ல. இப்படி ஒப்பீட்டின் மூலம் , பெரியார் சமகாலச் சிந்தனையிலும் சமூகப் பரப்பிலும் கொண்டுள்ள வரலாற்று இடம் பற்றித் தொடர்ந்து சிந்திக்க உதவலாம் என்பது இதன் பொருள்.

தாமஸ் பெயினுக்கு முன்பு பைபிள், முதல் ஆகமம், குரான் போன்றவற்றை மனிதர் உருவாக்கிய பிரதிகள் தாம் என்ற கருதுகோளோடு அணுகியவர்கள் யாருமே இல்லை என்று சொல்லி விடலாம். தாமஸ் பெயின் நாத்திகர் அல்ல. கடவுள் நம்பிக்கை கொண்டவர் தான். ‘யூத மதம், சிருஸ்தவ, துருக்கிய, ப்ரொடெஸ்டண்ட் மதங்கள் எதுவும் நான் இணையக் குடிய சர்ச் அல்ல . என் மனமே என் சர்ச் ‘ என்பது அவர் வாக்கு. ‘எல்லா சர்ச்சுகளுமே மக்களை பயமுறுத்தவும் அடிமைப்படுத்தவும் , அதிகாரமும் பணமும் குவிப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட மனித யத்தனங்கள் தாம். இதற்கு மாறான நம்பிக்கை கொண்டிருக்க உங்களுக்கு உரிமை உண்டு . ஆனால் நம்பிக்கை இல்லாத விஷயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் போல் நடிக்காதீர்கள். இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடு , மனதறிந்து பொய்யில் வாழும் ஒரு நிலையை சமூகத்தில் உருவாக்கி விட்டது. தன் மனக்கற்பை இழந்த ஒரு மனிதன் , இதன் தொடர்ச்சியாக மற்ற குற்றங்களை இழைக்கவும் தயார் ஆகி விடுகிறான். பணச்சம்பாத்தியத்திற்காக மதகுருவாக ஆகி , அந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள மேலும் பொய்கள் பேச ஆரம்பிக்கிறான். ஒழுக்கத்திற்கு இதை விட ஏதும் கேடு இருக்க முடியுமா ? ‘ என்கிறார் அவர்.

‘அரசும் , சர்ச்சும் ஒன்றுடன் ஒன்று கூடிக் குலவியிருக்கும் நிலை தான் இது பற்றிய விவாதத்தைத் தவிர்த்து, விவாதித்தாலே தண்டனை என்று பயமுறுத்தி வந்திருக்கிறது.இந்த நிலை மாறவேண்டும். ‘ என்பதும் அவர் கூற்று.

‘ஒவ்வொரு மதமும் கடவுளிடமிருந்து பிரத்தியேக செய்தி கிடைத்தது அதுவும் ஒரு குறிப்பிட்ட ஆளுக்கு , என்று பம்மாத்து செய்து தான் நிறுவப்பட்டிருக்கிறது. யூதர்களுக்கு மோசஸ், கிருஸ்தவர்களுக்கு ஏசு, முஸ்லீம்களுக்கு முகம்மது. கடவுளின் கூற்று சமமாய் எல்லா மனிதருக்கும் சென்றடையாது போல. ‘ என்கிறார் அவர்.

முதன் முதலில் செமிட்டிக் மதங்களான இஸ்லாம், கிருஸ்தவம், யூத மதம் பற்றி சற்றுக்கூட சமரசம் இல்லாமல் விமர்சித்தவர் தாமஸ் பெயின். அடிமைத்தனத்திற்கு எதிராக எழுந்த மிக முக்கியமான குரல்களில் ஒன்று அவருடையது. ‘அறிவு யுகம் ‘(The age of Reason) என்ற அவருடைய புத்தகத்தில் அவர் இந்த மூன்று மதங்களின் மூட நம்பிக்கைகளை மிகத் தீவிரமாய் எதிர் கொள்கிறார். இதன் பொருள் அவருக்குப் பின் அமெரிக்க சமூகம் மத நம்பிக்கையை இழந்து விட்டது என்பதல்ல தான். ஆனால் மாற்றுக் கருத்துகளின் பிரவாகமே ஒரு சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கையை மிக ஆழமாய் விதைக்க அவருடைய கருத்துகள் காரணமாயின. இன்றும் கூட அமெரிக்க அறிவுப்புரட்சியின் தந்தையான தாமஸ் பெயின் , மதவாதிகளால் திட்டத்தான் படுகிறார். அமெரிக்க அரசு மிக மூர்க்கமாக அரசு-சர்ச் பிரிவினையைக் கைக்கொண்டதும், சமரசமற்ற பேச்சுரிமையைக் கைக்கொண்டதும் தாமஸ் பெயின் விமர்சனங்களால் தான் என்று சொல்லலாம். மதம் தரும் அவலத்தை எந்த சமரசமும் இன்றி எதிர்கொண்ட தாமஸ் பெயின் பணியும், பெரியாரின் பணியும் இந்த விதத்தில் ஒப்பிடக் கூடியது. துரதிர்ஷ்டவசமாக பெரியாரின் சீடர்கள் , தமிழ்ப்பண்பாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று பிராமணர்களும் நிழல் யுத்தம் நடத்திகொண்டும், அரசியல் வாதிகளுடன் கொஞ்சிக்குலவிக் கொண்டும் தம்முடைய சமூகக்கடமையை மறந்து போனார்கள்.

அறிவியக்கம் என்பது சமூகப் புண்ணைக்காட்டும் கண்ணாடியாய்த் தான் செயல்படமுடியும். வெறும் தத்துவ விசாரணையோ, வித்வத்சதஸோ, பல்கலைக் கழக வளாகங்களோ அல்ல பெரியாரின் தளம். அவருடைய தளம் சமூகம், அதில் ஏற்றத்தாழ்வுகள். அந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒரு தத்துவ அடிப்படையை அளித்த பூசாரிகள். அந்தப் பூசாரிகளுக்கு அனுசரணையாய் எழுந்த அரசாட்சி இவைதான். இந்த ஏற்றத்தாழ்வின் குறியீடுகளாய்த்தான் அவர் இலக்கியம் , புராணம் , கலை , கலாசாரச் செயல்பாடுகள் இவற்றைக் கண்டார். அவர் கலை இலக்கிய விமர்சகர் அல்ல. சமூக விமர்சகர். ராமாயணத்தின் கலை அழகையல்ல அவர் காண விரும்பியது. அதில் நுட்பமாகவும், பல சமயங்களில் வெளிப்படையாகவும் ஒளிந்திருக்கும் அறம்- அறமின்மை பற்றிய பார்வை. அடிப்படையாய் சாதியத்தின் அறவொழுக்கம் தான் அவர் பேசியது. ராமன் கடவுள் என்று சொல்லப்பட்டது . தாமஸ் பெயின் மோசஸ்,ஏசு பற்றி எழுப்பிய கேள்விகள் போன்றே, பெரியார், ராமனின் கடவுள் தன்மைக்கு இந்த நடவடிக்கைகள் பொருத்தமில்லையே என்று கேள்வி எழுப்புகிறார். ஆனால் உடனே சனாதனம், ராமாயணத்தை இலக்கியமாய்ப் பார்க்க வேண்டும் என்று குரல் கொடுக்கும். ராமாயணம் இலக்கியமாய்ச் சிறப்புக் கொண்டிராத பகுதிகளைச் சுட்டிக் காட்டினால், பதில் மெளனம். அந்தக் கடுமையான கேள்விகளை எதிர்கொள்ளாமல் ஜெயமோகன் போன்றோர் , அவர் மெருகு பூசிய பாஷையில் பேசவில்லை என்று அவர் மீது வெறுப்பைக் கொட்டுகிறார்கள். ஆனால் இந்த நாசூக்கு பற்றிய இவர்களின் எதிர்பார்ப்பு பெரியாரிடம் மட்டும் தான். இந்த எதிர்பார்ப்பு சாதியத்தின் மீதும், தீண்டாமை மீதும் , பிராமணீயம் மீதும் இவரைப் போன்றவர்களுக்கு இல்லை. பிராமணர்களைத் திட்டுகிறார். பிராமணியத்தைத்தான் அவர் எதிர்த்திருக்க வேண்டும், பிராமணர்களை தூஷித்தது அவர் செய்த தவறு என்று சொல்ல்ப்படும் வாதமும் சாரமற்ற வாதமே. பிராமணர்கள் என்றாவது நாங்கள் சூத்திரத்துவத்தைத் தான் தீண்டாமைக்கு ஆட்படுத்தியிருக்கிறோம், சூத்திரர்களை அல்ல என்று சொல்லியிருக்கிறார்களா ? 2000 வருடங்களாய் பிற சாதியினரைத் தூஷித்து வந்த பிராமணர்கள் ஒரு 50 வருடம் அப்படிப்பட்ட தூஷணைக்கு ஆளானால் என்ன குடி முழுகி விடப்போகிறது ?

பெரியார் இப்போது இருக்கிற சமூக அமைப்பிற்குள் ஒரு தீர்வைக் கண்டுவிடலாம் என்று சொல்லியிருந்தால் அவர் இன்னொரு நாராயண குருவாக, காந்தியாக ஆகி ஜெயமோகன் போன்றோரால் மெச்சப்பட்டிருப்பார். அந்தப் பொய்யை இந்திய சமூகம் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக முயன்று தான் வந்திருக்கிறது. வள்ளலார், பசவண்ணர், விவேகானந்தர் என்று எத்தனை பேர் முயன்றார்கள் ? என்ன ஆயிற்று ? சனாதனம் இவர்களை அனுமதித்தா ? முதலில் அவர்களைப் பேசவே அனுமதிக்கவில்லை. பிறகு போனால் போகிறது என்று பேச மட்டும் அனுமதித்தது. வசனங்களிலும், அருட்பாக்களிலும் சொல்லில் சிறையுண்டு கிடக்கட்டும் உம் கருத்துகள் என்று நெஞ்சுருகப் பாடிவிட்டு, தன் சமூக வழிமுறைகளை இம்மி கூட மாற்றிக்கொள்ளவில்லை.

கேரளாவிலும், வங்காளத்திலும் என்ன சாதியம் ஒழிந்து விட்டதா ? சாதிக்கட்சிகள் தமிழ் நாட்டில் தோன்றியது கடந்த பத்தாண்டுகளுக்குள் தான் . இதன் அடிப்படைக் காரணமாய் அதிகாரப்பகிர்வில் கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா. சோனியா என்ற ஓரிருவரின் சர்வாதிகாரம் நிலவி வருவது ஒரு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன். ஆனால்

ஜெயமோகன் வியந்து ஏற்றம் கற்பிக்கும் கேரளாவில், அறிவியக்க பூமியான கேரளாவில் , சாதிக் கட்சிகள் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சி வருகின்றன. காந்தியின் காங்கிரஸ் ஆண்ட பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மானிலங்களைக் காட்டிலும் , அறிவியக்கம் பூத்துக் குலுங்கியதாய் ஜெயமோகன் கருதும் கேரளாவைக் காட்டிலும் , சமூக ஒருங்கிணைவில் , பொருளாதாரக் குறியீடுகளில் திராவிடக் கட்சிகள் ஆண்ட தமிழ் நாடு மிகவும் முன்னேறித்தான் இருக்கிறது என்ற உண்மையை ஒப்புக் கொள்ளவும் இவர்களைப் போன்றவர்களுக்குத் தயக்கம். பொருளாதார நோக்கில் பார்த்தலும், கேரளாவின் மக்கள் பாவம், அயல்நாட்டிலும் அயல் மானிலங்களிலும் அரும்பாடுபட்டு ‘அறிவியக்க ‘ தேசத்தைக் காப்பாற்றியிருக்காவிட்டால், கேரளம் எப்போதோ திவாலாகியிக்கும் என்பதும் உண்மை.

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் ‘ என்ற வகையில் பார்த்தால், இப்போதைய திக/திமுக/அதிமுக-வினரை வைத்து பெரியாரை மதிப்பிடுவது மிகுந்த ஆபத்தாய் முடியும். பெரியாரின் வழியில் சென்றிருந்தால் தமிழ்நாடு அறிவியலைப் போற்றுகிற ஒரு நாடாக ஆகியிருக்க வேண்டும். ஆனால் பெரியார் வழியினர் என்று சொல்லிக் கொண்டவர்களுக்கும் தொலைநோக்கு இல்லாமல் அன்றாட அரசியல் தில்லுமுல்லுகளிலும், சிறுமைச் செயல்களிலும் பொழுதைக் கழித்துவிட்டார்கள்.

பெரியார் ஒரு விதத்தில் விரும்பியது ஒரு utopia – கனவுலகம். அறிவுபூர்வமான மக்கள், மூட நம்பிக்கையற்ற, மனிதனின் சமத்துவத்தில், பெண் விடுதலையில் முழு நம்பிக்கை கொண்ட ஒரு சமூகம். அறிவின் சார்பினை மட்டுமே கைக்கொண்டு இயங்குகிற ஒரு சமூகம். இதற்கு முழுக்க முழுக்க கடந்தகாலத்திலிருந்து துண்டித்துக் கொண்ட ஒரு நவீன உலகை அவர் கனவு கொண்டார். A total and complete break with the past. கடந்தகாலத்தின் சுமையற்ற , முன்னால் மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு சமூகம் தான் அவர் கனவு. அதனால் தான் அவர் எல்லாப் புராணங்களையும், இலக்கியம் என்ற பெயரில் சாதியம் கற்பிக்கும் பதிவுகளையும் எடுத்துத் தூக்கியெறிந்து விட வேண்டும் என்றார். அவர் பார்வையில் நின்று இதைப் பார்க்கவில்லையென்றால் கலை இலக்கியங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிடச் சொல்கிறாரே என்று தான் தோன்றும். இந்த நோக்கம் நடைமுறைச் சாத்தியம் கொண்டதா இல்லையா என்பது வேறு தளத்தில் கேட்க வேண்டியது. நடைமுறைச் சாத்தியத்தை மட்டுமே ஓர் இயக்கம் கருத்தில் கொண்டு , அறிவார்ந்த்த விவாதங்களில் சமரசம் செய்து கொண்டால், எந்த அளவு பலன்கள் கிடைக்குமோ அதையும் விடக் குறைவாய்த் தான் எய்த முடியும்.

பெரியார் போன்ற ஒருவரைத் தமக்கு நடுவில் ஏற்றுக் கொள்ள முடிந்த , தம்முடைய மனங்களையும் காதுகளையும் திறந்து வைத்திருக்கத் தயாராய் இருந்த ஒரு சமூகம் தமிழ் நாடு என்பதில் நாம் பெருமைப்பட வேண்டும். அதே சமயம் முழுமையாகப் பெரியாரிடம் சரண் அடைய முடியாதபடி, வரலாறு மக்களைப் பின்னிப் பிணைத்தும் வைத்திருக்கிறது. இது ஒரு சமூகத்தின் இயங்கியல் பார்வையில் புரிந்து கொள்ளக் கூடியதே.

மூவாயிரம் ஆண்டு இந்தியாவின் வரலாற்றில் பெரியாரை ஒப்பிடக் கூடுமானால் புத்தர் ஒருவருடன் தான் ஒப்பிட முடியும். கடந்த காலத்திலிருந்து முற்றுமாகத் துண்டித்துக் கொள்வது தான் வைதீகக் கொடுமைகள் ஒழிவதற்கான வழி என்பதில் பெரியாரும் புத்தரும் ஒரே மாதிரி சிந்தனையைக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் மீது இப்போது வீசப்படும் எல்லா அவதூறுகளும் புத்தர் மீதும் வீசப்பட்டதுதான். அதனால் ஜெயமோகன் வீசும் அவதூறுகளைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை.

***********

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்