வெளியில் மழை பெய்கின்றது! – காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

ஜார்ஜ் பஸ்தியாம்பிள்ளை


“வெளியில் மழை பெய்கின்றது”- ‘காலம்’ சஞ்சிகையின் ‘வானமற்ற வெளி’ என்ற இலக்கிய நிகழ்வுக்கு புறப்பட்ட போது எனது மனைவி இப்படித்தான் கூறினார்.

என்ன அதிசயம் இந்த இலக்கிய விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட மூன்று நூல்களில் ஒன்றான சோலைக்கிளியின் ‘வாத்து’ கவிதை நூலின் முன்னுரையை சோலைக்கிளி “வெளியில் மழை பெய்கின்றது” என்றுதான் தொடங்குகின்றார்.

“மழையுடன் பேசுகின்ற மனிதன் எப்போதுமே துளிர்க்கின்றான்” என்று அடித்துச் சொல்கின்றார்; கவிஞர் சோலைக்கிளி. உண்மை தானே? மழையுடன் பேசுகின்ற மரங்களும், செடிகளும் துளிர்க்கின்ற போது நிச்சயமாக மழையுடன் பேசுகின்ற மனிதன் துளிர்க்காமல் இருக்காமல் முடியுமா? சடைத்து வளர்ந்து மனிதக் காடாகவே மாறுவான்.

மழையைப் பற்றி வேறு ஒரு அபிப்பிராயம் செழியனுக்கு. அதே நாளில் வெளிவந்த செழியனின் “ கடலைவிட்டுப் போன மீன்குஞ்சுகள்” கவிதைத் தொகுப்பில் “மழையைப் பார்க்கின்ற போது பரிதாபமாக இருக்கின்றது” என்று சொல்லுகின்றார் அவர்.

“பாளங்களின் பிளவுகளை நெருங்கி இடறி விழுகின்றது. மரங்களில் ஏறத் தோற்றுக் களைத்து பெருஞ்சாலையில் நின்று தனித்து அழுகின்றது” என்று மழையைப் பற்றி பரிதாபமாகச் சொல்கின்றவர் இறுதியில் “ஆச்சரியமாக சமயத்தில் மனிதர்களையே காக்கவைத்து அலைக்கின்றதே” என்று சொல்லி முடிக்கின்றார்.

மூன்றாவது புத்தகம் சினுவா ஆச்செபியின் ‘வீழ்சி’. No Longer Ease என்ற சினுவா ஆச்செபியின் நாவலை என்.கே. மகாலிங்கம் ‘வீழ்ச்சி’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார்.

சினுவா ஆச்செபி 1930 நைஜீரியாவில் பிறந்தார். இவரின் தந்தை கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலை ஆசிரியர். புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்தவர். ஈபோ இனத்தைச் சேர்ந்தவர்;. இவரின் தந்தையார் அளித்த விக்ரோறியா அரசியின் கணவரான அல்பேட் என்ற நாமத்தை மாற்றி சினுவா என்ற ஆபிரிக்கப் பெயரையே எழுத்தாளரானபோது வைத்துக் கொண்டவர்.

நைஜீரிய உள்நாட்டு போரில் (1967-70) ஈபோவுக்களுக்கான தனியான தேசமாகப் பயஃப்ரா பிரகடனப்படுத்தியபோது ஆச்செபியும் அதனுடன் இணைந்து கொண்டார். அந்தப் பரிசோதனை தோல்வியுற்று நைஜீரியா சமஷ்டி ஆட்சியானது இன்னொரு கதை.

உலகப் புகழ்பெற்ற இவர், ஆபிரிக்காவின் முன்னோடி எழுத்தாளர். ஆபிரிக்காவின் வாய்மொழிக் கதைசொல்லல் மரபையும் காலனிய ஆங்கில மொழியையும் உள்வாங்கி மிகத் திறமையாக ஆங்கிலத்திலேயே கதை சொல்லும் ஆற்றல் பெற்றவர். ஆங்கில ஆபிரிக்க காலனித்துவ எழுத்துக்களை விமர்சித்து, ஆபிரிக்க இலக்கியத்துக்கென தனித்துவமான, சிறப்பான கலை, பண்பாடு, நாகரீகம் இருக்கின்றன என்பதை பெருமையுடன் எடுத்துக் காட்டியவர். ஆபிரிக்க சுதேச மொழிகளில் எழுதுவதற்கும் அடியெடுத்துக் கொடுத்தவர். கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் பல எழுதி நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இலக்கியத்துக்கான பல பரிசுகள் பெற்றுள்ளார். கடைசியாக 2007 இல் பெற்றது, புகழ்;பெற்ற மான் புக்கர் பரிசு.

இந்த புத்தகங்களைப்பற்றி பிரபல எழுத்தாளர் அ. முத்துலிங்கம், டாம். சிவதாசன், உதயன் ஆசிரியர் யோகேந்திரலிங்கம், கவிஞர் சேரன் ஆகியோர் சிலாகித்துப் பேசினார்கள். அவர்கள் மட்டுமல்ல இந்த விழாவுக்கு நடுநாயகமாக நின்று தலைமை தாங்கிய P. விக்னேஸ்வரனும் தனது கருத்துகளை அழகாக எடுத்துரைத்தார்.

புத்தகங்கள் மட்டும் வெளியிடப்படவில்லை இந்த இலக்கிய விழாவில். ஆரணியா என்ற சின்னஞ் சிறு குயில் ஒன்று பாடவும் கேட்டோம். மாந்தோப்பில் சின்னக் குயில் பாடக் கேட்ட அனுபவம்.

nஐயராணி சிவபாலின் மாணவியான ஆரணியா பாபு பாட, சின்னதோர் மான் என்று சொல்லக் கூடிய வயதுடைய பாலகன் Nஐhன்சன் தபேலா வாசிக்க அதோடு சேர்ந்து ஆதிரை சிவபாலின் வயலின், முகுந்தன் சிவபாலலின் கீபோட். மனதை கரைத்த ஒரு அற்புதமான இசை நிகழ்சி. ஆரணியா இலக்கிய உலகுக்கு ஏற்கனவே தெரிந்தவர். பல நாடகங்களில் அற்புதமாக நடித்திருக்கின்றார்.

ஆரணியாவின் வயது தெரியவில்லை. அவருடைய குரல் நம்பிக்கையைத் தருகின்றது. நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு நல்ல சங்கீதத்தை, தமிழின் இனிய பாடல்களை காற்றில் தவழவிடுவார். தொடர்ச்சியான பயிற்சியும், அதற்கான உழைப்பும், நோக்கமும் தேவை. அவருடைய பெற்றோர்கள் இதை ஒரு சவால எடுத்துக் கொள்ளவேண்டும். நல்ல புத்தகங்கள் வெளிவரவும், நல்ல பாடல்கள் வெளிவரவும் அவர்கள் உதவுகின்றனர் என அறிந்தேன். ஆனால் ஆரணியாதான் அவர்களின் மிகப் பெரிய தமிழ் இலக்கிய சேவை. அது பாபு-தனா காலத்தின் பின்னும் நின்று நிலைக்கும்.

அடுத்து வந்த இலக்கிய நிகழ்வு ‘வீரர்கள் துயிலும் நிலம்’ என்ற தென்மோடிமொழி கூத்து. அதுதான் என்னை அதி உற்சத்துக்கு அழைத்துச் சென்றது. ஈழத் தமிழரின் தனிச்சொத்தாக இருக்கும். இக்கலை வடிவம் இங்கு பார்க்க கிடைப்பபது அரிது இதற்க்கும் சிலபேர் தமது நேரத்தையும், சக்தியையும் செலவழிக்க இருக்கின்றார்கள் என்பது சந்தோசமான காரியம்.

தேசம் என்பதும் மொழியென்பதும் காப்பாற்ற படவேணும் என்றால் அது தனக்கென்று தனியே இருக்கும் கலைகளை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். நவீன நாடகமும்; சினிமாவும் நடனங்களும் எங்கும் பார்க்கலாம.; ஆனால் இப்படி பட்டவை எப்போவாவது நடப்பது;.

வீரபாண்டிய கட்ட பொம்மனின் சுருக்கமான கதை இது. பாசைய+ர் புலவர் நீ. மிக்கோர்சிங்கம் அவர்களால் எப்போதோ எழுதப்பட்டதை காலம் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் மீள் பிரதியாக்கம் செய்து இன்றை காலகட்டத்தோடு இணைத்துள்ளார். முன்பு அறிந்திராத பதிய கலைஞாகள பலர்.

சவரிமுத்து என்ற கூத்து கலைஞர் இதனை நெறிப்படுத்த ரெஜிமனுவேற்பிள்ளை, சவரிமுத்து, மரியதாஸ்அன்ரனி, அருள்தாஸ்மரியதாஸ், மெலிஞ்சிமுத்தன், அல்பிரட், கலைமாமணிமாலினிபரராஜசிங்கம் நடிக்க, ஆர்மோனியம்:டானியல், மிருதங்கம்:வயித்தியாம்பிள்ளை யேசுதாஸ் பிற்பாட்டு:அருளப்புயோஜ் ஞானம்பிரகாசம்;.

தமிழர்களின் பாரம்பரிய கலையான கூத்துக் கலை அழிவின் விளிம்பில் நிற்கின்றது. அதனை அழியாமல் காக்க புலம் பெயர்ந்த நாடுகளிலும் பலத்த பிரயத்தினம் நிகழ்கின்றது.இந்த முயற்சியில் உள்ள இந்த கலைஞர்களுக்கு தமிழினம் என்றும் தலைவணங்கும். இந்த கலைஞர்களை வேறுபடுத்தி பாராட்ட மனமே இல்லை. ஆனாலும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. ரெஜிமனுவேற்பிள்ளை, மரியதாஸ்அன்ரனி கூத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களோடு இணைந்து கொண்டார் மெலிஞ்சி முத்தன். எட்டப்பனாய் நடித்தவரின் குரலும் அசைவும் அழகு.

நாட்டியப் பேரோளியான கலைமாமணி மாலினி பரராஜசிங்கம் இவர்களுக்கு சற்றும் சளைக்கவில்லை. தனது திறமையைக்கு மறுபடியும் ஒரு முத்திரை பதித்துச் சென்றார்.

அண்ணாவி வயித்தியாம் பிள்ளை யேசுதாசனை இந்தக் கூத்தின் ஒரு மணிமுடி என்று சொல்லாம். தாளம் தப்பாமல் இருந்தது இந்தக் கூத்து. மொன்றியளில் இருந்து ரொறன்டோ வந்து தனது நேரத்தையும், உழைப்பையும் கூத்துக்காக அர்ப்பணிக்கின்றார். வளர்க அவர் பணி.

மீண்டும் மீண்டும் மேடையேற்றப்படவேண்டிய கூத்து இது. மறுபடியும் மேடையேற்றப்படும் போது சில விடயங்கள் கவனிக்கப்படவேண்டும். முக்கியமாக மேடை கையாளப்படவேண்ய விதம்

குறிப்பாக காட்சி மாற்றம் ஏற்படும் போது நீண்ட இடைவெளி ஏற்படுகின்ற உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்படுகின்றது. எனவே காட்சி மாற்றம் சில கணங்களில் வருகின்ற மாதிரி பயிற்சி தேவை. அத்தோடு சில கலைஞர்கள் மேடையில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே மேடையைவிட்டு உள்ளே சென்று தமது அடுத்த வரி என்ன என்று பார்த்து வருகின்ற சம்பவம் தவிர்க்கப்படவேண்டும்.

கனடாவில் கூத்து கலை வாழும்… அந்த நம்பிக்கை முன்எப்போதும் இல்லாதவகையில் இப்போது எழுகின்றது. அது கூத்துக் கலைஞர்களான ரெஜிமனுவேற்பிள்ளை, மரியதாஸ்அன்ரனி மீது எனக்கு எழுகின்ற பெரும் நம்பிக்கையில் இருந்துதான் எழுகின்றது. அதற்கான உழைப்பையையும், வாழ்க்கையையும் செலுத்த அவர்கள் தயார் என்றால் கனடாவில் நமது பாரம்பரிய கூத்து எழுந்து நிற்கும். விசுகிக்கும். இது நிச்சயம் அதற்கு அண்ணாவியார் வயித்தியாம் பிள்ளை யேசுதாதாஸ் பக்க பலமாக இருந்து நீருற்றுவார். ஒரு ஓரத்தில் காலம் செல்வம் இருப்பார் என்று நம்பலாம்.

ஜார்ஜ் பஸ்தியாம்பிள்ளை


georgepasteiampillai@yahoo.ca

Series Navigation