இரா.பாலசுப்பிரமணியம்
மனித இனம் காலம் காலமாக வேலி என்பது சிறையா ? பாதுகாப்பா ? என்ற பிரச்சினையை சந்தித்தபடி வந்துள்ளது. வேலியைச் சிறை என்று நினைத்தவனுக்கு அந்த வேலி பெரிய பாதுகாப்பு என்று உணரும் வகையில் சம்பவங்களும், வேலியைப் பெரிய பாதுகாப்பு என்று நினைத்தவனுக்கு அது பெரும் கொடும் சிறை என்று வருந்தும் சம்பவங்களும் நடந்துள்ளன என்கிறார் பாவண்ணன். இருக்கலாம். வேலிக்குள்ளே இருக்கும் ஆட்டிற்கு வெளியே இருப்பது எல்லாம் ‘அக்கரை பச்சை! ‘ ஆனால் வெளியே இருப்பதற்கு உள்ளே இருப்பது ‘பச்சை ‘யாகத் தோன்றும்!
வேலியாவது என்ன ? மனித இனத்தின் ஆரம்பகாலத்தில் எந்த ‘வேலி ‘யும் இல்லை!
சமுதாயம் வளர வளர, ஜனத்தொகை பெருகப் பெருக, நாகரிகம் பரவப் பரவ , சமூகமே தன்னுடைய நன்மைக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்திக்கொண்ட நியதிகள்தானே ‘வேலி ‘ ! ஒரு சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வேலியைத் தாண்டுதல் சரிதான் என்பதில் ஐயமில்லை ! மனித நியாயங்கள் அல்லது சட்டங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவை மரபை விட முக்கியமானது என்று நினைக்கிறோம். அப்படி இல்லாமல் எங்கேயோ ஒரு இடத்தில் அது சரி என்று நியாயப் படுத்தினால் , அது பரவலாக எல்லா இடங்களிலுமே மீறப்பட்டுவிடும்; பிறகு அநீதி, அக்கிரமம், துராசாரம் , என்று சமூகத்தில் பரவலாக ஏற்படும். அதனால்தான் அப்படி எங்கேயாவது நேரும்போது அதை தொலைத்துக் கட்டி நம்முடைய மரபைத் தூய்மை செய்யவேண்டியது நம் கடமை என்று நம்புகிறோம். அது ‘அப்பாவித்தனமாக அல்ல! ‘ அத்து மீறலை நியாயப்படுத்தினால் அது அடுத்ததாக நம்மையும் பாதிக்கும் என்று நாம் உணர்வதால்!
‘அம்மா வந்தாள் ‘ நாவலில் மரபு சார்ந்த கேள்விகள் இரண்டு எழுகின்றன. இரண்டும் பெண்கள் சமூகத்தைச் சார்ந்தவை. எதிர்கொள்பவன் அப்பு. உண்மைதான். ஆனால் பாவண்ணன் சொல்லுவது போல அப்பு இந்த இரண்டு கேள்விகளாலும் நிலை குலைந்து போகிறானா ?
சுக்லாம்பரதரம் குட்டிக்கொள்ளும்போதே பாவண்ணன் தி.ஜா சொல்லாத ஒன்றைத் தவறாகக் குறிப்பிடுகிறார்.
‘ எட்டு வயதில் சக மாணவர்கள் காட்டாமணக்குச் செடி மறைவில் புகை பிடித்துக்கொண்டு உட்கார்ந்தபோது உதட்டைக் கடித்து, விசித்து,விம்மி அழுது தீர்த்த அதே அப்புவைத்தான் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தாயாரின் உறவுச் சிக்கலை அறிந்து குமுறி அழுதவனாகவே பார்க்கிறோம் ‘ என்று சொல்கிறார்.
இது பெரும் அடாவடித்தனம். வேதம் படிக்கிற பாடசாலைப் பையன்கள் எல்லாரும் ‘வெளி ‘க்குப் போவதற்கு புகை பிடிப்பது மிக சாதாரணம் என்பது போல இது தொனிக்கிறது.
எட்டு வயது பிராமணப் பையன் — ? அதுவும் வேத பாடசாலைப் பையன் ?
இது வேண்டுமென்றே வேத பாடசாலைகள்மீது தவறாகக் குற்றம் சாட்டி கேவலப்படுத்தும் முயற்சியாகவே எனக்கு தோன்றுகிறது. ஓ…! இது ஒரு ஒரு பெரிய விஷயம் அல்ல! சரியாகக் கவனிக்காமல் செய்த சிறிய தவறு ! என்று அவரோ வேறு யாரோ வாதாடலாம். பிரச்சினை அதுவல்ல. இது முக்கியமான விஷயமாகவே எனக்குத் தோன்றுகிறது!சொல்லாததை எப்படி குறிப்பிடலாம் ?
அடுத்தபடியாக , பாவண்ணன், ‘முக்கியமான 2 கேள்விகளை மரபின் முன் வைத்து விடை காண முயல்கிற தி.ஜா இக்கேள்விகளுடன் மற்றவர்கள் மோதல் கொள்ளும் விதத்தைத் தவிர்த்த காரணம் புரியவில்லை. யாருடைய மனசும் திறந்து காட்டப்படவில்லை . அப்புவின் அப்பா, ‘ஒண்ணையும் புரிஞ்சுக்கச் சிரமப்படக்கூடாது. பேசாமல் பார்த்துண்டே இருக் கணும். பகவான் அதுக்காகத்தான் நம்மைப் படைச்சிருக்கான். ‘ என்கிறார். மற்றபடி அவர் வாயை த் திறப்பதே இல்லை. மருமகளும் சரி, பிள்ளைகளும்சரி, வாயைத் திறப்பதே இல்லை. தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளும் சேலத்து மகளும் , இந்துவும் ஒரு சிறிய சீறலோடு நிறுத்திக் கொள் கிறார்கள். ‘ என்பது பாவண்ணனின் குற்றச்சாட்டு.
ஒரு சம்பவம் நடந்தால் அந்த நிகழ்ச்சியோடு சம்பந்தப்படும் ஒவ்வொரு நபரும் அவனுக்கே உரிய உரிய முறையில் ‘ரிஆக்ட் ‘ செய்வான். ஒருவன் மாதிரி இன்னொருவன் நடந்து கொள்ள மாட்டான். அப்படி செய்யவும் முடியாது. அப்படி நடந்துகொள்வதாக எழுதினால்தான் அது செயற்கையாக இருக்கும். உதாரணமாக இந்த மாதிரி ஒரு விஷயம் ஒரு தேவர், அல்லது நாயக்கர் அல்லது கவுண்டர் குடும்பத்திலே நடப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த தேவர் /நாயக்கர்/கவுண்டர் அரிவாளை எடுத்து அலங்காரத்தை ஒரே சீவாகச் சீவிவிட்டு, அந்தத் தலையைக் கையிலே பிடித்தபடி நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ச் சரணடைந்து விடலாம். ஆனால் இந்தக் கதைப்படி அப்புவின் தந்தை வேதம்படித்த பிராம்மணர். மனைவி மேல் பிரியம் வைத்தவர். அவள் தவறு செய்தால் அது அவள் இறைவனிடம் அதற்குரிய நேரத்தில் பதில் சொல்லிக் கொள்ளட்டும் என்று விட்டிருக்கலாம். அவரால் அவள் தலையை வெட்ட முடியாது! சரி, அவர் ஏன் அங்கேயே அவளோடு இருந்துகொண்டிருக்கவேண்டும் ? விலகிப் போகலாமே ? என்றால் அதை அவர்தான் முடிவு செய்யவேண்டும். நான் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வேன் என்பதோ அல்லது பாவண்ணன் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வார் என்பதோ அவரவர்கள் முடிவு செய்யவேண்டிய விஷயம்.
‘ சேலத்து மகளும் , சித்தாபுரத்து இந்துவும் ஒரு சிறிய சீறலோடு நிறுத்திக்கொள்கிறார்கள், மற்றபடி ஒன்றும் செய்யவில்லை! ‘ என்கிறார் பாவண்ணன். அதில் தவறு இல்லை. அவர்கள் என்ன செய்ய முடியும் ? மகள் கல்யாணமாகி, புகுந்த வீட்டிற்குப் போனவள். அவளுக்குத் தந்தை யிடம் அனுதாபம் உள்ளது. அவர் வந்தால் தன்னுடன் வைத்துக்கொள்ள விருப்பம் தான். ஆனால் அங்கே மாமியார், கணவன் ஆகியோர் அலங்காரத்தின் குடும்பத்துடன் எந்த தொடர்பும் தேவை இல்லை என்கிறார்கள். ஆக, அவள் வெறும் பார்வையாளர் மாதிரி தான் இருக்கவேண்டி இருக்கிறது.
‘நீயும் அம்மா பிள்ளையாவே இருக்கே ? ‘ என்று அலங்காரம் சொல்கிறாள். அதை எப்படி எடுத்துக்கொள்வது ? ‘நீயும் 24 வயது ஆகியும் இன்னும் கைக்குழந்தையாகவே இருக்கே ‘ என்று எடுத்துக்கொள்ளுவதா, இல்லை , ‘ நீயும் அம்மா செய்த மரபுப் பிழையைச் செய்ய இருப்பதால் உனகு மன்னிக்கும் தகுதி போய்விட்டது ‘ என்று எடுத்துக்கொள்வதா என்கிறார் விமரிசகர். எனக்கு இரண்டாவதாகச் சொல்லுவதுதான் சரி என்று படுகிறது!
********
இப்போது கொஞ்ச நாளாகவே இலக்கியவாதிகள் , முக்கியமாக இலக்கிய விமரிசகர்கள் எல்லோருமே எழுதுவது எல்லாம் கடைக்கோடியில் இருக்கும் ‘பாமர ‘னுக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதில் ஊக்கமாக இருக்கிறார்கள். தலித்துகள் பற்றி எழுதுவதுதான் இலக்கியம் என்று ஆரம்பித்து, இப்போது கடைசியில் அதை எழுதுபவனும் ‘தலித் ‘ ஆகவே இருக்கவேண்டும் என்பதில் போய் முடிந்திருக்கிறது ! அதுமாதிரி , விமரிசகர்கள் எழுதும்போது ஒரு நாவல் என்றால் அதில் கண்டிப்பாக ஒரு ‘மெசேஜ் ‘ இருந்தே ஆக வேண்டும் என்கிறார்கள்! சமூகத்தை ‘உத்தாரணம் ‘ பண்ணவேண்டியது , ஒவ்வொரு நாவல் அல்லது சிறுகதை ஆசிரிய னுடைய வேலை என்கிறார்கள்! இது தவறு! இதில் எனக்கு உடன்பாடு இல்லை! எழுத்தாளன் என்ன தபால்காரரா ஒவ்வொரு நாவலிலும் ‘சேதி ‘யைக் கொண்டுபோய் ஒவ்வொருவரிடமும் சேர்க்க ? இல்லை, கேள்வியை எழுப்பி, பின்னர் அதற்கு விடையைச் சொல்வதற்கு இது என்ன பரிட்சை ஹாலா ?
சில எழுத்தாளர்கள் சமூகத்தில் புரட்சியை மூட்டவேண்டும் என்றே எழுதக்கூடும். அது அவர்கள் உரிமை, அவர்கள் வழி! ஆனால் எல்லாருமே இப்படி சமூக ‘உத்தாரணம் ‘ பண்ணும் வேலையில் ஈடுபடமாட்டார்கள். தி.ஜானகிராமன் சமூகத்தில் உள்ள குறைகளை எழுதுகிறார். ‘ரிபோர்ட் ‘ பண்ணுகிற வேலைதான் அவருக்கு. அது போதாது, அதற்கு வழியையும் அவரே சொல்லவேண்டும் என்று நாம் கருதினால், ஒரு வேளை, அவரை விட சிறந்தவர்கள் எல்ல்லோரும் முயன்று தோற்றதை அவர் பார்த்து சலிப்புற்று அந்த வேலை நமக்கு வேண்டாம் என்று அதில் இறங்காமல் போயிருக் கலாம்.
‘விடை எவ்வளவு அற்பமாக இருந்தாலும் அதைச் சொல்லவேண்டியது நம் கடமை, அது முக்கியம், அதிலிருந்து தப்பமுடியாது. விடை அளிப்பது ‘கர்மா ‘ என்றால் தப்பிப்பது ‘அகர்மா ‘ ஆகும். ‘ என்கிறார் பாவண்ணன். ‘கர்மா ‘ என்றால் சாதாரண வடமொழி அர்த்தம் ‘செயல் ‘ என்பதுதான், ஹிந்து மத ரீதியாக ‘கர்மா ‘ என்றால், நாம் செய்யவேண்டிய செயல், நடந்து கொள்ள வேண்டிய தர்மம் என்று தான் பொருள்.
மரபின் பிடிப்போ வேதப்படிப்போ இல்லாத சாதாரண மனிதன் கூட, ‘எல்லாம் கடவுளின் சோதனை அல்லது செயல் என்று சொல்வான், அது போலக்கூட வேதம் படித்த அப்புவால் சொல்ல முடியவில்லை ‘ என்கிறார் விமரிசகர். வேதம் படித்ததால் யாருடைய தவறையும் மன்னிக்கிற தகுதியையும் அவனுக்கு அந்த வேதம் வழங்கிவிடவில்லை. நம்முடைய வேத மரபின்படியும், ஹிந்து மதத்தின் விளக்கத்தின்படியும் அவரவர்கள் கர்மத்தை (அதாவது செயல்களின் விளைவுகளை) அவரவர்களேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும்! அப்புவுடைய ஆன்ம (வேத) அறிவின் தீண்டலால் அவளுக்கு ‘ஞானஸ்னானம் ‘ அளித்து அவள் பிசகைப் புறக்கணித்து அரவணைத்துக் கொள்ள முடியாது.
மேலும் பாவண்ணன் சொல்லுவது போல, ‘ நீ காசிக்கு போகாதே அம்மா, உன்னைப் பிரிந்
திருக்க என்னால் முடியாது! நீயும் நானும் இந்துவும் சேர்ந்து பாடசாலையை நடத்திச் செல்லுவோம் அம்மா ‘, என்று அவனால் சொல்லமுடியவில்லை. எப்படிச் சொல்ல முடியும் ? ‘தான் திருடி பிறரை நம்பாள்! ‘ என்பது போல அலங்காரம் மற்றவர்கள் மேல் குற்றம் சாட்டுவ திலேயே கண்ணாக இருக்கிறாளே தவிர அவர்களை ஏற்கும் மனோபாவம் அவளுக்கு இல்லை.
‘ பாடசாலையிலே ஏன் இந்து இன்னும் இருக்கிறாள் ? அவள் மாமியாரோடு போய் இருக்க வேண்டியதுதானே ? என்று அப்பு சென்னை வந்த உடனே எடுத்த எடுப்பில் கேட்கிறாள். தன் பாவத்தை அப்பு மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிற அவளுக்கு ‘சேஷ ராமன் பெண்ணை ‘ அப்புவுக்கு மணம் செய்வித்துப் பார்த்து சந்தோஷப்பட மனசு வரவில்லை. ஏன் என்றால் அவள் அம்மா ‘கிரிசை ‘ கெட்டவள் ! ‘அத்தியயனம் பண்ணின குழந்தையை அந்த ‘கசாப்புக் கடை ‘யில் போய் யாராவது போடுவார்களா ? ‘ என்று அப்புவிடமே சொல்கிறாள். அவள் இருக்கிற ‘யோக்கியதை ‘க்கு அவள் மற்றவர்களை கத்தியால் கீறி ரணம் உண்டாக்குவது போலப் பேசுகிறாள்.
அவள் புத்தகத்தின் இறுதிப் பகுதியில் அப்புவிடம் வருவது ‘அவனுடைய ஆன்ம ஞானம்
என்கிற நெருப்பில் தன் பாவத்தைப் பொசுக்க அல்ல! ‘ தன்னுடைய ‘உண்மை ‘ தெரிந்துபோன உடன், அப்பு இந்துவைப் போய்ச் சேர்ந்துவிடுவான் என்று கண்டு , அவனைத் தன் தவறைப் பொருட்படுத்தாமல் தன்னுடன் வந்து இருந்து , அவள் பண்ணி வைக்கிற கலியாணத்திற்கு அவன் உடன் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் வருகிறாள். அவன் மசிந்தால் அவனை இந்துவிடமிருந்து பிரித்து தன்னோடு அழைத்துக்கொண்டு போய்விட வேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் வருகிறாள். ஆனால் அவன் வரவில்லை, வரவும் மாட்டான் என்று கண்டதும் தான் காசிக்குப் போவதாகச் சொல்லிக்கொண்டு புறப்படுகிறாள். யார் கண்டது ? அவள் காசிக்கு போனதை ஆசிரியர் ஊர்ஜிதப்படுத்தவில்லை. அவள் காசிக்கே போகாமல் திரும்பவும் சென் னைக்குப் போய் தண்டபாணியின் உயிரை எடுக்கிற ‘ளோ என்னமோ ? யாருக்குத் தெரியும் ?
‘இத்தனைக்குப் பிறகு இந்து தனக்கு வேண்டும் என்று நேர்மையாக உணரும் மனசு அவனுக்கு வரவில்லை ‘ . இதுவும் பாவண்ணனின் குற்றச்சாட்டு.
இதற்கு விடை ஆசிரியர் முதலிலேயே சொல்லிவிடுகிறார். அப்பு இந்துவின் மனசு தெரிந்ததும் , ’15 வருஷம் சாப்பாடு போட்டு பிள்ளை மாதிரி வளர்த்த அத்தைக்கு நல்லது எதாவது செய்ய முடியாமல் போனாலும் தலையிலே கல்லைத் தூக்கிப்போட்டுடுவேன் போல இருக்கு! ‘ என்கிறான். அப்புவுக்கும் சரி, மற்ற பிள்ளைகளுக்கும் சரி, அத்தையும், இந்துவும் பாடசாலை நடத்தும் ‘எஜமானிகள் ‘, அவர்களிடம் மரியாதைதான் ! வேறே எந்த எண்னத்துக்கும் இடம் இல்லை! இந்துவிடம் அவனுக்கு ‘காதல் ‘ கிடையாது! ஆனால் இந்துவுக்கு அப்புவிடம் ‘காதல் ‘ ! இதை தி.ஜா.தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டும் இல்லை, இந்துவின் கணவன் பரசு அப்புவுக்கு நெருங்கின தோழன். அவனுக்கு துரோகம் செய்வது என்பது அப்புவுக்கு நினைத்துப் பார்க்க முடியவில்லை.
ஆனால் இந்துவின் உள்ளம் தெரிந்ததும் அதே மாதிரி அத்தையம்மாளின் மனசு இதற்கு ஆதரவாக இருப்பதுவும் கண்டு அப்பு மனசை மாற்றிக்கொள்கிறான். முதலில் மறுபடி சித்தன் குளம் வரும் யோசனை அவனுக்கு இல்லை. எதாவது உத்தியோகம், கல்யாணம், தம்பி, தங்கை கல்யாணம் என்றெல்லாம் ‘பிளான் ‘ போட்டுக்கொண்டு போகும் அவனுக்கு அங்கே தன் அம்மாவின் சுய உருவம் தெரிந்ததும் ஒரு திடுக்கிடல் நேருகிறது. இந்து செய்தது தவறு அல்ல என்று உணருகிறன். அவளை மணம் புரிய மரபு இடம் கொடுக்கவில்லைதான். அன்று! இந்த கதை நடந்ததாக இருக்கிற 50 வருஷம் முன்பு! ஆனால் அதற்குப் பிறகு எவ்வளவோ மாற்றங்கள்! தி.ஜா எழுதவில்லை. அவர் கொஞ்சம் சொல்லி, கோடி காட்டுவார். நாமாகப் புரிந்துகொள்ள வேண்டியதுதான். நாளடைவில் சமூகத்தில் மாற்றங்கள் வரும்போது அவர்கள் வழ்க்கையிலும் அது நடக்கலாம்.
இன்னொரு விஷயம் ! பாவண்ணன், ‘ராமாயணத்தில் அகலிகைக்குக் கிடைக்கிற மன்னிப்பு கூட இந்த நவீன யுகத்தில் அலங்காரத்துக்கு கிடைக்கவில்லையே என்று அங்கலாய்க்கிறார். தி.ஜா கொடுக்கவில்லை என்றால் அது ஆசிரியர் முடிவு. அவர் உரிமை. பாவணண்ணன் எழுதுகிற நாவலில் இத்தகைய நிகழ்ச்சி நடந்தால் அவர் மன்னிப்பு கொடுக்கலாமே ? யாரும் எதுவும் சொல்ல முடியாது. ஒரு விதத்தில் பார்த்தால் தி.ஜா மன்னிப்புக் கொடுக்காததும் சரிதான். அகலிகை தெரியாமல் தவறு செய்தாள். அதாவது இந்திரன் தன் உருவத்தோடு வராமல், அவள் கணவன் உருவத்திலே அல்லவா வருகிறான் ? அவன் தன் கணவன் இல்லை என்று அவளுக்கு தெரியும் என்று சொல்லலாம். எப்படி ? உருவம் கணவனுடையதுதானே ? ஆகவே ‘சந்தேகத்தின் பல ‘னை அளித்து, அவளை கவுதமர் மன்னித்து ஏற்பதாக ராம ‘யணத்தில் வால்மீகி சொல்வதாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் இங்கே ‘ தெரிந்தே ‘, தவறு செய்யும் அலங்காரம், ‘தொடர்ந்தும் ‘ அதைச் செய்கிறாள். இந்த வித்தியாசத்தை நாம் கவனிக்க வேண்டும் !
கடைசியாக, பாவண்ணன் ‘ யத் கின்கா ஜகதாம் ஜகத் ‘ என்று ஒரு வரி சொல்லி, அதற்கு இந்த உலகம் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிற தன்மை உடையது என்று தவறாகப் பொருள் சொல்கிறார். அவர் குறிப்பிட வந்தது, ‘ஈசாவாஸ்ய உபநிஷத் ‘தின் முதல் சுலோகம்.
ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத: கஸ்ய ஸ்வித் தனம்.
இதன் பொருள் :-
முதல் வரி: (நாம் பார்க்கும் ) இந்த பிரபஞ்சம் யாவுமே ஈசுவரன் படைத்தது, (அவை எல்லாவற்றிலும்) ஈசனின் சாயலே உள்ளது.
இரண்டாம் வரி: நாம் இறைவன் பார்த்து நமக்கு எதை அளிக்கிறானோ, அதை மகிழ்ச்சியோடு ஏற்கவேண்டும் , மற்றவர்களைப் பார்த்து (அவர்கள் உடமைக்கு) பொறாமைப் படக்கூடாது.
உலகம் வேகமாக மாறிக்கொண்டு இருக்கிறது, ஆகவே நாம் பழைய மரபுகளைக் கட்டிக் காப்பது சரி இல்லை, மரபை எதிர்த்து அலங்காரத்தை மன்னித்து தன்னோடு ஏற்றுக்கொண்டு, இந்துவை மணம் புரிவதாக தி.ஜா எழுதி இருக்கவேண்டும் என்பது பாவண்ணன் கட்சி. உலகம் அவர் சொல்லுகிற அளவுக்கு எல்லாம் ‘மாறிக் ‘கொண்டே இருக்கிறதாகத் தெரியவில்லை !
உதாரணமாக,
நூறு வருஷமாக அவ்வப்போது விதவை மறு மணம் பற்றி கதைகளும் நாவல்களூம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் 2002ல் கூட விதவை மறுமணம் என்பது அபூர்வமாகத்தான் உள்ளது! எத்தனை பேர் அதற்கு தயாராக இருக்கிறார்கள் ?
நூறு ஆண்டுகளாக சாதி ஒழிப்பு, சமத்துவம் பற்றிப் பேசி,எழுதி, சட்டம் கூட வந்தாகிவிட்டது. ஆனால் சிறிய டவுன்கள், கிராமங்களில் ‘:இரட்டை கிளாஸ் ‘ முறை இன்னும் –2002லும் –டாக்கடைகளிலிருந்து மறையவில்லை என்பது நிதரிசனமான உண்மை !!
**************
அம்மா வந்தாள் நாவலும் சரி, எழுத்தாளர் தி.ஜானகிராமனும் சரி , விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லைதான்! அதனால் பாவண்ணன் அவர்களுடைய — சற்றே காலம் கடந்த, அதாவது, ‘ அம்மா வந்தாள் ‘ வெளியாகி, சுமார் 25 வருஷத்துக்குப் பிறகு –வந்துள்ள விமரிசனத்தை வரவேற்கிறேன். நான் பாவண்ணனின் ரசிகன். அவர் சிறு கதைகளில் பாத்தி ரங்களின் மனித நேயம், எல்லாரிடமும் காட்டுகிற பிரியம், தவறுகளைக் கண்டால் வரும் சுபாவமான வருத்தம், இவற்றை எல்லாம் பார்த்து ரசித்திருக்கிறேன். இப்போது ‘அம்மா வந்தாள் ‘ நாவலில் பாவண்ணன் சொல்லாத இரண்டொரு விஷயத்தை நான் சொல்லலாம்
என்று நினைக்கிறேன்.
அம்மா வந்தாள் கதையில் ஒரு சின்ன ‘டெக்னிகல் ‘ குறை. இது சரிதானா என்று படிக்கிற வர்கள்தான் ( முக்கியமாக, பிரெஸ்களில் வேலை பார்க்கிறவர்கள்) சொல்ல வேண்டும். உதாரணமாக, தண்டபாணிக்கு ஒரு ப்ரெஸ்ஸில் தலைமை ( ?) ‘புரூஃப் ரீடர் ‘ உத்தியோகம். ஒவ்வொருத்தராக அவர் எதிரில் வந்து உட்கார்ந்து புரூஃப் காகிதத்தை ‘படித்து ‘விட்டுப் போகிறார்கள் . இவர் காதால் கேட்டே புரூஃபை சரி செய்கிறாராம்! கண்ணால் நேரிலேயே
( விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு ) பார்க்கும்போதே புரூஃப் படிப்பதில் சில தவறுகள் வந்துவிடுகின்றன! எதிரில் உட்கார்ந்து படித்தால் இவர் எப்படி திருத்தமுடியும் என்று எனக்கு தெரியவில்லை!
இன்னொன்று, பெண்களின் உடல்ரீதியான சபலம், பெண்ணின் மன உறுதி இன்மை – இவற்றை எல்லாம் சொல்ல ஒரு கதைக்கு ஒரு ‘அலங்காரம் ‘ போதாதா ? அங்கே இந்து, இங்கே அலங்காரம், இன்னொரு இடத்தில் சேஷராமனின் ‘கிரிசை கெட்ட ‘ மனைவி ! மொத்தம் ஐந்து பெண் பாத்திரங்கள் –அதில் மூன்று பேர் ‘ஒரு மாதிரி ‘! அதாவது பெண்கள் என்றால் பொதுவாக , பாதிக்கு மேல் இப்படித்தான் என்கிற மாதிரி ஆகிவிடுகிறது!
**********
கடைசியாக ஒரு வார்த்தை! தி.ஜானகிராமனின் கதா பாத்திரங்கள் ‘மரபை மீறாதவர்கள் ‘ என்றும் ‘வேலி ‘க்குள்ளேயே இருப்பவர்கள் என்று சொல்லும் பாவண்ணனின் குரல் தனியாக ஒலிக்கிறது! ஏன் என்றால் இந்த நாவல் வந்தபோதும் சரி, தி,ஜானகிராமனின் வேறு சில நாவல்களிலும் சரி, அவர் மேலே எழுந்த ‘ஏகோபித்த ‘ குற்றச்சாட்டு என்னவென்றால்,
‘அவர் மரபை மீறுகிறார்; அவருடைய கதா பாத்திரங்களை எல்லாம் ‘வேலி தாண்டிய வெள்ளாடுக ‘ளாகவே படைக்கிறார் என்பதுதான்! ‘
**
இரா.பாலசுப்பிரமணியம்,
பேடலூமா, யூ.எஸ்.ஏ.
பிப்ரவரி,10,2002.
- வலி
- இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும்
- அம்மா வந்தாள் ! பாவண்ணனின் விமரிசனத்திற்கு பதில்
- ந. பிச்சமூர்த்தியின் ‘தாய் ‘ – சுரக்கும் அன்பும் சுரக்காத பாலும்
- நிலவியல் பிரச்சினைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும் கூடங்குளம் அணுமின்நிலையமும்
- இந்தோனேஷியக் காடுகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன
- குபுக் குபுக் குற்றாலம்!
- படைப்பின் உதயம் !
- புரிந்து கொள்..
- தொலைந்து போனவை
- உன் காதல் புதிய நோய்!
- கல்யாணம் யாருக்கு ?
- ஒப்புமை
- நிலவியல் பிரச்சினைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும் கூடங்குளம் அணுமின்நிலையமும்
- இந்தியாவின் தாமஸ் பெயின்: பெரியாரின் அறிவியக்கம்
- தெய்வநிந்தனை குற்றத்துக்காக பாகிஸ்தான் சிறையின் தூக்குமர நிழலிலிருந்து ஒரு கடிதம்
- அடுப்பிலிருந்து வாணலிக்கும் , திரும்பவும்
- மழையும் வெயிலும்.
- உயிர் விளையாட்டு
- ஒப்புமை
- சீதாக்கா