வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

பி.கே. சிவகுமார்


‘நான் சந்தித்த எழுத்தாளர்களிலேயே மிகவும் சுயமரியாதையுடைய எழுத்தாளர் திரு.வல்லிக்கண்ணன். இலக்கியத்துக்கு வாழ்க்கைப் பட்டதால் அவர் இன்னமும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வருகிறார். இன்னமும் நம்மிடையே ஜீவியவந்தராய் இருக்கும் இவரைத் தமிழகக் கலை, இலக்கியத்துறை கண்டு கொள்ளாதிருப்பது ஒரு கபோதித்தனமே. வல்லிக்கண்ணன் போன்ற அறிஞர்கள் புதிதாக ஒன்றும் எழுதக்கூட வேண்டாம்; தாங்கள் எழுத வந்த நாள் தொட்டு, தமிழ்க்கலை, இலக்கிய உலகம் சம்பந்தப்பட்ட தமது அனுபவங்களை எழுதினால் புதிய தமிழிலக்கியத்தின் சரித்திரத்தை அல்லது அதன் தலை எழுத்தைத் தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும் ‘ என்னும் ஜெயகாந்தன் வரிகளின் மூலம் வல்லிக்கண்ணன் எனக்கு அறிமுகம் ஆனார். ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் ‘ என்கிற தன் நூலுக்கு 1978 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர் அவர் என்றும் அறிந்திருக்கிறேன். ‘சரஸ்வதி காலம் ‘ என்னும் கட்டுரையின் ஒரு பகுதியாக ‘ஜெயகாந்தனும் ஆபாசமும் – சரஸ்வதி கால விவாதங்கள் ‘ என்று அவர் எழுதிய கட்டுரையைப் படிக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிற போதினும், அவரின் எந்த நூலையும் முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு என் துரதிர்ஷ்டவசத்தால் இதுவரை கிடைத்ததில்லை. அவரின் சுயசரிதையான ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘ நான் முழுமையாகப் படித்த அவரின் முதல் புத்தகம். ஆனால், வல்லிக்கண்ணனைப் பற்றியும், அவரின் இலக்கியப் பங்களிப்பைப் பற்றியும் தெரிந்து கொள்ள அவரின் சுயசரிதை ஒரு சரியான ஆரம்பமாகும். வல்லிக்கண்ணன் போன்றோர் தமது அனுபவங்களை எழுதினாலே தமிழிலக்கியத்தின் சரித்திரத்தைத் தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள முடியுமென்று ஜெயகாந்தன்தான் எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறார்!

‘தன்வரலாறு எழுதப்பட வேண்டிய அளவுக்கு நான் பிரமாதமாக எதுவும் செய்துவிடவில்லை. நான் ஒரு சாதாரணன். எனது வாழ்க்கை விசேஷ நிகழ்வுகள் இல்லாத சகஜமான வாழ்க்கைதான் ‘ என்று முன்னுரையில் வல்லிக்கண்ணன் அவரின் தோற்றத்தைப் போல எளிமையாகச் சொல்லிக் கொண்டாலும், அவரின் சுயசரிதை அவரின் 83 வருட வாழ்க்கையின் சரிதம் மட்டுமல்ல; அவர் கண்டு, கேட்டு, உய்த்து, உணர்ந்த அந்த வருடங்களின் தமிழ்ச் சமூக வாழ்க்கையையும், கலை இலக்கியத்தையும், சிறுபத்திரிகைச் சூழலையும் அறிய உதவுகிற அரும்பொக்கிஷமாகவும் எனக்குத் தெரிகிறது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் பெயர்க்கப்படத்தான் வேண்டும். ஜோர்ஜ் லூயி போர்ஹே, காஃப்கா, ஜீன் பால் சார்ட்ரே என்று நீள்கின்ற பட்டியல் தமிழ் இலக்கியத்தில் அலசப்படத்தான் வேண்டும். ஆனாலும், சங்க, பக்தி இலக்கியங்கள் என்று தமிழ் இலக்கிய மரபு குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லாது – ஏன், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியவாதிகளில்கூட வல்லிக்கண்ணன் போன்ற எத்தனையோ பேரைப் பற்றி அறிகிற ஆர்வம் காட்டாமல் – மேன்மைக் கலைகளும் எழுத்தாளர்களும் தமிழில் இல்லை என்கிற மனோபாவத்தில் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோமா என்று சிலநேரங்களில் தோன்றுகிறது.

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை வல்லிக்கண்ணனின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த இராஜவல்லிபுரத்தைச் சார்ந்தவர் என்கிற மாதிரியான தகவல் முதற்கொண்டு, 1930-களில் அவர் ஊருக்குத் தெருவிளக்குகள் வந்தன; குடுமியை எடுத்துவிட்டு கிராப் வைத்துக் கொள்ளும் நாகரீகம் 1932க்குப் பிறகு தொடங்கி, 1936-ல் குடுமி வைத்த ஆசிரியர் எவருமிலர் என்றுமளவு ஆகிப் போனது என்கிற சமூக மாற்றங்கள் வரையிலான காட்சிகள் இந்தச் சுயசரிதை முழுதும் விரவிக் கிடக்கின்றன. 1939-ல் வல்லிக்கண்ணன் என்ற புனைப்பெயரைத் தரித்துக் கொண்டதில் இருந்து இன்றுவரை எழுத்துலகில் அவர் பதித்திருக்கும் சாதனைகள், ஊன்றியிருக்கும் விதைகள் ஆகியவற்றை இந்தச் சுயசரிதையின் மூலம் விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

தமிழில் சிறுபத்திரிகையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்துத் திறனாய்வு செய்ய விரும்பும் எவருக்கும் இந்நூல் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்ல முடியும். நவசக்தி, சக்தி, கிராம ஊழியன், லோகோபகாரி, சுதந்திரச்சங்கு, காந்தி, ஜெயபாரதி, தமிழ்நாடு, சினிமா உலகம், இந்திரா, கலாமோகினி, மை மேகசின், மெரிமேகசின், சண்டமாருதம், தமிழன், திருமகள், அணிகலம், குமரி மலர், தியாகி, ஆற்காடு தூதன், நகர தூதன், தேசாபிமானி, தமிழ்மணி, ஹனுமான், பொன்னி, … என்று அக்காலத்தில் வெளிவந்த பல சிறுபத்திரிகைகள், நாளிதழ் மற்றும் ஆங்கில இதழ்களைப் பற்றிய அருமையான விவரங்கள், அவற்றோடு வல்லிக்கண்ணன் கொண்டிருந்த தொடர்பு என்று பலவற்றை இப்புத்தகம் விருப்பு வெறுப்பற்ற வரலாற்றுப் பதிவாகத் தருகிறது.

அந்தக் காலத்துப் பத்திரிகைகளுடனான தனது உறவைப் பற்றி மட்டுமா வல்லிக்கண்ணன் விவரிக்கிறார்! ரா.பி.சேதுப்பிள்ளை, தி.க.சிவசங்கரன், வ.ரா., திருலோக சீதாராம், தி.ஜ.ரங்கநாதன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கண.முத்தையா, ப.நீலகண்டன், ஆர்.சண்முகசுந்தரம், சாலிவாகனன், ஆதித்தனார், அகிலன், தொ.மு.சிதம்பர ரகுநாதன், ஏ.கே. செட்டியார், இளங்கோவன், நாரண துரைக்கண்ணன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி என்று நீண்டு தமிழின் தற்கால எழுத்தாளர்கள் வரை பலருடனான உறவையும் உரையாடல்களையும்கூட மிகவும் சுவையாக நினைவு கூர்கிறார்.

அந்தக் காலத்தில் – சென்னை செல்ல முடிவு செய்தபின், திருநெல்வேலியிலிருந்து 400 மைல்கள் தூரத்திலுள்ள சென்னையை நடந்தே அடைந்துவிட முடியும் என்று எண்ணி, தினமும் 30 மைல்கள் நடந்துவிட முடியும் என்று நம்பி, நடந்தே மதுரைவரை வல்லிக்கண்ணன் சென்றுவிட்டார் என்பதை அறியும்போது, வல்லிக்கண்ணனின் மனஉறுதியை வாசகர் விளங்கிக் கொள்ளக்கூடும். மேலும், எத்துயர் வந்தபோதினும் நேர்மையான வழியைத் தேர்ந்தெடுக்கிற அறம் அக்கால மனிதர்களுக்குத்தான் எவ்வளவு சுலபமாக இருந்திருக்கிறது என்றும் உணர்கிறோம்.

வல்லிக்கண்ணன், வ.ரா., திருலோக சீதாராம் ஆகியோருக்கிடையே நடந்ததாக இந்நூல் சொல்லும் பின்வரும் உரையாடல் இன்றைக்கும் தமிழில் எழுத விரும்புகிற எவருக்கும் பொருத்தமானது:

வ.ரா. (வல்லிக்கண்ணனைப் பார்த்து) ‘நீர் முறையாகத் தமிழ் இலக்கியம் படித்திருக்கிறீரா ? ‘ என்று கேட்டார்.

‘இல்லை ‘ என்று சொன்னேன்.

‘அதுதான் நல்லது. முறையாகப் பழந்தமிழ் இலக்கியம் படித்தவர்களால் புதுமையாக எதுவும் செய்ய முடியாது ‘ என்று வ.ரா. குறிப்பிட்டார். உடனே திருலோகம் அவருடன் சண்டை பிடிக்கலானார்.

‘வ.ரா! நீங்கள் சொல்வது நல்ல யோசனையே இல்லை. எழுத்துத் துறையில் முன்னேற வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிற ஓர் இளைஞனிடம், பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்காதே என்று சொல்வது எப்படி நல்ல ஆலோசனையாக இருக்க முடியும் ? எல்லா இலக்கியங்களையும் படித்துப் புதுமைகள் செய்ய முயல்க என்று சொல்வதுதான் சரியான வழிகாட்டுதலாக இருக்கும் ‘ என்று திருலோகம் கூறினார்.

வ.ரா. அதுகுறித்து வாதாடவில்லை. ‘

1944 இறுதியில் கோவையில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்களின் முதலாவது மாநாட்டில், வெ.கந்தசாமிக் கவிராயர் என்ற பெயரில் புதுமைப்பித்தன் எழுதிப் பின்னர் ‘கிராம ஊழியனில் ‘ பிரசுரமான ‘ஓடாதீர் ‘ கவிதையை திருலோக சீதாராம் பாடிப் பிரபலமாக்கியது போன்ற பல சுவையான தகவல்களும் இந்நூலில் நிறையவே காணக் கிடைக்கின்றன.

‘அந்த மாநாட்டின் மேடையில் நின்று திருலோக சீதாராம், புதுமைப்பித்தனின் ‘ஓடாதீர்! ‘ கவிதையை முழக்கமிட்டார். ‘ஓகோ, உலகத்தீர்! ஓடாதீர்; உம்மைப் போல் நானும் ஒருவன் காண் ‘ என்று எழுத்தாளன் அறிவிப்பு செய்யும் கவிதை. குத்தலும் நையாண்டியும் சாடலும் நிறைந்தது. முடிவில் அது விடுத்த கோரிக்கை –

‘இத்தனைக்கும் மேலே

இன்னொன்று! நான்

செத்ததற்குப் பின்னால்

நிதிகள் திரட்டாதீர்!

நினைவை விளிம்பு கட்டி,

சிலைகள் செய்யாதீர்! ‘

இந்தக் கவிதைக்கும் திருலோகம் அதைப்பாடிய தோரணைக்கும் பிரமாத வரவேற்பு இருந்தது. இது யார் பாடியது என்று வ.ரா. கேட்டார். வேளூர் வெ. கந்தசாமிக் கவிராயர் என்று திருலோகம் மிடுக்காகப் பதில் கூறவும், வ.ரா. திகைப்பு அடைந்தார். யார் அது ? யார் அது ? என்று திரும்பக் கேட்டார். அதன் பிறகுதான் ‘புதுமைப்பித்தன் எழுதியது. இன்னும் அச்சில் வரவில்லை ‘ என்று திருலோகம் தெரிவித்தார். ‘

சினிமாவுக்குக் கதை வசனம் எழுதி முன்னேறுகிற வாய்ப்புகள் கிடைத்தபோதெல்லாம், ‘சினிமா வாய்ப்புகள் எனக்கு வேண்டாம். இலக்கியத் துறையில் தான் எனது நாட்டம் இருக்கிறது. இலக்கியப் பத்திரிகையில் எழுதி வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் என் ஆசை ‘ என்று வல்லிக்கண்ணன் பதில் சொன்னதைப் படிக்கும்போது, அவர் மீது மரியாதை கூடுகிறது. வாழ்நாள் முழுதும் இத்தகைய கொள்கைகளில் அவர் உறுதியாய் நின்ற காரணத்தினாலேயே தமிழ் இலக்கிய உலகம் தொழத்தக்கவர் ஆகிறார் அவர் என்பதை அவரின் சுயசரிதை மூலம் ஒருவர் அறிய முடியும்.

‘நான்கு நாட்கள் கழித்து நாகூர் மீண்டும் வந்தார். ‘என்ன லாவண்யா பிக்சர்ஸ்காரர் வரச் சொல்லியிருந்தாராம்; நீங்க போகலியாமே ? ஏன் ? ‘ என்று கேட்டார்.

‘ஏதோ புராணப்படம் எடுக்கிறாங்க. அதுக்கு வசனம் எழுத நான் விரும்பலே ‘ என்று சொல்லிவைத்தேன்.

‘புராணப் படமானால் என்ன! பெரிய பகுத்தறிவு-சுயமரியாதைவாதியான பாரதிதாசனே புராணப் படங்களுக்குக் கதை வசனம் எழுதறாரு. நீங்க ஏன் எழுதக் கூடாது ? ‘ என்று அவர் வாதாடினார்.

‘யாரும் எப்படியும் எழுதிவிட்டுப் போகட்டும். எனக்கு இது இஷ்டமில்லை. சினிமாவுக்குக் கதை வசனம் எழுதவே நான் விரும்பலே. எனக்குப் பிடிக்காததை நான் செய்ய மாட்டேன் ‘ என்று நான் உறுதியாய்த் தெரிவித்தேன்.

அவர் ஏதேதோ சொன்னார். நான் என் மனசை மாற்றிக் கொள்ளவில்லை. வருத்தப்பட்டபடி நாகூர் போய்விட்டார். அதன்பிறகு நான் அவரைக் காண நேர்ந்ததே இல்லை. அவர் மூலம் விஷயம் அறிந்த நண்பர் கணபதி எனக்காக அனுதாபப்பட்டார்.

‘அவர்கள் போக்கின்படி எழுதிக் கொடுத்தால் பணம் கிடைக்கும். பணம் அதிகம் சேர்ந்தபிறகு, உங்கள் இலட்சிய நோக்கின்படி காரியங்களைச் செய்யலாமே. இப்போது பணம் கிடைக்கிற வழியில் செல்ல மறுப்பானேன் ? ‘ என்று நண்பர் தர்க்கித்தார்.

‘எனக்கு அது சம்மதமில்லை. எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், நான் தேர்ந்துகொண்ட பாதையிலேயேதான் நான் முன்னேற விரும்புகிறேன் என்று கூறினேன். ‘

வல்லிக்கண்ணனையும் அவர் எழுத்துகளையும் அந்தக் கால திராவிட இயக்கங்கள் எப்படி எதிர் கொண்டன ? வல்லிக்கண்ணனே சொல்கிறார்:

‘இதர பத்திரிகைகளில் என் எழுத்துக்களை விரும்பிக் கேட்டு வெளியிட்டது போல, திராவிட இயக்க இதழ்கள் என்னை அணுகியதில்லை. ‘பொன்னி ‘ கூட என்னை நெருங்கியதில்லை. மாறாக, 1940களில் திராவிட இயக்க ஏடுகள் வல்லிக்கண்ணன் எனும் எழுத்தாளனை வெகுவாகச் சாடியுள்ளன. ‘ஆரிய அரவணைப்பு எனும் புளியங்கொம்பைப் பற்றிக் கொண்டு இலக்கிய உலகத்தில் முன்னேறிவரும் வல்லிக்கண்ணன் ‘ என்று ஒருசமயம் திராவிட நாடு பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. போர்வாள் என்ற ஏடு வசைபாடித் தனிக்கட்டுரையே எழுதியது. அந்நாளையப் பேச்சாளர்கள் சிலர் மேடையிலேயே என்னைக் கண்டித்து முழக்கமிட்டார்கள்.

நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவனுமில்லை. அன்பு, மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், மனிதம் முதலிய உயர்ந்த பண்புகளைப் போற்றும் முறையில் எழுதி வந்ததால், நானும் முற்போக்கு இலக்கியவாதியாக மதிக்கப்பட்டேன். இடதுசாரிப் பத்திரிகைகள் என் எழுத்துக்களை ஏற்றுப் பிரசுரித்தன. முற்போக்கு இலக்கிய நண்பர்கள் தங்கள் பத்திரிகைப் பணிக்கு என் உதவியை நாடினார்கள். ‘

‘நான் நல்ல பேச்சாளன் இல்லை. மேடைப்பேச்சு ஒரு தனிக்கலை. அதில் நான் பயின்று தேர்ச்சி பெறவில்லை ‘ என்று சொல்கிற வல்லிக்கண்ணன், 1979ல் மாயவரத்தில் நடைபெற்ற ‘தமிழ் நாவல் நூற்றாண்டு விழா ‘வின் போது ‘சரித்திர நாவல்கள் ‘ பற்றிப் பேசிய பேச்சு எவ்வளவு ரஸமாக இருக்கிறது பாருங்கள்:

‘ ‘சரித்திர நாவல்கள் ‘ என்று பெயர் பண்ணப்படுகிறவை உண்மையில் சரித்திரமும் இல்லை; அவை இலக்கியத்தரமான நாவல்களும் இல்லை. சரித்திரங்களில் இடம்பெற்றுள்ள மன்னர்களின் பெயர்கள், இடங்கள் போன்ற வரலாற்றுப் பெருமை பெற்ற விஷயங்களை வைத்துக் கொண்டு காதல், உளவு, சூழ்ச்சிகள், தந்திர மந்திரங்கள், மர்மங்கள், பாதாளச் சிறை – குகை வழிகள் முதலிய மசாலாக்களைச் சேர்த்து, அதீதக் கற்பனையில் புரட்டி எடுத்துப் பரிமாறப்படுகிற பம்மாத்து வேலைகளே அவை. சரித்திர நாவல்கள் என்று எழுதப்படுகிறவற்றில் பெரும்பாலானவை துப்பறியும் மர்மக் கதைகளாகவே பின்னப்பட்டிருக்கின்றன. மாமன்னன் அப்பாவி போல் இருப்பான். அவனுக்கு எதிரான சூழ்ச்சிகள் திட்டங்கள் முதலியன வெற்றிகரமாக நடத்தப்படும். முடிவில் மாமன்னன் மிகத் திறமையாளனாக – ஆரம்பம் முதலே அனைத்தையும் அறிந்து வந்திருப்பவனாக, சூழ்ச்சிகள் பலவற்றையும் ஆற்றலோடு முறியடிக்கும் சக்திமானாக ஓங்கி நிற்பான். இதுதான் சரித்திரக் கதை ‘ஃபார்முலா ‘வாகப் பல ஆசிரியர்களாலும் கையாளப்படுகிறது.

ஒரு சிலர், தாங்கள் உண்மையான வரலாற்றை ஆராய்ந்து, நடந்தனவற்றையே சித்தரித்திருப்பது போல இடங்களுக்கான வரைபடங்கள் தீட்டுவார்கள்; அடிக்குறிப்புகள் எழுதி வைப்பார்கள்; சம்பந்தப்பட்ட இடங்களுக்கெல்லாம் நேரேபோய் ஆதாரங்களைத் தேடியதாக எழுதுவார்கள். ஆனாலும் அவர்களும் வழக்கமான பாணியிலேயே கதை பண்ணியிருப்பார்கள்.

சாண்டில்யன் தனக்கெனத் தனி உத்திகளைக் கையாள்வது வழக்கம். அவர் எழுதும் சரித்திர நாவல்களில் சிருங்கார ரசம் பெருகி ஓடும். பெண் அங்க வர்ணனைகள் அதிகமாக இடம் பெறும். தமிழ் சினிமாவில் கட்டாய அம்சங்களாகி விட்டவை போல, அவருடைய நாவல்களிலும் படுக்கை அறைக்காட்சி, அழகி குளத்தில் குளிக்கும் காட்சிகள், அவள் மழையில் நனைகிற காட்சி கண்டிப்பாக இடம் பெறும். அச்சமயங்களில் அலங்காரவல்லியின் மெல்லிய ஆடை அவள் உடம்பில் எப்படிப் படர்ந்து என்னென்ன அழகுகளை எடுத்துக் காட்டின என்று சுவையான வர்ணனைகள் உண்டு. இவற்றை எல்லாம் கதாநாயகம் மறைந்து நின்று பார்த்து ரசிப்பதுதான் முக்கிய அம்சமாகும்.

படுக்கையில் இளவரசி கிடந்த திருக்கோலம் பற்றியும், அவள் புரண்டு திரும்பிப் படுத்த அழகு, அப்போது அவளது ஆடை, எங்கெங்கு விலகின, திரையின் பின் பதுங்கி நின்ற கதாநாயகன் காணக் கிடைத்த அற்புதங்கள் பற்றியும் ஓர் அத்தியாயம் எழுதியிருப்பார் சாண்டில்யன்.

இன்னொரு நாவலில் படுக்கையறைக்குப் பதிலாக பூங்காவனத்துப் பூஞ்சுனை வரும். அதன் அழகான – அகலமான – சிறுசுவர் மீது அழகி படுத்திருப்பாள் ஒயிலாக. அவளது நிழல் நீரில் படிந்து கிடந்த கவர்ச்சித் தோற்றத்தை விரிவாக வர்ணித்திருப்பார் ஆசிரியர்.

இவ்விதம் வாசகர்களைக் கிறங்க வைக்கும் உத்திகள் சரித்திர நாவல்களில் அதிகம் ஆளப்படுகின்றன. அந்தக் காலத்துச் சமூக நிலைமைகள், மக்களின் வாழ்க்கை முறைகள், கலாசாரம் போன்றவை அவற்றில் பதிவு செய்யப்படுவதேயில்லை.

இத்தன்மையில் நான் என் எண்ணங்களைச் சொன்னேன். கேட்டிருந்தவர்கள் வெகுவாக ரசித்தார்கள். எழுத்தாளர் சாண்டில்யன் அப்போது அங்கே இல்லை. முதல்நாள் கூட்டத்தில் பேசிவிட்டு அன்று இரவே அவர் சென்னைக்குத் திரும்பி விட்டார்.

இருந்திருந்தால், கோபம் கொண்டு எழுந்து ஆத்திரத்தோடு பதில் கூறியிருப்பார் அவர். அவரது வழக்கமான விளக்கம்தான். ‘இப்படி எல்லாம் எழுதுவது காவிய தர்மம் ஆகும். காளிதாசன் பெண் வர்ணனைகள் எழுதவில்லையா ? பவபூதி எழுதவில்லையா ? நான் எழுதினால் மட்டும் அது குற்றமா ? நாவலும் காவிய வகையைச் சேர்ந்ததுதான் ‘ என்று கூறியிருப்பார் ‘

தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க இயலாத அங்கமாகிப் போன சர்ச்சைகள் சிலவற்றைப் பற்றியும் இந்நூல் கோடிகாட்டுகிறது. ஆரம்பத்தில் பரஸ்பரம் பாராட்டியும் கொஞ்சியும் எழுதி கொண்டிருந்த தருமு சிவராமுவும், வெங்கட் சாமிநாதனும் காலப்போக்கில் ஒருவரை ஒருவர் தாக்கியும் பழித்தும் எழுதி, 1970களில் தமிழ்ச் சிற்றிதழ்களின் பக்கங்களையும் தரத்தையும் கெடுத்த கதையையும் இந்நூல் மூலம் அறிய முடிகிறது.

‘வல்லிக்கண்ணன் விமர்சகர் அல்ல. அனைத்தையும் அனைவரையும் பாராட்டுகிறார் ‘ என்று அவரைப் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு வல்லிக்கண்ணனே பதிலளிக்கிறார்:

‘பாராட்டுகிற மனம் வேண்டும்; பாராட்டப்பட வேண்டியவற்றைப் பாராட்டத் தவறியதாலேயே அநேக நல்ல விஷயங்கள் வளர்ச்சி அடையாமலே போயின என்று மகாகவி பாரதி குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் காலத்தில் பாரதியாரோடு பழகி, அவரைப் பின்பற்றிய வ.ரா.வும் (வ.ராமஸ்வாமி) பாராட்டுவதில் கஞ்சத்தனம் காட்டவில்லை. அவர் எல்லோரையும் தாராளமாகப் பாராட்டுகிறார் என்று மற்றவர்கள் குறை கூறினார்கள். அதற்கு அவர் பதில் சொன்னார்: ‘ஆமாம். நான் பாராட்டவே செய்கிறேன். எழுந்து, நின்று, நடக்க விரும்புகிறவர்களுக்கு, ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் நாம் பாராட்டுவது. ஒருவர் செய்வதைப் பாராட்ட மனமில்லாமல், இது சரியில்லை; நீ செய்வது நன்றாகவேயில்லை; உன்னால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாது என்று குறைகூறிக் கொண்டிருந்தால் அவன் வளர மாட்டான். மாறாக, அவனை மனம் திறந்து பாராட்டினால் அவன் உற்சாகம் பெற்று, ஊக்கத்தோடு உழைத்து முன்னேறுவான். நான் எவ்வளவுதான் பாராட்டினாலும், உண்மையான திறமையும் உழைப்புக் இருக்கிறவர்தான் வளர்ச்சி பெற முடியும். அதற்காக எடுத்த எடுப்பிலேயே, நீ உருப்பட மாட்டே, உன்னாலே இதைச் செய்ய முடியது என்று மட்டம் தட்டினால் உருப்படக் கூடியவன்கூட வளர்ந்து முன்னேற மாட்டான் ‘ என்று.

பாரதியும் வ.ரா.வும் காட்டிய வழியிலேதான் நானும் நடக்கிறேன் என்று நான் சொல்லி வருகிறேன். ‘

புத்தகத்தின் இறுதியில் இதுவரை வெளியான வல்லிக்கண்ணனின் நூல்கள் பற்றிய விவரங்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது அவரைப் படிக்க விரும்புகிற வாசகருக்கு உதவியாக இருக்கும்.

மொத்தத்தில் – வல்லிக்கண்ணனின் இலக்கியப் பார்வையுடன் உடன்படுபவர்கள், மறுப்பவர்கள் என்று எவரும் மறுக்க இயலாத முத்திரைகளைத் தமிழ் இலக்கியத்தில் பதித்தவர் அவர். ஓர் எழுத்தாளர் எவ்வளவு புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதற்கு அவர் வாசிப்பு அனுபவம் நல்ல உதாரணம். தமிழில் எழுதுகோல் எடுக்கத் துணிகிற, எடுத்த அனைவரும் பயில வேண்டிய எளிமையான ஆனால் மாபெரும் புத்தகம் வல்லிக்கண்ணன்.

புத்தக விவரம்:

வாழ்க்கைச்சுவடுகள் – வல்லிக்கண்ணன்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்குத்தெரு, மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி: 24943074


pksivakumar@att.net

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்