விலைபோகாத போலித்தனங்கள்.

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

இறை நேசன்


நேசகுமார் என்பவரின் போலித்தனத்தையும் அவரது உள்நோக்கத்தில் இருக்கும் இஸ்லாத்தின் மீதான வெறுப்பையும் பி கே சிவகுமார் தனது புத்தகத்தில் அம்பலப் படுத்தி விட்டார் என்பதால் வெங்கட் சாமினாதன் என்ற இலக்கிய விமர்சகருக்கு பி கே சி மேல் கோபம் வந்து விட்டது. அ தற்கு சகோ.வெ.சாமினாதன் எழுதிய எதிர் கட்டுரையில் கையாளப்பட்ட வாசகங்களையும் கருத்துக்களையும் சுட்டிக்காட்டி அவர் தனது முகத்திரையை கிழித்துக் கொண்டு நேசகுமார்களைப் போன்ற ஒரு சமூகத்திற்கெதிராக திட்டமிட்டு வெறுப்புமிழும் குழுவில் இணைந்திருக்கிறார் என்ற உண்மையை நாகூர் ரூமி அம்பலப் படுத்தி விட்டார் என்பதால் விஸ்வாமித்திரா என்பவரும் மலர் மன்னனும் ஆவேசத்துடன் பொங்கி எழுந்திருக்கிறார்கள். ரூமியைப் போன்றவர்களை பசுத்தோல் போர்த்திய ஓநாய்கள் , தொண்டரடிப்பொடிகள் , கும்பல் என கூறும் அளவிற்கு இவர்களின் கோபம் பொங்கி திண்ணையில் வழிந்தோடுகிறது.

நியாயம்தான். நாம் உயர்வாக எண்ணும் மனிதர்களைப் பற்றி யாராவது குறை பேசினால் நமக்கு கோபம் வருவது நியாயம்தான். நேசகுமார் என்ற நிழல்மனிதரைப் பற்றியும் , வெ.சாமினாதன் என்ற ஒரு சாதாரண இலக்கிய விமர்சகரைப் பற்றியும் விமர்சித்ததற்கே , அதுவும் உண்மையை எடுத்துக் கூறியதற்கே இவர்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்றால் , உலகில் இரண்டாம் பெரிய சமுதாயமான கோடிக்கணக்கான முஸ்லிம்களின் பேரபிமானத்திற்கு உரிய உயிரைவிட மேலாக நேசிக்கும் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவதூறு கூறுபவர்கள் மீது முஸ்லிம்களுக்கு இன்னும் எந்த அளவிற்கு கோபம் வரவேண்டும் ? சினம் விசுவாமித்திரர்களின் குடும்பச்சொத்தா என்ன?

உலகப் புகழ் பெற்ற இலக்கியவாதியாம் சல்மான் ருஷ்டி! கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ‘சாத்தானிய வசனங்களை’ எழுதி கோடிக்கணக்கான முஸ்லிம்களின் இதயத்தைக் காயப்படுத்திய இந்த மனிதர்தான் , தன் இளவயது மாடல் அழகி மனைவியைப் பற்றி பத்திரிக்கையில் எழுதிய நிருபர் மீது ஒரு நாலாந்தர பேட்டை ரவுடி போல பாய்ந்து காயம் வருமளவுக்கு அடித்திருக்கிறார். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களைக் குறித்தும், திருக்குர்ஆனைக் குறித்தும் இல்லாத அவதூறுகளைக் கற்பித்து ஒரு சமுதாயத்தின் நெஞ்சிலேயே குத்தியவருக்கு விசுவாமித்திரர் போல் சினம் மூத்த முஸ்லிம்களில் சிலர் எதிர் அறிக்கைகளை வெளியிட்டபோது அதற்கு எதிராக சேர்ந்து கொண்டு கும்மியடித்தவர்கள் இவர் கருத்துச் சுதந்திரத்திற்கே ஆப்படித்தபோது எங்கே போய் ஓடி ஒழிந்து கொண்டனர்?. கருத்துச் சுதந்திரமெல்லாம் நாம் மற்றவர்களுக்கு போதிப்பதற்கு மட்டும்தான் போலிருக்கிறது.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏன் நெறி கட்டுகிறது ? நேசகுமார் என்பவரின் போலித்தனத்தை பிகேசி வெளிச்சம் போட்டு காண்பித்தால் வெ.சாமினாதனுக்கு ஏன் பொத்துக் கொண்டு வருகிறது? அவர் அப்படி என்ன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா ? ஆயிரக்கணக்கில் இருக்கும் இஸ்லாமிய எதிர்ப்புக்கென்றே உருவாக்கப்பட்ட போலித் தளங்களிலிருந்து சில விஷயங்களைக் காப்பியடித்து போகிறபோக்கில் இஸ்லாம் மேல் சேறு வாறி இறைத்து விட்டு எதிர்வாதங்கள் கருத்துக்கள் வரும் பொழுது விசுவாமித்திரர் போன்ற ஜல்லியடிக்கும் “தொண்டரடிப் பொடி ” களை இறக்கிவிட்டு விட்டு ஓடி ஒளிந்து கொள்ளும் ‘வீரர் ‘தானே இவர்?

சென்ற வார திண்ணையில் சகோதரர் பாபுஜி இப்படி குறிப்பிட்டிருந்தார்: “வலைப்பூக்களில் , ஹிந்துத்துவா கடுமையாகத் தாக்கப்படும் போதெல்லாம் ஒரு கவன உத்தியாகவோ , திசை திருப்பலாகவோ ஹிந்துத்துவத்தின் வக்கீல்களான நேச குமார்கள் இஸ்லாம் பற்றி “தங்கள் கோணத்தில்” எழுதத் தலைப்படுகிறார்கள். (இப்போதும் , வலைப்பூக்களில் ஹிந்துத்துவம் கடும் கேள்விகளால் துளைக்கப்படுவது கவனிக்கத்தக்கது)… இணையத்தில் வலைப்பூக்களில் நேசகுமாரின் அவதூறுகளை பொறுமையாகவும் சிறப்பாகவும் நிதானமாகவும் எதிர்கொள்கிற அபூ முஹை , அப்துல்லா போன்றோர் வைத்த ஏராள விளக்கங்களையோ, எதிர்கேள்விகளையோ நேசகுமார் எதிர்கொள்ள தயாராக இல்லை , ஏனெனில் அவருடைய நோக்கம் ‘விளக்கம்’ பெறுவதோ, விவாதம் புரிவதோ அல்ல. குர்ஆனையும் நபிவழியையும் சார்ந்துள்ள முஸ்லிம்கள் எப்போதும் விவாதத்துக்கு ஆயத்தமாகவே உள்ளனர்.” இதுதான் நேசகுமார் பற்றிய உண்மை. இதை அவரது எழுத்துக்களை படிக்கும் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

“வெ சா சூலாயுதத்தை எடுத்துக் கொண்டு இஸ்லாமியர்களை கொன்று குவிக்கிறார் என்று மட்டும்தான் இன்னும் எழுதவில்லை “யாம். ஆமாம் இனிமேல் தான் ஆரம்பிக்க வேண்டும் பாருங்கள். அன்பை போதித்த கிருஸ்துவ பாதிரியாரையும் அவரது இரு மகன்களையும் உயிரோடு எரித்துக் கொன்று , குஜராத்தில் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை கொன்று குவித்து கோர வெறியாட்டம் போட்டு , இன்னும் பிறந்தே இருக்காத வயிற்றுச் சிசுவைக்கூட கீறி எடுத்து நெருப்பிலிட்டு எரித்து , பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கூட ‘ஹரே ராம்’ என்று சொன்னால்தான் நிவாரண பொருட்களைத் தருவோம் என்று தம் மனிதநேயமற்ற மதவெறியின் கோரமுகத்தை வெளிப்படுத்தி, இதெல்லாம் போதாது என்று ஏதோ இவர்கள் மட்டும்தான் இந்தியர்கள் என்பது போல ‘ சிறுபான்மையினர் இந்த தேசத்தில் பாதுகாப்பாக வாழ வேண்டுமென்றால் எங்களுடன் ஒத்துப் போனால் மட்டுமே முடியும்’ என்று அகம்பாவமாய் மிரட்டல் விடுத்து , சிறுபான்மையினரை எக்காலமும் அச்ச உணர்வுடனேயே வாழ நிர்ப்பந்திக்கும் இந்துத்துவவியாதிகளை , விசுவரூபமெடுத்து நிற்கும் இவர்களின் கொடூர முகங்களை, ஒரு சிறு சோற்றுப் பருக்கையில் மூடி மறைத்துவிட்டு விஸ்வாமித்திரா நாகூர் ரூமியிடம் கேட்கிறார், ‘ இஸ்லாமியர் அல்லாத கா·பீர்களின் பய உணர்வை என்று எப்படி எவ்விதம் தவிர்க்கப் போகிறீர்கள் ?’ என்று. பச்சை குழந்தைகளைக் கூட கொடூரமாக கொன்று குவிக்கும் ஹிந்துத்துவாவாதிகளான சங்க்பரிவார்களிடம் கேட்க வேண்டிய கேள்வியல்லவா இது? திண்ணை இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக இரத்தம் தோய்ந்த வார்த்தைகளை வாரித்துப்பி விட்டு செல்வதில் சாமர்த்தியம் ஒன்றும் இல்லை. ஏதோ பொதுநலவாதி போல் வேஷம் போட்டால் போதாது , தைரியம் இருந்தால் இதை அந்த இந்துத்துவவியாதிகளிடம் கேளுமையா, ‘ சிறுபான்மை சமுதாயத்தினரின் அச்ச உணர்வை என்று எப்படி எவ்விதம் தவிர்க்கப் போகிறீர்கள் ?’ என்று.

விஸ்வாமித்திரா சொல்கிறார், இஸ்லாம் என்றால் அமைதி, சாந்தம் என்பது பொய்யாம் . இஸ்லாம் மதத்தில் காலத்துக்கு ஒவ்வாத காட்டுமிராண்டிக் கொள்கைகள் இருக்கின்றதாம். முஸ்லிம்கள் காலத்துக்கேற்ப மாற வேண்டுமாம். யார் யாருக்கு அறிவுரை கூறுவது ? ஒரு தராதரம் வேண்டாம்? ஒரு தார்மீகத் தகுதி வேண்டாம் ? ஒரு அருகதை வேண்டாம் ? ஒரு விவஸ்தை வேண்டாம் ? நன்றாக கண்ணைத் திறந்து பாருங்கள். நாந்தேடில் வெடிகுண்டு தொழிற்சாலை நடத்தியவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற வெளிவராத தொழிற்சாலைகள் இன்னும் எத்தனை இயங்கிக் கொண்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

* ராக்கெட் லாஞ்சர் தொழிற்சாலை நடத்தியவன் முஸ்லிமல்லன்! அதைக் கடத்தியவனும் முஸ்லிமல்லன்.

* இந்தியாவின் சுதந்திரத்திற்கு தன் வாழ்க்கையை அற்பணித்த மஹாத்மாவை வயதான முதியவர் என்று கூட பாராமல் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றது முஸ்லிமல்லர்.

* சுதந்திர இந்தியாவை கனவு கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே லட்சியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது , “நம் சக்தியை இதற்காக வீணடித்து விடக்கூடாது. நமது உண்மையான எதிரிகளை எதிர்கொள்ள அது அவசியம் ” எனக் கூறி இராணுவத்திற்கொப்பான அனைத்து பயிற்சிகளையும் கொடுத்து நாட்டு மக்களுக்கு எதிராக ஒரு இரத்த வெறிப்பிடித்த கூட்டத்தை தயாராக்கிக் கொண்டிருப்பது முஸ்லிம்களல்லர்.

* மனித வர்க்கத்தில் பிறந்த சக பிறவியையே நீ காலிலிருந்து பிறந்தவன் , நீ தொடையிலிருந்து பிறந்தவன் , நீ தோளிலிருந்து பிறந்தவன் எனக் கூறி ஒன்றாக வாழ வேண்டிய மக்களை வர்ணப்பாகுபடுத்தி எதிரே வந்தால் குற்றம் , பொதுக்குளத்தில் குளித்தால் குற்றம் , கிணற்றில் குடிக்க நீர் எடுத்தால் குற்றம் , அட பெண்கள் மாராப்பு போட்டால் கூட குற்றம் எனக் கூறி சுடுகாட்டில் கூட இடம் கொடுக்காமல் தெய்வத்தின் முன்னிலையில் கூட வர அருகதையற்றவர்களாக மிருகத்தை விடக் கேவலமாக அடக்கி ஒதுக்கும் காலத்துக்கு ஒவ்வாத காட்டுமிராண்டி கொள்கைகளை உடையது இஸ்லாமிய மார்க்கமும் அல்ல.

* இவ்வளவு நவீன காலத்திலும் தான் வணங்கும் தெய்வத்திற்கு பூஜை செய்யும் அதிகாரத்தை அரசு சட்டமியற்றினாலும் கூட தாழ்த்தப்பட்டவனுக்குக் கொடுக்க மாட்டேன் என அடம்பிடிப்பது முஸ்லிம்களல்லர்.

வேஷ்டியை நேராக கட்ட மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் முன் தனக்கு வேஷ்டி இருக்கிறதா என்பதை முதலில் பரிசோதித்துப் பார்ப்பதல்லவோ சிறந்தது. கொஞ்சமாவது காலத்திற்கேற்ப மாற முயலுங்களய்யா.

துர்க்காவாகினியிலும் சாகாவிலும் நடக்கும் திறந்த வெளி ஆயுதப்பயிற்சிகளை நடத்துவது இந்துத்துவாவியாதிகள் தான்.

சூலாயுதத்தை விநியோகித்து மூன்று முனைகளில் எந்தெந்த முனையால் யாரை கொல்ல வேண்டும் என்று பத்வா கொடுத்த பிரவீன் தொகாடியா இந்துத்துவாவின் அமைதித் தூதரா ? என்பதை குறித்து இஸ்லாத்தில் அமைதியை பற்றி ஆய்வு செய்யும் முன் விசுவாமித்திரர் விளக்கி விடட்டும்.

மாலேகனில் மசூதி அருகில் குண்டு வெடித்தபோது பொய் தாடியுடன் செத்துக் கிடந்தவன் யாராக இருக்கும் என்பதை ஆராய்ந்து பாருங்கள். சிறுபான்மையினர் எந்த அளவிற்கு அச்ச உணர்வுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கொஞ்சமாவது உணர்வீர்கள்!

இஸ்லாம் வாளால் பரவியது என்று போகிற போக்கில் சுஜாதா விஷத்தை கக்கிக் கொண்டு போனதால் தான் அவ்விஷத்தை அவரையே திரும்ப குடிக்க வைத்தார்கள். 13000 வைணவர்கள் அவர் கூறியது போல் கொல்லப்பட்டதாகவே இருக்கட்டும். குறிப்பிட்டு வைணைவர்களை மட்டுமே குறிவைத்து அதிலும் ஒரு பௌத்தரோ , சமணரோ, ஜைனரோ கூட இன்றி 13000 பேரும் வைணவர்களாக பார்த்து கழுவிலேற்ற முஸ்லிம்களுக்கும் வைணைவர்களுக்கும் பரம்பரை தகராறா என்ன? இல்லையே. பின்னர் யாருக்கு தான் இவர்கள் விரோதியாக இருந்தார்கள்? யார் தான் இவர்களை இப்படி ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் கொன்றிருப்பார்கள். அதற்கு வரலாற்றையெல்லாம் ஆழ்ந்து குடிக்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.

இந்நாட்டில் பிறந்து இந்நாட்டிலேயே மரணித்த புத்தர் என்ற மகானை பின்பற்றிய பௌத்தர்களும் , பௌத்த பீடங்களும், பௌத்த கோயில்களும் இன்று ஒன்றை கூட இந்தியாவில் காணமுடியாதது ஒன்றே போதும், வைணவர்களை கூட்டமாக கொலை செய்தது யார் என்பதை அறிந்து கொள்ள. இன்று மற்றொரு நாடே(இலங்கை) புத்த நாடாகவும் , பல(ஜப்பான் , சீனா போன்ற) நாடுகள் பெரும்பான்மையாக புத்த மதத்தை பின்பற்றுவதாக இருப்பதிலிருந்து இந்தியாவில் புத்த மதம் ஒரு காலத்தில் எவ்வளவு செழித்தோங்கி இருந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள இயலும். அப்படிப்பட்ட புத்த மதம் இன்று இந்தியாவில் எங்கே போயிற்று ? புத்த கோயில்கள் எங்கே போயிற்று ?

நன்றாக விசாரித்து பாருங்கள், வைணவர்களுக்கு எதிரிகளாக இருந்தது யார் என்பது தெரியும். அவர்களுக்கு மட்டுமல்ல தலையிலிருந்து பிறந்ததாக காலத்துக்கு ஒவ்வாத காட்டுமிராண்டி கொள்கைகளை கொண்டலையும் அவர்களைத் தவிர மற்ற அனைவருமே அவர்களுக்கு எதிரிகள் தான்.

சரி இஸ்லாம் வாளால் தான் பரவியதாகவே வைத்துக் கொள்வோம். அவ்வாறு நிர்ப்பந்தமாக இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமானவர்கள் இன்னும் இஸ்லாத்திலேயே இருப்பதற்கு தற்போது சுதந்திர இந்தியாவில் என்ன நிர்ப்பந்தம் உள்ளது? எனபதை விசுவாமித்திரர் போன்ற வரலாற்றுப் புரட்டுவாதிகளான தொண்டரடிப்பொடிகள் விளக்குவார்களா?

இன்றும் கூட உலக அளவில் இஸ்லாத்தை ஏற்பவர்களின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனவே! . தற்போது எந்த முஸ்லிம் மன்னர் வாளால் அவர்களிடம் இஸ்லாத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்?

உலகப் புகழ் பெற்ற பாப் இசைப் பாடகரான கேட் ஸ்டீவன்ஸை யூஸுஃப் இஸ்லாம் ஆக்கியது எந்த வாள்?

உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலியை , மால்கம் எக்ஸை மாற்றியது எந்த வாள்?

இப்படியே அடுக்கிக் கொண்டு போனால் பக்கங்கள் போதாதே ?

கமலா சுரய்யாவின் ” மடுத்த” விஷத்தில் நேசகுமாரின் இஸ்லாமிய துவேச எழுத்துக்கள் தேமே என்று பல்லிளித்தவுடன் கவிழ்ந்து விழுந்த நேசகுமாரை தூக்கி நிறுத்த ” கமலா சுரய்யாவிற்கு மனம் திறந்து பேச பாதுகாப்பு இல்லை” எனற புதிய சப்பைக்கட்டுடன் பகீரத பிரயத்தனம் செய்கிறார். கவிழ்ந்து விழுந்தாலும் மாமனுக்கு மீசையில் மண் ஒட்டாது என்பது இது தானோ?

பொய்யையும் அவதூறுகளையும் வாரி இறையுங்கள். ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் கொஞ்சமாவது காலத்துக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றது போல், எதிர்கணைகள் வரும் பொழுது தகுந்த பதில் கொடுத்து தப்பி நிற்பதற்கு ஏற்றாற்போல் அள்ளி வீசுங்கள். இல்லையெனில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இந்துத்துவவியாதியின் கோர முகங்கள் இப்படித்தான் பல்லிளித்து நிற்கும்.
mailto.erainesan@gmail.com

Series Navigation

இறை நேசன்

இறை நேசன்