சந்திரவதனா
இது ஒரு நினைவுக்கோலம். எந்தவிதக் கற்பனையும் கலக்காத உண்மையின் வடிவம். பாதை திறந்த பின் எழுந்த தாயக தரிசன ஆசையில், இது அவசியந்தானா, என மனதின் ஒரு மூலையில் அச்சத்துடனான கேள்வி தொக்கி நிற்க.. வன்னி எப்படி இருக்கிறது? போர் எப்படி எமது மக்களைச் சிதைத்திருக்கிறது? நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்…? என்று பார்க்க வேண்டும், உதவ வேண்டும் என்ற ஆசையில் தொடங்கப் பட்ட பயணம் இது. அங்கு போன பின்தான் பயணத்தின் அவசியம் தெரிந்தது. 12.5.2002 இலிருந்து 9.6.2002 வரையிலான அங்கு கழிந்த பொழுதுகள் மிகவும் அர்த்தம் நிறைந்தவை. அந்த மணிப்பொழுதுகளில் ஒரு துளி இது..!
யேர்மனிய அவசரம் போல் விரையாமல் இங்கு பொழுதுகள் ஏ9 பாதை போல நீண்டிருந்தன. கிளிநொச்சியில் அமைந்திருக்கும் வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனப் பிராந்தியச் செயலகத்தின் செயற்கை உறுப்புத் தயாரிக்கும் பட்டறையில் தகரங்களை “ணொங்..” “ணொங்..” கென்று செவிப்பறை அதிர அறையும் சத்தம் ஓய்ந்து அரை மணி நேரமாகியிருந்தது. சுட்டெரிக்கும் வெயில் மட்டும் விட்டுப் போக மனமின்றி இன்னும் கொளுத்திக் கொண்டேயிருந்தது.
முற்றத்தில் நான் அமர்ந்திருந்தேன். தனிமை என்று சொல்ல முடியாது. அடிக்கடி வெண்புறாவின் உறவுகளில் யாராவது வந்து “அன்ரி” என்றும் “அக்கா” என்றும் அன்போடு அழைத்து பாசத்தோடு பேசிச் சென்றார்கள்.
சற்று முன்தான் சுந்தரம் வந்தான். “அன்ரி…” என்று அவன் கூப்பிடும் போதே என் நெஞ்சுக்குள் பிசையும். வேதனை சுமந்த அவன் கண்களின் நோக்கலில் பாசம் பீரிடும்.
“என்ன..! சுந்தரம் சொல்லுங்கோ. தேத்தண்ணி குடிச்சிட்டிங்களோ?”
“ஓம் அன்ரி.. எனக்குக் கவலையா இருக்கன்ரி.”
……
“என்ரை அம்மா அப்பா எல்லாரையும் பார்த்து ஏழு வருசமாச்சு அன்ரி.. அதுதான். அவையளை ஒருக்கால் பாத்தனெண்டால் ஆறுதலாயிருக்கும் போலை இருக்கு.”
“கவலைப் படாதைங்கோ சுந்தரம். வழி கிடைக்கும்..”
“மற்றாக்களை எல்லாம் அம்மாமார் வந்து பாத்திட்டுப் போயிட்டினம்…”
அவனது வேதனையை என்னால் உணர முடிந்தது. பட்டறை வேலைகளை முடித்து விட்டு கரடிப் போக்குச் சந்தி வாய்க்காலில் குளித்து விட்டு வந்திருந்தான். எப்போதும் போல துப்பரவாக உடை அணிந்திருந்தான். ஏழு வருசத்துக்கு முதலே தொடையோடு ஒரு காலை இழந்து விட்டான். தகரத்தில் செய்த செயற்கைக் காலை அவன் அணிந்திருந்தாலும் இழுத்து இழுத்து அவன் நடப்பதைப் பார்க்கும் போது தொடையோடு கால் இல்லை என்பதை உடனேயே உணர்ந்து கொள்ளலாம்.
“உங்கடை கால் போனாப் போலை நீங்கள் இன்னும் அம்மாவைச் சந்திக்கேல்லையோ….?”
“இல்லை அன்ரி. இப்ப நாட்டிலை பிரச்சனை இல்லை எண்டாலும் அம்மாவையள் அம்பாறையிலை இருக்கிறதாலை போய் வாறதிலை கொஞ்சம் சிக்கல்”
“கால் போனதாலை இன்னும் கவலையா இருக்கிறீங்களோ..?”
“இல்லை அன்ரி. எனக்கு இப்ப ஒரு கால் இல்லை எண்ட நினைவே வாறேல்லை. எனக்கது பழகிப் போட்டுது. ”
“கால் போன உடனை உங்கடை உணர்வுகள் எப்பிடி இருந்திச்சு சுந்தரம்?”
“போன உடனை எனக்கு சாகலாம் போலை இருந்திச்சு. இப்ப எனக்கு அப்பிடியான ஒரு உணர்வும் இல்லை. அம்மாவை அண்ணாவையை எல்லாம் ஒருக்கால் பார்க்கோணும்…!”
வேதனை அவன் முகத்தில் அப்பியிருந்தது. அவனது கண்கள் எனது கண்களுக்குள் நேசமாக ஊடுருவி எனது தாய்மையைச் சீண்டின. ஏனோ என் மனச் சுவர்கள் வேர்த்து கண்கள் பனித்தன.
இப்படித்தான் இவனுக்குள் உள்ளது போலத்தான் இந்த வெண்புறா செயற்கைக் கால் திட்ட பிராந்தியச் செயலகத்தில் கடமையாற்றும் 32 உறவுகளுக்குள்ளும் ஒவ்வொரு சோகக் கதை. சிலநாட்களாக மட்டும் அவர்களோடு பழகிக் கொண்டிருக்கும் என்னிடம் வந்து தமது துயர்களையும், சந்தோசங்களையும், தோல்விகளையும், சாதனைகளையும் ஒரு மகவு தனது தாயிடம் சொல்வது போல சொல்வார்கள். அவர்களுடனான அந்தப் பொழுதுகள் மிகவும் அர்த்தம் நிறைந்தவை.
எனக்குத் தனிமை தெரிவதில்லை. அவர்கள் விட்டுப் போகும் சமயங்களில் நான் வெண்புறாவின் முன்றலில் வாயிலோடு ஒரு ஓரமாக உயர்ந்து பருத்து அழகாக நிமிர்ந்திருக்கும் ஆண்பனையிடமோ அல்லது எனக்காக ஒதுக்கப் பட்ட அறையின் தகரக் கூரையின் மேல் கிளைகளைப் பரப்பி வைத்திருக்கும் பக்கத்துச் சிறிய கோயிலில் விழுதுகள் பதித்து நிற்கும் அரசமரத்திடமோ அல்லது பட்டறையின் முன் அசைந்தாடிக் கொண்டிருக்கும் சஞ்சீவி மரத்திடமோ அல்லது பட்டறையின் பின்னால் எட்டியும் ஒட்டியும் நின்று ஓராயிரம் கதை சொல்லும் புளிய மரத்திடமோ லயித்துப் போய் விடுவேன்.
இன்று எனது புளியமரத்தின் மீதான லயிப்பு, அதை புளியமரம் மீதான லயிப்பு என்று சொல்வதை விட, அந்தப் புளியமரத்தின் அசைவில் கிளறப்பட்ட எனது பாடசாலைப் பருவத்து வாழ்க்கை மீதான லயிப்பில் நான் எங்கோ சென்றிருந்தேன்.
நான் அரிவரியிலிருந்து “கபொத” உயர்தரம் வரை பயின்ற வடமராட்சி இந்துமகளிர் கல்லூரியிலும் பின்பக்க விளையாட்டு மைதானத்தில் கிளை பரப்பியபடி இப்படித்தான் ஒரு பெரிய புளியமரம். அதன் அடி வெள்ள வாய்க்கால் கடந்து அடுத்த காணிக்குள். முள்ளுக்கம்பியைப் பிரித்து வெள்ள வாய்க்காலுக்குள் இறங்கி அந்தப் புளிய மரத்தின் குருத்து இலையில் தொடங்கி பூ, பிஞ்சு, காய்கள் என்று சுவைத்ததும் “முனி…, பிள்ளைபிடிகாரன்… என்ற கூக்குரல்களினால் குடல் தெறிக்க ஓடியதும் ஒரு பருவம். வீட்டிலிருந்து களவாக உப்பும் தூளும் கொண்டு வந்து அதே புளியங்காய்களைச் சுவைத்தது இன்னொரு பருவம். எல்லாவற்றையும் விடப் பசுமையாக மனதில் பதிந்திருப்பது அதன் கீழ் இருந்து அரிவரியிலிருந்து என்னோடு கூடவே வந்த நால்வருடன் சேர்ந்து நாம் ஐவருமாகக் கதையளந்ததுதான்.
அந்த ஐவரில் அவளும் ஒருத்தி. நாங்கள் ஐவரும் எப்போதும் நட்பாகவே இருந்தாலும் அவள் எனக்கு எப்போதும் பிரத்தியேகமாகவே தெரிந்தாள். உயரத்தில் நாமிருவரும் கிட்டத்தட்ட ஒரேயளவு என்பதால் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கைக்காக வரிசைப் படுத்தப் படும் போது நாம் பக்கத்துப் பக்கத்திலேயே வருவோம். இருப்போம்.
அவளுடனான அந்தப் பிரத்தியேகமான உண்மையான நட்பு, அது எப்போ எப்படி வந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவளுக்கு அப்பா இல்லை என்பது சாவைப் பற்றிய அதிக பிரக்ஞை இல்லாத வயதிலேயே எனக்குத் தெரிந்தது. சக்கடத்தாரின் மகள் என்று எல்லோரும் சொல்வார்கள். சக்கடத்தார் ஐந்து பெண்களைப் பெற்று விட்டு திடீரென்று ஒருநாள் அவள் அம்மாவை அம்போ என்று விட்டு விட்டு இறந்து விட்டார். இவள் கடைக்குட்டி.
எப்படியும் அவள் வீட்டில் கஸ்டம் இருந்திருக்கும். ஆனால் கஸ்டத்தின் ரேகையை அவள் ஒருபோதும் யாருக்கும் காட்டியதில்லை. கடைக்குட்டி என்ற செல்லம் அவள் முகத்தில் தெரிந்தாலும் அதை அவள் துர்ப்பிரயோகம் செய்ததில்லை. அவள் அக்காமார் அவளை அப்பா இல்லை என்ற குறை தெரியாமல் மட்டுமல்ல மிக நேர்த்தியாகவும் வளர்த்தார்கள் என்பது அவளைப் பார்த்தாலே தெரியும். காலையிலிருந்து மாலைவரை அவளோடு அருகமர்ந்துதானே எனது பாடசாலை வாழ்க்கையை அனுபவித்தேன். ஒருநாள் அவள் ஒரு பொய் சொல்லியோ அல்லது வகுப்பில் யாரையாவது ஏமாற்றியோ நான் பார்த்ததில்லை. அதையெல்லாம் அப்போது நான் நினைத்ததில்லை. இப்போ நினைத்துப் பார்க்கிறேன். அவளின் நற்குணம் தெரிகிறது. அவளின் திறமையைப் பார்த்து நேர்த்தியைப் பார்த்து பொறாமைப் பட்டவர்கள் உண்டு. அவள் யாரையாவது பார்த்துப் பொறாமைப் பட்டாளா..? அப்படியெதுவும் என் நினைவில் இல்லை.
சந்தி…..! நான் டொக்டரா வருவன். அப்படித்தான் எனக்குத் தெரிந்த நாளிலிருந்து அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். அதனால் “கபொத” உயர்தரத்தில் நான் பிரயோககணிதமும், தூயகணிதமும் படிக்கையில் அவள் எழுந்து உயிரியல் வகுப்புக்கும், தாவரவியல் வகுப்புக்கும் போய் வருவாள்.
அவளுக்குள் இருந்த இன்னொருத்தியை சிவகுமாரனின் மரணத்தின் போதுதான் பார்த்தேன். சிவகுமாரனின் மரணம் எங்கள் எல்லோரையும் பாதித்திருந்தது. ஆனால் அது அவளுள் ஏற்படுத்திய பாதிப்பு எனக்கு சற்று வித்தியாசமானதாக நியமாக அவளை வாட்டுவதாகத் தெரிந்தது. அவளுக்குள் எப்போதும் இருந்த உறுதி சற்று அதீதமாகத் தெரிந்தது. ஆனால் அவள் டொக்டராக வருவாள் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இருக்கவில்லை. அதே கனவோடுதான் அவள் தொடர்ந்தும் படித்தாள். பாடசாலை வாழ்க்கை முடியப் போகும் காலங்களில் அதே புளியமரத்தின் கீழ் இருந்தும், இன்னும் தள்ளி வந்து விளையாட்டு மைதானத்தின் அடுத்த பக்கத்தில் இருக்கும் அப்பா கடை வேலியோடுள்ள கல்லில் இருந்தும் வாய் சிவக்க அப்பா கடைச் சோளப் பொரியைச் சுவைத்த படி நிறையப் பேசினோம். பிரியப் போகும் சோகத்தை மறக்க பசுமை நிறைந்த நினைவுகளே… பாடினோம்.
பாடசாலை முடிந்து பிரிந்த போதும் அவள் டொக்டர்தான் என்ற கனவும் நினைவும் எனக்குள்ளும் இருந்தது. 1983 இல் அவள் உண்ணாவிரதம் இருக்கிறாள் என்ற செய்தி என் காதில் வந்த போதும் நான் என் கனவைக் கலைக்கவில்லை. அவளைச் சீரியஸான நிலையில் தூக்கிச் சென்று விட்டார்கள் என்றறிந்த போது தலை விறைப்பது போலிருந்தது.
பின்னர் ஒவ்வொன்றாகக் காற்றில் வந்த செய்திகள் எனக்குள் நம்ப முடியாததொரு பிரமையைத்தான் ஏற்படுத்தின. மதிவதனியின் திருமணத்தின் பின் அவளது இருப்பு பற்றிய தகவல்கள் வருவது குறைந்து போயின. ஆனால் அவளுடனான அவள் பற்றியதான நினைவுகள் என்னோடு வாழ்ந்தன. அவளது அம்மா வீதியில் என்னைக் கண்டு என் கைபற்றிக் கதறிய போது நானும் அழுதேன்.
நான் ஜேர்மனிக்கு வந்த பின் அவள் என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்தாளாம். பின்னர் 1987, 1988 களில் இந்திய இராணுவத்தின் அட்டகாசக் காலங்களில் மாறு வேடத்தில் ஒரு புலனாய்வாளியாக என் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாளாம். அம்மாதான் எல்லாம் எழுதினா. அவ்வப்போது அம்மா மூலம் அவளும் கடிதங்கள் எழுதி அனுப்பினாள். அம்மாவும் புலம் பெயர்ந்த பின் அவளுடனான கடிதத் தொடர்புகள் குறைந்து குறைந்து ஒரு கட்டத்தில் தொடர்புகள் அற்றுப் போயின. நினைவின் தொடுகைகள் மட்டும் என்னோடு எப்போதும் கூடவே இருந்தன.
இப்போ அவள் செஞ்சோலையின் பொறுப்பாளராம். என்னை ஒரு பொருட்டாக நினைப்பாளா? மனசு சந்தேகப் பட்டது. நேற்றிரவு வெண்புறாவின் உறவுகளில் ஒன்றான தினேஸ் புதுக்குடியிருப்புக்குப் போவதாகச் சொன்னான். ஒரு துண்டுக்கடிதம் “நான் இங்கு நிற்கிறேன்.” என்பதைத் தெரியப் படுத்தி மூன்று வரிகளில் எழுதி, “இதை ஜனனியிடம் குடுத்து விடுங்கோ” என்று சொல்லிக் கொடுத்து விட்டேன்.
இன்று மத்தியானம்தான் அதை ஜனனியிடம் கொடுப்பதாகச் சொன்னான். கொடுத்திருப்பானா..? கொடுத்தாலும்…! அவளுக்கு எத்தனை சோலியிருக்கும். அதையெல்லாம் விட்டு விட்டு, சுயநலக்கரியாக ஜேர்மனிக்கு ஓடிவிட்டு, இப்போ நாட்டில் பிரச்சனை இல்லை என்றதும் வந்திருக்கும் என்னைப் பார்க்க வருவாளா..! அல்லது தேவையெண்டால் வந்து பார்க்கட்டுமன், என்று நினைப்பாளா..! நேரமில்லை என்று சொல்லி விடுவாளா..? மனசுக்குள் எத்தனையோ சஞ்சலமான சந்தேகமான கேள்விகள் எழுந்தன.
“அன்ரி என்ன யோசிக்கிறிங்கள்? இளநி ஒண்டு வெட்டித் தரட்டே..? ” வெயில் விட்டுப் போன இந்த அந்திக் கருக்கலில் இப்போது என் தனிமையில் தன் தனிமையைப் போக்க வந்தவன் ஹரிகரன். எனக்கு இளநீர் மேல் அத்தனை மோகம் என்பது அவனுக்குத் தெரியும்.
“ஓம் ஹரிகரன். இளநி ஒண்டு குடிக்கலாம்தான்.”
இவனுக்குச் சுந்தரம் போல் தொடையோடு கால் போகவில்லை. முழங்காலுக்குக் கீழேதான் இல்லை. தகரக் கால் போட்டிருந்தான். நேற்றுத்தான் Fiber Glass இல் கால் செய்வதற்காக அவனின் கால் அளவு எடுக்கப் பட்டது.
மெல்லிய நொண்டலுடன் நடந்தான். நானும் கூடவே சென்றேன். முற்றத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப் புறமாக கறுத்தக் கொழும்பான் மாமரத்துக்குக் கீழ் இருந்த மூலையில் வைத்து இளநீரை வெட்டித் தந்தான். அவனது களங்கமில்லாத அன்பைப் போலவே இளநீரும் இனித்தது.
நான் அதைக் குடித்துக் கொண்டிருக்கும் போதே “அன்ரி ஜனனி அக்காவுக்கு லெற்றர் அனுப்பினனிங்களோ?” கேட்டான்.
“ஓம் ஹரிகரன் தினேசிட்டைக் குடுத்துவிட்டனான். ஆனால் ஜனனி வருவா எண்டு எனக்கு நம்பிக்கையில்லை.”
“இல்லை அன்ரி. ஜனனி அக்கா நல்லவ. கட்டாயம் வருவா. ”
அவன் எனக்கு இரண்டாவது இளநீரையும் வெட்டித் தந்தான்.
நேரம் 7 மணியைத் தொட்டிருந்தது. 4.30 க்கே கால் தயாரிக்கும் வேலையை முடித்த வெண்புறா உறவுகள் மற்றைய வெளி வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஒவ்வொருவராக வந்து முற்றத்தில் கூடத் தொடங்கினார்கள். சிரிப்பு கதை ரேடியோ என முற்றம் கலகலத்தது.
எனக்குக் குளிக்க வேண்டும் போலிருந்தது. எழுந்து என் அறைக்குச் சென்றேன். திடீரென்று ஒலித்த மோட்டார் சைக்கிள் சத்தத்தைத் தொடர்ந்து “அன்ரி…!” சத்தமான கூப்பிடல்கள். “அன்ரி…..! ஜனனி அக்கா”
நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிப் பார்த்தேன். அவளேதான். குளுகுளுவென்று செல்லம் கொஞ்சும் முகத்துடன் எனக்குத் தெரிந்த ஜனனி இப்போ கறுத்து மெலிந்து… ஆனால் கண்களுக்குள் அதே பழைய கனிவுடன் மோட்டார் சைக்கிளை பிராந்தியச் செயலகத்தின் முற்றத்தில் நிறுத்தி விட்டு இறங்கினாள். என் கை கோர்த்து நடந்தாள். கிராவல் மண் அவள் உடைகளில் அப்பியிருந்தது. பள்ளிப் பருவத்தில் இருந்த அதே உறுதி பேச்சில் துள்ளி வந்தது.
எனக்குத்தான் சற்று நேரம் பேச்சு வர மறுத்தது. அது சற்று நேரம்தான். பின்னர் பேசினோம் நேரம் போவதே தெரியாமல். சரஸ்வதி பூசையின் போது சரம் கட்டப் பூ காணாது என்று சொல்லி ரீச்சரிடம் அனுமதி பெற்று பூப்பறிக்கப் போகும் சாக்கில் அவள் என் வீட்டுக்கு வந்தது பற்றி, அவள் கொண்டுவரும் கத்தரிக்காய் பொரியலும் பிட்டும் எனக்கு மதிய உணவாக, எனது தோசையும் சம்பலும் அவளுக்கு மதிய உணவானது பற்றி, புளியமரத்தின் கீழ் இருந்து கதையளந்தது பற்றி…! அவள் போராட்ட வாழ்க்கை பற்றி…., செஞ்சோலைக் குழந்தைகள் பற்றி…..! என்று கதைகள் பல் வேறு திசைகளில் நீண்டு விரிந்தன. வெண்புறா உறங்கிய பின்னும் நாம் பேசிக் கொண்டிருந்தோம். சேர்ந்து சாப்பிட்டோம்.
கடமைக்கு வந்தது போல் அந்த ஒரு நாளுடன் அவள் ஒதுங்கிக் கொள்ளாமல் தொடர்ந்தும் என்னைத் தேடி வந்தாள். தனது 109.. இலக்க மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு திரிந்தாள். குழந்தைகள் போலப் பேசினோம். சிரித்தோம். அவளும் என்னைப் போலவே என்னைத் தன் நினைவுகளால் தொட்டுக் கொண்டு வாழ்ந்திருக்கிறாள். செஞ்சோலைப் பிள்ளைகளுடன் என்னைப் பற்றிப் பேசியிருக்கிறாள்.
எந்த ஒரு போராட்டமும் அவள் நினைவுகளைப் பறிக்கவில்லை. அவளை அவள் இயல்பிலிருந்து மாற்ற வில்லை. அவள் அவளாகவே இருந்தாள். அதே நட்புடன் பேசினாள்.
“அன்ரி…! அப்பிடி நேரம் போறதே தெரியாமல் ஜனனி அக்காவோடை மணித்தியாலக் கணக்கிலை என்னதான் கதைக்கிறனிங்கள்?” வெண்புறா உறவுகள் என்னைச் செல்லமாகச் சீண்டினார்கள்.
அவளுடனான அந்தப் பொழுதுகள் அர்த்தம் நிறைந்தவை. நட்பின் ஆழத்தைச் சொல்பவை. ஆயுதந் தூக்கிய அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பதை எனக்கு உணர்த்தியவை. இன்னும் பசுமையாய் எனக்குள் பதிந்திருப்பவை.
அவள் டொக்டராக வராவிட்டால் என்ன..? நான் மூன்று குழந்தைகளுக்குத்தான் அம்மா. அவள் செஞ்சோலையின் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் அம்மா. அவளைப் பற்றிய நினைவுகள் இன்னும் எனக்குள் உயர்ந்து…!
சந்திரவதனா
யேர்மனி
August – 2002
chandraselvakumaran@gmail.com
- பாகிஸ்தானின் அவமானச்சின்னம் – 1971
- சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-6
- இரு கலைஞர்கள்
- தமிழ் வாழ்க ! “தமிழறிஞர்” ஒழிக !!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா – (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-11)
- கீதாஞ்சலி (83) : என் கண்ணீர் முத்தாரம்..!
- கபா
- நாஞ்சிலன்கள் மற்றும் வஹ்ஹாபிகளின் கருத்துக்கள்
- ரிச்சர்ட் டாகின்ஸ் ஆவணப்படம் – மதம் – மூன்றாம் பகுதி
- ரிச்சர்ட் டாகின்ஸ் ஆவணப்படம் – மதம் – இரண்டாம் பகுதி
- ரிச்சர்ட் டாகின்ஸ் ஆவணப்படம் – மதம் – முதல் பகுதி
- யோகா
- ஆய்வும் மனச் சாய்வும்
- அற்புதங்களுக்கான இன்றைய தேவை அதிகரிப்பும், மறுப்பும், உண்மை தேடலும்
- கடித இலக்கியம் – 15
- அனுபவங்களும் ஆற்றாமைகளும் – இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள்- பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம்
- அவர்கள் அவர்களாகவே…!
- மத்தியக்கிழக்குப் போரும் இந்தியாவும்
- போர் நிறுத்தம்
- ஆதமின் தோல்வி
- தொடர்ந்து ஏய்க்கும் மாடும் விடாது மேய்க்கும் மூலனும்
- மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல்
- குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்!
- எண்ணச் சிதறல்கள் – குமுதத்தில் சாரு நிவேதிதா, கலகம், கள்வனின் காதலி, டாக்ஸி நெ.9211, கோபம் கொள்ளும் ஐயப்பன்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 9. தொழில் நுட்பம்
- கோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -1
- இருளர் வாழ்வில் இசையும் கூத்தும்
- சிதம்பரமும் தமிழும்
- ப ரி சு ச் சீ ட் டு
- மீன்கூடைக் காரிகைகளும் பூக்கடைக்காரன் குடிசையும்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 31