இடதுசாரி இந்துத்துவம்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

அருணகிரி



இன்று வலதுசாரி இடதுசாரி என்ற பதங்கள் இந்திய அளவில் (உலக அளவிலும் கூட) மிகவும் குழப்பமான சொல்லாடல்களாக ஆகி விட்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் இயக்கம் தொடங்கி, சீனா, வடகொரியா வரை அனைத்து விஷயங்களும் இடதுசாரி என்ற சுவற்றின்மீது கலந்து கட்டி பல்வண்ண சாணத்தட்டைகளாக அப்பப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இடதுசாரி என்பது ஏதோ கம்யூனிஸம் அல்லது சோஷலிசம் தொடர்பான விஷயம் மட்டுமே எனப்பலர் தவறாக அர்த்தம் புரிந்து கொள்ளும் சூழலும் உள்ளது. எனவே இச்சொற்களின் ஆதார தொடக்கத்தைப் பார்த்து விடுவோம்.
இடதுசாரி வலது சாரி என்பவை இந்தியப்பதங்கள் அல்ல. மார்க்ஸ் காலத்துக்கு முந்தைய ஐரோப்பாவின் பதினெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சுப் புரட்சியில் விளைந்த சொல்லாடல்கள் இவை. சர்ச் குருமார்களும், பிரபுக்களும்தான் அன்றைய வலதுசாரிகள். பூர்ஷ்வா எனப்படும் முதலாளி மற்றும் வியாபாரி வர்க்கம் அன்றைய இடதுசாரியில் அடக்கம்! முதலும் தொழிலும் பொருளாதாரத்தின் பிரிக்கவியலா அடிப்படை அம்சங்களாய் இருந்தாலும், இந்த இயல்பை மறுதலித்து முதன் முதலில் முதலாளி வர்க்கத்தை தொழிலாளிகளுக்கு எதிரானதாகவும் என்றென்றும் சமரசம் காண முடியாத எதிரணியில் இருப்பதாகவும் கற்பிதம் செய்த “பெருமை”, 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உண்டான மார்க்ஸின் கம்யூனிசத்தைத்தான் சாரும். ஆனால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளின் நிகழ்வுகளில் கம்யூனிசச்சாயம் வெளுத்துவிட உலக அளவில் இன்று அது தனது அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெருமளவில் இழந்து நிற்கிறது. புதிய அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் உலக அரங்குகளில் பல இடங்களில் பல விதங்களில் நடக்கின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவில் அது தனது வலதுசாரி பாரம்பரிய எதிரிகளான மதவாத அமைப்புகளுடன் சிறுபான்மை ஓட்டு அரசியலின் பொருட்டு வெளிப்படையாகக் கைகோர்த்துக் கொள்கிறது. வரலாற்று நியாயமோ தத்துவ நியாயமோ கொஞ்சமும் இல்லாத இந்தக் கயமைத்தனம் இடதுசாரி அரசியலாகவும் இந்திய அரங்கில் முன்வைக்கப்படுகிறது.
உண்மையில் இடதுசாரி அரசியல் என்பது கம்யூனிசம் அல்ல. மேற்கூறியபடி அது கம்யூனிச காலத்திற்கும் முற்பட்டது. கடந்த இரு நூற்றாண்டுகளில் உலக அரசியலில் கம்யூனிசம் என்பது சாயம்போன பொருளாதாரவியலாக, அரசியல் கேலிப்பொருளாக, சர்வாதிகாரிகளின் தத்துவ முகமூடியாகக் குறுகி விட்டது. ஆனால், உலக அளவில் கம்யூனிசத்திற்கும் முந்தைய யதார்த்தமான இடதுசாரி அரசியல் அதற்குரிய முக்கியக்கூறுகளாகச் சில அம்சங்களை இனங்கண்டு அவற்றை சமூக அரசியல் தளங்களில் முன்னெடுத்துச் செல்கிறது. இந்தக் கூறுகளில் முக்கியமானவையாக ஒருமுகத்தன்மையை எதிர்த்து பன்முகக்கண்ணோட்டம் ஆதரிக்கப்படுவதையும், அதனையொட்டி ஒருமுக ஏகாதிபத்திய கலாசாரமயமாக்கலை எதிர்த்து உள்ளுறை (native) கலாச்சாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் பெண்களுக்கான சமூக, பொருளாதார உரிமைகள் முன்நிறுத்தப்படுதல் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, மேற்சொன்ன கூறுகள் இயல்பாகவே அதன் அடிப்படை ஞான மரபு மற்றும் விழுமியங்களோடு ஒத்துப்போவதைக் காணலாம். அக்காலத்திய பிற கலாசாரங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ஞான மரபில் பெண்களுக்கு ஆன்மீகம், அரசியல், சமுதாயம் ஆகிய முக்கியத்துறைகளில் குறிப்பான பங்கு இருந்தது என்பது மட்டுமல்ல இங்கு வந்தேறிய சிறு குழுக்களுக்கும் கூட குறிப்பிடத்தக்க அங்கீகாரமும் அடையாளப்பாதுகாப்பும் கிடைத்தது. அமெரிக்காவிற்கு வந்தேறிய ஆப்பிரிக்கர்கள் தங்களது முன்னோர் மொழியையும், மூத்தோர் வழிபாட்டையும் மறந்து விட, பஹாய் மதமும், திபெத்திய புத்தமும் இன்னமும் தங்கள் மொழியையும், வழிபாட்டையும் இழக்காமல் இந்தியாவில் வாழ முடிகிறது. கேரளாவின் சிரியன் ஆர்தடாக்ஸ் கிறித்துவர்கள் இந்து சமூகத்தில் தழைத்திருக்க, வந்தேறிய காலனீய கத்தோலிக்க போர்த்துக்கீசியரோ வல்லடியாக அவர்களை நசுக்கவும் மதம் மாற்றவும் முனைந்த வரலாறும் உள்ளது.
இததனை பரந்து பட்ட நிலப்பரப்பையும், பன்முகக்கலாசாரங்களையும் உள்ளடக்கிய நாடு என்ற வகையில், உள்ளுறை சிறுகலாசாரங்களின் பாதுகாப்பில் இந்தியம் சாதிக்க முடிந்த அளவிற்கு உலகில் வேறு எந்த நாடும் சாதிக்கவில்லைதான். மதுரைவீரன் கோவில்களையும் எல்லைக்காளி கோவில்களையும் சைவர்களோ அத்வைதிகளோ இடித்து ஒழித்ததாகச் சரித்திரம் இல்லை. நாகர்களும் தோடர்களும், மலை வாழ் மக்களும் வைணவத்திற்கு மாறினால்தான் உயிர்வாழ முடியும் என்று வற்புறுத்தப்படவில்லை. சிறுகுழுக்களுக்கான அங்கீகாரம் இந்திய நிலப்பரப்பில் சாத்தியப்பட்டதற்கு முக்கியக்காரணம் சிறுகுழுக்களும் பெற்ற ஜாதி என்ற சமூக அடையாளமும் அதன் அடிப்படையில் அவர்களது கலாசாரங்களின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் அனுமதிக்கப்பட்டமையும்தான். ஜாதியின் மிக முக்கிய நல்விளைவு சிறு குழுக்களையும் அவசியமான சமூகக் கூறுகளாகக் கொண்டு அவற்றிற்கான இருப்பையும், அடையாளத்தையும் அங்கீகரித்து அவற்றின் வரலாற்றுத்தொடர்ச்சிக்கு வழிவகுத்ததே ஆகும். அதனால்தாம் சமூக உள்ளியக்கங்களில் ஜாதி இன்னமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜாதிக் கொடுமைகள் களையப்பட வேண்டும் என்பதில் இரு கருத்தில்லை. அதே சமயம் ஜாதிகள் சிறுகுழுக்களுக்கு அவசியமான கலாசாரக் காப்பீடாவதையும் அவர்களது சமுதாய இருப்பையும், வரலாற்றுத் தொடர்ச்சியையும் உறுதி செய்வதையுமே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தக் காப்பீடு இல்லாத சமூகங்கள் பிற ஒருமுகச் சித்தாந்தங்களின் படையெடுப்பாலும் ஆக்கிரமிப்பாலும் தமது அடையாளத்தையும், வரலாற்றையும் இழந்து சிதைந்து அழிந்ததைக் காண்கிறோம்.
மொகலாயப் படையெடுப்பிற்கு முந்தைய காலகட்டங்களில் இந்து மரபில் பல்கிப் பெருகிய சிற்பம், வான சாஸ்திரம், கணிதம், ஓவியம், பொறியியல், கட்டிடம் போன்ற பல அறிவுசார் இயக்கங்கள் செழித்தோங்கியதற்கு இந்த சிறுகுழுத் தன்மை காக்கப்பட்டது ஒரு முக்கியக்காரணமாகும். இதன் நல்விளைவாகவே . பல சவால்களைச் சந்தித்த பின்னரும் இவற்றில் இன்னமும் பல கலைகள் உயிரோடு உள்ளன. சிதத வைத்தியம், யோகா, தியானம், ஆயுர்வேதம், மூலிகை வைத்தியம் போன்ற மாற்று வைத்திய முறைகள் மேற்கத்திய நாடுகளிலும்கூடப் புகழ்பெற்று வருகின்றன.
இவ்வாறு சிறுகுழு அங்கீகாரம், பன்முகத்தன்மை பாதுகாப்பு, கலாசார ஏகாதிபத்திய, எதிர்ப்பு, பெண்ணிற்கு சமூக அரசியல் அங்கீகாரம் என சமுதாய அடித்தளங்களில் இயங்கும் இடதுசாரி என்று சொல்லக்கூடிய அம்சங்கள் பலவும் இந்து சமூக மரபிற்கு இயல்பாக அமைந்ததாகவே உள்ளன. அதே நேரத்தில் பிற நம்பிக்கைகளையும், வழிபாடல்களையும், கலாசாரத்தையும் அழித்து தனது ஒருமைப்பார்வையை வல்லடியாக உள்திணிக்கும் போக்கினை உலக அரங்கினில் கிறித்துவ மேலாண்மை, தீவிரவாத இஸ்லாம், கம்யூனிஸம் ஆகிய மூன்று பிற்போக்கு இயக்கங்களிலும் இயல்பாகவே காணவும் முடிகிறது.
இன்று இந்தியாவில் இடதுசாரித்தனம் என்றால் இந்துமத எதிர்ப்பு என்றும், முஸ்லீம்/கிறித்துவ ஆதரவு என்றும், நாட்டுப்பற்றை நகையாடுவது என்றும், பாரத தொன்மைக்கலாசாரக் கூறுகளைத் தாழ்மைப்படுத்துவது என்றும் ஆகிவிட்ட ஒரு கேடு கெட்ட கயமைத்தனம் மாற வேண்டும். இந்த மாற்றத்தை கொண்டு வருவதில் பாரத இந்துத்துவ இயக்கங்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. கம்யூனிச மற்றும் சோஷலிச சாயங்களை நீக்கி வளர்ந்த லிபர்ட்டேரியானிஸம் (அல்லது க்ளாசிகல் லிபரலிஸம்) அமெரிக்க அரசியலில் இன்று பெரும் பங்கு வகிக்கிறது. 1950களில் தொடங்கி இடதுசாரி என்ற தளத்தினை கம்யூனிசக் கரையான்கள் முழுமையாகக் கடத்தி ஆக்கிரமிக்கா வண்ணம் காத்து வளர்த்தெடுத்ததில் லிபர்ட்டேரியானிசத்திற்குப் பெரும்பங்கு உள்ளது. இது போன்று, இந்தியப் பின்புலத்தைக்கருத்தில் கொண்டு சில அவசிய மாற்றங்கள் செய்யப்பட்ட ஒரு இடதுசாரி அவதாரம் இந்துத்துவத்திற்கு இன்றைய அவசியம்.
இந்தியாவில் கம்யூனிச மற்றும் கடவுள் மறுப்பு (என்று சொல்லிக் கொள்ளும்) இயக்கங்கள் “வலது சாரி” என்று சொல்லக்கூடிய மத வாதத்தையும், மதக் குறியீடுகளையும் உபயோகிக்கத் தயங்குவதில்லை. கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தனது சீக்கிய தலைப்பாகையை உதறிவிடவில்லை. பெரியார் வழிவந்தாலும் ஆலய ஆகமங்களை முன்னிறுத்திய ‘வலதுசாரி’ திருமூலரின் திருமந்திரத்தை தனது கட்சிக்குக் கடத்த அண்ணா தயங்கவில்லை. இன்று இடதுசாரி எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் எந்த அரசியல்வாதியும், கட்சியும் “வலதுசாரி” இந்துமத பாகன் மரபுகளை தேவைக்கும் வசதிக்கும் தகுந்தாற்போலப் பயன்படுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. இந்து மரபுகளுக்கு மக்கள் மத்தியில் உள்ள பெரிய ஆதரவை இவர்கள் உணர்ந்துள்ளதே -சிறுபான்மை அரசியல் காரணங்களுக்காக வெளிப்படையாக இதனைச் சொல்லாவிட்டாலும்- இதற்கு அடிப்படைக்காரணம்.
இந்நிலையில், இயல்பாகவே இடதுசாரித்தன்மை கொண்ட இந்துத்துவ இயக்கங்களுக்கு, பன்முகத்தன்மையையும், சிறுகுழு கலாசாரப்பாதுகாப்பையும், பெண் உரிமைகளையும், தேச நலனையும் முன்னிலைப்படுத்தி இடதுசாரி இயக்கம் ஒன்றைப் பிறப்பித்து அல்லது தத்தெடுத்து பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அரசியல் மட்டுமன்றி சமூகத்தின் அடிமட்டத்திலும் பல தளங்களிலும் இயங்கி வரும் இந்து இயக்கங்களுக்கு இது ஆகக்கூடிய செயல்தான். தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் இதனைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இரு மாநிலங்களுமே புதிய இயக்கங்களும் அரசியல் சமன்பாடுகளும் உருவாக வாய்ப்புகள் உள்ள மாநிலங்கள்; பலகாலங்கள் மாற்றம் இல்லா மாயச்சுழலில் மாட்டித்தவிக்கும் மாநிலங்கள். பலம்பெறும் இந்தியாவின் தென் எல்லைகளுக்கு நீண்ட கால முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள். இந்திய அளவிலும் சரி, இம்மாநிலங்களிலும் சரி, உண்மையான இடதுசாரித்தனத்தை இடதுசாரிகளிடமிருந்து காப்பதும் மீட்பதும் இந்துத்துவத்தின் இன்றைய தலையாய கடமையாகும்.


அருணகிரி

arunagiri_123@yahoo.com

Series Navigation

அருணகிரி

அருணகிரி