சுரேஷ் குமார இந்திரஜித்
‘டா சொன்னியா இல்லியா..இன்னுமா கொண்டாரான் ? ‘ என்று அதட்டலாகக் கரியமால் கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு பையன் டாயுடன் அறை வாசலில் தோன்றினான். சலாமடித்து அவர் முன் டாயை வைத்து, சலாமடித்துச் சென்றான். டாயை எடுத்து உறிஞ்சினார், கரியமால்.
‘கூட்டி வந்துட்டேன் ‘ என்று உள்ளே நுழைந்த 747 சொன்னான். கரியமால் கூர்ந்து பார்த்தார். மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தாள். மூக்குத்தி இரண்டு மூக்கிலும் இருந்தது. தலை முடியை முடிந்திருந்தாள். வயது முப்பதை நெருங்கிக் கொண்டிருக்கும். கறுப்பு நிறம். பிசுக்கேறிய கயிறு கழுத்தில் கிடந்தது. கரியமாலின் கண்கள் அவளின் மேலாடையைத் துளைத்தன. 747-யைப் பார்த்து ‘கொண்டு வா அவனை ‘ என்றார்.
கைகள் முதுகுப் புறமாக விலங்கிடப் பட்டிருந்த ஒருவனை இழுத்து வந்தனர். அவன் ஜட்டியுடன் இருந்தான். அவனைப் பார்த்தவுடன் வந்திருந்தவள் கதறி அழுதாள். கரியமால் அவளைத் தோளைப் பிடித்துத் தள்ளி சுவரோரத்தில் போய் உட்காருமாறு அதட்டினார். ‘கையைக் கட்டி வாயைப் பொத்து ‘ என்றார். அவள் பேசாமலிருந்தாள். ‘என்ன .. சொன்னா செய்ய மாட்டியா ? ‘ என்றதும் பயந்து போய் மாணவியைப் போல் கையைக் கட்டி வாய் பொத்தி சுவரோரமாய் உட்கார்ந்தாள்.
கரியமால் ‘அடிங்க ‘ என்றார். இருவர் விலங்கிடப்பட்டவனை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே அடித்தனர். கரியமால் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவள் முகத்தில் தெரிந்த பீதி அவருக்குக் கிளர்ச்சியைத் தந்தது. அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.
‘இவன் பொண்டாட்டி கையாலே அடி வாங்கினாத்தான் திருந்துவான். ‘ என்றார். மீண்டும் அவளைப் பார்த்து இங்கே வா என்றார். அவள் குழம்பிய படியே பயந்து கொண்டு வந்தாள். நாற்காலியில் சாய்த்து வைத்திருந்த லத்தியை எடுத்து நீட்டினார். ‘அவனுக்கு அடி கொடு ‘ என்றார். அவள் தயங்கி புரியாதவளாக நின்று கொண்டிருந்தாள்.
‘ஓம் புருஷனைக் கூட்டிகிட்டுப் போகணும்னு நெனைக்கிறியா இல்லையா ? ‘ என்றார். அவள் ‘ஆமாம் ‘ என்று தலையசைத்தாள். ‘அப்ப அடி கொடு ‘ என்று அதட்டினார். ‘நான் எப்படி சாமி.. ‘ என்று ஆரம்பித்தவள் அவர் முகத்தைக் கண்டு பயந்து லத்தியை வாங்கிக் கொண்டாள்.
‘இப்படியா அடிக்கிறது. ஓங்கி அடி..இன்னும் ஓங்கி…. ‘ என்றார், கரியமால். அவன் கைகளினால் தன்னிச்சையாகத் தடுக்க முயன்று கொண்டிருக்க அவள் அடித்துக் கொண்டிருந்தாள். கரியமாலின் கண்கள் இக்காட்சியைக் கண்டு மின்னியது.
கரியமால் ஆட்டோவில் ஏறி ஜெயந்தி நகருக்குப் போகச் சொன்னார். அங்கு அம்பாசடர் கார் நிறுத்தப் பட்டிருந்த ஒரு வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தச் சொல்லி வீட்டினுள் நுழைந்தார். வேலையாள் அவரை மரியாதையுடன் உட்காரச் சொல்லி விட்டு உள்ளே சென்றான். சற்று நேரத்தில் ஆஜானுபாகுவான ஒருவர் தோன்றி கரியமாலை வரவேற்றார்.
‘நானே வரணும்னு இருந்தேன். ஊர்லேயிருந்து இன்னைக்கி காலேதான் வந்தேன். ‘ என்றார்.
‘அதனாலென்ன, ஒங்கள்ட்டேதான் எப்பவும் வாங்கிக்கலாமே ‘ என்றார் கரியமால்.
வேலையாள் குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்தான். குளிர் பானத்தை உறிஞ்சிக்கொண்டே ‘பார்ட்டி வச்சு நாளாச்சு ‘ என்றார் கரியமால். ‘ஒண்ணும் தாக்கல் இல்லையேன்னு பர்த்தேன் ‘ என்றார் விட்டிலிருந்தவர். ‘நாளக்கி ஃபிக்ஸ் பண்ணினா நல்லது ‘ என்றார் கரியமால். ‘நாளைக்கா ? யார் இருக்கான்னு தெரியலை, ஸார் கோபிச்சுக்கக் கூடாது. சிகரெட்லே சுடறதா சொல்லுதுகள்… . . ‘ என்று தயங்கினார். ‘அது எதோ போதையிலே , சும்மா ஜாலிக்கி ஏதாவது நடந்திருக்கும், அது பார்த்துக்கலாம் ‘ என்றார் கரியமால். ‘நாளக்கி சிரமப் படும் போல இருக்கே ‘ என்றார் வீட்டிலிருந்தவர். ‘ஒங்களாலே முடியாதா… நீங்க எவ்வளவு பெரிய ஆள் ‘, என்றார் கரியமால். ‘சரி .. நாளக்கி சாயந்திரம் ஹோட்டலுக்கு வந்திருங்க, ரிசப்ஷனிலே சொல்லிடறேன் பார்த்து நடந்துக்கங்க ‘ என்றார் வீட்டிலிருந்தவர். கரியமால் எழுந்தார். ‘ கொஞ்சம் இருங்க. கவர் வாங்கிக்கறீங்களா ? ‘ என்றார் வீட்டிலிருந்தவர். ‘நாளக்கி ரிசப்ஷனிலே வாங்கிக்கிறேனே ‘ என்று கரியமால் விடை பெற்றுக் கொண்டார்.
00000000000000000
வீட்டுக்கதவை வேலைக்காரச் சிறுமிதான் திறந்தாள். அவர் உள்ளே நுழைந்ததும் படுக்கையிலிருந்து எழுந்து அவர் மனைவி வந்தாள். அவள் ஆடைகள், தலைமுடி கலைந்த தோற்றத்துடன் இருந்தாள். அவள் நடந்து வந்த விதத்திலேயே தளுக்கு இருப்பதாகத் தோன்றி அவருக்கு எரிச்சல் ஏற்பட்டது. ‘சாப்பிடுறீங்களா ‘ என்றாள், அவள். அவர் ‘ம் .. ..ம்.. .. ‘ என்ற படி அறைக்குள் ஆடை மாற்றிக் கொள்ளச் சென்றாள்.
கரியமாலின் முதல் மனைவி திருமணமாகி சில காலத்திலேயே அவள் வீட்டிற்குச் சென்று விட்டாள். அதற்குப் பிறகு சுபத்திராவைத் திருமணம் செய்து கொண்டார். அவளிடம் அவளுக்குத் தெரிந்த தளுக்கு தான் அவரைப் பாடாய்ப் படுத்தியது. இப்போது சமயங்களில் அவருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. சுபத்திராவிடம் அவர், ஆசைக் கிழத்தியுடன் கொண்டிருக்கும் மனோநிலையைக் கொண்டிருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை.
அவளை அவர் குடிக்கப் பழக்கியிருந்தார். போதையில் அவளுடைய வேட்கை வெளிப் படும் ஆவேசம் அவருக்குப் பிடித்திருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் டேபிளருகே நின்று கொண்டிருந்த அவளைப் பார்த்தார். அவளின் தேகம் அவருக்குக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவளுடைய வேட்கைக்கு உட்பட வேண்டும் என்று நினைத்தார். அவள் உபயோகித்திருந்த வாசனைத் திரவியம் அவர் நாசியைத் தாக்கிக் கொண்டிருந்தது. சாப்பிட்டு முடிந்து எழுந்து கை கழுவினார்.
000000000000000000000
கரியமாலின் உடல் சக்தியிழந்து கிடந்தது. வலது கையைத் தூக்க முயன்றார். முடியவில்லை. உடல் அவர் இச்சைக்கு உட்படாது கிடக்க, அதன் மேல் பெண்கள் சிறு உருவத்துடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலான பெண்கள் மூக்குத்தி ஒளிரும் கிராமப் பெண்களாக இருந்தனர். வலது கையில் ஒரு பெண் விறகுக் கட்டை இறக்கி வைத்து விட்டு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். இழுத்துச் செருகிய சேலைக்கட்டுடன் ஒரு பெண் அவர் தோள் பட்டையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அவர் காலில் ஒரு பெண் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
பார்க்க வருபவர்களிடம் சுபத்திரா பேசும் பாவனைகளையும் , அவள் அணியும் ஆடைகளையும் அவர் பார்வை ஊடுருவிக் கொண்டிருக்க அவள் தொலைதூரம் சென்றுகொண்டிருந்தாள். கரியமாலாக அவர் உருவாகிய வரையிலான ரூபங்கள் வரிசைகளை மறந்து தோன்றி மறைந்துகொண்டிருக்க மருத்துவர் ஒருவர் இடையிடையே வந்து கொண்டிருந்தார்.
சுபத்திரா மேலாடைகளற்று தோன்றினாள். அவள் மார்புகளில் சிகரெட் நெருப்பினால் சுட்ட வடுக்கள் இருந்தன. சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கும் வேசிகள் தோன்றி அவர் முகத்தில் புகையை ஊதினர். சிகரெட்களினால் அவர் நெஞ்சைச் சுட வந்தனர்.சில பெண்கள் தோன்றுவதைக் கண்டதும் அவர் ஓட்டமெடுத்தார். அவர்கள் துரத்திக் கொண்டிருந்தனர். அவர் சாலையில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தார். கேட்டைத் தாண்டி ஒரு வீட்டிற்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டார். இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குள் யாருமே தென்படவில்லை. ‘வீட்ல யாரு ? ‘ என்று குரல் கொடுத்தவாறு ஹாலில் நின்றார். ஒரு அறைக் கதவைத் திறந்து நுழைந்தபோது அவருக்குப் பின் தோற்றம் தெரிய ஜன்னல் வழியாகப் பார்த்த வாறு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் திரும்பினால் அதிர்ச்சியூட்டும் படியாக ஏதாவது நடக்கும் என்று பயந்து அறையை விட்டு வெளியேற முயன்றார். அறைக்கதவு தானாகவே மூடிக் கொண்டது. அவள் திரும்பும் போது தனக்கு அழிவு ஏற்பட்டு விடும் என்று அவருக்குத் தோன்றியது.
மூச்சு முட்டுவது போல் இருந்தது. தொண்டையில் ஏதோ அடைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பெண்ணீன் பின் தோற்றம் தெரிந்தது. அவர் எதிர் பார்த்த அந்த முகம் கோரைப் பற்களுடன் பயங்கரமாக மாறியிருக்கும் என்று தோன்றியது. அவள் திரும்பும் போது தனக்கு மரணம் சம்பவிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று தோண்றியது. அவர் ‘திரும்பாதே ‘ என்று கத்த முயன்றார். கத்துவதாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் குரல் வரவில்லை. குரல் வராமலேயே அவர் கத்த முயன்று கொண்டிருந்தார்.
(காலச் சுவடு – ஏப்ரல் சூன் 1995)