அவதூறு பரப்புதல் ஆய்வாகாது

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

அ. கணேசன்



14/12/2006 திண்ணையில் சிங்கதுரைப் பாண்டியன் என்பவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அறிவுபூர்வமான வாதத்தை விட ஆத்திரமே மேலோங்கியுள்ளது. ஏற்கெனவே நாங்கள் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலம் பல சரித்திரபூர்வமான ஆதாரங்களையும், தரவுகளையும், பொருள் விளக்கங்களையும் வழங்கியுள்ளோம். அவை எவற்றையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அல்லது படித்துப் புரிந்துகொள்கின்ற முனைப்புகூட இல்லாமல் சிங்கதுரைப் பாண்டியன் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் அவர்களுடைய காழ்ப்பினை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார்கள். நெருப்புக்கோழி தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு, வேட்டையாடும் பிற விலங்குகளிடமிருந்து ஒளிந்துகொண்டுவிட்டதாகத் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளுமாம். இவர்களுடைய செயல்பாட்டினை அச்செயலோடுதான் ஒப்பிட முடியும்.

இத்தகையவர்களுக்கு எவ்வளவு விளக்கங்களைக் கொடுத்தாலும் அது ‘விழலுக்கு இறைத்த நீர்தான்’ என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் திண்ணை வாசகர்களில் வரலாற்று ஆர்வமுள்ள, நடுநிலை மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்பதால், அவர்களுக்கு எமது நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்கு இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, மேலும் சில உண்மைகளைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

“முக்குலத்தோரையும், வேளாளரையும் எவ்வளவுக்கு எவ்வளவு பொய்யாக இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் இழிவுபடுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம்” – என்று சிங்கதுரைப் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். வரலாற்று ஆய்வு என்ற பெயரில் வெறுப்பையும், துவேஷத்தையும் விதைத்துப் பயிராக்கி அறுவடை செய்துவந்த, செய்துவருகின்ற கனகசபைப் பிள்ளை, மறைமலை அடிகள் தொடங்கி க.ப. அறவாணன் வரை உள்ளவர்கள் செய்து வந்துள்ள வரலாற்று மோசடிக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டிய அவசியத்தின் அடிப்படையில் சில உண்மைகளை வெளிக்கொணர நேர்கிறது. திண்ணை இணைய இதழில் எங்கள் கட்டுரைகளை எழுத நேர்ந்த பின்னணிகூட இப்படிப்பட்டதுதான். கற்பக விநாயகம், சதுரகிரி வேள் போன்றவர்கள் சான்றோர் சமூகத்தவரின் வரலாற்று ஸ்தானத்தைக் குறைத்து மதிப்பிட்டும், கொச்சைப்படுத்தியும் எழுதியதால்தான் நாங்கள் அவற்றுக்கு பதிலளிக்க நேர்ந்தது. மட்டுமின்றி, சாதிகளை ஒப்பிட்டும் ஒரு சாராரை இழிவுபடுத்தியும் மறைமலை அடிகள், கனகசபைப் பிள்ளை போன்றவர்கள்தாம் தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்துள்ளார்களே தவிர, நாங்கள் அத்தகைய சாதி உயர்வு மனப்பான்மை கொண்டவர்கள் அல்லர். ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு வரலாற்று ஸ்தானம் உண்டு என்று நம்புபவர்கள்.

கனகசபைப் பிள்ளை போன்றவர்கள் மறவர்களையும், வன்னியர்களையும் வேளாளர்களைவிடத் தாழ்ந்த சாதியினர் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டு எழுதியுள்ளனர். 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலும் அத்தகைய ஒரு கருத்து நிலவி வந்தது என்பது உண்மையே. ஆனால், அது மட்டுமே வரலாறு ஆகாது. கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை முக்குலத்தோரும், வன்னியரும் வேளாளர்களுக்கு மேம்பட்ட போர்க்குடிகளாக இருந்துள்ளார்கள் என்பதையும் அதற்குப் பிறகு எவ்வாறு வேளாளர்களுக்குக் கீழ்ப்பட்ட அல்லது கட்டுப்பட்ட சாதியினர் ஆனார்கள் என்பதையும் சென்ற கட்டுரையில் விளக்கியுள்ளேன். இது எந்த விதத்திலும் வன்னியர்களையும், முக்குலத்தோர்களையும் இழிவுபடுத்துவது ஆகாது. சிங்கதுரைப் பாண்டியன் போன்றவர்களுக்காக இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்திப் பதிவு செய்கிறேன்.

மறக்குல அகம்படியர்கள் (மகாபலி வம்சத்தவர் என்று தம்மைக் குறிப்பிட்டுக் கொள்பவர்கள்) கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை சத்திரிய வருணத்தின் ஓர் அடுக்கில் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. ஆனால், கி.பி. 14-15ஆம் நூற்றாண்டுகளில் அவர்கள் தம்மைக் கங்கை குலத்தவர், அதாவது வேளாண் குடியினர் என்று குறிப்பிட்டுக்கொள்ளத் தொடங்கினர். கி.பி. 17-18ஆம் நூற்றாண்டுகளில் ‘கதிர்முனை தீண்டாத காராளர்’1 (நாற்று நடுதல், அறுவடை செய்தல் போன்ற பணிகளைச் செய்யாவிட்டாலும் வேளாளர் குலத்தவராகச் சொல்லிக்கொள்பவர்கள்) என்று மறக்குல அகம்படியர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதையும் கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்களில் காணலாம்.

“ஈழத்தில் எப்படி சாணார் கீழ் சாதி ஆனார்கள்? கர்னாடகாவில் கள்ளிறக்கும் இடிகாவும் அரசும் ஒன்றா?” – என்ற கேள்விகளையும் சிங்கதுரைப் பாண்டியன் எழுப்பியுள்ளார். இந்த இரண்டு கேள்விகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற தனிக் கேள்விகளாகும். எனவே, இப்போது முதல் கேள்விக்கு எமது பதில் பின்வருமாறு:

இலங்கையில் புத்த மதத்தைத் தொடர்ந்து பின்பற்றி வந்த சான்றோர் சமூகத்தவர் சிங்கள-பெளத்தர்களில் தலைமைச் சாதியினராக இன்றும் கருதப்பட்டு வருகிறார்கள். கிராமணி என்ற சொல்லின் சிங்களத் திரிபான ‘காமினி’ என்ற பட்டத்தை அவர்கள் சூட்டிக் கொள்கிறார்கள். சத்திரிய வருணத்தவராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். தமிழ் பேசுகின்ற சான்றோர் சாதியினர் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தில் வேளாளர் சமூக ஆதிக்கத்தினால் கி.பி. 18ஆம் நூற்றாண்டு தொடங்கிச் சற்றுப் பிற்படுத்தப்பட்ட நிலையை அடைந்தார்களே தவிர, 17ஆம் நூற்றாண்டைய உலந்தா (டச்சு)க் கும்பினி ஆவணங்களில் வேளாளர், சான்றார், தனக்காரர் என்ற மூன்று சாதியினர் மட்டுமே தமிழ் மொழி வழங்கிய பகுதிகளில் ‘அதிகாரி வரி’ செலுத்தி வந்தனர் என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.2 எனவே, இலங்கைத் தமிழரிடையிலும்கூட வேளாளர் ஆதிக்கம் நிலைநிறுத்தப்படுவதற்கு முன்பு – அதாவது இன்றைய வார்த்தைகளில் சொல்வதானால் சைவம் என்றாலே பிள்ளைமார் சைவம் என்ற நிலை தோன்றுவதற்கு முன்புவரை சான்றோர் சமூகத்தவர் உயர் நிலையில் இருந்துள்ளனர் என்பதே உண்மையாகும்.

கர்நாடகா ஈடிகா குறித்த அடுத்த கேள்விக்கு எமது பதில் பின்வருமாறு:

ஈடிகா என்பது ஈழவர் சமூகமே தவிர சான்றோர் சமூகம் அன்று. தென்னிந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களில் ஈழவர்-ஈடிகா சமூகத்தவரும், கிழக்குப் புற மாநிலங்களில் பழையர்-வலையர்-வளம்பர் என அழைக்கப்படுகின்ற சமூகத்தவரும் கள்ளிறக்கும் தொழில் செய்து வந்துள்ளனர். “பழையர் தம் மனையன பழநறை”- எனக் கம்பராமாயணம்3 குறிப்பிடுகிறது. “முதிர்ந்த கள் பழையர் குலத்தவர் வீட்டில் கிட்டும்” என்பது இதன் பொருள். தமிழ் மொழி ஆய்வில் தலைசிறந்தவராகக் கருதப்பட்ட ஞா. தேவநேயப் பாவாணர் இன்றைக்கு முத்தரையர் என்று சாதிப்பட்டம் சூடிக்கொள்ளும் வலையர் குலத்தவரே கள் இறக்கி விற்ற பழையர் ஆவர் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் 18ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த ஜைன சமய சாந்தார அரசர் வம்சத்தவர்கள் சான்றார் குலச் சிற்றரசர்களே என்பதைக் கல்வெட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்கள் ஈடிகா குலத்தவர்கள் அல்லர். ஆந்திரா மாநிலத்தில் நெல்லூர் முதலிய பிரதேசங்களில் ஈடிகா குலத்தவர்கள் தங்களைக் கவரா நாயுடு குலத்தின் ஒரு பிரிவாகவே குறிப்பிட்டுக்கொள்கின்றனர். இதுபோன்ற பல விவரங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்பது போலச் சிங்கதுரைப் பாண்டியன் போன்றவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தேவர் என்ற பட்டம் குறித்து சிங்கதுரைப் பாண்டியன் ஒரு பிரச்சினையை எழுப்பியுள்ளார். தேவர் என்ற பட்டத்தினைப் பல்வேறு சாதியினர் சூட்டிக் கொண்டனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரம் உண்டு. இப்பொழுதும் நடைமுறையில் உள்ள இரண்டு உதாரணங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அறந்தாங்கி வட்டாரத்தில் வழுவாடித் தேவர் என்ற பட்டம் வலையர் (முத்தரையர்) சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தவருக்கு உரிய பட்டமாகும். இதே போன்று, இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பரதவர் சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தவருக்கு அழகியபாண்டியத் தேவர் என்ற பரம்பரைப் பட்டம் உண்டு. அண்மைக் காலம் வரை தூத்துக்குடி மாவட்டம் வேம்பாறு என்ற ஊரில் முத்தையா ரோட்ரிக்ஸ் அழகிய பாண்டியத் தேவர் என்ற பரதவர் குலப் பெரியவர் இருந்துள்ளார்.4 தேவர் என்ற பட்டம் இதுபோலப் பல சாதியினர்களால் அந்தந்தக் காலகட்டங்களில் அரசர்களால் வழங்கப்பட்டோ அல்லது தாமாகவே சூட்டிக் கொள்ளப்பட்டோ வந்துள்ளது. எவ்வாறு கோயில் என்ற சொல் இறைவனின் வாசஸ்தலத்தையும், அரசனின் குடியிருப்பையும் குறித்ததோ அது போன்று தேவன் என்ற சொல்லும் இறைவனைக் குறிக்கும் சொல்லாகவும், இறைவனோடு ஒப்பிட்டு அரசனைக் குறிக்கும் பட்டமாகவும் இருந்துள்ளது. “திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்” என்ற ஆழ்வார் பாசுரங்களிலும் இந்தக் கருத்தே அடங்கியுள்ளது. தேவன் என்ற பட்டத்தை முக்குலத்தோர் மட்டுமே சூடிவந்ததாகத் தவறாகக் கருதிக்கொண்டு சிங்கதுரைப் பாண்டியன் பிரச்சினை எழுப்பியுள்ளார். அவருக்கு வேறொரு செய்தியைக் குறிப்பிட விரும்புகிறேன். மறவர்குலச் சேதுபதி மன்னர் தமது செப்புப் பட்டயம் ஒன்றில் தம்மைச் ‘செம்பி நாடான்’ என்று குறிப்பிட்டுக் கொள்வதையும் பார்க்க முடியும். நாடான் என்ற பட்டத்தை மறவர்கள் சூடிக் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. நாடாள்வான் என்ற சொல்லின் திரிபான நாடான் என்ற பட்டத்தைச் சூடுவதன் மூலம் சத்திரிய வர்ண உரிமையைக் கோருவதிலும் எமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. பொய்யான வரலாறுகளைச் சொல்லிப் பிற சாதியினரை இழிவு படுத்துபவர்களை மறுத்து உண்மையை நிலைநாட்டுவதற்காகவே சில வரலாற்றுத் தரவுகளை எடுத்து வைக்க நேர்ந்தது.

“வலங்கை மாலை வரலாறு ஆகாது” என்று சிங்கதுரை பாண்டியன் சொல்லியுள்ளார். அப்படியென்றால் எதுதான் வரலாறு? எனது முந்தைய கட்டுரைத் தலைப்புக்கே மீண்டும் வருவோம் – எது ‘நமது’ வரலாறு? நிச்சயமாகச் சிங்கதுரைப் பாண்டியன் போல அவதூறு பரப்புவது வரலாற்று ஆய்வாகாது. வலங்கை மாலை நூலிலுள்ள வரலாற்றுச் செய்திகளை ஆராய்ந்து “வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்” என்ற நூலை சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நூலைப் படித்துவிட்டு அந்தக் கருத்துகள் மறுக்கத்தக்கன எனக் கருதினால் வரிக்கு வரி பதில் சொல்லட்டும். எதிர்கொள்ளவோ, தவறாக இருப்பின் திருத்திக்கொள்ளவோ ஆயத்தமாக இருக்கிறேன். சமூக வரலாறு என்பது ஆயுதத்தின் மூலமோ, அதிகாரத்தின் மூலமோ அல்லது அவதூறு பரப்புவதன் மூலமோ நிலைநாட்டப்பட இயலாதது. ஆய்வின் மூலம் மட்டுமே உறுதிப்படுத்தப்பட வேண்டியது .

அடிக்குறிப்புகள்:

1. கணக்கன் கூட்டத்தார் பட்டயம், “கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள்”, பதிப்பாசிரியர்: புலவர் செ. இராசு, பக்கம் 235, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1991.
2. பக்கம் 119, யாழ்ப்பாண ராஜ்ஜியம், காலநிதி சி.க. சிற்றம்பலம், யாழ் பல்கலைக்கழகம், இலங்கை.
3. அயோத்யாகாண்டம், நாட்டுப்படலம், பா.50
4. கல்வெட்டு ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் அவர்கள் நடத்திய கள ஆய்வின் போது அவரிடம் வேம்பாறு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி அய்யா பர்னாந்து அவர்கள் தெரிவித்த செய்தி.

ganesanadar@gmail.com

Series Navigation

அ. கணேசன்

அ. கணேசன்