வழிவிடட்டும் அரசியல் வாரிசுகள்

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

புதியமாதவி, மும்பை


அரியணைக்காக அண்ணன் தம்பிகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட கதைகள் முடியரசின் வரலாற்று கதைகள் என்று எண்ணி இருந்தவர்களைப் புரட்டிப் போட்டிருக்கிறது அண்மையின் நடந்த சில நிகழ்ச்சிகள். கருத்துக்கணிப்புகளின் நம்பகத்தன்மை எப்போதும் மில்லியன் டாலர் கேள்விக்குரியதுதான்! சில கேள்விகள் சன் தொலைகாட்சியின் செய்திகளுக்கு நடுவில்
தினகரன் விளம்பரமாக வெளிவரும்போதெ எல்லோருக்கும் தெரியும் பதில் என்னவாக இருக்கும் என்பது.
குறிப்பாக தமிழகத்தின் மத்திய அமைச்சர்களில் மிகச்சிறப்பாக செயல்படுபவர் யார்? என்ற கேள்விக்கு தினகரன் வழங்கும் கருத்து கணிப்பு முடிவு என்னவாக இருக்க முடியும் என்பதற்கு யாரும் தினகரன் வாங்கிப் படிக்க வேண்டியதில்லை!
சில கேள்விகளுக்குப் பின்னால் டாக்டர் ராமதாசு அவர்கள் சொல்வது போல கீழ்த்தரமான அரசியல் தான் இருக்கிறது. உண்மையிலேயே மத்திய அமைச்சர் தயாநிதிமாறனின் செயல்பாடு போற்றுதலுக்குரியதாகவும் அவர் மிகச்சிறப்பாக
செயல்படுபவராக இருந்தாலும் அதையே சன் குழுமம் நடத்தும் தினகரன் வெளியிடும்போது அதற்கான நம்பகத்தன்மை
கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது!

சன் குழுமம், தினகரன், கலைஞர், கலைஞர் நடத்தும் அரசியல்.. இவை எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத இடியாப்பச் சிக்கல்கள். என்னதான் காரணம் சொன்னாலும் அவை எல்லாம் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும்.

சட்டசபையில் கலைஞர் 50 பொன்விழா கொண்டாட இருக்கும் நேரத்தில் கலைஞரின் வாரிசுகளுக்கு நடுவில் நடக்கும் இச்செயல்
கரும்புள்ளியாய்….. ஒரு மூத்த அரசியல் தலைவர் என்பதற்கு அப்பால் ஒரு தந்தையின் இடத்திலிருந்து இந்தச் செயல்களைக்
காணும்போது அந்த தந்தையின் உள்ளம் எப்படி துடித்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கும் போது மனம் பதைக்கிறது, அழுகிறது,
ஆறுதல் சொல்ல துடிக்கிறது.

இந்த நிகழ்வுகளைக் காணும் போது தமிழகத்தின் எதிர்காலம் இவர்களின் கைகளில் கொடுக்கப்பட்டால் என்னவாகும் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. காந்தியின் வாழ்க்கையில் அவருடைய மூத்தமகன் ஹரிலால்காந்தி பலமுறை
பொது இடத்தில் பலர் முன்னிலையில் காந்தியை அவமானப்படுத்தி இருக்கிறார்.பாபாசாகிப் அம்பேத்கரின் வாழ்க்கையிலும்
இம்மாதிரியான நிகழ்வு நடந்திருக்கிறது. ஆனால் அவை எல்லாம் அரசியல் அரியணைக்கான, அரசியல் வாரிசு
போட்டிகள் இல்லை. உறவுகளின் விரிசல்களில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள்.

இங்கே போட்டியும் போராட்டமும் ஆட்சி, அதிகாரம், ஆள்பலம் தேடி நடக்கும் வேட்டை. காயப்படுபவர் யார் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடக்கும் வெறித்தனமான தெருச்சண்டை. அரசியல் வாரிசுகளை காலம் தேர்ந்தெடுக்கும், கருத்து
கணிப்புகள் அல்ல.

கவிதாசரண் (ஜனவரி-ஜூலை 2007) இதழில் கவிதாசரண் அவர்கள் “தமிழ்க்கனவும், தமிழ்ப் புலமும் தமிழ் இனமும் தலைநிமிர வழிவிடட்டும் கலைஞரும் திராவிடப் பேரரசும்” என்று தலையங்கம் எழுதியுள்ளார். நடக்கிற நிகழ்வுகளைக் காணும்போது நமக்கும் எழுதத் தோன்றுகிறது..தமிழ்க்கனவும் தமிழ்ப்புலமும் தமிழ் இனமும் தலைநிமிர வழிவிடட்டும் கலைஞரும் அவர் அரசியல் வாரிசுகளும்.


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை