அண்டம் அளாவிய காதல்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

ஜடாயு



பூங்கொடியே!
பூமி அவன் திருவடி
சூரியன், சந்திரன், தீ என்னும் முச்சுடர்கள் முக்கண்கள்
அவன் மூச்சு புவனத்தின் சுவாசம்
அலைகடல் ஆடை, வானம் திருமுடி
ஆகாயம் உடல்
வேதம் முகம், திசைகள் தோள்கள், இசையே அவன் சொல்
அவனுக்காக
உன் அழகிய நிறம் குலையுமாறு ஏங்குகிறாயே பேதையே!

நாயகிக்குத் தோழி கூறுவதாக அமைந்த இந்த அற்புதமான பாடல் சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்து அந்தாதியில் வருகிறது:

“பாதம்புவனி சுடர்நயனம் பவனம் உயிர்ப்பு ஓங்(கு)
ஓதம் உடுக்கை உயர்வான் முடி விசும்பே உடம்பு
வேதம் முகம் திசை தோள் மிகு பண்மொழி கீதமென்ன
போதம் இவர்க்கோர் மணிநிறம் தோற்பது பூங்கொடியே”

நாயக நாயகி பாவத்தின் வெளிப்பாடுகளில், தலைவனை ஒரு தகைமை சான்ற ஆண், வேந்தன், அழகன், பலரும் விரும்பும் குணங்களை உடையவன் என்பதாக எண்ணி மயங்கி நாயகி அவன் மீது காதலுறுவது ஒரு தளம். இயற்கையின் வர்ண ஜாலங்களில் எல்லாம் அவனது உருவே நிறைந்திருப்பதாக எண்ணி, நிலவிலும் கதிரிலும் மழையிலும் மலரிலும் எல்லாம் அவன் உருவமே அவள் கண்களுக்குத் தோன்றி அவளை வாட்டுவது இன்னொரு தளம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவிலும், அண்டத்தின் ஒவ்வொரு துகளிலும் அவன் உயிர்ப்பே நிறைந்திருப்பதாக எண்ணி அன்பில் ஆழ்வது இன்னொரு தளம். ஆண்தகை மேலான காதல் அண்டம் அளாவிய காதலாகப் பரிணமிக்கும் அற்புதமான ஆன்மீகத் தளம் அது.

“குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார் ”

என்னும் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி. அவன் குழல் அழகு, வாய் அழகு, கண் அழகு, தாமரை மலர்ந்து கிடக்கும் தொப்புள் அழகுஸ இது உடல் வயப் பட்ட காதல் மட்டுமல்ல, உலக வயப்பட்ட காதல்! “உலகும் இயற்கையுமாய் அழகை விரிக்கும் படைப்பின் விதையான பிரம்மன் தோன்றியதால் எம்பெருமான் தொப்புள் அழகின் மூலமாயிற்று” என்றே உரையாசிரியர்கள் பொருள் கூறுவார்கள்.

எல்லா இருமைகளையும் கடந்த ஒருமை சார்ந்த யோக அனுபூதி நிலையே இப்படிக் காதல் வெளிப்பாடாக நாயகி பாவத்தில் பரிணமிக்கிறது. படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற பேத எண்ணமும், அதில் முளைக்கும் கசடுகளும் இந்த பாவத்தில் இல்லை. எல்லா சிருஷ்டி பேதங்களிலும் தன்னையே உணர்ந்து அந்த சுயம் மீது காதல் கொண்டு அந்தக் காதலையே இந்தப் பிரபஞ்சம் முழுவதற்குமான பேரன்பாகப் பிரதிபலிக்கும் களிப்பு நிலை அது.

கோபிகைகள் கண்ணனிடம் கொண்ட பிரேமையில் புதைந்திருப்பதும் இந்த பாவம் தான். ஒவ்வொரு கோபிகையும் கிருஷ்ணன் தன்னுடனே ஆடியதாக எண்ணிய அனுபவம் இந்த ஒருமை நிலையிலேயே வாய்த்தது. “ஓ கிருஷ்ணா, நீ கோபிகைகளுக்கு ஆனந்தம் தரும் ஆயர்குலச் சிறுவன் மட்டுமல்ல, உடல் படைத்தவை அனைத்திலும் உள் உறைந்து விளங்கும் அந்தராத்மா அல்லவா?” ( ந கலு கோபிகா நந்தனோ பவான், அகில தேஹினாம் அந்தராத்ம த்ருக் – கோபிகா கீதம்) என்று கண்ணன் தங்களை விட்டுப் பிரிந்தவுடன் கோபிகைகளின் பிரலாபித்துப் பாடும்போதும் இந்த அத்வைத பாவம் அவர்கள் உள்ளத்தை விட்டு அகலவில்லை.

நாரத பக்தி சூத்திரம் (21…23) சொல்லுகிறது:

“ஆயர்பாடியின் கோபிகைகளே தூய்மையான பக்திக்கு உதாரணம்.
பரம்பொருளின் மேலாம் தன்மையை அவர்கள் அறியாமலோ, மறந்தோ இருந்தார்கள் என்ற அபவாதம் பொருந்தாது.
மாறாக, அது (கிருஷ்ணன் பரம்பொருள் என்ற ஞானம்) இல்லாதிருந்தால் அவர்களது பக்தி கள்ளக் காதலாகவே ஆகும்”

அளவற்ற அன்புக் கடலில் ஆழ்ந்த நம் ஆழ்வாரின் வாய்மொழி சாற்றும் –

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்

கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
கடல் ஞாலத்தென் மகள் கற்கின்றனவே

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற காற்றெல்லாம் யானே என்னும்
ஸ.
காண்கின்ற உலகத்தீர்க்கென் சொல்லுகேன்
கான்கின்ற என் காரிகை கற்கின்றனவே

இந்த உணர்வு வெறும் சொற்களால் ஆனதல்ல, ஆழ்வாரின் உள்மனத்தில் முகிழ்த்த ஆன்மீக அனுபவம். இதே உணர்வு தான் காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் பாரதிக்கு நந்தலாலாவைக் காட்டியது.

“நெரித்த திரைக் கடலில் நின்முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்
சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன்
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றதுன் முகம் அன்றிப் பிறிதொன்றில்லை”
(கண்ணன் பாட்டு – பாரதியார்)

என்னதான் பிரித்துப் பிரித்துப் பார்த்தாலும், காதல் வயப்பட்ட அந்த மனத்திற்கு ஒரே பொருள் தான் தெரிகிறது. வேதஞானம் ஒளிரும் அந்த மனத்தில் பேதஞானத்திற்கு இடம் இல்லை.

“காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்”

என்று கவியரசரின் உள்ளத்திலே முளைத்த சமத்துவ கீதம் சோஷலிசக் கூடாரத்தில் உருவான சொத்தைக் கோஷமல்ல, அத்வைத பாவம் தோய்ந்த ஆன்மீகப் பேரொளியின் கீற்று.

உடம்பில் தோன்றும் காதல் வெளிப்பாடுகள் அதீத கவித்துவத்துடன் சொல்லப்பட்டாலும் “ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வதுவாய ஒருத்தன்” என்று திருவாசகம் சொல்வது தான் உண்மையில் நாயக நாயகி பாவத்தின் ஆழ்நிலை என்று எண்ணத் தோன்றுகிறது. வேறு சிலர் சொல்வது போல சமயத்தளையில் சிக்கியவர்கள் தங்களைக் கட்டுடைக்கப் பயன்படுத்திய உத்தி நாயக-நாயகி பாவம் என்பதும் மிகத் தவறான பார்வை. ஆண்டாளுக்கும், மணிவாசகருக்கும், நம்மாழ்வாருக்கும் யார் சமயத் தளை போட்டது? மாறாக, இவர்களது கவிதை வெளிப்பாடுகளை புனிதமான பக்தி வேதங்களாக அல்லவா இன்று வரை இந்து சமய மரபு போற்றி வந்து கொண்டிருக்கிறது?

ஏழு நாட்களில் உலகத்தையும் சாத்தானையும் படைத்து விட்டுத் தூங்கப் போன கடவுள், தன்னை இறைத்தூதன் என்று எப்போதோ சொன்னவனை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் படுகொலை செய்யச் சொல்லும் கடவுள் இவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது இந்தப் பேருணர்வு! உலகத்தின் அனைத்து மாசு, மறுக்களையும் கழுவி அன்புப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தும் சக்தி படைத்த அண்டம் அளாவிய காதல் உணர்வு!


jataayu_b@yahoo.com
http://jataayu.blogspot.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு