இணையக் கலைச் சொற்கள்

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக்எட் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


தகவல் தொழில்நுட்பம் இன்று இவ்வுலகம் முழுதும் விரைந்து பரவி வருகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் புழக்கத்திற்கு வரும்போது, அதில் பயன்படும் பல்வேறு கலைச்சொற்களைப் புரிந்து கொள்வதற்கு மக்கள் முதலில் இடர்படுவது இயற்கையே. தகவல் தொழில்நுட்பத்திலும் பல்வேறு கலைச்சொற்கள் நம்மைக் குழப்பத்திற்கு ஆளாக்குகின்றன. அதுவும் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொள்ளாத நம் போன்ற இந்தியர்களுக்கு கலைச்சொற்களைப் பற்றி ஆங்கிலத்தில் படித்தால்தான் புரியுமா அல்லது நம் தாய்மொழியிலும் விளங்கிக் கொள்ள இயலுமா என்ற வகையில் அக்குழப்பம் இருமடங்காகிறது. எடுத்துக்காட்டாக தகவல் மீப் பெருவழி (Information Superhighway), இணைய விதிமுறை முகவரி (Internet Protocol Address) போன்றவை எவற்றைக் குறிக்கின்றன ? மேலும் TCP, IP, FTP, DNS, PPP, ISDN, ISP, ASP போன்ற தலைப்பெழுத்துச் சொற்களின் (acronyms) பொருள் யாவை ? இணையத்தில் தொடர்பு கொண்டு தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னேற விரும்பும் அனைவர்க்கும் மேற்கூறியவை போன்ற கலைச் சொற்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. அத்தகைய கலைச்சொற்கள் சிலவற்றைபற்றி இக்கட்டுரையில் அறிந்து கொள்ள முயல்வோம்.

இணையம் என்பது ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குத் தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான, ஒரு வலையமைப்பு (Network). போக்குவரத்திற்கான வாகனங்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செலுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பல்வேறு சாலைகளின் வலையமைப்பு போன்றதுதான் இணையமும். சாலைப் போக்குவரத்தில் பல்வேறு வாகனங்களும் தடையின்றி விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைப்போன்றே இலக்கமுறைத் (digital) தகவல்களை மிக விரைவான வேகத்தில் செலுத்துவதற்காக அமைந்தவை தகவல் மீப் பெருவழிகள் (Information Super Highways) ஆகும்

விதிமுறைகள் (Protocols)

தகவல் அனுப்புவோரும், பெறுவோரும் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதை அறிந்திருந்தால்தான் இணையத்தில் தகவல் தொடர்பை மேற்கொள்ள இயலும். இதற்கென்று சில நெறிமுறைகள் வகுக்கப் பெற்றுள்ளன. அவற்றை விதிமுறைகள் (Protocols) என அழைப்பர். தொலைபேசிக் கம்பி வழியே தகவல் பரிமாற்றம் செய்யப்படுவது போல், இணையத்தில் ஒரு தகவல் செல்வதில்லை. மாறாக இணையத்தில் பரிமாற்றம் செய்யப்படும் ஒரு தகவல் பல்வேறு பொட்டலங்களாகப் (packets) துண்டிக்கப்படுகின்றன. இணைய விதிமுறையின்படி ஒவ்வொரு பொட்டலத்திற்கும், அனுப்புவோர் முகவரி, பெறுவோர் முகவரி என்பன போன்று ஒரு அடையாளம் தரப்படுகின்றது. தகவல் சேரவேண்டிய இடத்தில் மேற்கூறிய பொட்டலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மீண்டும் முழுத்தகவலாக வடிவெடுக்கிறது.

செலுத்தக் கட்டுப்பாட்டு விதிமுறை (Transmission Control Protocol)

இவ்விதிமுறையின் மூலமே இணையத்தில் செலுத்தப்படும் ஒரு தகவல் பல பகுதிகளாகத் துண்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு துண்டும் 1-150 பைட்களைக் (உருக்களை) கொண்டிருக்கும். ஒவ்வொரு துண்டுப்பகுதியையும் ஒரு பொட்டலமாக மாற்றி அதற்கென ஒரு எண்ணும் தரப்படுகிறது. இணைய விதிமுறை (Internet Protocol- IP) யின்படி ஒவ்வொரு பொட்டலத்திற்கும் முகவரி தரப்பட்டு இணையத்தின் வழி எங்கே செல்ல வேண்டுமோ அங்கே செலுத்தப்படுகிறது. இவ்வாறு ஒரு தகவலின் பல்வேறு பொட்டலங்களும் பல்வேறு வழிகளில், நேரங்களில் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது சில பொட்டலங்கள் சேதமடைவதுமுண்டு. சேர வேண்டிய இடத்தில் செலுத்தக் கட்டுப்பாட்டு விதிமுறையின்படி எல்லா பொட்டலங்களிலும் உள்ள தகவல் துண்டுகளும் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, இணைக்கப்பட்டு, மீண்டும் முழு வடிவம் பெறுவதற்கு வழி செய்யப்படுகிறது. ஏதேனும் சில பொட்டலங்கள் சேதமடைந்திருந்தாலோ, தொலைந்துபோய்விட்டிருந்தாலோ விடுநர் கணினியுடன் (Sender Computer) தொடர்பு கொண்டு சேதமடைந்த/தொலைந்துபோன தகவல் துண்டுகளைப் பெற்று முழுத்தகவலும் மறுவடிவம் பெறுவதற்கு வழி செய்யப்படுகிறது. இவ்வாறு TCP/IP ஆகிய விதிமுறைகள் இணையத்தில் தகவல் பரிமாற்றம் செம்மையாக நடைபெறத் துணைபுரிகின்றன.

புள்ளியிடை விதிமுறை (Point to Pont Protocol — PPP)

ஒரு கணினியை இணையத்துடன் சேர்க்கும் விதிமுறை இது. பழைய தொடர் வரிசை இணைய விதிமுறையை (Serial Line Internet Protocol – SLIP) விட இது நிலையானது; பிழை சோதிக்கும் பண்பையும் கொண்டது. இடைமுகச் சேவைக் கணினி (Intermediary Server Computer) வழியே இணையத்துடன் தொடர்பு கொள்ளும் சேய்மைக் கணினிகளுக்கு (Remote PC) இவ்விதிமுறை மிகவும் பொருத்தமுடையதாகும். சேவைக் கணினியானது ஒளியிழைக்கம்பி அல்லது துணைக்கோள் மூலமாக இணையத்துடன் இணைக்கப்படுகிறது. பல பயனர் கணினிகளின் (Clients PCs) சார்பாகச் செய்திகளைப் பெற்றுக்கொள்வதும், அனுப்புவதும் சேவைக் கணினியின் பணியாகும். சேவைக் கணினியுடன் ஒரு பயனர் கணினி இணைக்கப்பெற்றவுடனே அதற்கெனத் தனிப்பட்ட இணைய விதிமுறை முகவரி (IP address) ஒன்று ஒதுக்கப்படுகிறது. இம்முகவரியினால் பயனர் கணினிக்கான செய்திகளை எளிதாக அனுப்பவும் பெறவும் முடிகிறது. மேற்கூறிய இணைய முகவரி 32 பிட் (bit) உடைய நான்கு எண்களால் ஆனதாகும். ஒவ்வொரு எண்ணும் 0 முதல் 255 வரை இருக்கலாம். எடுத்துக்காட்டாக 1.160.10.240 என்பது ஓர் இணைய விதிமுறை முகவரியாகும். ஒரு தனிமையான வலையமைப்பில் (network) ஒவ்வொரு முகவரியும் தற்போக்கான (random) ஆனால் வெவ்வேறு எண்களால் அமைந்திருக்கலாம். ஆனால் ஒரு தனிப்பட்ட வலையமைப்பு இணையத்துடன் இணைக்கப்படுகையில், முகவரிகளைப் பதிவு செய்ய வேண்டியதாகிறது. இதற்கு இணைய முகவரி என்று பெயர். இதனால் ஒரே வகையான எண்கள் இரு முறை வருவது உறுதியாகத் தவிர்க்கப்படுகிறது. இணைய விதிமுறை முகவரியில் உள்ள நான்கு எண்களும் ஒரு குறிப்பிட்ட வலையத்தையும், அவ்வலையத்தின் புரவலர் கணினியையும் (host computer) அறிந்து கொள்வதற்குப் பல வகைகளில் பயன்படுகிறது. இந்த இணைய விதிமுறை முகவரியைப் பதிவு செய்து அளிக்கும் நிறுவனம் வலையமைப்புகட்கு இடையேயான தகவல் மையப் பதிவுச் சேவை (Inter Network Information Center Registration Service) என்பதாகும்.

அஞ்சலக விதிமுறை (Post Office Protocol—POP)

ஓர் அஞ்சல் சேவையகத்தில் (Mail Server) இருந்து மின் மடல்களை/மின் அஞ்சல்களை (electronic mails – e-mails) எடுத்துத் தருவதற்கானதுதான் இந்த அஞ்சலக விதிமுறை. பெரும்பாலான மின்மடல் பயன்பாடுகளில் இவ்விதிமுறையே பயன்படுத்தப்படுகிறது; சிலவற்றில் இணையச் செய்தி அணுகு விதிமுறையும் (Internet Message Access Protocol – IMAP) பயன்படுவதுண்டு. அஞ்சலக விதிமுறையில் இரு பதிப்புகள் உண்டு. முதல் வகைப் பதிப்பு POP 2, 1980 ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டது. இதில் செய்திகளை அனுப்ப “எளிய அஞ்சல் மாற்ற விதிமுறை” (Simple Mail Transfer Protocol – SMTP) தேவைப்பட்டது. இப்போது வந்துள்ள புதிய POP 3 இல் மேற்கூறிய SMTP இருந்தாலும், இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பெரும்பாலான மின்மடல் அமைப்புகளில் இணையத்தில் ஒரு சேவையகத்தில் இருந்து மற்றோர் சேவையகத்திற்கு அஞ்சல்களை அனுப்ப SMTP பயன்படுகிறது. அஞ்சல்கள் POP அல்லது IMAP மூலம் பயனர்களுக்கு (clients) கிடைக்கின்றன. எனவே மின்மடல் பயன்பாட்டு வடிவமைப்பு பற்றிப்பேசும்போது POP, IMAP மற்றும்

SMTP சேவையர்களைப்பற்றிக் குறிப்பிட வேண்டியுள்ளது.

சேவைகள் (Services)

ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள பல கணினிகள், சாதனங்கள் ஆகியவை கொண்ட குழுவை ஒரு களம் (domain) என அழைப்பர். இக்களம் பொதுவான சட்டதிட்டங்கள், விதிமுறைகட்கு உட்பட்டு, ஒரு தனி அலகாக செயற்படும். ஒரு IP முகவரியைப் பகிர்ந்து கொள்ளும் எல்லாக் கணினிச் சாதனங்களும் ஒரே களத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படும். ஆனால் ஒரு களத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட IP முகவரிகள் இருப்பதும் உண்டு. எடுத்துக்காட்டாக microsoft.com என்ற களம் பத்துப் பன்னிரெண்டு முகவரிகளைக் கொண்டுள்ளது. வலைப்பக்கங்களைக் கண்டுபிடிக்கும் வகையில் சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான்களில் (Uniform Resource Locators – URL) களப்பெயர்கள் பயன்படுத்தப்பெறும். எடுத்துக்காட்டாக http://www.niscom.nic.in/index.html என்பது ஒரு URL. இதில் nic.in என்பது களப்பெயர். ஒவ்வொரு களப்பெயரிலும் அக்களம் எந்த உயர் மட்டகளத்தைச் (Top-Level Domain – TLD) சார்ந்தது என்பதை குறிப்பிடும் வகையில் ஒரு பின்னொட்டைக் (suffix) கொண்டிருக்கும். ஆனால் இத்தகைய களங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளைக் காண்க.

களப்பெயர் அமைப்பு / சேவை (Domain Name System/Service – DNS)

இணையத்தில் களப்பெயர்களை IP முகவரிகளாக மாற்றுவதற்கு மேற்கூறிய அமைப்பு பயன்படுகிறது. களப்பெயர்கள் எழுத்துக்களில் அமைந்திருப்பதால் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இணையமோ IP முகவரிகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே களப்பெயரைப் பயன்படுத்தும் போதெல்லாம் DNS அமைப்பானது அப்பெயருக்கு உரிய IP முகவரியாக அதனை மாற்றும். எடுத்துக்காட்டாக www.example.com என்ற களப்பெயரானது 198.105.232.4 என்ற IP முகவரியாக மாற்றம் பெறும். உண்மையில் DNS அமைப்புகளே ஒருங்கிணைந்து ஒரு வலையமைப்பாகச் செயல் புரிகின்றன எனலாம். ஒரு DNS சேவையகத்திற்கு குறிப்பிட்ட களப்பெயரை சரியான IP முகவரியாக மாற்ற இயலவில்லை எனில், சரியான IP முகவரி கிடைக்குவரை, அது வேறு பல DNS சேவையகங்களோடு தொடர்பு கொண்டு தன் பணியைக் கட்டாயம் நிறைவேற்றும். DNS என்பது இலக்க முறை நரம்பு அமைப்பு (Digital Nervous System – DNS) என்றும் அறியப்படுகிறது. தனி நபர் கணினிகளின் வலையமைப்பில் தகவல் எளிதாகப் பெறப்படுவதையும், புரிந்து கொள்ளப்படுவதையும் குறிப்பிடுவதற்கு ஏற்ற வகையில் மேற்கூறிய பெயரை அறிமுகப்படுத்தியவர் பில் கேட்ஸ் (Bill Gates) ஆவார்.

இணையச் சேவையாளர் (Internet Service Provider – ISP)

இணையத்தொடர்பை ஏற்படுத்தித் தருவதற்குப் பல நிறுவனங்கள் உள்ளன. மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு, இணையத்திற்ல் உலா வருவதற்கான மென்பொருள் பொதி (software package), பயனர் பெயர் (user name), கடவுச்சொல் (pass word), இணையத்தை அணுகுவதற்கான தொலைபேசி எண் (access phone number) ஆகியவற்றை அந்நிறுவனங்கள் வழங்கும். மோடத்தைப் (modem) பெற்றிருக்கிற கணினியில் மேற்கூறிய வசதிகள் இருக்குமானால், இணையத்தைத் தொடங்கி வையக விரிவு வலையில் (world wide web) உலா (browse) வரலாம்; மின் மடல்களை அனுப்பலாம்; வந்திருக்கிற மின் மடல்களைப் படிக்கலாம். தனிப்பட்டவர்க்கு மட்டுமின்றி பெரிய நிறுவனங்களுக்கும் ISPகள் இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தித் தருகின்றன. பல ISPகளே கூட தமக்குள்ளே ஒன்றோடொன்று இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்றன. அண்மைக் காலத்தில் பல ISPகள் தமது சேவையை இணையப் பயனாளர்களுக்கு அளிக்கத் துவங்கியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை VSNL, HCL, மந்த்ரா ஆன் லைன் என்பன.

கால்டைகர்.காம் (caltiger.com), Freedialin.com போன்ற நிறுவனங்கள் இணையச் சேவையை இலவசமாகவே அளிக்கின்றன. அதற்கான செலவை விளம்பரக் கட்டணங்கள் மூலம் அவை ஈடு செய்து கொள்கின்றன.

பயன்பாட்டுச் சேவையாளர் (Application Service Provider – ASP)

இதுவும் ISP போன்றதே. ஆனால் நமது மென்பொருளை ASPயே பராமரிக்கும். கணினித் திரையில் தோன்றும் குறும்படத்தைச் (icon) சொடுக்கி பயன்பாட்டுடன் தொடர்பு கொள்ள இயலும். இம்முறையில் பல்வேறு பயன்பாட்டு மென்பொருள்களை விலைக்கு வாங்காமலேயே அவற்றில் பணி புரிய முடியும். ஆனால் சில பயன்பாட்டுச் சேவையாளர்கள் குறிப்பிட்ட சில மென்பொருள்களுக்குக் கட்டணம் வசூலிப்பதுண்டு. தற்போது ASP சேவை மிகக் குரைந்த அளவிலேயே உள்ளது. ஆனால் விரைவில் இவற்றின் சேவை அதிகமாகப் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயங்கு சேவையகப் பக்கங்களும் (Active Server Pages) ASP என்ற பெயராலேயே வழங்குகிறது.. இது ஒரு வலைப்பக்கத்தின் விவர வரையறை (specification). மேலும் .ASP என்பது தொடர் எழுத்துக்களாகப் பயன்படுத்தப்பெறும். இவ்விவர வரையறையில் விஷுவல் பேசிக் (Visual Basic) அல்லது ஜாவா ஆணைத் தொகுதிக் குறிமுறை (Java Script Code) பயன்படுத்தப்படுகிறது. ஓர் இணைய உலவிக்கு ஏதேனும் ஒரு ASP பக்கம் தேவையெனில், வலைச் சேவையகம் (Web Server) உடனே மீ உரைச் சுட்டு மொழிக் குறியீட்டில் (Hyper Text Markup Language – HTML) அப்பக்கத்தை உருவாக்கி அதனை உலவிக்கு அனுப்பி வைக்கும். விஷுவல் பேசிக் நிரலர்களும் (Programmers) தமக்குப் பழக்கமான கருவிகளைப் பயன்படுத்தி ASPயில் பணியாற்ற முடியும்.

வலையகம், வலைச் சேவையகங்கள், நுழை வாயில்கள் (Web Site, Servers and Portals)

வலையகம் என்பது வையக விரிவு வலையில் (www) ஓர் இடத்தைக் குறிக்கும். ஒவ்வொரு வலையகமும் ஒரு தொடக்கப் பக்கத்தைக் (home page) கொண்டிருக்கும். வலையகத்தில் நுழைந்தவுடனே முதலாகக் காணப்படுவது இப்பக்கமே. ஒவ்வொரு வலையகமும் ஒரு குறிப்பிட்ட தனிநபர், நிறுவனம் அல்லது அமைப்பிற்குச் சொந்தமானதாகவும் அவர்களால் நிர்வகிக்கப் படுவதாகவும் இருக்கும். இது இணையம் மூலமாக அவர்களால் வழங்கப்படும் ஒரு சிற்றறிக்கை (brochure) எனலாம். நுழைவாயில் (portal) என்ற சொல் மிகுதியாக இப்போது புழக்கத்தில் வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளின் தகவல்கள் அடங்கியுள்ள வலையகத்திற்கு உள்ளே செல்லக்கூடிய வாயில் என இச்சொல்லுக்குப் பொருள் கொள்ளலாம். இது இணையத்தைப் பற்றி மட்டுமே இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. நமக்கு விருப்பமான, தேவையான எந்தத் தலைப்பைப் பற்றியும் கூறுகின்ற அறிமுக வாயிலாக நுழைவாயில் விளங்குகிறது. ஒரு பயனாளர் தேவையான தகவல்களை எளிதாகப் பெறும் வகையில் ஒருங்கிணைந்து வடிவமைக்கப்பட்ட நிரலமைப்பு என இதனைக் கருதலாம். மின்மடல், அரட்டை (chat), கலந்துரையாடல் (forum), விளம்பரம், தேடு பொறி (search engine), போன்றவற்றை நுழைவாயிலுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இவற்றின் முக்கிய குறிக்கோள் இணையப் பயனாளர்களுக்கு வசதி ஏற்படுத்தித் தருவதும் அவர்கள் தேவையைக் குழப்பமின்றி, எளிதாக, விரைந்து நிறைவேற்றித் தருவதுமேயாகும். இவ்வகையில் நுழைவாயில் காலவிரயத்தைத் தவிர்க்கிறது எனலாம். மேலும் வலையகத்தைவிட நுழைவாயில் மிகுந்த இயங்குநிலை கொண்டிருப்பதால் இணையத்தில் விரைந்து உலா வர முடிகிறது.

வலைச் சேவையகம் (Web Server)

இது வலைப் பக்கங்களைப் பார்வையிட உதவும் ஒரு கணினி. ஒவ்வொரு சேவையகத்திற்கும் IP முகவரியும், ஒரு களப் பெயரும் இருக்கும். எடுத்துக்காட்டாக, http:/www.niscom.nic.in/index.html என்ற URL இல் உலா வருவதாக வைத்துக் கொள்ளுவோம். இது nic.in என்ற களப் பெயருடைய சேவையகத்திற்கு நமது வேண்டுகோளை அனுப்பி வைக்கும். பின்னர் அச்சேவையகம் index.html என்ற பக்கத்தை நமது உலவிக்குக் (browser) கொணரும். சேவையகத்திற்கான மென்பொருளை நிறுவி, இணையத்துடன் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலம் எந்த ஒரு கணினியையும் ஒரு வலைச் சேவையகமாக மாற்றிட இயலும். இதற்கான வலைச் சேவையக மென்பொருள் பயன்பாடுகள் பல உள்ளன. அபேக் (Apache), NCSA போன்ற பொதுக் கள மென்பொருள்களும் (Public Domain Software), மைக்ரோசாஃப்ட், நெட்ஸ்கேப் போன்ற வணிகத் தொகுப்புகளும் இவற்றுள் அடங்கும்.

மெய்நிகர்ச் சேவையகம் (A Virtual Server)

இதுவும் வலைச் சேவையகம் போன்றே சேவையகமாகப் பயன்படும் கணினிதான். இதில் கணினி வளங்களை (Computer resources) மற்ற மெய்நிகர்ச் சேவையகங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் உண்டு. ஆனால் முழுக் கணினியும் சேவையக மென்பொருளை மட்டுமே இயக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதில்லை. எனவேதான் இது மெய்நிகர்ச் சேவையகம் என்ற பெயரைக் கொண்டுள்ளது. குறைந்த செலவில் வலைச்சேவையை மேற்கொள்வதற்கு மெய்நிகர்ச் சேவையகங்கள் சிறந்தவை. ஒவ்வொரு சேவையகத்திற்கும் ஒரு தனிக் கணினி என்றில்லாமல், ஒரே கணினியைக் கொண்டு பல மெய்நிகர்ச் சேவையகங்கள் பேணப்படுகின்றன. ஒவ்வொரு வலையகமும் (web site) தனித்தனி சேவையகங்களால் பேணப்படுவது போன்றே இருப்பதால் செயல் திறனில் எவ்விதக் குறைவும் உண்டாவதில்லை. ஆனால் ஒரே கணினியில் ஏராளமான மெய்நிகர்ச் சேவையகங்கள் உறையும் போது வலைப் பக்கங்களை அடைவதற்கு அதிக நேரம் பிடிக்கும்.

பதில் சேவையகம் (A Proxy Server)

இது வலை உலவி (web browser) போன்றவற்றிற்கும், உண்மையான சேவையகத்திற்கும் இடையே இருப்பது. உண்மைச் சேவையகத்திற்கு வரும் கோரிக்கைகள்/ வேண்டுகோள்களை எல்லாம் செவிமடுத்து முடிந்தால் தானே நிறைவேற்றி வைக்கும்; இயலாவிட்டால் உண்மைச் சேவையகத்திற்கு அனுப்பி வைக்கும். பதில் சேவையகத்தின் முக்கியமான குறிக்கோள்கள் இரண்டு: 1. செயல்திறன் முன்னேற்றம் 2. கோரிக்கைகளை வடிகட்டுதல். பதில் சேவையகங்கள் பயனர் குழுக்களுக்கான செயல்திறன் முன்னேற்றத்தை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வைத்திடும். காரணம் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு கோரிக்கைகளின் முடிவுகளை இது சேமித்து வைத்திருக்கும். எடுத்துக்காட்டாக ‘அ ‘ மற்றும் ‘ஆ ‘ என்ற இரு பயனர்கள் பதில் சேவையகம் வழியே வைய விரிவு வலையை அணுகுவதாகக் கொள்வோம். ‘அ ‘ என்கிற பயனர் முதலாவதாக ஒரு குறிப்பிட்ட வலைப் பக்கத்தைத் தேடுவதாகக் கொள்வோம்; சிறிது நேரம் கழித்து ‘ஆ ‘ என்கிற அடுத்த பயனரும் அதே பக்கத்தைக் கோருகிறார் எனக் கொள்வோம். வலைச் சேவையகத்திற்கு பதில் சேவையகம் அந்த வேண்டுகோள்களை ஒவ்வொரு முறையும் அனுப்ப வேண்டும்; இது அதிக நேரம் பிடிக்கும் செயல். அதைவிட ஒரு முறை ஒரு குறிப்பிட்ட பக்கத்தை ஒரு பயனருக்கு வரவழைத்தவுடன், அதே பக்கத்தை விரும்புகிற வேறொருவருக்கும் அனுப்பி வைப்பது எளிதான, விரைவான செயலாகும். பதில் சேவையகம் இதைத்தான் செய்கிறது. பதில் சேவையகம் பயனர் உலா வரும் அதே வலையமைப்பில் இருப்பதால் மிக விரைவாக இதனைச் செயற்படுத்த இயலும். பதில் சேவையகங்கள் நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு இவ்வகையில் உதவி புரிகிறது எனலாம். கம்ப்யூசர்வ், அமெரிக்கா ஆன்லைன் போன்ற உடன்நிகழ் சேவையர்கள் (on line servers) ஏராளமான பதில் சேவையகங்களைப் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். இந்தியாவிலும் இத்தகைய இணையக் கழகங்கள் (cyber cafes), பல பதில் சேவையகங்களைப் பயன்படுத்தி இணைய உலவிகளுக்கு (web surfers) உதவி புரிந்து வருகின்றன. அடுத்து பதில் சேவையகங்கள் கோரிக்கைகளை வடிகட்டும் பணியையும் மேற்கொள்ளுகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் தம்மிடம் வேலை செய்யும் அலுவலர்கள் குறிப்பிட்ட சில வலையகங்களைப் (web sites) பார்வையிடுவதை, பதில் சேவையகங்களைக் கொண்டு தடை செய்ய முடியும்.

மொழிகள் (Languages)

மீ உரைச் சுட்டு மொழி (Hyper Text Markup Language – HTML) என்பது வையக விரிவு வலையில் ஆவணங்களைத் தயாரிப்பதற்கான உருவாக்க மொழியாகும். இணையம் மற்றும் வலையமைப்புகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் கூட்டமைப்பான W3C (World Wide Web consortium) என்ற பேரமைப்பினால் உருவாக்கப்பட்ட மற்றொரு மொழி நீட்டிப்புச் சுட்டு மொழி (eXtensible Markup Language – XML) என்பதாகும். இந்த XML மொழியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மட்டுமே தற்போது கையாண்டு வருகிறது. ஜாவா ஆணைத்தொகுதி (Java Script) என்பது ஆணைத் தொகுதிகளை எழுதுவதற்கான மொழி. நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

ஊடாட்ட தளங்களில் (interactive sites) வலைகளை உருவாக்குவோருக்கு உகந்த மொழி. இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் போன்ற பல மென்பொருள் நிறுவனங்கள் இம்மொழிக்கு ஊக்கமளிக்கின்றன. செய்முறை வெளிக்கொணர் அறிக்கை மொழி (Practical Extraction and Report Language – PERL) என்பது ஒரு நிரல் மொழியாகும் (Programming Language). இணையத் தகவலில் செயலாக்க உரையை வடிவமைப்பதற்கு இம்மொழி பயன்படுத்தப்பெறுகிறது. வலிமையான உரைச் செயல்திறன்களைப் பெற்றிருப்பதால், இது பொது நுழைவாயில் இடைமுக (Common Gateway Interface – CGI) உரையைத் தயாரிப்பதற்குப் பெரிதும் பயன்படுகிறது.

டாக்டர் இரா விஜயராகவன்

பிடெக்எட் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித் துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006 இந்தியா

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர