வந்தே மாதரம் எனும் போதினிலே !

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

சி. ஜெயபாரதன், கனடா


எந்தையும் தாயும் பூரித்து உலாவி,

முந்தையராய் ஆயிரம் ஆண்டுகள் நிலவி

சிந்தையில் கோடி எண்ணம் விதைத்த,

தாயக பாரதத்தை

வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று

வாயுற வாழ்த்தும் போதினிலே

எந்த மதவாடை அடிக்குது?

என்னுடன் பிறந்த பாரத

பந்துக்களே!

வந்தே மாதர மென்னும் கீதம்

சொந்த வழிபாடா

மதவாதி களுக்கு?

முந்தையப் போராட்டத்தில?்

மராட்டிய சிங்கங்கள்

முதல் விடுதலை முழக்கமாய்ப் பாடிப்

பிரிட்டன் வயிற்றைக் கலக்கிய

வந்தே மாதர கீதம்

வடிவ வழிபாடா?

வரலாறு நுகராது

சிறகொடிந்த ஈசல்கள்,

பிறந்த நாட்டை துறக்கின்றன!

அசோகனின் ஆழித் திலகம் ஒளிரும்

மூவர்ணக் கொடிக்கு

முடிவணங்கி மதிப்ப ளிப்பது

வடிவ வழிபாடா?

பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்

கற்றவர்க்கு

நற்றவத் தெய்வம்!

மற்றவர்க்கு

வெற்றுத் தோற்றம்!

எம்மதமும் சம்மதம் என்று

பாரதம் வரவேற்றது,

நிம்மதியாய் வாழ!

பெற்ற தாயும் தெய்வந்தான்!

பிறந்த நாடும் தெய்வந்தான்!

நட்ட கல்லும் தெய்வந்தான்!

வெட்ட வெளியும் தெய்வந்தான்!

சக்தி, சிவனும் தெய்வந்தான்!

ஆசிய புத்தன் தெய்வந்தான்!

ஏசு மகானும் தெய்வந்தான்!

நபி நாயகம் தெய்வந்தான்!

குரு நானக் தெய்வந்தான்!

கீதையும், குறளும் தேவ நூல்தான்!

பைபிள், குரானும் தேவ நூல்தான்!

தெய்வ முள்ள தெனின் எல்லாம்

தெய்வந்தான்!

தெய்வ மில்லை எனின் எதுவும்

தெய்வ மில்லைதான்!

உலகக் கரங்கள் ஒன்று கோர்த்த

ஐக்கிய நாட்டுப் பேரவை,

ஒலிம்பிக் மேடையில்,

கொடி வணக்கம் செய்வது

வடிவ வழிபாடா?

பிறந்த நாட்டை வணங்காத பிள்ளைகள்

புறக்கணிப்பர் தம் முத்திரை!

************

Jayabarat@tnt21.com [October 4, 2006]

Series Navigation