வீரப்பன் முதல்வரானால் சிறப்பிதழ்

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue

தினக்கப்ஸா


(அநியாயத்துக்குப் பொய் சொல்லும் நடுநிலை நாளேடு)

வீரப்பன் அரசியல் கட்சி தொடங்கினார்.

ஏதோ ஒரு வருடத்து ஏப்ரல் 1. கன்னட நடிகர் ராஜகுமாரை கடத்தியபோதே வீரப்பன் அரசியல் பேசி அறிக்கைகள் விட்டது அனைவரும் அறிந்ததே. அதைக் கேட்டு தமிழ்நாட்டு கழண்ட ஜனங்கள் புல்லரித்ததும் அனைவரும் அறிந்ததே. இன்று பலபேரின் கனவு நனவாகும் வண்ணம் வீரப்பன் அரசியல் கட்சி தொடங்கினார். கட்சியின் பெயர் வீரப்பன் குடும்பத்தார் முன்னேற்றக் கழகம் என்று அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் வீரப்பனின் நேர்மையை பலவாக பாராட்டினார்கள் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று வீரப்பன் பல பத்திரிக்கையாளர்களை அழைத்து அறிக்கை வெளியிட்டார். தான் அரசியலில் இணைந்து மக்களுக்கு சேவை செய்யத் தயாராகி விட்டதால் பத்திரிக்கையாளர்கள் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று புரட்டுத் தலைவர் வீரப்பன் கேட்டுக்கொண்டார். அதன் முகாந்திரமாக அவர் தமிழ்ப்படம் ஒன்றில் லேட்டஸ்ட் உலக அழகியுடன் ராபின் ‘கூட் ‘ வேடத்தில் நடிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

இந்தப்படத்தை தானே தயாரித்து இயக்கி இசைஅமைத்து நடித்து வெளியிடப்போவதாகவும் தெரிவித்தார். அவரது திறமைகளை கண்டு பல பத்திரிக்கை ஆசிரியர்கள் பாராட்டி அவருக்கு சந்தனத்திலகம் என்ற பட்டத்தையும் அளித்தார்கள் எனவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல பத்திரிக்கை நிருபர்கள் எப்படி சந்தனத்திலகம் வீரப்பன் கொடுத்த பணத்தால் தன் வீட்டில் விளக்கு எரிந்தது என்று உள்ளத்தை தொடும் கட்டுரைகள் எழுதிப் படித்ததாக பாமரர்கள் பலர் தெரிவிக்கிறார்கள்.

சந்தன வீரப்பனுடன் 5 வருடம் நடிக்க காண்ட்ராக்ட் எழுதப்பட்ட உலக அழகி முக்கு பிக்கு பின்னர் தான் எதிர்காலத்தில் அரசியலில் சந்தனத்திலகம் வீரப்பன் அவர்களின் வாரிசாக ஆட்சி பிடிக்க இப்போதே தயாராகி விட்டார் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

***

‘நானே முதல்வர் ‘ சந்தன வீரப்பன் பேட்டி

வரும் தேர்தலில் ‘வீரப்பன் குடும்பத்தார் முன்னேற்றக் கழகம் ‘ எல்லா தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் மற்றகட்சியினர் எல்லா தொகுதிகளிலும் வாபஸ் வாங்கிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார். ‘மற்ற அரசியல் கட்சிகளை மிரட்டுகிறீர்களா ? ‘ என்று பத்திரிக்கையாளர்கள் வீரப்பனை கேட்டனர். அதற்கு ‘நான் மிரட்டவில்லை, தமிழ் மக்கள் மிரட்டுகிறார்கள். நான் தமிழன், என் மக்கள் தமிழ் மக்கள், அந்தத் தமிழ் மக்கள் மிரட்டுகிறார்கள். மக்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கு இணங்கி, யாரும் ‘வீரப்பன் குடும்பத்தார் முன்னேற்றக் கழகம் ‘ தவிர மற்றவர் தேர்தலில் போட்டியிடாதவாறு மக்கள் பார்த்துக்கொள்வார்கள் ‘ என்று பதிலிறுத்தார். சந்தனத்திலகம் வீரப்பன் அவர்களின் ஜனநாயகப்போக்கை பத்திரிக்கையாளர்கள் பாராட்ட வேண்டி பத்திரிக்கையாளர்களுக்கு கறிசோறும், பணமுடிப்பும் வழங்கப்பட்டதாக நம்பத்தகாத வட்டாரங்கள் வழக்கம்போல தெரிவிக்கின்றன.

***

ஜெனரல் முஷாரபுடன் பேச்சு வார்த்தை நடத்துவது தவறு – சந்தனத்திலகம் வீரப்பன் பேட்டி.

பிரதமர் வாஜ்பாயி அவர்கள் ஜெனரல் முஷாரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது தெரிந்ததே. அது பற்றி கருத்து கேட்ட தமிழ்ப் பத்திரிக்கையாள்ர்களிடம் சந்தனத்திலகம் வீரப்பன் அவர்கள், ‘இந்திய நாட்டுக்கு எதிராக மத்தியில் சதிவேலை நடக்கிறது. முஷாரப்புக்கு கோழி பிரியாணி போட்டாயே, தமிழகத்தில் கோடானுகோடி ஏழை மக்கள் கோழியும் இல்லாமல் தலைக்கு மேல் வைக்கும் பிரியும் இல்லாமல் அடக்குறைந்தபட்சம் ஒரு ஆணியும் இல்லாமல் வாழ்கிறார்களே ? அவர்களுக்கு நீ என்ன செய்தாய் ? ‘ என்று வீராவேசமாகப் பேட்டி அளித்தார். ‘நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் அனைவருக்கும் மதிய உணவாக கோழி பிரியாணி போடுவேன். இது சத்தியம் ‘ என்று ஓங்கி ஒரு பத்திரிக்கையாளர் தலையில் அடித்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

***

சோ கேள்வி பதில்களில் வீரப்பனுக்குப் பாராட்டு

கேள்வி: வீரப்பன் கோழி பிரியாணி போடுவதாகப் பேசியிருக்கிறாரே கேட்டார்களா ? – மாந்தோப்பு மரச்சாமி

பதில்: நான் சுத்த சைவம். எனக்கு என்ன அதில் பிரயோசனம். வீரப்பன் வெஜிடபிள் பிரியாணி போடுவதாகச்சொன்னாலாவது என் ஓட்டு அவருக்கு உண்டு.

என்று மேல்பட்ட கேள்விபதில் துக்ளக் பத்திரிக்கையில் வெளிவந்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பல அரசியல் பார்வையாளர்கள் சோ மறைமுகமாக வீரப்பனுக்கு ஆதரவு தருவதாக பேசுவதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

***

ஜெயலலிதா அரசியலிருந்து விலகல் – திடுக்கிடும் திருப்பங்கள்

ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே தகராறு நடந்ததாகவும் இருவரும் பிரிந்துவிடலாம் என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் செய்தி தெரிவித்து வந்தது தெரிந்ததே. ஜெயலலிதா மனமுடைந்து அரசியலிலிருந்து விலகப்போவதாக இன்று தெரிவித்தது இதன் காரணமே என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. ஹைதராபாத் நகருக்கு ஒரு ரயில் வண்டி விஷேசமாக கொண்டுசெல்லப்பட்டு போயஸ் வீட்டு சாமான்கள் அனைத்தும் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்துக்குச் சென்றதாக சுத்தமாக நம்பமுடியாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

வீரப்பன், சசிகலா, ராமதாஸ், மூப்பனார் சந்திப்பு . சோ ஏற்பாடு.

ஜெயலலிதா அரசியலிலிருந்துவிலகியதால், திமுக ஆட்சியை பிடித்துவிடும் நிலை இருப்பது அறிந்ததே.

திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் தீவிரவாதம் தலைவிரித்தாடும் என்று சோ நம்புவதால் இன்று அவர் வீரப்பன், சசிகலா ராமதாஸ் மூப்பனார் போன்றவர்களை கூட்டுப்பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. இங்கு சுப்பிரமணிய சாமி ஒரு டா விற்கும் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கிளாஸில் டாயும் பன்னும் கொடுத்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. ‘பண நிலைமை சரியில்லாததால் என்னால் முடிந்தது இதுதான் ‘ என்று பின்னர் சுப்பிரமணியசாமி நிருபர்களிடம் பேசும்போது தெரிவித்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

என் பேத்தி காதுகுத்துக்கு அரசியல் தலைவர்களை அழைத்தேன் அவ்வளவுதான் – சோ பேட்டி

வீரப்பன் தலைமையில் அதிமுக அரசு அமைக்க தான் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்றும் சும்மா தன் பேத்தி காதுகுத்துக்கு அரசியல் தலைவர்களை அழைத்தேன் அவ்வளவுதான் என்றும் சோ அவர்கள் தன் பத்திரிக்கையிலும் மற்றவர்கள் பத்திரிக்கையிலும் காதுகுத்தியதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

வீரப்பன் குடும்பத்தார் முன்னேற்றகழகமும் அதிமுகவும் இணைப்பு

வீகுமுக கட்சியும் அதிமுக கட்சியும் இன்று சட்டப்பூர்வமாக இணைந்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. இணைந்ததும், அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வமான தலைவராக வீரப்பன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

சந்தனத்திலகம் வீரப்பன் முதல்வர்

எம் எல் ஏ லிஸ்டை எடுத்துக்கொண்டு சந்தனத்திலகம் வீரப்பன் அவர்கள் இன்று கவர்னர் பாத்திமா பீவியைச் சந்தித்து முதல்வராக தன்னை அழைக்க வேண்டுகோள் விடுத்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் அரை மணிநேரம் தனியாகப் பேசிக்கொண்டிருந்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்போதே அங்கேயே பாத்திமா பீவி சந்தனத்திலகம் வீரப்பன் அவர்களை முதல்வராகப் பதவிபிரமாணம் செய்துவைத்தார். பாத்திமா பீவி தன்னை முதல்வராக அழைத்ததற்கு வீரப்பன் நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் ஆக்கியதால் அவருடைய சட்டதிறமையையும் நுணுக்கமான அறிவையும் புகழ்ந்து பேசினார் சந்தனத்திலகம் வீரப்பன் அவர்கள். அப்படி தன்னை முதல்வராக்காவிடில் அவர் கவர்னர் பதவிக்கு தகுதியற்றவர் என்று சொல்லியிருப்பேன் என்றார். மூப்பனார், வீரமணி, ராமதாஸ் போன்றவர்கள் சந்தனத்திலகம் வீரப்பன் அவர்களை தமிழினத்தின் தலைவரென்று பெருமைப்படுத்தியதாகவும் சில செய்திகள் வந்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. சோ, டி என் சேஷன் போன்றவர்கள் தீவிரவாதம் மற்றும் சந்தனக்கடத்தலைத் தடுக்க வீரப்பனால் மட்டும் முடியும் என்பதால் அவரை ஆதரிக்கிறோம் என்று அறிக்கைவிட்டதை படித்ததாகவும் சில நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்து, இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற காங்கிரஸ் கட்சிப் பத்திரிக்கைகள் இதில் எந்தவிதமான சட்டக்குழப்பமும் இல்லை என்று தலையங்கம் எழுதியதாகவும் சில நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

****

சந்தனத்திலகம் வீரப்பன் ஆண்டிப்பட்டியில் தேர்தலில் நிற்கிறார்.

சந்தனத்திலகம் வீரப்பன் மீது எந்த வழக்கும் நடந்து அவருக்கு தண்டனை கொடுக்கப்படாததால் அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

ஆண்டிப்பட்டியிலேயே முன்பு புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நின்று அமோக வெற்றிபெற்றார் என்பது குறிப்பித்தக்கது.

***

வீரப்பன் மாபெரும் வெற்றி

இன்று வீரப்பன் ஆண்டிப்பட்டியில் நடந்த இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று முதலமைச்சரானார். எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடந்த இந்தத் தேர்தலில் அவர் 85 சதவீத வாக்குகளைப் பெற்று வென்றார். மற்றவர்கள் அனைவரும் டெப்பாஸிட் இழந்தார்கள். திமுக ஆதரவில் நின்ற ப. சிதம்பரம் 6 ஓட்டுகள் பெற்று தோற்றார்.

****

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு – முதலமைச்சர் டாக்டர் சந்தனத்திலகம் வீரப்பன் அவர்கள் பேட்டி

இன்று சென்னைப் பல்கலைக்கழகம் முதலமைச்சர் சந்தனத்திலகம் வீரப்பன் அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்து தன்னை கெளரவப்படுத்திக்கொண்டதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ அண்ணல் சந்தனத்திலகம் வீரப்பன் பல்கலைக்கழகம் என்று இனி சென்னைப்பல்கலைக்கழகம் அழைக்கப்பட வேண்டும் ‘ என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னைப்பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தனத்திலகம் வீரப்பன் அவர்கள் காலில் விழுந்து அவருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தைப் அளித்தார். அதைப் பெற்றுக்கொண்டு சொற்பொழிவாற்றிய டாக்டர் சந்தனத்திலகம் வீரப்பன் அவர்கள் ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது எல்லோருக்கும் இன்று புரிந்திருக்கும் என நினைக்கிறேன். எனவே என் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நான் வாபஸ் வாங்குகிறேன் ‘ என்று தெரிவித்தார்.

இனி தமிழ்நாடு வீரப்பநாடு என்று அழைக்கப்படுமென்று கெஸட் அறிவிப்பு ஒன்று தெரிவிப்பதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

***

(இது சிரிப்புக்காக எழுதப்பட்ட நகைச்சுவைக் கட்டுரை. உங்களுக்கு அழுகை வந்தால் நாங்கள் பொறுப்பல்ல)

Series Navigation

தினக்கப்ஸா

தினக்கப்ஸா