வந்தே மாதரம் படும் பாடு

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

அருணகிரிஇணைய தளங்களில் ஜனகணமன மற்றும் வந்தே மாதரம் குறித்து பேசப்படும் கருத்துகள் கண்டு உருவான சிந்தனைகள்.

தொல்காப்பிய கடவுள் பகுப்பையும், சங்க இலக்கியங்களையும், கம்ப ராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும், சீவக சிந்தாமணியையும், திருக்குறளையும், திருப்புகழையும், பெரிய புராணத்தையும், ஆழ்வார் பாடல்களையும் “இந்தியக்கடவுள்களை வழிபடுவதுபோல் உள்ளது, இஸ்லாம், கிறித்துவத்திற்கு எதிராக உள்ளது” என்று சொல்லி புறந்தள்ளினால் நமது மண்ணின் இலக்கிய, சமுதாய வரலாறாக மிஞ்சுவது என்ன? இவற்றை இந்து என்ற வகையில் எளிதாக ஒற்றைப்பரிமாணத்தில் வகைப்படுத்துவதும் அதனாலேயே விலக்குவதும் பாரத மக்களின் வரலாற்றுத்தொடர்ச்சியை மறுதலித்து, மத வெறுப்பை விதைத்து பாரதத்தைத் துண்டாடும் முயற்சிக்குத் துணைபோவதாகத்தான் அமையும். வந்தே மாதரம் என்ற சுதந்திர முழக்கமும் இதுபோல்தான். பொது இடங்களில் உச்சரிக்கப்படக்கூட பிரிட்டிஷாரால் அனுமதி மறுக்கப்பட்ட பெருமை பெற்ற வீர வாக்கியம் அது. இந்தியாவெங்கிலும் அடிமைத்தளையை எதிர்த்த அனைத்து சுதந்திரப்போராளிகளையும் இணைத்துக்கட்டிய வார்த்தைக்கயிறு அது. முழங்குந்தோறும் தேசிய உணர்வை முடுக்கி விட்ட அப்போர் வரிகளின் ஆணிவேர் பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் பாடலில் உள்ளது. அதனாலேயே சுபாஷ் சந்திர போஸ் தனது இந்திய தேசியப் படையின் எழுச்சி கீதமாக அப்பாடலைக் கொண்டார்; சிங்கப்பூரிலிருந்து வானொலி மூலம் தொடர்ந்து ஒலிபரப்பவும் செய்தார். 1915-லிருந்து இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திரக் கூட்டம் ஒவ்வொன்றும் வந்தே மாதரம் பாடலைப் பாடியே துவங்கியது. “இந்துக்கடவுளை வழிபடுவதுபோல் உள்ளது” என எளிய ஒற்றைப்பரிமாணத் தட்டைச் சிந்தனை மூலம் இதனை யாரும் தள்ளி ஒதுக்கி விட முடியாது.
இதனை வேறுவிதமாகவும் பார்க்கலாம்.

இதே போன்ற வாதம் கொண்டு தாகூரின் ஜனகணமன கூட ஜார்ஜ் மன்னரைப்புகழ்ந்து பாடியதுதான் என்று சுலபமாகச் சொல்லி விடலாம்தான். 1911-டிசம்பர் 27-இல் இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா கூட்டத்தில் முதன்முதலில் பாடப்பட்ட ஜனகணமன குறித்து அன்று வெளிவந்த செய்திகள்:

“The Bengali poet Babu Rabindranath Tagore sang a song composed by him specially to welcome the Emperor.” (Statesman, Dec. 28, 1911)
“The proceedings began with the singing by Babu Rabindranath Tagore of a song specially composed by him in honour of the Emperor.” (Englishman, Dec. 28, 1911)
“When the proceedings of the Indian National Congress began on Wednesday 27th December 1911, a Bengali song in welcome of the Emperor was sung. A resolution welcoming the Emperor and Empress was also adopted unanimously.” (Indian, Dec. 29, 1911)”

இந்த செய்திகளை தாகூர் அப்போது மறுக்கவில்லை. இவற்றின் அடிப்படையில் பல சர்ச்சைகள் உண்டான போதும் 25 ஆண்டுகள் மவுனம் காத்தார். பிறகு 1937-ல் புலின் பிஹாரி சென்னுக்கு எழுதிய கடிதத்தில், அப்பாடல் இந்தியாவை காலங்காலமாய் வழிநடத்தும் இறையைக்குறித்தது எனவும் ஜார்ஜ் மன்னரைக்குறித்தது அல்ல எனவும் விளக்கினாலும், 25 ஆண்டுகால அரசியல் நிலவர மாற்றங்கள், (ஜாலியன் வாலாபாக் படுகொலை, அதுதொடர்ந்த தாகூரின் காலனிய எதிர்ப்பு நிலை உட்பட) எந்த அளவுக்கு இந்த விளக்கத்துக்கு காரணமாய் அமைந்தன என்ற கேள்வியும் எழுகிறது. இந்தப்பின்னணியில் “ஜன கண மன”வையும் நாம் பின்வரும் கேள்விகளுக்கு உள்ளாக்கலாம்தான்.

1. அடிமையாய் இந்தியரை வைத்திருந்த ஒரு மன்னனைப் புகழும் வண்ணம் எழுதப்பட்டதாகச் சர்ச்சை உள்ள பாடல் எப்படி தேசிய கீதமாக்கப்படலாம்?
2. தாகூரின் விளக்கத்தை ஒப்புக்கொண்டாலும், அது இறைமறுப்பாளர்களை இந்தியத்திலிருந்து விலக்குவது போல் இல்லையா?

“வந்தே மாதரம்” எப்படி இந்துமதப்பாடல் என்று மட்டையடி அடிக்கப்படுகிறதோ அதற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல “ஜன கண மன”வை எளிதாக ஜார்ஜ் துதிப்பாடல் என இன்று வகைப்படுத்தி வரும் வாதமும் (அல்லது இறைமறுப்பாளர்களை அங்கீகரிக்கவில்லை என்ற வாதமும் கூட). வந்தே மாதரம், அதன் இந்து மதத்தன்மை தாண்டிய தேசிய அடையாளத்தின் மூலமும், விடுதலைவேள்வியின் வீர மந்திரமாய் ஆன வரலாற்றின் மூலமும் மட்டுமே அழியாப்புனிதம் அடைகிறது. அதுபோலவே தாகூரின் பாடலும் அதன் ஆன்மீக அடிநாதத்தில் காலம் காலமாய்த் தொடர்ந்து வரும் இந்தியம் என்ற இறையாண்மைக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. இரண்டுமே இந்திய தேசியத்திற்குப் பெருமை சேர்க்கும் பாடல்கள்தாம். காந்தியடிகளின் ஆதரவு வந்தே மாதரத்திற்கு இருந்தாலும், நேருவின் வலுவான ஆதரவே இறுதியில் ஜனகணமனவைத் தேசிய கீதமாக்கியது. ஆனாலும், நம் அரசியலமைப்பில் ஜனகணமனவிற்கு இணையான மரியாதை வந்தே மாதரத்திற்கும் தரப்பட்டுள்ளது*. எனவே இரண்டிற்குமே உரிய மரியாதை தருவது எல்லா இந்தியருக்கும் முதற்கடமை.
மதப்பிரிவினர் என்று எடுத்துக்கொண்டால், வந்தே மாதரத்திற்கு இத்தகைய எதிர்ப்பினை முஸ்லீம்கள் அல்லாது கிறித்துவர்கள், சீக்கியர்கள் (போன்ற ஓரிறைக் கொள்கையாளர்கள்), ஜைனர்கள் (agnostics) போன்ற பிற மதப்பிரிவினர் எழுப்புவதில்லை. கிறித்துவக் கல்விக்கூடங்களிலோ, ஜைனக் கல்லூரிகளிலோ வந்தே மாதரம் பாட யாரும் தடை விதிப்பதில்லை. முஸ்லீம்களிலேயே கூட அனைவரும் இதற்கு எதிராகப் பேசுவதில்லை- இளைய மனங்களுக்கு வந்தே மாதரத்தைக் கொண்டு சேர்த்த இசைப்பணியில் ஏ.ஆர். ரஹ்மானின் பங்கை இங்கு நினைவில் கொள்வோம். வந்தே மாதரத்தின் (“ஜன கண மன”விலும் கூட) முதல் இரண்டு பத்திகள் மட்டுமே இந்திய அரசின் அதிகாரபூர்வ அங்கீகாரம் பெறுகின்றன. இப்பத்திகளில் எந்த மதச்சாயலும் கிடையாது. எனவே இதனை எதிர்ப்பவர்கள் இந்திய தேசியத்தையும் ஒருமைப்பாட்டையும் வலிந்து எதிர்ப்பவர்கள் என்றே கருதவேண்டும்.

வந்தே மாதரம் பாடுவதல்ல, சில தீவிரவாத முல்லாக்களின் வந்தே மாதர வெறுப்பு சாயத்தை பெரும்பான்மை இஸ்லாமியர் கருத்தாக மொத்தமாய்ப்பூசுவதும், இன்னும் ஒருபடி மேலே போய் முஸ்லீம் அல்லாத பிற மதப்பற்றாளர் மீதும் கூட்டக்கணக்கு காட்டும் பொருட்டு வலிந்தே அந்த வெறுப்பு சாயத்தைக் கொட்டுவதும்தான் உண்மையிலேயே கடைந்தெடுத்த மதவாதம். சிறுபான்மையினரிடையே உள்ள சிலரின் மதவெறிப்போக்கை தடவிக்கொடுத்து வளர்த்து விடுவதுதான் சிறுபான்மை பெரும்பான்மை என்ற இருபுறமும் தீவிரவாதம் வளர்ந்து மத நல்லிணக்கம் கெட்டுப்போவதன் மூலகாரணம்.
வந்தே மாதரப்பாடலினை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்ல விழைவதெல்லாம் இதுதான். இன்று வந்தே மாதரத்தை எளிதாக வசை பாடி எதிர்ப்பது என்பது, தனிமைச்சிறையில் கொடுமைப்பட்டும், கல்லுடைத்தும், மாடுபோல செக்கிழுத்தும், மண்டை உடைந்தும், உடல் அழுகியும், பீரங்கிவாயில் கட்டி சுடப்பட்டு சிதறியும், தம் ரத்தக்காணிக்கை மூலம் இந்த நாட்டை நமக்கென ஆக்கித்தந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் கொடுமையான அவமானம். சுதந்திரமாக இப்படிப்பட்ட ஏளனக் கருத்துகளை இறைக்கும் முன்னர், அந்நிலையை நமக்குத்தந்த சுதந்திரத்திற்கு நாம் உகந்தவர்கள்தானா என மனக்கல்லில் கொஞ்சம் உரசிப்பார்த்து விடுவது நல்லது.
வந்தே மாதரம்!

* “…”the song Vande Mataram, which has played a historic part in the struggle for Indian freedom, shall be honored equally with Janaganamana and shall have equal status with it. (Applause) I hope this will satify members.” (Constituent Assembly of India, Vil.XII, 24-1-1950)”- President Dr. Rajendra Prasad

arunagiri_123@yahoo.com

Series Navigation

அருணகிரி

அருணகிரி