நா. அசுரன்
ஒரு மறுகாலனியாதிக்கச் சதியின் கிளைக் கதை:
அக்காமாலா/கப்ஸி நிர்வாகி: நன்கு காய்ச்சிய பின்பு ஆற வைத்து அதில் ஒரு முயலை மூன்று நாட்கள் ஊறப்போட வேண்டும்.
இம்சை அரசன்: ஓவ்வ்…..
அ.க.நி: பிறகு, அதை பாம்பு கழட்டிப் போட்ட சட்டையில் ஊற்றி நன்கு ஊறப்போட வேண்டும்.
இம்சை அரசன்: ஓவ்வ்வ்வ்வ்… (வாந்தியை காவலனின் முகத்தில் அபிசேகம் செய்கிறார்).
அக்காமாலா, கப்ஸி பானங்களின் தாயாரிப்பு முறை பற்றி இம்சை அரசனில் வரும் நகைச்சுவைக் காட்சியில் வரும் வசனங்கள் மேற்சொன்னவை.
ஏற்கனவே BJP ஆட்சி செய்த பொழுது இந்தக் குளிர்பானங்களில், பூச்சிக் கொல்லி மருந்து இருப்பதைக் கண்டுபிடித்து, அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த விசயம் எல்லாம் தெரிந்தும் கூட, வழக்கம் போல் நடுத்தர வர்க்க மோகிகள் கோகோகோலா, பெப்ஸியை தொடர்ந்து பருகிக் கொண்டு “ஏ தில் மாங்கே மோர்’ என்று கூறி அலப்பரையாக பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். இதையும்கூட இம்சை அரசனில் நக்கல் செய்திருப்பார்கள்.
இப்பொழுது இந்த விசயத்தை ஊர்ஜிதம் செய்யும் விதமாக மீண்டும் இந்த குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட, அந்த பூச்சிக் கொல்லி மருந்து கலப்படத்திற்கு, பிற்பாடும் கூட நிலைமை இன்றுவரை மாறவில்லை என்று அந்த செய்தி கூறுகிறது (cnnibn breaking news). அந்த சமயத்தில், பாரளுமன்றக் கூட்டுக் கமிட்டி(Joint Parliamentary Committee (JPC)) சமர்ப்பித்த ஆலோசனைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதற்கு என்று நிர்னயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டுகள் கம்பெனியின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டதாக் அந்த செய்தி கூறுகிறது.
2006 -ல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment (CSE)) என்ற நிறுவனம் மீண்டும் இந்த குளிர்பானங்களை ஆய்வு செய்து பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
12 மாநிலங்களில் உள்ள 25 கோக் மற்றும் பெப்ஸி நிறுவன பானங்களை தயாரிக்கும் ஆலைகளிலிருந்து பெறப்பட்ட பாட்டில்களை ஆய்வு செய்ததில், பீரோ ஆப் இன்டியன் ஸ்டாண்டர்டு பரிந்துரைக்கும் அளவை விட, சராசரியாக 24 மடங்கிற்கும் அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு இந்தக் குளிர்பானங்களில் இருக்கிறது.
கொல்கத்தாவிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிளில் லிந்தேன் என்ற மிகவும் அபாயகரமான நச்சு, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 140 மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.
தானே விலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிளில் நியுட்ராக்சின் குளோர்பிரிபோஸ் என்ற நச்சு 200 மடங்கு உள்ளது.
பூச்சிக் கொல்லிகள் இவ்வாறு உடலில் சேர்வது உடனடி விளைவுகளை ஏற்படுத்தாவிடினும். நீண்ட காலப் பயன்பாட்டில், மலட்டுத்தன்மை, கான்சர், வேறு இனம் தெரியாத வியாதிகள். உடல் குறைபாடுகள், மரபணு குறைபாடுகள் என்று பல வகையில் ஒரு சமூகத்தையை பாதிக்கும் அபாயகரமானது.
CSE நடத்திய ஆய்வின் முடிவில், பூச்சிக் கொல்லிகள் 2003ல் இருந்த அளவுக்கும் இப்பொழுது 2006-ல் உள்ள அளவுக்கும் 30 மடங்கு அதிகரித்திருப்பதாக சொல்கிறது.
மேலும் மிக அபாயகரமான இன்டேன், DDT, மாலாதின் மற்றும் குளோர்ப்ய்ரிபொஸ் போன்ற நச்சுகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட எல்லா பானங்களிலும் இருப்பதாக CSE சொல்லுகிறது.
இப்படி வெளிப்படையாகவே விளம்பரம் செய்து நஞ்சை விற்பனை செய்யும் இவர்களை அரசு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் இந்திய மருந்து சந்தையை பன்னாட்டு கம்பெனிகளுக்குத் திறந்து விடும் திட்டத்துடன் உள் நாட்டு மருந்துப் பொருட்களை தரம் என்று காரணம் கூறித் தடை செய்கிறது இந்த அரசு.
தடை செய்யப்பட்ட அந்த விலை குறைந்த மருந்துக்களைத் தான் இது நாள் வரை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வந்தனர். patent rights-ன் மூலம் ஒரு புறம் மருந்துப் பொருள் விலைகளை ஏற்றிய அரசு மறுபுறம் மக்கள் நலம் என்று நாடகமாடி பன்னாட்டு கம்பெனிகளுக்கு மாமா வேலை செய்கிறது. அரசின் இந்த காலனியாதிக்க சேவை – கோக் மற்றும் மருந்துப் பொருட்களில், தரம் என்ற விசயத்தில் கடைபிடிக்கும் இரட்டை அணுகுமுறையின் மூலம் அம்பலமாகிறது.
மறுகாலனியாதிக்கச் சூழல் மக்களுக்கு கிடைத்து வந்த குறைந்த பட்ச ஜனநாயகத்தையும் கூடத் தடுக்கிறது. கோகோ கோலா என்ற விச பானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை, உள் நாட்டு உற்பத்தியாளர்களை நாசமாக்கிய கம்பெனியை, இம்சை அரசனைப் போல போசித்துப் பாதுகாக்கும் இந்த அரசு, அதற்கு எதிராக ஒரு சிறு துரும்பு எடுத்துப் போட்டால் கூட அரசுக்கு எதிராக சதி என்று கூறிக் கைது செய்கிறது. இதன் மூலம் அரசு என்பது பன்னாட்டு கம்பெனிகள்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது அரசு. புரிந்து கொள்ளாத மரமண்டைகள் இன்னும் அக்கமாலா, கப்ஸி குடித்துக் கொண்டு மாடுகளாக(அதுவும், எருமை மாடு) வலம் வந்து கொண்டிருக்கின்றன.
ம.க.இ.க பாடல் ஒன்று:
“தேசத் துரோகி ஆகணுமா பெப்ஸியக் குடி! – வெள்ளக்
காரன் வாரிசாகணுமா கோலா குடி!”
ம.க.இ.க பிரசுரங்கள் கோக்கை “அமெரிக்க மூத்திரம்” என்று கூறி அதை சப்புக் கொட்டி பந்தாவாகக் குடிப்பவர்களைக் கேலி செய்கின்றன.
தாமிரபரணி பிரச்சனையில், குடிக்க தண்ணீரின்றி திருநெல்வேலி பகுதி மக்களே கஷ்டப்படும் பொழுது கோகோகோலாவுக்கு லிட்டர் 1.2 பைசாவுக்கு தண்ணீர் விற்பது ஒரு பொறுப்புள்ள அரசு செய்யும் வேலையா என்று கேட்டுப் போராடிய ஜனநாயக சக்திகளுக்கு(ம.க.இ.க., CPI, CPM, தலித் அமைப்புகள்) சிறைத்தண்டனைதான் பரிசாகக் கிடைத்தது. வால்போஸ்டர் ஒட்டிய ம.க.இ.க வை சேர்ந்த ஒருவருக்கு அரசை எதிர்த்து சதி செய்ததாக சிறைத் தண்டனை (அந்த வால்போஸ்டரில் இருந்த வார்த்தைகள் – “அமெரிக்க கோக்கே வெளியேறு, கோக் மற்றும் பன்னாட்டு பொருட்களை எரித்து போராட்டம்”).
தாமிரபரணி பிரச்சனை பற்றி எடுக்கப்பட்ட ‘மூழ்கும் நதி'(தமுஎச) படத்தைத் திரையிடத் தடை போடப்பட்டது. கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் கோகோகோலாவுக்குத் தடையாகத் தீர்மானம் நிறைவேற்றி விடுவார்கள் என்ற உளவுத்துறை செய்தியை அடிப்படையாக வைத்து கிராம பஞ்சாயத்து கூடும் அடிப்படை ஜன நாயக உரிமையைத் தடை செய்தார் கோகோகோலாவின் வாட்ச்மேனாக புல் டைம் வேலை பார்க்கும் கலெக்டர். இப்படி அரசும் அதன் இயந்திரங்களும் முழு வீச்சில் வாட்ச்மேன், கங்காணி, கூலிப்படை உத்தியோகம் பார்த்து கோகோகோலாவுக்கு பன்னாட்டு சேவையை செவ்வனே செய்தன. இதை மீறித் தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர் கம்சனை உற்சாக பானம் கொடுத்தே கொன்றது கோகோகோலா. இப்படி மறுகாலனியாதிக்கத்தின் கோர முகம் அப்பட்டமாக வெளியே தெரிந்தும்கூட சிலர் இந்த போலி ஜனநாயக அமைப்புக்கு முட்டுக் கொடுப்பது காரியவாதமான செயல்.
இந்தக் குளிர்பான நிறுவனங்களால் ஏற்படும் சூற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு கேரளா பிளாச்சிமடா ஒரு சிறந்த உதாரணம். மிளகு பயிரிடும் அளவு வளமான அந்த பூமி இன்று நஞ்சாக மாறிவிட்டது. காரணம், ஒரு லிட்டர் கோக்குக்கு 8 லிட்டர் நிலத்தடி நீரை நஞ்சாக்கும் தயாரிப்பு முறையும், அதில் கிடைக்கும் அபாயகரமான நச்சுக் கழிவைக் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு உரமாக விற்றதும்.
இந்தக் குளிர்பான நிறுவனங்களின் கோட்டம் லத்தின் அமேரிக்க நாடுகளில் மிகவும் மோசமாக உள்ளது. பொலிவியாவில் இதுவரை 8 தொழிற்சங்கத் தலைவர்களை அந்த நாட்டு பாராமிலிட்டரி படையின் துணையோடு படுகொலை செய்துள்ளது கோகோகோலா நிறுவனம். இதைக் குறிப்பிட்டு கண்டிக்கிறது பொலிவிய உயர் நீதிமன்றம்.
சமீபத்தில் இந்த நிறுவனங்களின் பானங்களை அமெரிக்காவிலிலுள்ள 11 யுனிவர்சிட்டிகள் தடை செய்தன. அதற்கு அவர்கள் சொன்ன காரணம்: இந்தியாவில் இந்த நிறுவனங்கள் செய்த சுற்றுசூழல் சீர்கேடுகள், லத்தின் அமெரிக்காவில் செய்த படுகொலைகள், மனித உரிமை மீறல் செயல்கள்.
அமெரிக்க இளைஞர்களின் இந்த நடவடிக்கை, இது போன்ற நிறுவனங்கள் ஆளுமைக்கு வருவதற்கு காரணமான அரசியல் பொருளாதார அடித்தளம், ஏகாதிபத்திய சுரண்டல் பொருளாதாரத்துக்கும் இது போன்ற கம்பெனிகளுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவு போன்றவற்றை உணர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. அதனாலேயே இந்த நடவடிக்கை வெறுமனே கோக்கை மற்றும் குற்றம் சாட்டி விலகி விடுகிறது, உண்மையான குற்றவாளியான ஏகாதிபத்தியத்தை இவர்கள் அடையாளம்கூடக் காணவில்லை.
இது கோக் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனையோ அல்லது பூச்சிக் கொல்லி பற்றிய பிரச்சனையோ மட்டும் அல்ல. இது ஆகப் பிரதானமாக ஏகாதிபத்தியங்களின் சந்தைத் தேவைக்கும், வளங்களை சுரண்டும் வெறிக்கும் ஏதுவாக, நமது நாட்டை காவுகொடுப்பது, நாட்டை அடிமையாக்குவது பற்றிய பிரச்சனை.
இது நமது நிலத்தடி நீரை, நீலத்தங்கத்தை(blue gold) தனது சந்தைத் தேவைக்காக ஏகாதிபத்தியங்கள் கபளீகரம் செய்யும் ‘GATS’ ஒப்பந்தத்தின்படியான, நாட்டை காலனியாக்கும் ஒரு மறுகாலனியாதிக்கத் திட்டம் பற்றிய பிரச்சனை.
மக்கள் தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆறு , குளங்களை தனியார் மயமாக்கி, அவன் எங்கு லாபம் கிடைக்கிறோதோ அங்கு விற்பது பற்றிய பிரச்சனை.
தண்ணீர் உட்பட இயற்கை வளங்கள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிய பிரச்சனை.
தண்ணீர் மற்றும் இயற்கை வளங்களான — சமூகத்தின் சொத்துக்களை யாரோ ஒரு சிலரின் லாப வெறிக்காக, சமூகத்துக்கு எந்தப் பயனுமின்றி தனியார்மயமாக்குவது பற்றிய பிரச்சனை.
பாடுபட்டுப் பெற்ற அரைகுறை சுதந்திரம்கூட பறிபோவது பற்றிய பிரச்சனை.
கோக் ஒரு அடையாளம் மட்டுமே. அது மறுகாலனியாதிக்கத்தின் குறியீடு. கோக் தண்ணீர் தனியார்மயத்தின் ஒரு அம்சம், அவ்வளவே. சமீபத்தில் வந்த செய்திகள் பிரிட்டனில் இன்னும் சில வருடங்களில் மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்பார்த்து தண்ணீர் சிக்கனம் பற்றி பிரச்சாரம் செய்கிறார்களாம். அவர்களுக்கு கவலையில்லை, தண்ணீர் பிரச்சனை வரும் காலத்தில் இந்தியாவின் அனைத்து நீராதாரங்களும் பன்னாட்டு கம்பெனிகளின் கையில் இருக்கும்(தண்ணீர் வியாபாரத்தில் ஐரோப்பாதான் கிங்). தண்ணீர் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு போகும். அதை சிலர் டெவலப்மென்ட் என்றும் கூறுவார்கள். ஆக உண்மையில் இதைப்பற்றிய பிரச்சாரம் தேவைப்படுவது இந்தியாவில்.
சினிமாக் கதைகளில்தான் அநியாயம் நடக்கும் பொழுது ஹீரோ உக்கிரபுத்திரனைப் போல குதிரையிலோ அல்லது பறந்தோ வந்து நியாயத்தை நிலை நாட்டிச் செல்வார். உண்மையில் இப்படி தனி மனித சாகசப் படங்களை ஆளும் வர்க்கம் அனுமதிப்பது மக்கள் தங்களது கூட்டு சக்தியை உணர்வதை தடுக்கவும், மக்களது கோபங்களுக்கு அந்த படங்கள் வடிகாலாக இருப்பதுமே காரணம். மற்றபடி இதில் ஜன நாயகம் எல்லாம் ஒன்றும் கிடையாது. அப்படி உண்மையிலேயே ஜன நாயகம் இருந்தால் கோக் பிரச்சனையில் போஸ்டர் ஒட்டவும், ‘மூழ்கும் நதி’ படத்தை திரையிடவும், அடிப்படை ஜன நாயக உரிமையான கிராம பஞ்சாயத்து கூடவும் தடை போடுவதேன்? வரலாற்றில் மக்கள் தங்களது விடுதலையைத் தாங்களேதான் போராடிப் பெற்றுள்ளனர். பிச்சையாகப் போடப்படுவது விடுதலையாக இருக்காது.
ஆகவே இந்த அநியாயங்களை, மறுகாலனியாதிக்கச் சதிகளை மக்கள்தான் வெகுண்டெழுந்து ஆங்காங்கே போராடி வீழ்த்த வேண்டும். தத்துவ பலம் கொண்ட புரட்சிகர அமைப்புகளில் மக்கள் அணிதிரண்டு தங்களது உண்மையான எதிரிகளான ஏகாதிபத்தியத்தையும் அவர்களின் பிரதிநிதிகளான பன்னாட்டு கம்பெனிகளின் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும். அவர்களின் இருப்பைக் கேள்விக் குறியாக்க வேண்டும். மறுகாலனியாதிக்க ஏஜெண்டான இந்த போலி அரசைத் தூக்கியெறிய வேண்டும். இல்லையெனில் குடிக்கக் கோக் கூட இன்றி எதிர்கால சந்ததியினர் தங்களுக்குள் சண்டையிட்டுத் தமது தாகத்தை தீர்த்துக் கொள்வர்கள்.
***********************
மேலதிகமாக இது பற்றி தெரிந்துகொள்ள கீழ்கண்ட சுட்டிகளை பயன்படுத்தவும்:
* தண்ணீர் தாகத்திற்கா, லாபத்திற்கா?
http://tamilcircle.net/Bamini/puthiyakalacharam_book/bookmain.htm
* தண்ணீர் தனியார்மயம்
http://blackboards.blogspot.com/2006/08/blog-post_06.html
* Indian Freedom and Imperialism – Immediately after August 15
http://kaipulla.blogspot.com/2006/06/indian-freedom-and-imperialism.html
* கடல் நீர் தனியார்மயம், காற்றும் ஆகலாம் எதிர்காலத்தில்
http://www.tamilcircle.net/Bamini/puthiyakalacharam/2005/sep_2005/puthiyaka_sep2005_09.htm
*தண்ணீரில் எழுதிய புதிய மனுநீதி
http://www.tamilcircle.net/Bamini/puthiyakalacharam/2005/sep_2005/puthiyaka_sep2005_06.htm
* நீரில் வணிகம், நீரில்லா துயரம்
http://www.tamilcircle.net/Bamini/puthiyakalacharam/2005/sep_2005/puthiyaka_sep2005_08.htm
* பாட்டில் தண்ணீர் பாண்டியர்களே கொஞ்சம் இங்கே பாருங்கள்
http://www.tamilcircle.net/Bamini/puthiyakalacharam/2005/sep_2005/puthiyaka_sep2005_07.htm
***************************
.
Mail: asuran@inbox.com
http://poar-parai.blogspot.com/2006/08/blog-post.htm
- காகம்
- டாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை
- அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்
- புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை
- பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன்
- கீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..!
- புதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8
- வகாபிய புரோகிதர்களுக்கு
- சாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்
- ஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்
- இணைய இதழா? அச்சுப் பதிப்பா? எது சிறந்தது?
- சாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்
- கடித இலக்கியம் – 17
- ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- திரு நேசகுமாருக்கு பதில்
- தேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு
- லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு
- கலை இலக்கிய ஒன்றுகூடல்
- கடிதம்
- கடிதம்
- தவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )
- வாசிப்பவருக்கு நெருக்கமான கவிதைகள்
- மாரியம்மன் கதை
- ‘வினாடிக் கணக்கு’
- பெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- என் தேசத்தில் நான் — சிறிய இடைவேளைக்குப் பின்னர்
- விழித்தெழும் பாரதத்தை நோக்கி..
- பிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு
- வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்
- நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்
- வண்ணச்சீரடி
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33
- திருமுகப்பில்…..