விடாது கருப்பு

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

பத்ரிநாத்


துபர்கண்டி கலர் என்றால் இதுதானா.. ஒரேயடியாய் சிவப்பும் இல்லை.. அதே சமயம் கருப்பும் இல்லை.. இரண்டுக்கும் மத்யமமாய் ஒரு கலர் .. ரொம்பதான் ரிச்சாக இருக்கிறது.. என்னவொரு பளபள.. நாராயணன் தன் புது வண்டியைத் தடவிப் பார்த்தான்.. முழுவதும் பைபர் பாடி என்றான் கடைக்காரன்.. தகரம் இல்லையாம்.. நசுங்கவோ உடைவதோ கிடையாதாம்.. அட.. ஓண்டா கம்பெனிக்காரன் சமீபத்தில் இதைத் தயாரித்து வெளுயிட்டிருக்கிறானாம் ி.. இனி இது என் பொருள்.. அதன் வயிற்றுப் பாகத்தை நரசிம்மர் திறந்ததைப் போல திறந்தால் அதில் ஒரு குடித்தனமே நடத்தலாம் போலிருந்தது.. அடேயப்பா.. ‘’ சார்.. நீங்க இதில ஒங்க எல்மெட்ட வச்சுட்டுப் போகலாம்.. எங்கயாவது ஷாப்பிங் போகணும்னா, இதில வச்சுட்டு லாக் பண்ணிட்டுப் போகலாம் சார்..’’

ஆனால் என்ன.. தவணை முறை..என்ன செய்வது.. ? விலை முப்பத்தொன்பதாயிரத்துச் சொச்சம்.. அவ்வளவு பணத்திற்கு எங்கே செல்வது.. ? பாதி கஷ்டப்பட்டுப் புரட்டினான்.. மூச்சு வாங்கியது.. அதிலும் தில்லுமுல்லுதான்.. அவன் உற்ற நண்பன் கோபிதான் அந்த ஆலோசனையைச் சொன்னான்.. தனக்குத் தெரிந்த டிராவல்ஸில் யாரோ கோயம்புத்தூருக்குக் கும்பலாய்ச் சென்ற டிக்கெட்டுகளை வாங்கி, அதற்குத் தகுந்தபடி விடுமுறை அளித்து, விடுமுறைகாலச் சிறப்புச் சுற்றுலா சென்றதைப் போல அலுவலகத்தில் சொல்லி ஒரு வழியாய்ப் பணத்தைப் புரட்டினான்.. கோபியிடம் பயந்து சொன்னான்.. ‘’ டேய் பயந்தா நடக்காது.. அப்படியே புடிச்சாலும் பிரச்சன இல்ல.. அதிகாரிகளைப் பாத்து அமுக்கிட வேண்டியதுதான்..’’ என்று சொல்லிக் கொடுத்தான்.. கோபி அதைப் போல பலமுறைகள் செய்திருக்கிறானாம்.. ஒரு முறை லஞ்சம் கொடுத்துப் பிரச்சனையிலிருந்து தப்பினானாம்.. அதுதான் பணம்ி வாங்கும் அதிகாரிகள் சிலர் நம்மிடம் இருக்கிறார்களே.. அவர்கள் துணை இருக்கும் வரை என்ன பிரச்சனை..

ஆமாம்.. இந்த உலகத்தில் தவறு செய்யாதவர்கள்தான் யார்.. ? அதெல்லாம் பார்த்தால் முன்னேற முடியாது.. ஒரு விதத்தில் இவன் படித்த பிளஸ் டூ படிப்புக்கு எவன் அரசு வேலை தருவான்.. கொடுக்கவேண்டியதைக் கொடுத்துத்தான் வர முடிந்தது.. அதெல்லாம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது..

நல்ல நாள் பார்த்து வண்டியை வீட்டிற்கு ஓட்டி வந்தாகிவிட்டது.. மனைவியை பின்னால் வைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றான்..

‘’இன்னும் கொஞ்சம் பெரிய வண்டியா பாத்துருக்கலாம்னா.. ஒக்கார சிரமமா இருக்கு.. என்ன சொல்றேள்.. ’’ என்றவளை முறைத்தான் நாராயணன்..

துபார்த்திருக்கலாம்தான்.. போன மாதம் தான் ஒன்றரை பவுனில் பிரேஸ் லெட் வாங்கினான்.. முக்கால் பவுன்தான் ஆகியிருக்கும்.. நாராயணன் என்ற பெயர் அதில் பொறிக்கப்பட்டு வரவேண்டும் என்று விரும்பினான்.. அது பாட்டுக்கு ஒன்று ஒன்றரை என்று வளர்ந்து சென்றுவிட்டது.. போதாத குறைக்கு இவள் வேறு அதைப் போல விரும்பவே அவளுக்கும் ஒன்று ஆர்டர் பண்ண வேண்டிவந்துவிட்டது… ஒன்றுக்கு இரண்டு செலவு.. அவள் லேசில் விடமாட்டாள்.. துளைத்து எடுத்துவிடுவாள்..

இன்னமும் கொஞ்சம் கடன்கள் இருக்கிறது.. செல் போன் ஒன்று புதிதாய் வந்திருந்தது.. அதைப் பார்த்தவுடனேயே வாங்க வேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது.. வீட்டில் ஒரு போன் இருந்தது.. ஆனால் இது நடந்து கொண்டே பேசும் போன் ஆயிற்றே.. வாங்கியே தீரவேண்டும்.. பத்தாயிரம் செலவு செய்து அதைவேறு வாங்கிவிட்டான்.. அலுவலகத்தில்

2

காண்ட்ராக்டர் வந்திருந்தான்.. ஒரு டெண்டர் விசயமாய்.. குறைந்த விலையைக் கொடுத்திருப்பவன் யார்.. ?

எவ்வளவு தொகை குறைந்த பட்சம் போன்ற தகவலுக்காக.. ஒரு வழியாய்ப் பேரம் முடிந்தது.. அவன் உபயம்தான் செல் போன்..

அவன் வாங்கியிருந்த செல் , பிறர் வைத்திருக்கும் செல்லைக் காட்டிலும் விலையுயர்ந்தது மட்டுமல்ல.. பலதரப்பட்ட சேவைகளைத் தரவல்லது என்று சிலர் கூறினர்.. என்னென்ன சேவைகள் அவற்றை எங்ஙனம் உபயோகிக்க வேண்டும் என்பது உட்பட அவனுக்குப் புரியவில்லை.. ஒழியட்டும்.. ஏதோ பேசத் தெரிகிறதே.. அவனுக்கு அப்படி அதிகம் அழைப்புகள் வருவதில்லை.. இருப்பினும் அதில் பேசினால் ஏதோ பெருமையாக இருக்கிறது.. வெளுயில் சென்றால் அதில் அடிக்கடி மனைவியை அழைக்கச் சொன்னான்.. ஒரு விசயமும் இல்லை என்றாலும் பரவாயில்லை.. கூப்பிடச் சொன்னான்..

இவனுடைய பால்ய நண்பன் ராமசாமி கார் வாங்கியிருந்தான். அன்று தற்செயலாக கிண்டியில் பார்த்தான்.. பேசிக் கொண்டிருந்தான்.. அப்படியொன்றும் ராமசாமி பெரிய வேலையில் ஒன்றும் இல்லை.. இருப்பினும் கார் எப்படி வாங்க முடிந்தது.. ? ராமசாமி சொன்னான்.. இப்போது தெருவுக்குத் தெரு பல வங்கிகள் கூவிக்கூவி கடன் கொடுக்கிறார்களே.. அதில் வாங்கினானாம்.. மாதம் முவாயிரம்தான் கட்டிவருகிறானாம்.. மனைவியிடம் சொன்னான்.. ‘’உங்கப்பா கிட்ட கொஞ்சம் பணம் வாங்கிண்டு வாடி..’’, என்றான்.. தன் தகப்பனைச் சொன்னதால் அவள் முடியவே முடியாது என்று கூறிவிட்டாள்.. அவனுக்கு மாமனார் மீது சற்று பயம்.. அவர் ஒரு மாதிரி ஆசாமி.. எதற்கெடுத்தாலும் சண்டைக் கோழியைப் போல வந்து நிற்பார்.. சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் கோர்ட்டு கேசு என்று கூறுவார்..

ஆனால் அவனுக்கு நாளுக்கு நாள் கார் கனவு கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.. அடக்கவே முடியவில்லை.. மீண்டும் கோபியை நாடினான்.. அவன் சொன்ன யோசனையின் பெயரில் இரண்டு மூன்று குலுக்குச் சீட்டுக்கள் சேர்ந்தான்.. உறவினர் சுந்தரம் மாமாவை ஜாமீன் கையெழுத்துப் போடச் சொன்னான்.. தேவைப்பட்டால் அவர் பெண் கல்யாணத்திற்குக் கடன்கள் தருவதாக வாக்குக் கொடுக்கவே, அவரும் தயக்கத்தைவிட்டுக் கையெழுத்திட்டார்..

இரண்டு முறைகள் அந்தச் சீட்டு கட்ட முடியவில்லை.. பணமும் உடனே எடுக்க முடியவில்லை.. எல்லாம் அதல பாதாளத்திற்குத் தள்ளி, சீட்டு சென்று கொண்டிருந்தது.. சுந்தரம் மாமா பல தடவை வீட்டிற்கு நடையாய் நடந்து சொல்லிவிட்டுச் சென்றார்.. ஒரு முறை கூச்சல் வேறு போட்டார்..

‘’ நேக்கு தந்திக்கு மேல தந்தி வந்துண்டேயிருக்கு.. போனா போறதுன்னுதான் கையெழுத்துப் ி போட்டேன்.. இதெல்லாம் சரியில்ல நாராயணா..’’கத்தினார்..

கிழத்தை ஒரு வழியாய்ச் சமாளித்து அனுப்பினான்.. அடுத்தது சீட்டிற்கு ஒரு வழி பண்ண வேண்டும்.. பார்ப்போம்.. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது.. வேறு ஏதாவது ரூட்..!

கிழம் அத்தனை கூச்சல் போடக் காரணம் பணம் மட்டுமல்ல.. மகளின் திருமணம் வேறு வைத்திருக்கிறாராம்.. மனைவி சொன்னாள்.. எப்படியாவது கொடுத்துவிடச் சொன்னாள்.. மீண்டும் நண்பன் கோபியுடன் தீவிர யோசனை..

அடுத்த நாள் கோபி ஒருவனை அழைத்துவந்தான்.. அந்த மனிதன் தன்னை ராஜேஷ் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான்.. அவன் பேசும் தமிழ் நம்மவூர்காரர்கள் பேசுவதைப் போல இல்லை.. கர்நாடகாவிலிருந்து வருகிறானாம்.. கிட்டத்தட்ட மகாராஷ்டிரா பக்கம்.. ஒரு சர்வ தேச வங்கியின் பெயர் சொன்னான்.. அதன் முகவராம்.. உலகெங்கும் பறந்திருக்கிறானாம்.. அவன் தன்னுடைய வங்கியில் கடன் பெற்றுத் தருவதாய் வாக்களித்தான்.. சந்தோஷமாக இருந்தது.. நம்பிக்கையுடன் பேசினான்.. நாராயணன் தன்னுடைய கணிப்பொறித்தாளில் இருந்த சம்பளப் பட்டியலைக் காண்பித்தான்..

‘’இதுக்கு ஒரு லட்சம்கூட லோன் கிடைக்காது சார்.. ஆனா நா வாங்கித்தர்றேன்..பதினஞ்சு லட்சம்.. அதுக்கு ஒங்க ஆபிசுலேர்ந்து இதே மாதிரி பேப்பர் வாங்கித்தாங்க.. ஒரு வாரம் டயம்

கொடுங்க.. மத்ததை நான் பாத்துக்கறேன்..அதே சமயம் கிடைக்கும் பணத்தில் நாற்பது பர்சண்ட எனக்குக் கொடுக்கணும்.. மாசம் கட்ற பணத்தில நானும் நாற்பது பர்சண்ட் கட்றேன்..’’,

‘திருட்டு முழி’ விழித்தான் நாராயணன்.. ‘’ யோசனயே பண்ண வேண்டாம்.. எனக்கும் பணத் தேவை இருக்கு.. உங்களப்போல..இது ஒரு கூட்டுறவு மாதிரி.. நா ஒங்களுக்கு பாண்ட் பேப்பர்ல கையெழுத்துப் போட்டுத்தர்றேன்..யோசன பண்ணிச் சொல்லுங்க..’’,

யோசனை பண்ண நேரமில்லை.. வேறு வழியில்லை.. இப்போது இதிலிருந்து மீள வேண்டும்.. ராஜேஷின் முறை பற்றி ஓரளவுக்குத் தெரிந்தது நாராயணுக்கு.. பாம்பின் கால் பாம்பறியும் போல.. நாராயணன் தன் அலுவலகத்திலிருந்து திருடிக் கொடுக்கும் அந்தத் தாளில் போலியான சம்பளப் பட்டியல் தயார் செய்து தருவான் போலிருந்தது.. எப்படியாவது முதலில் கடன் பெறுவோம்.. பின்பு பிற விசயங்களைப் பார்த்துக் கொள்வோம்..

பணம் கையில் கிடைத்து விட்டது.. எப்படி..அதெல்லாம் எதுவும் அறிய முடியாது.. அது ராஜேஷ்களின் உலகம்.. அதில் எதுவும் சாத்தியம்.. மணலும் கயிறாகும்..

இன்னொருபுறத்தில் அவன் அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர்ி ருத்திரமூர்த்தி.. நாராயணனும் அவரும் கிட்டத்தட்ட ஒரே வருடம்தான் வேலைக்கு வந்தார்கள்.. ருத்திரமூர்த்திக்கு எப்போதும் நாராயணனைப் பிடிக்காது.. ( அவருக்கு யாரையும் பிடிக்காது என்பது வேறு விசயம் ) என்ன இந்த நாராயணன் பயல்.. திடாரென்று ஸ்கூட்டரில் வருகிறான்.. மைனர் செயின் போட்டுக் கொள்கிறான்.. பிரேஸ் லெட். செல் போன் என்று வளைய வந்து கொண்டிருக்கிறான் என்று பொருமினார்ி..நம்மால் எதுவுமே முடியவில்லை.. நிச்சயம் நம் சம்பளத்தில் வாங்க முடியாது.. கிம்பளத்திலும் இதைப் போல முடியாது.. ஒரு வேளை ஏதோ பெருமளவு ஊழல் செய்து கொண்டிருக்கிறான் என்று ஒருவாறு யூகித்தார்.. மத்திய கண்காணிப்பு ஆணையருக்கு கீழ்கண்ட நீண்ட கடிதம் எழுதினார் .. அதன் சுருக்கம்..

‘’ மதிப்பிற்குரிய அய்யா, நான் கூறப்போகும் செய்தியை நீங்கள் புலனாய்வு செய்வீர்கள் என்று நம்புகிறேன். மேலும் என்னுடைய பெயரையும் இன்னபிற தகவல்களையும் இரகசியமாய்ப் பாதுகாப்பீர் என்றும் நம்பி எழுதுகிறேன். எங்கள் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் திரு நாராயணன் (வயது 35) தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்து வருகிறார் என்று தெரிகிறது. கடந்த நான்கு வருடங்களில் அவர் சேர்த்த, எனக்குத் தெரிந்த, தங்க நகைகள் மற்றும் இதர வாகன மற்றும் அசையா சொத்துக்கள் மதிப்பு .. .. .. ‘’, என்று தொடங்கி கடிதம் நீண்டிருந்தது. ருத்திர மூர்த்தி அக்கடிதத்தில் பற்பல ஆதாரங்களைக் கூறியிருந்தார்..

மத்திய கண்காணிப்பு ஆணையம் அதைப் பற்றி விசாரிக்க உத்தரவு வெளுயிட்டது..

கர்நாடக மாநிலத்தில் உள்துறைச் செயலகத்தில் ஒரு கோப்பு, மந்திரியின் பார்வைக்குச் சென்றது.. அதில் மாநிலத்தில் சில ஆண்டுகளாய் நடைபெற்று வந்த பங்கு வர்த்தக மோசடி, போலி லைசன்சு மோசடி மற்றம் போலி ஆவண மோசடியில் ஈடுபட்ட கும்பலில் ஒருவன் நஞ்சுண்டப்பா.. பல மொழிகள் தெரிந்தவன்.. அவன் ராஜேஷ் என்ற பெயரில் தற்போது தமிழ் நாட்டில் மறைந்து தன் திரைமறைவு வேலைகளைத் தொடர்வதாகத் தெரிவித்தது.. அந்தக் கும்பல்கள் சம்பந்தப்பட்ட விசயங்கள் அனைத்தும் தேசப் பாதுகாப்பு மற்றும் அன்னிய நாட்டுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபடுவது என்பன போன்று இருப்பதால் , அவன் சம்பந்தப்பட்ட கோப்புகளை சிபிஐ வசம் ஒப்படைக்க முறைப்படியான ஒப்புதலைக் கோரியது..

நாராயணன் அங்கு ராஜேஷுடன் கிடைத்த பணத்தைப் பங்கிட்டுக் கொண்டிருந்தான்.

——————-

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்