இணைய இதழா? அச்சுப் பதிப்பா? எது சிறந்தது?

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

சந்திரவதனா செல்வகுமாரன்


ஒரு இதழ் அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாக வருவதா இன்றைய காலகட்டத்தில் சிறந்தது? இப்பிரச்சனை உலகளாவிக் கொண்டிருக்கிறது. இணைய இதழ்களின் வரவில் இன்றைய ஜேர்மனியப் பத்திரிகைகள் கூட ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிலையில் எமது சஞ்சிகைள் பத்திரிகைளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது?

இனி வரும் காலங்களில் இணைய இதழா? அச்சுப் பதிப்பா? எது சிறந்தது?

இணையப் பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லோரும் கணினிக்குள் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பதிப்புகள் மீதான ஈர்ப்பு எம்மவரிடையே சற்று ஸ்தம்பிதமடைந்து போயுள்ளது. இதனால் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல.

தேர்ந்தெடுக்கப் பட்ட நல்ல ஆக்கங்களைக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொகுக்கப் பட்ட மிக அருமையான தொகுப்புக்கள் கூட குறுகிய வட்டங்களுக்குள்ளேயே உலா வந்து ஒரு கட்டத்தில் உரிமையாளர்களின் வீடுகளில் உறங்கிப் போன கதைகள் கூட ஏராளம். சந்தைப் படுத்தலில் உள்ள சிக்கலால் பதிப்புகளைத் தொகுப்பவர்களும், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களும் பணவிடயத்தில் பாரிய பிரச்சனைகளைச் சந்தித்துச் சோர்ந்து போன கட்டங்களும் உண்டு.

இந்த இக்கட்டான நிலையில், தொடர்ந்தும் பூவரசை பதிப்பாக வெளியிடுவதா, அல்லது இணைய சஞ்சிகை ஆக்கி விடுவதா என்ற ஆசிரியரின் கேள்வியோடும், வாசகர்களின் பதில்களோடும் பூவரசின் 97வது இதழ் என்னை வந்தடைந்திருக்கிறது. பூவரசு தொடர வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பத்தோடான பதிலாக இருந்தாலும் அது இன்னும் எத்தனை காலத்துக்கு சாத்தியமாகப் போகின்றது என்பது தெரியவில்லை. எப்போதுமே பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லையாயினும் “பதிப்பாகத்தான் வரவேண்டும்” என்று என்னால் உரத்துச் சொல்ல முடியவில்லை. இணையங்களின் வரவுக்குப் பின் குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுகளுக்குப் பின் பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்து விட்டதுதான் அப்பட்டமான உண்மை.

இணையங்களோடு தம்மை இணைத்துக் கொள்ளாதவர்கள் எத்தனை பேர் என்ற கேள்வி உங்களிடம் எழலாம். அவர்களில் வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்பதுதான் முதற் கேள்வி. அந்த வாசிப்பவர்களிலும் பணம் கொடுத்துப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் மனம் கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது அடுத்த கேள்வி? இப்படியான பல கேள்விகள் இருக்கின்றன.

ஊரிலே எமது ஒரு ஆக்கம் பத்திரிகையில் பிரசுரமானால், வீரகேசரி என்றால் சிறுகதைக்கு 50ரூபாவும், தினகரன் என்றால் 25ரூபாவும் என்று தபாலில் அனுப்பி வைப்பார்கள். புலத்தில் நிலை அப்படி அல்ல. படைப்பாளிகளும் சரி, பிரசுரிப்பவர்களும் சரி பண விடயத்தில் தம்மை நிலைநிறுத்த முடியாத ஒரு கடினமான நிலையிலேயே வாழ்கிறார்கள். படைப்புக்களுக்கு எந்த விதமான சன்மானத்தையும் கொடுக்கக் கூடிய நிலையில் புலம்பெயர் பத்திரிகைகள் உலகம் இல்லை. அதேநேரம் நல்ல படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அவைகளைத் தமது செலவில் தொகுப்பாக்கக் கூடிய நிலையில் எமக்கென அச்சகங்களும் இல்லை. ஒரு படைப்பாளி என்பவன் ஊக்குவிக்கப் படுவதற்கான இப்படியான எந்த வசதிகளும் இன்னும் புலத்தில் சரியாக இல்லை.

ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்பு வெளியாகும் பத்திரிகை கூட இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது மிகமிக அரிது. ஒரு படைப்பாளி தனது ஆக்கம் வெளிவந்ததா இல்லையா என்பதைப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தே அறிந்து கொள்கிறான். அனேகமான சமயங்களில் இதழ்களோ, பத்திரிகைகளோ வெளிவரும் போது அவைகளில் படைப்புக்களை எழுதியவர்கள்தான் பெரும்பாலும் பணம் கொடுத்து அந்தப் பத்திரிகையை வாங்குபவர்களாகவும் அதன் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வாசகர்களிலேயே தங்கி வாழ்கின்ற பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்?

சரி, பூவரசு பற்றி எழுத நினைத்து வந்து எழுதத் தொடங்கினால் சில யதார்த்தங்கள் வந்து முன்னுக்கு நிற்கின்றன.

தை-மாசியில் வரவேண்டிய பூவரசு இத்தனை மாதங்கள் கழித்து தற்போது ஆடி அசைந்து வந்துள்ளது. இதன் வரவு இதழாசிரியரை எத்தனை தூரம் சிக்கல் நிலைக்குத் தள்ளியிருக்கும் என்பது தள்ளி நின்று பார்க்கின்ற எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் 16ஆண்டுகளாக உலா வந்த பூவரசில் இப்போது சிறிய தளர்ச்சியும் ஒரு வித களைப்பும் இருக்கின்றது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.

இந்தப் பூவரசைப் பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம்.
இதழிலே வாசகர்களின் கடிதங்களைத் தொடர்நது ஏ:ஜே.ஞானேந்திரனின் வாழ்வின் வர்ண ஜாலங்கள் கட்டுரை, திருமதி . புஸ்பரட்ணத்தின் படித்துச் சுவைத்தவை, கோசல்யா சொர்ணலிங்கத்தின் ஒளவை தொடர், வளர்மதியின் கோள்கள் பற்றிய தொகுப்பு, இரா.சம்பந்தன், வேதா.இலங்காதிலகத்தின் கவிதைகள், கலா.கிருபாவின் குழந்தைகளின் பயத்தைப் போக்குவதற்கான குறிப்புகள் கூடவே என்.செல்வராஜா அவர்களின் ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும், போராட்ட இலக்கியங்களும் பற்றிய அருமையான குறிப்புக்களைக் கொண்ட தொகுப்பு, இன்னும் சிறுவர்களுக்கான சில… என்று பல விடயங்கள் இடம் பெற்றுள்ளன.

இவைகளுக்குள் இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம் ஏற்கெனவே இணையத்தில் தொடராக வந்த நவீனம்தான். ஆனாலும் அதைப் ஒரு பதிப்பாக கையில் எடுத்து வாசிக்கும் போது அதனை இன்னும் கொஞ்சம் அதிகமாக இரசித்து வாசிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான “சட்” உலகத்துடனான உரையாடல் ஒன்றைத்தான் அவர் கதையாக்கி உள்ளார். அப்போதுள்ள இளையோரின் ஏன் வயதானோரின் மனநிலைகள் கதைக்கும் விதங்கள்.. என்று அவர் கதை சொல்லத் தொடங்கிய பாணியே மிக நன்றாக அமைந்துள்ளது.

பொதுவிலேயே இராஜன் முருகவேலுக்கு நன்றாகக் கதை சொல்லத் தெரியும். எடுக்கும் கரு எதுவாயினும் கதையை நகர்த்தும் விதத்தில் அவருக்கு ஒரு தனித்தன்மை உண்டு. தொடங்கினால் நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் நடை. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே “சட்” உலகத்தினூடு இன்றைய இளைய சமூகத்தின் சில பிரச்சனைகளையும் தொட்டுள்ளார். அடுத்த அங்கத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டியுள்ளார். அவரது மிகுதிக் கதைகளையும் வாசிக்க வேண்டும் என்றால் பூவரசு தொடர்ந்து வரவேண்டும். அதற்கு வாசகர்களின் ஆதரவுதான் அதிகம் வேண்டும். பார்ப்போம்.
சந்திரவதனா
8.7.2006
———————
chandraselvakumaran@gmail.com

Series Navigation

சந்திரவதனா செல்வகுமாரன்

சந்திரவதனா செல்வகுமாரன்