வாமனர்கள்

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

பத்ரிநாத்


‘ ‘வாங்க.. வாங்க.. கவிஞர் கலியாணசுந்தரனார் அவர்களே.. எங்க இவ்வளவு தூரம் நம்ம ஏரியாவுக்கு விஜயம்.. ? வாங்க நம்ம வீடு இங்கதான் இருக்கு.. ? ‘ ‘,

‘ ‘அடட.. ராமராஜன்சாரா…. உங்க பகுதியில ஒரு திருமணத்திற்கு வந்தேன்.. வீட்டுக்கு இன்னொரு நாள் வர்றேன்.. அலுவலகம் போக வேண்டாமா.. ஆமா.. நீங்க அலுவலகம் வரலயா.. ? ரொம்ப காசுவலா நிக்கிறிங்க.. ‘ ‘,

‘ ‘நான் இன்னிக்கி லேட்டா வருவேன்.. கடைத் தெருவுக்கு வந்தேன்.. இங்க வந்ததது ரொம்ப நல்லதாப் போச்சு.. உங்களப் பாத்தது.. ‘ ‘,

‘ ‘என்ன பாக்கறது பெரிய விசயமா.. அது கிடக்கட்டும்.. ஒங்க செக்ஷனுக்கு யாரோ புதியவர் டிரான்ஸ்பர்ல வர்றதா கேள்விப் பட்டேன்.. ரொம்ப வசதிதான்.. ஒங்க வேலைப்பளு கொறயும்.. யார் அவர்.. ? ‘ ‘,

‘ ‘புதியவர் இல்லை.. பழைய ஆள்தான்.. காமராசுன்னு பேரு.. இங்க முன்ன வேல பாத்தவர்தானாம்.. ஒங்களக்கூட தெரியும்னு சொன்னார்..வேலப் பளு கொறயுமா.. ஐயா நீங்கள் கவிஞர்.. சிலேடையாச் சொல்றிங்கன்னு நெனைக்கிறேன்.. சரியான தத்திய எனக்குப் போட்ருக்காங்க.. ஒரு வேல ஒளுங்காத் தெரியல.. எந்த கோப்பில ஒரு நோட் போடணும்னாலும் ஆயிரம் தடவ சந்தேகம் கேக்கறாரு.. மொத்ததில பல முட்டாப் பசங்களோட பத்தோடு பதினொன்னா இவரையும் சேர்த்துக்க வேண்டியதுதான் என் தலையெழுத்தாப் போயிடுச்சு.. பேசாம ஒங்க செக்ஷனுக்குத் தள்ளி விட்றலாமா.. ? ‘ ‘,

‘ ‘அநியாயம் பண்ணாதிங்க ராமராஜன்.. யாம் பெற்ற இன்பம் போலச் சொல்றிங்களா.. ? நா ஏற்கனவே பல சோம்பேறிகளைக் கட்டி மேச்சுக்கிட்டு இருக்கேன்.. இந்த அழகில இவர் வேறயா.. ? நீங்கதான நல்மேய்ப்பர்.. மேனேஜ் பண்ணுங்க.. அது கிடக்கட்டும்.. இலக்கிய உலகம் இந்த இதழ் வாங்கிட்டிங்களா.. ? என் கவிதையப் போட்ருக்கான்.. ‘ ‘,

‘ ‘எங்க கலியாணம் நேரம்.. ஏதோ புத்தகம் போடப்போறதா சொன்னிங்க… ‘ ‘,

‘ ‘அடுத்த மாசம் போடப் போறேன்.. கவிதைத் தொகுதி.. என்ன ராமராஜன்.. ஒரு காலத்தில நீங்க மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர்னு சொல்லிக்குவிங்க.. நேரமில்ல அது இதுன்னு சராசரி மனுசங்க போல பேசறிங்க.. லெளகீக வாழ்க்கை உங்களையும் அடிச்சிட்டுப் போயிருச்சா… எச்சரிக்கயா இருக்க வேண்டாமா.. ? ‘ ‘,

‘ ‘கலியாணம் சார்.. நா ஒரு ஃபீனிக்ஸ் பறவை போல.. எனக்கு இது ஒரு பேஸ்.. சிவபெருமான் கண்டத்தில அடக்கி வச்சது போல எல்லாத்தையும் அடக்கி வச்சுருக்கேன்.. அதுவும் இல்லாம உங்களுக்கும் எனக்கும் நெறய வித்தியாசம் உண்டு.. என்னைப் போல பல பிரச்சனை ஒங்களுக்கு இல்லை.. சரி சரி.. எந்த இதழ்னு சொன்னிங்க.. நா என் கருத்தைச் சொல்றேன்.. ‘ ‘,

‘ ‘நானே தர்றேன்.. படிச்சுப் பாருங்க.. பின்னி எடுத்துட்டேன்.. என்னோட மாஸ்டர் பீஸ் அதுன்னுகூடச் சொல்லலாம்.. மனிதர்களை அவர்கள் இயல்பைப் பத்தி புட்டுப் புட்டு வச்சுருக்கேன்.. பாருங்க.. இது பரபரப்பா பேசப் போவுது.. சரி.. நா வரட்டுமா.. அப்பறம் வீட்டுக்கு வீடு வாசப்படி போல, எல்லாருக்கும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.. கஷ்டத்தோட நீங்க படிக்கிறிங்க.. நா சிரமத்தோட எழுதறேன்.. சரியா..பிறகு பாப்போம்.. வர்றேன்.. ‘ ‘,

****

‘ ‘கண்டெக்டர் சார்..அண்ணா சிலை ஒண்ணு குடுங்க.. ‘ ‘,

‘ ‘சார்.. நீங்க கல்யாணம் சார் தானே.. ‘ ‘,

‘ ‘அட.. ஆமா.. ஒங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கு.. ‘ ‘,

‘ ‘நாதான் காமராசு..டிரான்ஸ்பர்ல வந்துருக்கேன்.. ‘ ‘,

‘ ‘ஓஓ.. ஆமா.. ராமராஜன் சொன்னார்.. பாத்து பல வருசம் ஆச்சு..இந்த ஏரியாவுலயா இருக்கிங்க.. ‘ ‘,

‘ ‘ஆமா சார்.. கணேசநகர் 10வது தெரு.. ‘ ‘,

‘ ‘அட.. நானும் அதே ஏரியாதான்.. மூன்றாவது தெரு.. ‘ ‘,

‘ ‘அப்ப அடிக்கடி பாக்கலாம்.. ‘ ‘,

‘ ‘ஆமா.. வேலயெல்லாம் எப்படி போயிக்கிட்டு இருக்கு.. ‘ ‘,

‘ ‘இருக்கு சார்.. நா ஒங்கள மறக்கவே இல்ல சார்.. நிறைய கவிதைகள் எளுதுவிங்கல்ல..

இப்பவும் தொடர்ந்து எளுதறிங்களா.. ‘ ‘,

‘ ‘ஓ.. ரெண்டு தொகுப்பு போட்டுட்டேன்.. என் கவிதையை படிச்சிருக்கிங்களா.. ‘ ‘,

‘ ‘அட.. என்ன சார் நீங்க.. நா அப்பவே படிச்சுருக்கேனே.. ஒங்க கிட்டக் கூட அதப் பத்திப்

பேசியிருக்கேன்.. ‘ ‘,

‘ ‘ இலக்கிய உலகம்னு பத்திரிகை இது.. இந்தாங்க.. இதில என் கவிதைய போட்ருக்காங்க..

ஒங்க செக்ஷன் ஹெட் ராமராஜன் என் ரசிகர்.. அவரும் பாக்கணும்னு சொன்னாரு.. காட்டுங்க.. நீங்களும் படிங்க.. பிரமாதமா வந்துருக்கு.. ‘ ‘,

‘ ‘ரொம்ப நன்றி சார்.. அவர்கிட்ட கொடுக்கறேன்.. நானும் படிச்சுட்டு கருத்த சொல்றேன்.. பரவாயில்ல சார்.. ஒங்கள போன்ற சிந்தனையாளர்கள் நம்ம இலாகாவில இருக்கறது ரொம்பப் பெருமையா இருக்கு சார்.. ஒங்க செக்ஷன் எங்க ஆறாவது தளமா.. ‘ ‘,

‘ ‘இல்ல.. நாலு.. ஃப்ரீயா இருந்தா வாங்க.. பேசுவோம்.. எப்படி இருக்கார் ராமராஜன்.. வேல வாங்கறாரா.. ‘ ‘,

‘ ‘ஒங்க நண்பரச் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க.. ரொம்ப நச்சுப் புடுங்கல் சார்.. இவரால எந்த வேலையும் செய்ய முடியல.. எங்களக் கொற சொல்றாரு.. நா என்ன புது அப்பாயிண்மெண்டா.. எத்தன சர்வீஸ் போட்டவன்.. ஆனா மரியாத இல்லாம பேசறாரு.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் பாருங்க.. நல்லா நாக்கப் புடிங்கிக்கிற மாதிரி கேட்ரப் போறேன்.. என்னடா இப்படிப் பேசறேன்னு நெனைக்காதிங்க.. ‘ ‘,

‘ ‘அட.. நீங்க ஒண்ணு காமராசு.. எனக்குத் தெரியாதா.. ? எத்தன வருசமா பழகறேன்.. பெரிசா நீட்டி மொழக்கிப் பேசுவாரு.. பைசா பிரயோசனம் கிடையாது.. அதே மாதிரி ஏதோ பெரிய இலக்கிய விமர்சகர்னு பந்தா காட்டுவாரு.. இவரு எங்கிட்ட இலக்கிய விமர்சனம்னு பேசிய பிறகுதான் புரிஞ்சுக் கிட்டேன்.. இந்த ஆளு ஒரு குப்பைன்னு.. பேசிக்கா ஒரு எளவும் தெரியாதவர்னு.. ஒரு வரி எளுதச் சொல்லுங்க பாப்போம்.. சும்மா பேச்சுதான்.. சார் நீங்க வேல விசயத்தில கரக்டா இருங்க.. இல்ல ஏமாத்திப்புடுவான்.. விடாதிங்க.. ஒரு கை பாருங்க.. ‘ ‘,

****

‘ ‘காமராசு சார்.. அந்த இன்கம்டாக்ஸ் பையில கொடுங்க.. எங்க லீலா மேடம்.. ‘ ‘,

‘ ‘கான்டான் போயிருக்காங்க சார்.. ‘ ‘,

‘ ‘சரி.. சரி.. வரட்டும்.. ‘ ‘,

‘ ‘ராமராஜன் சார்.. ஒங்க ஆத்ம நண்பர் கவிஞர் கலியாணசுந்தரம் இந்தப் புத்தகத்தக் கொடுத்துப் படிக்கச் சொன்னாரு.. அவர் கவிதை வந்துருக்காம்.. உடனே அபிப்பிராயம் கேட்டாரு.. ‘ ‘,

‘ ‘உடனே கொடுக்க இது என்ன ஃபாஸ்ட் ஃபுட்டா.. ஆயிரம் வேல இருக்கு.. ஆயிரம் பிரச்சன.. இவரப் போல வேலையில்லாவங்களா நாம.. சொல்லுங்க.. என்ன சிரிக்கிறிங்க.. ஏதோ சொல்ல வந்தாப்ல இருக்கு.. சொல்லுங்க.. ‘ ‘,

‘ ‘நா இதைப் படிச்சுட்டேன் சார்.. என்ன சொல்ல வர்றாருன்னே புரியல.. ஒரே கோளாறு.. வடிவமும் இல்ல.. பொருளும் இல்ல.. இலக்கண சுத்தம் இல்லாம எழுதறாரு.. எத்தனையோ சட்டங்கள் போடறாங்களே.. அதைப் போல கவிதை எழுத வர்ற கவிஞர்களுக்குக் கண்டிப்பா யாப்பிலக்கணம் தெரிஞ்சுருக்கணும்னு சட்டம் கொண்டு வரணும்.. தெரியாதவங்க படைப்பை தடை செய்யணும் சார்.. சாரி சார்.. என் கருத்த ஓப்பனா சொல்லிட்டேன்.. ‘ ‘,

‘ ‘அட நீங்க வேற காமராசு.. சொல்லணும்.. அதுவும் நாக்கப் புடிங்கிக்கிற மாதிரி கேக்கணும்.. அப்படிக் கேட்டிங்க.. அவ்வளவுதான்.. அழுதுடுவாரு.. விமர்சனத்தத் தாங்க முடியாத கோழை சார்.. காகித்தில காறித் துப்பிட்டு கவிதைன்னு சொன்னா.. எப்படி ஏத்துக்க முடியும்.. ? கேட்டா ஒங்க வாசிப்பைக் காட்டிலும் எனக்கு அதிகம்னு சொல்வாரு.. ஷெல்லியோட கவிதைகளை முழுசா படிச்சுருக்காரா கேளுங்க.. அட.. கலீல் கிப்ரன் படிச்சிங்களான்னா.. யாரு அவருன்னு சொல்றாரு.. நா படிச்சதுல 10 சதவிகிதம்கூட படிச்சுருக்க முடியாது.. அவரு செக்ஷன்ல போய்க் கேளுங்க.. இவரப் பத்தி ஓரே திட்டு.. நம்ம செக்ஷன்ல பாருங்க.. எல்லாரும் டாப்பு.. நல்ல கோ ஆப்பரேஷன்ல ஓடுது.. இவரு கவிதை எளுதற விட்டுட்டு ஒழுங்கா வேலையப் பாக்கலாம்.. அதையாவது இலக்கண சுத்தமா பண்ணலாம்.. என்ன சொல்றிங்க.. ‘ ‘,

‘ ‘அதுவும் சரிதான்.. ‘ ‘,

****

‘ ‘ஏங்க.. தட்டப் பாத்துச் சாப்பிடுங்க.. பேப்பரப் படிச்சுட்டு சாப்பிடாதிங்கன்னு சொல்றேன்.. கொளம்பு கொஞ்சம் ஊத்தவா.. ? ‘ ‘,

‘ ‘போதும்டி.. சாயந்திரம் யாரோ என்னய பாக்க வந்தாங்கன்னு ராஜூ சொன்னான்.. யாரு.. ? ‘ ‘,

‘ ‘யாரோ ஆபிஸ் சிநேகிதராம்.. கலியாணசுந்தரம்ன்னு சொன்னார்.. நம்ம ஏரியாவாமே.. காலைல எட்டு மணிக்கு வர்றாராம்.. சேர்ந்து ஆபிசுக்குப் போவலாம்னு சொல்லச் சொன்னார்.. ‘ ‘,

‘ ‘அட கடவுளே.. ஆள விடு.. நாளைக்கு எழு மணிக்கே கெளம்பிடறேன்.. சரியான அறுவை.. பிளேடு போட்டா தாங்க முடியாது.. ஆபிசுலதான் ராமராஜன்னு ஒரு மனநோயாளியோட மாரடிக்க வேண்டியிருக்குன்னா.. வீட்டுக்கு வந்தா இந்த ஆளா.. ? பேசாம வேற ஊருக்கு மாத்தல் வாங்கிட்டுப் போயிறலாம்னு தோணுது.. சேச்சே.. ‘ ‘,

‘ ‘சரி.. சரி.. ஒங்க ஆபிசு புராணம்.. சீக்கிரம் சாப்பிடுங்க.. வேல கெடக்கு.. ‘ ‘ – என்று கூறியவாறு காமராசுவின் மனைவி கறை படிந்த அந்தப் பாத்திரங்களைக் கழுவ எடுத்துச் சென்றார்..

(2003)

prabhabadri@yahoo.com

Series Navigation