வாசகர்கள் ,படைப்பாளிகள் கவனத்துக்கு

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

திண்ணைக்குழு


திண்ணையில் வரும் சில கடிதங்களும் கட்டுரைகளும் சில பிழையாக பிறரை மனம் புண்படுத்தத்தக்க திட்டும் வார்த்தைகள் கொண்டவையாக வெளியாகி விட்டன. மனம் புண்பட்ட அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறோம்.

திண்ணையில் வரும் படைப்புக்களுக்கும் கடிதங்களுக்கும் அந்தந்த கடிதங்களையும் கட்டுரைகளையும் எழுதியவர்களே பொறுப்பு என்றிருந்தாலும், வேறு வழியில்லாமல் திண்ணைக்குழு நேரம் செலவழித்து சில வரிகளையும் வார்த்தைகளையும் நீக்க முனைந்திருக்கிறது. இந்த வேலை நிச்சயம் எங்களுக்கு உவப்பானதல்ல.

அவ்வாறு கட்டுரைகளிலிருந்தும் கடிதங்களிலிருந்தும் எழுதியவர்களின் வார்த்தைகளை நீக்குவதை திண்ணைக்குழு விரும்பவில்லை என்பதனாலேயே இதனை எழுத வேண்டி உள்ளது.

கருத்து வேறுபாடு என்பது வேறு. என்னிடம் கருத்து வேறுபாடு கொண்டவன் எல்லோருமே அயோக்கியன், முட்டாள் இன்னபிற வசைகளை வழங்குவது என்பது வேறு. இந்த வார்த்தைகள் எழுதலாம், இவை எழுதக் கூடாது என்று சட்டங்கள் ஏதும் இதில் இயற்ற முடியாது. இங்கு எழுத முன்வருபவர்கள் மற்றவர்களை அவர்களின் கருத்துகளுக்காக மட்டுமே பொருட்படுத்துகிறார்கள் என்ற பரஸ்பர நம்பிக்கை இருந்தால் தான் பரஸ்பர மரியாதையும் வரும். அந்த மரியாதை தான் கருத்தளவில் மட்டும் எதிர்வினை அளிக்க வழிவகுக்கும்.

நாம் நாகரிகமான முறையில் தங்கள் தங்கள் கருத்துக்களை கூறி, எங்கே வேறுபடுகிறோம் என்பதனைச் சுட்ட முடியும். அவ்வாறு பண்பட்ட முறையில் திண்ணையில் எழுதும் ஏராளமான எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். அப்படிப்பட்ட பண்பட்ட எழுத்தாளர்களில் சிலர் கூட சில வேளைகளில் தவறி, கருத்து வேறுபாடு கொண்டவர்களை திட்ட ஆபத்தான வார்த்தைகளை பிரயோகம் செய்திருக்கிறார்கள். எங்களால் முடிந்த வரை அவற்றை நீக்கி, அவரது கருத்து மட்டும் வெளிவர வேண்டும் என முயன்றிருக்கிறோம். அவ்வாறு எதிர்க்கருத்து கொண்டவர்களை அயோக்கியர்கள் என விளிக்கும் கட்டுரைகளில் கூட சில பேசவேண்டிய கருத்துக்கள் இருப்பதனைக் கண்டு அமங்கல வார்த்தைகளை நீக்கி திண்ணையில் பிரசுரிக்கவே முயன்றிருக்கிறோம். அது பல வேளைகளில் முழுக்கச் செய்யமுடியவில்லை என்பதற்கு எங்களது நேரமின்மையே காரணம். ஆனால், அவ்வாறு எங்களது நேரமின்மை காரணமாக வெளிவந்துவிட்டவற்றைச் சுட்டிக்காட்டி, இவற்றை அனுமதித்திருக்கிறீர்களே ஏன் என்னுடைய வசையையும் அனுமதிக்கக் கூடாது . நீங்கள் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றும் கடிதங்கள் வருகின்றன. இது சரியான வாதமல்ல. நீங்கள் முன்மாதிரியாக இருக்க முயலுங்கள்.

திண்ணைக்குழுவில் இருப்பவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் பல விஷயங்களில் தனிப்பட்ட கருத்து இருக்கிறது. ஆயினும், எதிர்க்கருத்து கொண்டவர்களை அயோக்கியர்கள் எனக் கருதி அவர்களுக்கு திண்ணை இடத்தை மறுதலித்ததில்லை. அதே போல நீங்களும், எதிர்க்கருத்து கொண்டவர்களை மதியுங்கள். ஒரு சக மனிதனுக்குக் கொடுக்கும் மரியாதையை (அவர் கொடுக்கவில்லை என்று நீங்கள் நினைத்தாலும்) கொடுக்க முனையுங்கள்.

என்னால் இப்படித்தான் எழுத முடியும். இல்லையேல் திண்ணை கருத்து சுதந்திரத்தை மறுக்கிறது என்று எழுதுவேன் என்று விமர்சித்து எங்களுக்கு நிறையக் கடிதங்கள் வந்துள்ளன. அவ்வாறே பலர் எழுதியும் இருக்கிறார்கள். திண்ணைக்கு வெளியேயும் எழுதுகிறார்கள். அது அவரவர் விருப்பம். அந்த இணையதளங்களுக்கு திண்ணை மறுப்புக்கடிதமோ விளக்கக்கடிதமோ கூட அனுப்பியதில்லை. ஏனெனில் திண்ணைக்குழு எதனையும் எவருக்கும் நிரூபித்துக்காட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் இல்லை. கோடிப்பத்திரிக்கைகள் வருகின்றன. அவற்றில் இது ஒன்று. நாளை இன்னொன்று.

**

உங்கள் படைப்புக்களை அமெரிக்க நேரம் புதன்கிழமை மாலை 4 மணிக்குள் (இந்திய நேரம் புதன் நள்ளிரவு)திண்ணைக்கு அனுப்புங்கள்.

அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை இரவு (இந்திய நேரம் வெள்ளிக்கிழமை காலை)திண்ணையில் இவை இடம்பெற முயலுவோம்.

**

திண்ணை முழுக்க முழுக்க எலக்ட்ரான்களால் ஆனது. இந்த எலக்ட்ரான்கள் முழுக்க முழுக்க மறு உபயோகம் செய்யத்தக்கவை. இணையம் காலியானால் கூடவே திண்ணையும் காலியாகும். திண்ணையில் இருக்கும் எலக்ட்ரான்கள் உருவாக்கும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் படங்கள் மூலம் உங்கள் மூளையில் அன்பையோ, கோபத்தையோ, சிரிப்பையோ, சோகத்தையோ உருவாக்கினால் அவற்றுக்கு திண்ணை பொறுப்பல்ல, கூடவே திண்ணையில் இருக்கும் எந்த எலக்ட்ரான்களும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

***

editor@thinnai.com

***

Series Navigation

திண்ணைக்குழு

திண்ணைக்குழு