வாய் மூடிப்போன நடுநிலையாளர்கள்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

ராஜ்குமார்


சங்கரமடப் பிரச்சனையின் பரிமாணங்கள் பல்வேறு விதமாக மாறி, தற்பொழுது மிகவும் சிக்கலான நிலைமையை அடைந்து விட்டது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நியாயமானதுதான் என நினைத்தவர்கள் கூட தற்போது இதன் பின்புலத்தில் இருக்கும் உண்மை சாமான்யர்களின் அறிதலுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்துவிட்டார்கள். ஆனால் தனி மனிதனுக்கோ அல்லது இயக்கத்திற்கோ அரசாங்கத்தால் விளைவிக்கப்படும் இன்னல்களை, நமக்கு அம்மனிதனின் மீதோ அல்லது இயக்கத்தின் மீதோ இருக்கும் சுய விருப்பைப் பொறுத்தே ஒப்புக் கொள்கிறோம் அல்லது எதிர்த்து குரல் கொடுக்கிறோம்.

அரசாங்கமும் மனிதர்களின் சுயவிருப்பங்களையும் வெறுப்பினையும் தன்னுடைய செளகர்யத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது.அரசாங்கத்தின் வழிமுறைகளை நடுநிலைமையுடன் அலசக் கூடிய விமர்சகர்களோ, பத்திரிகையாளர்களோ தற்போது இல்லை.தன்னுடைய எதிரியின் மீது அரசாங்கம் அராஜக தாக்குதலை மேற்கொண்டாலும் அதைப் பற்றி கவலையில்லை. தன் மீது பாய்ந்தாலோ அய்யகோ என குரல் கொடுக்கிறார்கள்.

சங்கர மடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் நடவடிகைகளை அலசும் போது அது சட்டம் செய்யக் கூடிய கடமை மட்டுமே என யாராவது நியாயப்படுத்தினால் அது மடமை மட்டுமே. நசுக்கப்படுபவர் ஜெயேந்திரர் என்றவுடன் வரவேற்கும் வீரமணியும், ஞாநியும், நெடுமாறன்மேல் இதைப்போல நடவடிக்கை எடுத்தால் அராஜகம் என கூக்குரலிடுவார்கள். இது எவ்விதமான நடுநிலைமை. தனக்கு பிடிக்காதவரின் மீது எடுக்கப்படும் சில அராஜக நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதற்கும் ஒருபடி மேலே போய் பாராட்டுவதும் பகுத்தறிவு வாதமா ?

தமிழக அரசின் போலீஸ் நடவடிக்கைகள் , கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. நீதித் துறையின் கைகளை கட்டிப்போட்டு போலிஸ் நடவடிக்கைகளை எடுப்பது இவர்களது ஸ்டைல். கலைஞர் கைதிலிருந்து, ஏன் அதற்கு முன்பே பரிதி இளம்வழுதியின் கைதிலிருந்தே இந்த வழிமுறை துவங்கி விட்டது. கலைஞர் கைதின் போது நீதிபதி அசோக்குமார் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்ததும், அதற்காக அவர் எதிர் கொண்ட சிரமங்களும் அனைவரும் அறிந்ததே.

அதன் பின்பு வளர்ப்பு மகன் சுதாகரன் மீது பாய்ந்தது கஞ்சா கேஸ். இதிலும் போலீஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. சுதாகரன் என்ற தனிமனிதனின் நேர்மையைப் பற்றிய பிரமாதமான கருத்து யாருக்கும் இல்லை. எனவே ‘இவருக்கு வேண்டியதுதான் ‘ என்பதே வெகுஜனக் கருத்தாக இருந்தது.

ஆனால் இத்தகைய வழிமுறைகளுக்கு எதிராக நாம் கடைபிடிக்கும் மவுனம் , அரசாங்கத்திற்கு அளிக்கும் அதீத தைரியத்தையும், நாளை இத்தகைய அராஜகம் நம் மேலேயே ஏவப்படலாம் என்ற ஆபத்தையும் நாம் உணரவில்லை. கிட்டத்தட்ட சுனாமி அலைகளை கரையிலிருந்து வேடிக்கைப் பார்த்த அறியாமைதான் நம் அனைவரிடமும் இருக்கிறது.

கலைஞர் கைதான போது ஜெயேந்திரர் வேடிக்கைப் பார்த்தார். செரீனா கைதான போது அனைவரும் வேடிக்கைப் பார்த்தோம். பொடா சட்டங்களின் துஷ்பிரயோகத்தை பிஜேபியும் சோவும் வேடிக்கைப் பார்த்தது. இன்று ஜெயேந்திரரின் பிரச்சனையை வீரமணியும், ஞாநியும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். அரசு ஊழியர் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்ட பெரிய ஆங்கிலப் பத்திரிக்கை பட்டாளமேயிருந்தது. ரீடிப் தளத்தில் பல கட்டுரைகள் ஜெயலலிதாவைப் பாராட்டி எழுதப்பட்டன. இன்று அதே தளத்தில் ஜெயேந்திரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் சுய விருப்பு வெறுப்பின்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நடுநிலைமையுடன் ஆராயும் மனோபாவம் அனைவரிடமும் இல்லாததுதான்.

இதன் விளைவென்ன தெரியுமா ?போலிஸ் பற்றிய பயம் நம் அனைவரிடமும் அதிகரித்து உள்ளது. ‘கஞ்சா கேஸ் போட்டிருவாங்கப்பா ‘ என பயத்தை வெளிப்படுத்துகிறோம் நான் பெயிலபிள் வாரண்ட் , ஆண்டிசிபேட்டரி பெயில் பற்றிய லீகல் லிட்டரசி பெருகியுள்ளது. இதன் நடுவில் ‘காவல் துறை உங்கள் நண்பன் ‘ என்பது வெறும் கேலிக் கூத்தாகப் போனது.

ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்ட போலிஸ் நடவடிக்கைகள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டன. இன்று அராஜக ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக நாளை ஆட்சிக்கு வர நேரிட்டால் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தும் என நினைக்கிறீர்களா ? அராஜகம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. மெளனச் சாமியாராய் பொறுத்துக் கொண்ட உங்களையும் என்னையும் தவிர வேறு யாரையும் இதற்காக குறை சொல்ல முடியாது.

சங்கர மடம் அல்கொய்தா போல உருவகப்படுத்தப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. ஜெயேந்திரரின் புலன் விசாரணை சிடி எதிர்கட்சி டிவி சானலுக்கு கிடைக்கிறது. இதைக் கசிய விட்டது யார் ? யார் மீதும் துறை ரீதியான விசாரணை கூட ஏன் துவக்கப்படவில்லை ? நாளை முக்கியமான ராஜாங்க ரகசியங்கள கசியாது என்பது என்ன நிச்சயம் ?

சங்கர மட வழக்கிற்கு பல தனிப்படைகள் அமைகப் படுகின்றன. எக்கச்சக்கமான செலவு. இவற்றுக்கெல்லாம் நடுவே கூலிப்படையினால் முன்னாள் மந்திரி ஆலடி அருணா கொல்லப்படுகிறார். ஆளுங் கட்சியின் முன்னால் அமைச்சரே கொல்லப்படுகிறார். போலிஸின் பயமின்றி தமிழகமெங்கும் கூலிப்படைகள் உலவுகின்றன. இவையெல்லாம் இருக்க தமிழகத்தை அமைதிப் பூங்கா என்று பறை சாற்றிக் கொள்கிறார்கள்.

சுயவிருப்பங்களுக்கு அப்பாற்பட்ட சீரிய சிந்தனையும், ஜனநாயக வ்லியுறுத்தலும் நம் தேசத்தின் அமைதிக்கு இன்றியமையாதவை. இந்த பங்களிப்புக்கு நாம் தயாரா என்ற கேள்விக்கு விடையளிக்க வேண்டியதே இன்றைய அவசியம்.


RajkumarM@NIIT.com

Series Navigation

ராஜ்குமார்

ராஜ்குமார்