ஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம்களுக்கு 100% ஒதுக்கீடு…!!!

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

நல்லடியார்தீவிரவாதம்,பயங்கரவாதம் பற்றி யார்தான் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு! மலர்மன்னனின் ‘ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!’ திண்ணைக் கட்டுரையை வாசித்த பிறகு இப்படித்தான் எண்ணத் தோன்றியது.
“மலர்மன்னன் தீவிரவாதத்தை எதிர்த்து எழுதக்கூடாதா?” என்று யாராவது கேட்க நினைக்கலாம். மலர்மன்னன் தாராளமாக எழுதலாம்; அப்படியே, தேசிய ஒருமைப்பாடு குறித்து பால்தாக்கரேயும், சமய சகிப்புத்தன்மை குறித்து நரேந்திர மோடியும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் குறித்து மகிந்த ராஜ பக்சேவும், மத்தியக் கிழக்கில் அமைதியின்மை குறித்து ஜார்ஜ் புஷ்ஷும் கூட எழுதலாம். வேதம் ஓதும் சாத்தான்கள்!

‘முகமதிய தீவிரவாதம்’, ‘முகமதிய பயங்கரவாதம்’ என்றெல்லாம் மலர்மன்னன் போன்ற சங்பரிவார முகமூடி ஆசாமிகள் கோயபல்ஸ்தனமாக எழுதுவதைப் பார்க்கும்போது, இத்தனை ஆண்டுகளாக இவர்களெல்லாம் கோமா அல்லது செலக்டிவ் அம்னீசியாவில் இருந்தார்களோ என்ற சந்தேகம் வருகிறது!

போகிற போக்கில், “ஒரு தாய் மிகவும் அப்பாவித்தனமாக என் மகன் தினமும் தவறாமல் குரான் வாசிப்பான்; தொழுகை செய்வான் என்றெல்லாம் விவரிக்கிறார், பிரச்சினையே அதுதான் என்பது தெரியாமல்” என்று எழுதுவதன் மூலம் மலர் மன்னன் சொல்ல வரும் செய்தி என்ன?

முகமதிய தீவிரவாதமாம்! எங்காவது தீவிரவாதச் செயலில் ஒரு/சில முஸ்லிம் ஈடுபட்டால் அதற்கு முகமதிய தீவிரவாதமாம். இந்திரா காந்தியை ஒரு சீக்கியன் கொன்றதால் குருநானக்கிய தீவிரவாதம், பக்கத்திலுள்ள இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவிப்பதால் பவுத்தத் தீவிரவாதம், புஷ்-பிளேர் கூட்டணி நடத்தும் கூட்டுக் கொலை கிறிஸ்தவ தீவிரவாதம், காந்தியடிகள் படுகொலை முதல் மீரட், பாகல்பூர், மும்பை, குஜராத் என விடாது துரத்தும் தீவிரவாதங்களைச் செய்து கொண்டிருப்பதால் சங்பரிவார அல்லது இந்துதர்ம தீவிரவாதம் என்றும் சொல்லலாமே! சமணர்களைக் கழுவிலேற்றிய தீவிரவாதமும் இன்னும் மறந்து விடவில்லையே! போதுமய்யா உங்கள் மதசார்பு தீவிரவாதக் கண்ணோட்டம்! முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரை குத்த மட்டும் 100% ஒதுக்கீடு கொடுக்க எப்படி அய்யா மனது வந்தது?

பாகல்பூர் படுகொலைக் குற்றவாளிகளுக்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றவாளிகளுக்கு வெறும் ஆயுள்சிறைத் தண்டனையைக் கொடுத்துள்ளார்! ஏன் மரண தண்டனை வழங்கக் கூடாது? என்பதற்கு, அவர்கள் செய்த குற்றம் ‘அரிதினும் அரிதான’ (Rare of the rarest) குற்றமாகப்படாததால் வெறும் ஆயுள்சிறைத் தண்டனையாம்!

http://www.hindu.com/2007/07/08/stories/2007070860650100.htm

ஆப்கானில், ஈராக்கில் முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுவது அன்றாட/சாதாரணச் செய்தியாகி விட்டதால், கேவலம் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்றது சாதாரணக் குற்றம் என்று கருதினாரோ என்னவோ! ஒரு கிராமத்தையே சூறையாடி, முஸ்லிம்களைக் குறிவைத்துக் கொன்று காலிப்ஃபிளவர் தோட்டத்திற்கு அவர்களின் உடலை உரமாகப் போட்டு மறைத்ததுதான் அரிதினும் அரிதற்ற செயல் போலும்.

பாராளுமன்ற தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து, தாக்குதலுக்கு முன்னர் அப்ஷல் குருவின் செல்பேசிக்கு அழைப்பு வந்தததையே பாராளுமன்றத் தாக்குதலுக்குப் பிரதான காரணமாக்கி, அப்ஷலுக்கு மரண தண்டனை வழங்க விழித்துக் கொண்ட நீதிபதிகளின் “கூட்டு மனசாட்சி”, பாகல்பூர் படுகொலை நடத்திய இந்து பயங்கரவாதிகள் விசயத்தில் கும்பகர்ணத் துயில் கொண்டது ஏனோ?

மும்பை குண்டு வெடிப்பு மற்றும் பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளிகள் குறித்து, “குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஏராளமான உயிர்ச் சேதங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்பதற்காகவாவது அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டாமா?” என்ற மலர்மன்னன் பாகல்பூர், குஜராத் படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கும் இதே கேள்வியைக் கேட்டுவிட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம்கள் கேட்காமலேயே கிடைத்த 100% ஒதுக்கீடான முகமதிய தீவிரவாதம் பற்றி உபன்யாசம் செய்யட்டும்.

மும்பை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் சஞ்சய்தத் 15 வருடங்களாக விசாரணைக் கைதியாக வலம்வரும் காலத்தில் இருந்தே பல்வேறு வெளிநாடுகளுக்கு(?)ச் சென்று சினிமா படங்கள் மூலம் பெரும் பணம் பார்த்தவர். பால்தாக்கரேயின் பொற்பாதங்களில் விழுந்து ஆசிபெற்ற சிவப்பு நாமம் போட்ட ‘ஹிந்து’ஸ்தான் பயங்கரவாதியான சஞ்சய்தத் விசாரணைக் கைதியாக இருக்கையில் எப்படி அய்யா வெளிநாடு சென்று கலைச்சேவை செய்யலாம் என்றும் மலர்மன்னன் ஒரு பொதுநல வழக்கு போடலாமே!

இராணுவம் மற்றும் காவல்துறைகளில் பதவி உயர்வு மற்றும் பித்தளை மெடல்களுக்காக, அப்பாவி முஸ்லிம்களின் குடலை உருவிய போலி என்கவுண்டர் பற்றியும் கொஞ்சம் குமுறி இருக்கலாமே!

இவற்றையெல்லாம் வசதியாக மறந்து விட்டு ‘முகமதியர்கள்’ என்று மலர் மன்னன் குறிப்பிடும் முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளை ஊதிவிட்டு எரியும் யாகத்தீயில் குளிர்காய முனைந்தால், கட்டுரையின் தலைப்பில் அவரே சொல்லியுள்ளது போல் “ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!” என்பது உண்மையாகிவிடும்!


nalladiyar@gmail.com
http://athusari.blogspot.com

Series Navigation

நல்லடியார்

நல்லடியார்