ஆன்மீகமும் யூத எதிர்ப்பும் பற்றிய உரையாடல்

This entry is part 10 of 14 in the series 19990902_Issue


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பலவேறு காலகட்டங்களில் பீட்டர் பக்கி , ஆலென் வீக்லென்ட் இருவருடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு.

பக்கி: உங்கள் பெயர் அறிவியலுக்கு மறுபெயர் போல இன்று பேசப்படுகிறது. ஆனால் உங்கள் பெயர் ஆன்மீக தொடர்பான கேள்விகளுடனும் மிக அதிகமாக இணைத்துப் பேசப்படுகிறது. இது முரண்பாடாக இருக்கிறது. ஏனெனில் அறிவியலும் சமயமும் ஒன்றுக்கொன்று எதிரானதாக கருதப்பட்டுவரும் காலத்தில் இந்த அசாதாரணமான சூழ்நிலையை எவ்வாறு அணுகுகிறீர்கள்?

ஐன்ஸ்டீன்: அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றுக்கொன்று எதிரானதாக பார்க்கவேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். உண்மையில் இந்த இரண்டுக்கும் மிக நெருங்கிய உறவு இருக்கிறது. இன்னும், ஆன்மீகமற்ற அறிவியல் முடமென்றும், அறிவியலற்ற ஆன்மீகம் குருடென்றும் நினைக்கிறேன். இரண்டும் முக்கியமானவை. இரண்டும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் கருதுகிறேன். அறிவியலிலும் ஆன்மீகத்திலும் இருக்கக்கூடிய உண்மைகளைப்பற்றி யோசிக்காதவன் இறந்தே போகலாம்.

பக்கி: ஆக உங்களை ஆன்மீகவாதி என்று கருதிக்கொள்கிறீர்களா?

ஐன்ஸ்டீன்: நான் மர்மத்தை நம்புகிறேன். வெளிப்படையாக சொல்லப்போனால், இந்த மர்மத்தைப் பெரும் பயத்தோடேயே எதிர்கொள்கிறேன். இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், இந்தப் பேரண்டத்தில் நம்மால் அறிய முடியாததும், நம்மால் புக முடியாததுமான நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த வாழ்வில் மிக அழகான விஷயங்களை மிகவும் கொச்சையான வகையிலேயே அனுபவிக்கிறோம் என்றும் நினைக்கிறேன். இந்த மர்மங்களைப் பொறுத்தவரையில்தான் நான் என்னை ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ளவன் என்று கூற முடியும். ஆனால் இந்த விஷயங்களை மிக ஆழமாக உணர்கிறேன். மக்களுக்குப் பரிசுகளும் தண்டனைகளும் வழங்கும் கடவுளையோ, நமது எண்ணத்தை மாற்றும் ஒரு கடவுளையோ என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

பக்கி: ஆக நீங்கள் கடவுளை நம்பவில்லை?

ஐன்ஸ்டீன்: இதைத்தான் அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து செயல்படவேண்டும் என்று நான் சொல்வது. ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருக்கிறது, அதனதன் இடத்தில் அதை வைத்துப் பார்க்க வேண்டும். ஒரு சிந்தனாவாத இயற்பியல் அறிவியலறிஞரை எடுத்துக் கொள்வோம். இவருக்குப் பேரண்டத்தின் வெவ்வேறு விதிகளும் அந்த விதிகள் செலுத்தும் சூரியனும் சந்திரனும் வெவ்வேறு கிரகங்களின் பாதைகளும் அத்துப்படி என்று கொள்வோம். இப்போது இத்தகைய விதிகளை படித்து புரிந்துகொண்ட அவர், இந்த பாதைகளையும் இந்த விதிகளையும் தன்னிஷ்டத்துக்கேற்ப மாற்றும் ஒரு கடவுளை எப்படி நம்பமுடியும்?

முடியாது. இயற்கையின் விதிகள் பேப்பரில் மட்டுமல்ல, பல்வேறு சோதனைகள் மூலம் செயல்பாட்டிலும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இயற்கை விதிகளில் இடைபுகுந்து இஷ்டத்துக்கு விளையாடும் சக்திபடைத்த மனிதத் தோற்றம் உள்ள கடவுள் இருப்பதாக நான் நம்பவில்லை. நான் முன்பே சொன்னதுபோல், மிகவும் அழகானதும், உள்ளுணர்வுமிக்கதுமான ஆன்மீக உணர்வு இந்த இயற்கை விதிகளின் உள்ளே இருக்கும் மர்மத்தை உணர்வதுதான் என்று நினைக்கிறேன். இந்த மர்மமே உண்மையான அறிவியலின் பெரும் சக்தி. கடவுளைப்பற்றி ஒரு கருத்துருவாக்கம் இருந்தே ஆகவேண்டுமாயின் அது இந்த உள்ளார்ந்த ஒளிதான். எத்தனையோ பேர் தங்கள் மனதில் உருவாக்கிவைத்திருக்கும் மனித உரு அல்ல. சுருங்கச்சொல்லவேண்டுமாயின், நம்முடைய வலிமையற்ற, வளமையற்ற மனத்தால் உணரும் இந்த அளவற்ற மேலான ஒளி சின்னச்சின்ன விஷயங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை பார்த்துப் நான் கொள்ளும் பணிவான பாராட்டுதான் எனது மதம்.

பக்கி: பெரும்பாலான மனிதர்கள் தங்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க மதம் தேவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஐன்ஸ்டீன்: இல்லை. நிச்சயமாக இல்லை. இறந்தபின் ஒரு மனிதனுக்கு தண்டனை கிடைக்கும் என்பதற்காக, அவனது வாழ்வின் தினசரி செயல்கள் கட்டுப்படுத்தப் படவேண்டும் என்றோ, அவன் இறந்தபின் அவனுக்கு பரிசுகள் கிடைக்கும் என்பதற்காக ஒரு மனிதன் வாழும்போது சில விஷயங்களை செய்யவேண்டும் என்றோ நான் நம்பவில்லை. இது பொருளற்றது. தனி மனித ஒழுக்கத்துக்கு ஒருவன் கொடுக்கும் முக்கியத்துவமும், மற்றவர்கள் பற்றிய அக்கறையும் தான் ஒரு நல்ல வாழ்வுக்கு வழிகாட்டுதலாக இருக்கவேண்டும். கல்வி இதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆன்மீகம், வாழ்வதைப்பற்றிய பயத்தோடோ, சாவதைப்பற்றிய பயத்தோடோ சம்பந்தப்பட்டிருக்கக்கூடாது. அது அறிவார்ந்த சிந்தனைக்கான முயற்சியாய்த் தான் இருக்கவேண்டும்.

பக்கி: இருந்தாலும், இத்தகைய உங்கள் சிந்தனைக்குப்பின்பும், உங்களைப் பொதுமக்கள் யூதராகவே அடையாளம் கொள்கிறார்கள். யூதமதம் நிச்சயமாக ஒரு பாரம்பரிய மதம்.

ஐன்ஸ்டீன்: உண்மையில் என்னுடைய முதல் சமயச்சார்பான கல்வி கத்தோலிக்க மதம் பற்றியது. நான் சென்ற முதல் ஆரம்பப்பள்ளி கத்தோலிக்க பள்ளியாக அமைந்துபோனது ஒரு தற்செயலான விஷயம். உண்மையில் நான் ஒருவன் தான் அந்தப்பள்ளியிலேயே யூத மாணவன். இது எனக்கு நல்லதாய்ப்போய்விட்டது. இதனால் என்னை நானே வகுப்பிலுள்ள மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளவும், எனக்குப்பிடித்த தனிமையிலுள்ள சௌகரியத்தை அனுபவிக்க உதவியாயும் போய்விட்டது.

பக்கி: உங்களுடைய முந்தைய மத-எதிர்ப்பு பேச்சுக்களையும், உங்களை நீங்களே யூதராக அடையாளப்படுத்திக்கொள்வதையும் முரண்பாடாக பார்க்கவில்லையா?

ஐன்ஸ்டீன்: அப்படிப்பார்க்க அவசியமில்லை. யார் யூதன் என்று நிர்ணயம் பண்ணுவதுகூட எளிதல்ல. அதை விளக்குவதற்கு ஒரு நத்தையை உதாரணம் காட்டலாம். தன்னுடைய வீட்டை எப்போதும் தன்னுடைய முதுகிலேயே தாங்கிக்கொண்டு செல்லும் ஒரு நத்தை கடலின் அருகில் தன்னுடைய வீட்டில் முடங்கிக் கிடப்பதை பார்க்கலாம். நத்தை ஓட்டை அதனிடமிருந்து எடுத்துவிட்டோம் என்று கற்பனை செய்யுங்கள். பாதுகாப்பற்ற அதன் உடலை நாம் நத்தை என்று சொல்லமாட்டோமா? அதே போல ஒரு யூதன், தனது வாழ்வின் வழியில், தனது மத நம்பிக்கையை இழந்தாலும், வேறொரு மத நம்பிக்கையை ஏற்றுக்கொண்டாலும் யூதனாகவே இருக்கிறான்.

பக்கி: நீங்கள் யூதனாக இருந்ததால், ஜெர்மனியில், நாஜிகளால் தாக்கப்பட்டீர்கள். யூதர்கள் வரலாறு முழுமைக்கும் ஏன் வெறுக்கப்பட்டார்கள் என்பதற்கான விளக்கம் ஏதேனும் உண்டா உங்களிடம்?

ஐன்ஸ்டீன்: சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகள் உள்ள எந்த நாட்டிலும் யூதர்கள் அருமையான பலிகடாவாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தௌ¤வாக இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் விஷயம் மக்கள் தொகையில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு யூதர்கள் இல்லாத தேசங்கள் உலகத்தில் மிகக் குறைவு என்பது. இரண்டாவது தங்களை பாதுகாத்துக்கொள்ளமுடியாத அளவுக்கு அவர்கள் எந்த ஊரிலும் சிறுபான்மையாகவே இருக்கிறார்கள் என்பது. தங்களது தவறுகளை மக்கள் பார்க்காத வண்ணம், மக்கள் கவனத்தைத் திசை திருப்ப கம்யூனிஸம், சோஷலிஸம் என்று கோட்பாடு பேசி, யூதர்களை குறைசொல்வது அரசாங்கங்களுக்கு எளிதாக இருக்கிறது.

உதாரணமாக, முதலாம் உலகப்போருக்குப்பின்னர், பல ஜெர்மானியர்கள் உலகப்போரின் ஆரம்பத்துக்கு யூதர்களை காரணமாக்கி குறை சொன்னார்கள். பின்னர் போரில் ஜெர்மனி தோற்றதற்கும் யூதர்களையே குறை சொன்னார்கள். இது ஒன்றும் புதிதல்ல. வரலாறு முழுவதும், கிணற்று தண்ணீரில் விஷம் கலப்பது, மதபலியாக குழந்தைகளை கொல்வது, இன்னும் இது போன்று எத்தனையோ தீய விஷயங்கள் யூதர்கள் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். பொறாமைதான் இதற்கு பெரும் காரணம். ஏனெனில் எல்லா நாடுகளிலும் யூதர்கள் சிறுபான்மையாக இருந்தாலும், பொது வாழ்வின் பெரும் புள்ளிகளில் அளவுக்கு அதிகமாகவே யூதர்கள் இருந்திருக்கிறார்கள்


நன்றி: http://www.aracnet.com/~atheism/hist/einbucky.htm

Series Navigation<< ஜெயலலிதா பிரதமரானால்ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins) >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *