ஆய்வும் மனச் சாய்வும்

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்


பொய்களை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை என்ற எங்களுடைய கட்டுரைக்கு எதிர்வினையாக திரு. சதுரகிரி வேள் கடிதம் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

எங்களுடைய கட்டுரையே கற்பக விநாயகத்தின் அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன என்ற கட்டுரைக்கு எதிர்வினையாகும். எனவே, கற்பக விநாயகத்தின் கட்டுரைக்கு அடிப்படையாக அமைந்த அரைகுறை உண்மைகளை அம்பலப்படுத்துவதற்கும், தெளிவான வரலாற்றுக் கண்ணோட்டத்தில் முழுமையான உண்மைகளை வெளிப்படுத்துவதற்காகவும்தான் எங்களுடைய கட்டுரையை எழுதினோம். தமிழகச் சமூக வரலாற்றின் சில சிக்கலான பகுதிகளைப் பற்றி எழுதும் போது அதனால் தங்கள் சமூகம் பாதிக்கப்படுவதாக சிலர் சொல்லிக்கொண்டு, அந்தச் சிக்கலான பகுதிகளைப் பற்றிய ஆய்வுகளுக்கே உள்நோக்கம் கற்பிப்பது சமூக வரலாற்றில் சில வசதிக் குறைவான உண்மைகள் வெளிவந்து விடப் போகின்றனவே என்ற பதற்றத்தில் செய்கின்ற செயலாகும். அல்லது, இது எதிராளிகளின் குரலை ஒடுக்குகின்ற போர்த் தந்திரமாகவும் இருக்கலாம். எங்களுடைய நோக்கத்தில் நாங்கள் தெளிவாகவே இருக்கின்றோம். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதோ, ஜாதி அமைப்பை வலியுறுத்துவதோ, நியாயப்படுத்துவதோ எங்கள் நோக்கமல்ல. தமிழகத்தில் நிலவுகின்ற ஜாதி அமைப்பின் வரலாற்றுப் பின்னணிகள் மற்றும் காரண காரியத் தொடர்புகளைப் புரிந்து கொள்வதும், அவற்றைச் சமூக வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் பார்வைக்கு முன் எடுத்து வைப்பதுமே எங்கள் நோக்கங்களாகும். இவ்வாறு எடுத்து வைக்கும்போது கருத்தியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற சில சக்திகள் பதற்றமடைவது இயல்பே என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், அவ்வாறு பதற்றமடையச் செய்வது எங்கள் நோக்கமல்ல.

தமிழகத்தைப் பொறுத்தவரை பிராமணர் தவிர பிற அனைவரும் சூத்திரர்களே என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படையான ஒரு கருத்தியல் நிலைப்பாடாகும். இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே ஒரு பிரம்மாண்டமான இயக்கம் கட்டமைக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தி வருவதன் விளைவாக இந்திய தேசியமாகட்டும், இந்துத்துவ தேசியமாகட்டும், இடதுசாரி சர்வ தேசியமாகட்டும் அனைத்து இயக்கங்களுமே ஏதோ ஒரு வகையில் இந்தக் கருத்தியல் நிலைப்பாட்டுக்கு “ஆமாம் சாமி” போட்டுக் கொண்டுதான் வருகின்றன. ஆனால், கடந்த கால வரலாற்றின் இயக்கப் போக்கு இவர்களின் கட்டளைக்கு உட்பட்டதல்ல. எழுத்தாளர் புதுமைப்பித்தன் தம்முடைய படைப்புகள் குறித்த விமர்சனங்களை எதிர்கொள்ளும் போது சொன்ன வார்த்தைகளை மேற்கோள் காட்டுவது இங்கு பொருத்தமாக இருக்கும்: “என்னுடைய படைப்புகளை அளப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் என்னுடைய படைப்புகளுக்கு அருகில் வைத்துத் தங்கள் அளவுகோல்களின் அளவுகளைச் சரிபார்த்துக் கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். எங்களுடைய வரலாற்று ஆய்வு குறித்த விமர்சனங்களும் அத்தகையனவே.

தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் வேளாளர்கள் குறிப்பிடப்படுவதாக சதுரகிரி வேள் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியங்களில் வேளாளர் என்ற சொல் பரிபாடலில் ஓர் இடத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வேளாண்மை என்ற சொல் கலித்தொகையிலும், வேளாண்வாயில் என்ற சொல் பொருநர் ஆற்றுப்படையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவைதான் சங்க இலக்கியங்களில் வேளாளர் தொடர்பாக வருகின்ற குறிப்புகள். தொல்காப்பியம் சங்க காலத்தை ஒட்டி கி.பி. 4-5ஆம் நூற்றாண்டில் எழுந்த இலக்கணமாகும். சங்க இலக்கியங்களில் பல இடங்களில் வேளிர் என்ற சிற்றரசர் குலத்தவர் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. தொல்காப்பியத்தில் வேளிர் பற்றி ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. ஆனால், வேளாளர்களைப் பற்றி பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. அது மட்டுமின்றி, நால் வருண அமைப்பில் வைசியர்களுக்கு அடுத்த வருணத்தவராகிய சூத்திர வருணத்தவரை வேளாளர் என்று குறித்துள்ளார் என்று தெரிய வருகிறது. “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்ற நூற்பாவை அடுத்து, “வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” என்ற நூற்பா தொல்காப்பியத்தில் (மரபியல் 78, 81) இடம் பெற்றுள்ளது. எனவே வேளிருக்கும் வேளாளருக்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லை. கி.பி. 4-5ஆம் நூற்றாண்டில் வேளிர் குடியினரில் பெரும் பகுதியினர் (உத்தேசமாக 75 சதமானம்) தமிழக அரச குலத்தில் அல்லது மூவேந்தர் குடியில் கலந்திருக்க வேண்டும். எஞ்சியிருக்கக் கூடிய வேளிர் குலத்தின் பகுதியினர் களப்பிரர்களுடன் மண உறவு கொண்டு வைசிய வேளாள வர்ணங்களில் கலந்திருக்கலாம். வரலாறு என்ற சொல்லே ஓர் ஆற்றின் போக்கு போல நுட்பமும் ஆழமும் செறிந்ததாகும். இதனை ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்பது போல எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது. தொல்காப்பியர் குறிப்பிடுகின்ற வேளாளர் என்ற சொல்லுக்கும் சூத்திர வருணத்தவருக்கும் என்ன தொடர்பு என்று யோசித்தால் ஓர் உண்மை தெளிவாகத் தெரியவரும். சமஸ்கிருதத்தில் தாஸன், தாஸி என்ற சொற்கள் அடிமை மற்றும் வேலைக்காரர்களைக் குறிப்பவை. தஸ்யூ என்ற சொல் ‘வேலைக்காரி மகன்’ அல்லது ‘அடிமைப் பெண்ணின் மகன்’ என்று பொருள்படும். வேளாட்டி என்ற சொல் வேலைக்காரி அல்லது அடிமைப் பெண் என்று பொருள்படும். வேளம் என்ற சொல்லுக்கு ‘சிறை பிடிக்கப்பட்ட உயர்குடிப் பெண்ணின் வாழ்விடம்’ என்று பொருள். எனவே, வேளாட்டி மக்கள் என்பதே வேளாளர் என்ற சொல்லின் உண்மைப் பொருளாகும். இது குறித்து ‘Velir: were they the Velalars’ என்ற கட்டுரையில் (S.D. Nellai Nedumaran and S. Ramachandran. A paper presented at the XXIV annual Congress of the Epigraphical Society of India, Trissur, Kerala, 15th-17th May, 1998.) விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

வேளாளர்களை இழிவுபடுத்துவதற்காக இதைக் கூறவில்லை. வரலாற்றின் இயக்கப் போக்கைப் புரிந்து கொள்வதற்காகத்தான் தவிர்க்க முடியாத வகையில் இதனைக் குறிப்பிடுகின்றோம். கி.பி. 3-4 நூற்றாண்டு அளவில், குறிப்பாகச் சொல்வதென்றால் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அன்றைய நிலையில் தொழில்நுட்பத் தன்மையில் முன்னேறிய புதிய வகையிலான நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்தி, நிலத்தைப் பண்படுத்தித் திருத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்காக வேளாளர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அதன் மூலம் தங்களையும் உயர்த்திக் கொண்டார்கள். அக் காலகட்டத்திலிருந்துதான் வேளாண்மை என்ற சொல் விவசாயத்தையும் குறிக்கப் பயன்படுவதாயிற்று. இதே காலப்பகுதியைச் சேர்ந்த ‘வேளாண் வேதம்’ எனப்படுகின்ற திருக்குறளில் கூட, வேளாண்மை என்ற சொல் உபகாரம் செய்தல், உபசரித்தல் என்ற பொருளில்தான் வருகிறதே தவிர விவசாயம் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், திருக்குறள் சித்திரிக்கின்ற சமூகம் மூவேந்தர்கள் ஆதிக்கத்தின் கீழிருந்த தமிழ்ச் சமூகம் அல்ல. களப்பிரர் காலத்தில் வைசியர், வேளாளர் கூட்டணி ஆதிக்கத்தில் இருந்த தமிழ்ச் சமூகம் ஆகும். நாம் முன்னரே குறிப்பிட்டது போல கி.பி. 4-5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியத்தில் மேல் வருணத்தவர்களாகிய மூன்று வருணத்தவருக்கும் மட்டுமே உரியனவாக இருந்த திருமணச் சடங்குகள் கீழ் வருணத்தவராகிய வேளாளர்களுக்கும் உரியவை ஆகிவிட்டன என்று பொருள்படும் ஒரு நூற்பா இடம் பெற்றுள்ளது (“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கும் ஆகிய காலமும் உண்டே” – தொல்காப்பியம், கற்பியல் நூற்பா 3). களப்பிரர் ஆட்சி என்பது தமிழ்ச் சமூக அமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை நிகழ்த்திக் காட்டிய ஆட்சியாகும். சொல்லப்போனால் அதை ஒரு ஜனநாயக எழுச்சி என்றே சொல்லலாம். கூற்றுவ நாயனார் என்ற களப்பிர அரசர், முடி சூடாமல் அரசாண்டதாகச் சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார். “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என ஜனநாயகத்தில் அலங்காரமாகக் குறிப்பிடுவதைப் போன்றே, களப்பிரர்களும் முடிசூடா மன்னர்களாக இருந்துள்ளனர். அதுவரை ஆறில் ஒரு பங்கு நில வருவாய் வரியாக (அரசிறையாக) வசூலிக்கப்பட்டு வந்ததை மாற்றி எட்டில் ஒரு பங்காக களப்பிரரே நிர்ணயித்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இத்தகைய வரிக் குறைப்பு நடவடிக்கைகள் புதிய நிலங்களை விவசாயத்திற்குக் கொண்டுவருவதற்கான ஓர் யுக்தியாக மட்டுமின்றி சமூக அந்தஸ்தில் அதுவரை தாழ்வாகக் கருதப்பட்டு வந்த வேளாளர்களையும் அதிகாரம் மிக்க பிரிவாக மாற்றியது. வணிகரும் இந்தக் கூட்டணியில் இடம் பெற்றதால் வேளாளர்களில் பலர் கூலவாணிகர்களாக (இன்றைய வேளாண் செட்டியார்கள் போல)வும் உயர்ந்துள்ளனர். கொற்றக்குடை நிழலில் வீற்றிருக்கின்ற அரசர்களைக் கூட ஏர்க்கலப்பையின் நிழலில் ஆசுவாசம் அடைவதற்கு வழி செய்தவர்கள் உழவர்களே என்று பொருள்படும் திருக்குறள் இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும் (“பல குடை நீழலும் தம் குடைக் கீழ்க் காண்பார் அலகுடை நீழலவர்”). இந்த வரலாற்றின் பரிணாம வளர்ச்சிப் போக்கு கி.பி. 13ஆம் நூற்றாண்டில் முழுமை பெற்றது. இது குறித்து நாங்கள் ஏற்கனவே மேற்கோள் காட்டிய வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் என்ற நூலின் (ஆசிரியர்: எஸ். இராமச்சந்திரன், பதிப்பு: உலகத் தமிழாய்வு நிறுவனம், சென்னை) பக்கம் 62 முதல் 72 வரை விவாதிக்கப்பட்டுள்ளது. போர்களில் ஈடுபட்டு பலரது உயிர் பறிபோவதற்குக் காரணமாக இருக்கின்ற க்ஷத்திரிய வருணத்தவரை விட நிலத்தில் பயிர் செய்து உயிர் காக்கின்ற சூத்திர வருணத்தவர்கள் உயர்வானவர்கள் என்ற குறிப்பு கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை முதற்கொண்டு வீர சைவம், ராமானுஜரின் வைணவம் ஆகிய சமயங்களைச் சார்ந்த நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. எனவே, ஒவ்வொரு வருணத்தவருக்கும் ஜாதியினருக்கும் அவரவருடைய வரலாற்றுப் பங்கு குறித்துப் பெருமிதம் கொள்வதற்கு உரிமையுண்டு என்பதை நாங்கள் மறுக்கவில்லை.

கி.பி. 1637ஆம் ஆண்டில் (சகாப்தம் 1559 ஈஸ்வர வருஷம் மகர ஞாயிற்று பூர்வ பக்ஷத்து சப்தமியும் குரு வாரமும் அஸ்வதி நட்சத்திரமும் பெற்ற நாளில்) அரித்துவாரமங்கலத்தில் (தஞ்சை மாவட்டத்தில் உள்ளது) பாதாளீஸ்வர சுவாமி கோயிலில் வேளாளர்கள் கூடி கட்டளை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். அதனைச் செப்பேடாகவும் பொறித்து வைத்துள்ளார்கள். அரித்துவாரமங்கலம் சிவன் கோயிலிலுள்ள இச் செப்பேட்டை தஞ்சை மாவட்ட பழங்கலைப் பொருள் பதிவு அலுவலராக இருந்த திரு. கு. தாமோதரன் மற்றும் தொல்லியல் அலுவலர் ச. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 1980ஆம் ஆண்டில் பார்வையிட்டு வாசித்துள்ளனர். அவர்களுடைய வாசிப்பில் வேளாளர்களின் வம்ச வழிப் பெருமையைக் கூறும் வகையில் அமைந்துள்ள ஒரு வாசகம்: “ஆடை கீறி சிலந்தி காட்டியும் அரவின் வாயில் கையிட்டும் பாணன் பிணம் சுமந்தும் பறையனோடு உண்டும் சூலி முதுகில் சோறிட்டும் நீலி பழி கழுவியும் முளைவாரி அன்னமிட்டும் முன்கையை சந்தனமாய் அரைத்தும் சேர சோழ பாண்டியர் மூவரை சிறை வைத்தும் நாவிசைத்த தமிழ் கொண்டும் மேகம் தளை விடுத்தும்” என்று அமைந்துள்ளது. இவற்றில் மற்ற புகழ்மொழிகள் வேளாளர்களுடைய பெரும்பாலான ஆவணங்களில் குறிப்பிடப்படுபவையே ஆகும். (வேளிரின் கொடை அல்லது வீரச் செயல்கள் எவையும் வேளாளர்களால் குறிப்பிடப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்க.) ஆனால், சேர சோழ பாண்டியர் மூவரைச் சிறை வைத்துத் தமிழ் பாட வைத்தவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டவர்கள் களப்பிர மன்னர்களே ஆவர். யாப்பருங்கலக்காரிகை விருத்தியுரையில் மூவேந்தர்களும் அந்தத் தருணத்தில் பாடிய பாட்டு என்ற குறிப்புடன் மூன்று வெண்பாக்கள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. எனவே, வேளாளர்கள் களப்பிரர்களைத் தங்கள் முன்னோர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு வலிமையான வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

சங்க காலத்திலிருந்தே மறவர்கள் இலக்கியங்களிலும் ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள் என்றும், நாடார்கள் அதுவும் ஈழவர் குலத்தவராக பெரியபுராணத்தில் 12ஆம் நூற்றாண்டில்தான் குறிப்பிடப்படுகிறார்கள் என்றும் சதுரகிரி வேள் குறிப்பிடுகிறார். மறவர் என்ற சொல்லினை இன்றைய மறவர் சமூகத்தவருடன் தொடர்புபடுத்துவதில் இருக்கின்ற நியாயம் சான்றோர் என்ற சொல்லை சான்றார் (சாணார்) சமூகத்தவருடன் தொடர்புபடுத்துவதில் இல்லை என்று தாங்களாகவே முடிவு செய்து வாதம் செய்வது ஆதிக்க மனப்பான்மையையே காட்டும். தமிழக சாதி அமைப்பைக் குறித்த தெளிவான வரலாற்றுப் பார்வை இருந்தால்தான் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். ஆதிக்க மனப்பான்மை என்ற கறுப்புக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தால் பல உண்மைகள் கூட புகை படிந்தும், இருள் படிந்தும்தான் தெரியும். வலங்கை உய்யக்கொண்டார், எழுநூற்றுவர், முன்னூற்றுவர் போன்ற பல்வேறு வித சான்றோர் குலப் படைப் பிரிவினர் பற்றி கல்வெட்டுகளும், மகாவம்சம் போன்ற பெளத்த நூல்களும் குறிப்பிடுகின்றன. சான்றார், சான்றவர் (தன்மை பன்மையில் குறிப்பிடும்போது சான்றாரோம், சான்றோம்) போன்ற பல வழக்குகள் கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வெட்டுகளில் இடம்பெறுகின்றன. நல்லார், நல்லவர், நல்லோர் – இந்த மூன்று சொற்களுமே ஒரே பொருளைத்தான் குறிக்கும். அது போலத்தான் சான்றார், சான்றவர், சான்றோர் என்பனவும். சால்பு என்ற தன்மையின் அடிப்படையில் இச் சொற்கள் உருவாகியிருக்கலாம். மிக உயர்ந்த அறப்போர் முறையிலும், ஆட்சிக் கலையிலும் தேர்ச்சி பெற்ற வீரர்களே சான்றோர் எனப்பட்டனர். (களப்பிரர் காலத்தில் இச் சொல்லுக்கு நேர்ந்த பொருள் மாற்றங்கள் முதலியவை தனி ஆராய்ச்சிக்குரியவை.) ஈழவர்களில் மிக உயர்ந்தவர்களுக்கு ‘சான்றார்’ (‘சாந்நார்’) என்ற பட்டம் வழங்கப்பட்டதுண்டு. கேரளத்தில் அத்தகைய பட்டம் பெற்றவர்கள் கூட கேரள மாநிலத்தைப் பொருத்தவரை அவர்கள் தங்களை சான்றோர் குலத்தவர் என்று உரிமை கொண்டாடுவதோ அல்லது சான்றோர் குலத்தவருடன் உறவு வைத்துக் கொள்வதோ இல்லை. தமிழகத்து ஈழவர் குலத்தைப் பொருத்தவரை சோழிய வேளாளர், இல்லத்துப் பிள்ளைமார், ஈழவர் என்றுதான் அழைத்துக் கொள்கிறார்களே தவிர, அவர்களுக்கும் சான்றோர் குலத்தவருக்கும் இன்றைய நிலையில் ஒட்டுறவு இல்லை. 1659ஆம் ஆண்டைச் சேர்ந்த ஏசு சபைப் பாதிரியாராகிய ப்ரோயென்சா (Proenza) என்பவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் சோழ மண்டலத்தின் மீது பீஜப்பூர் சுல்தானின் படைகள் படையெடுத்தபோது ‘நோபிள் கேஸ்ட் பீபிள்’ (Noble caste People) ஆயிரக்கணக்கில் தீக்குளித்து இறந்தார்கள் என்றும், அவர்களே தமிழ்நாட்டின் க்ஷத்திரிய வருணத்தவராகிய ராஜாக்கள் குலத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். நோபிள் கேஸ்ட் பீபிள் என்பது சான்றோர் குல மக்கள் என்றே பொருள்படும். ‘Tamilagam in the 17th Century’ என்ற நூலில் திரு R. சத்தியநாத அய்யர் இச் செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற பல செய்திகளை உள்ளடக்கி ‘Ancient Tamil Monarchy and the Sethupathi Kings’ என்ற கட்டுரை (Authors: S. D. Nellai Nedumaran & S. Ramachandran, published in the Journal of the Epigraphical Society of India, Vol 26, Mysore, 2000) எழுதப்பட்டுள்ளது. இதே போன்ற பல ஆய்வுக் கட்டுரைகள் இப் பொருள் தொடர்பாக வெளிவந்துள்ளன. அவற்றில் கிடைக்கக் கூடியதை படித்துப் பார்த்துவிட்டு கேள்விகளை எழுப்புவது நல்லது. “எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரின் குறளைத்தான் இவ் விஷயத்தில் நாங்கள் மேற்கோள் காட்ட விரும்புகின்றோம். சைவ நாயன்மார்களின் வரலாற்றைத் தொகுத்து வழங்கிய சேக்கிழார் பெருமான் தொண்டை மண்டல வேளாளர் சமுகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தம் சாதிக்குச் சார்பாகத்தான் பெரியபுராணத்தையே எழுதியுள்ளார் என்று எண்ணுவதோ அதனைப் புறக்கணிப்பதோ உசிதமான செயலாக இருக்குமா? அத்தகைய செயல்களை “தீ பரவட்டும்” என்று முழங்கிய பெரியாரிஸ்டுகள் வேண்டுமானால் செய்யக்கூடும். எதிராளியின் கருத்துகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், ஏளனம் செய்வதும் ஆய்வாளர்கள் செய்யக் கூடாதவை. அதை நாங்கள் நிச்சயமாகச் செய்ய மாட்டோம்.

nellai.nedumaran@gmail.com

Series Navigation