லினக்ஸ் இயக்குதளம் பிரபலமானது ஏன் ?

This entry is part [part not set] of 10 in the series 20000924_Issue

வே. வெங்கடரமணன்.


ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது. – 3

லினக்ஸ் இயக்குதளத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் நிறையபேர் கூட அதன் பரபரப்புக்கும் பிரபலத்திற்கும் அது காசின்றி இலவசமாகக் கிடைப்பதுதான் காரணம் என்று சொல்கின்றார்கள். அதன் பிரபலத்திற்கு இலவசமாக இருப்பது பெரிதும் உதவியிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை; ஆனால் அது மட்டும்தான் காரணம் என்பது முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றது. என்னுடைய சிறுவயதில் எங்கள் கிராமத்துத் திரையரங்கில் வாரந்தோறும் மாற்றப்படும் படத்திற்கு மாட்டு வண்டியின் ருபுறமும் தட்டியில் பெரிய படங்கள் ஒட்டி, மட்டமான காகிதத்தில் அச்சிடப்பட்ட நோட்டாஸ்களை அள்ளி வீசியெறிந்துகொண்டு ஒலிப்பெருக்கியில் விளம்பரப்படுத்திச் செல்வார்கள். நான்கு வயதில் அந்த வண்டியின் பின்னர் ஓடியிருக்கின்றேன்; அதன் பின்புறமிருக்கும் கட்டையைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி அதற்காகக் கையேந்தியிருக்கின்றேன். எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது; மிஞ்சிப்போனால் ஒரு ஆறுமாதம் அப்படிச் செய்திருப்பேன் – சீக்கிரத்தில் அதன்மேலிருந்த மோகம் தனிந்துவிட்டது. பிறகு விடலைப் பருவங்களில் அமெரிக்காவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் வரும் இலவச பைபிள் படிப்பில் சேர்ந்திருக்கின்றேன். அவர்கள் தரும் பலவண்ணப் புத்தகங்களையும் பிரசுரங்களையும் ஒரு நான்கு மாதம் ஒழுங்காகப் படித்தேன், இன்னும் இரண்டு மாதங்கள் அவற்றைச் சேகரித்தேன். விரைவிலேயே அவற்றை உறையிலிருந்துகூடப் பிரிக்காமல் குப்பைத்தொட்டியில் போடத் தொடங்கினேன். ஆனால் அதே சமயத்தில் படிக்கத்தொடங்கிய வீரமாமுனிவரின் தேம்பாவனியை இப்பொழுதும் சமயம் கிடைத்தால் படிக்கின்றேன் – அதைக் காசு கொடுத்து வாங்க அலைந்திருக்கின்றேன். பளபளப்பான அட்டைகொண்ட ஆஸ்திரேலியப் பாடங்களைவிட மட்டமான தாளில் அச்சிடப்பட்ட தேம்பாவணியில் உண்மையும் அழகும் பொதிந்துகிடப்பதை மனப்பூர்வமாகத் துய்த்திருக்கின்றேன்.

இந்த அனுபவம் இலவசமாகக் கிடைப்பதெல்லாம் பயனுள்ளவை அல்ல என்பதை நன்றாகக் காட்டும். இலவசமாகக் கிடைப்பதில் ஒரு ஆரம்ப போதை இருக்கும், காசில்லை என்பதால் அதை முயற்சித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றும், இது முற்றிலும் இயற்கையானதே. ஆனால் பல நிறுவனங்களிலும், வங்கிகளிலும் அவர்களின் அதிமுக்கிய பயன்பாடுகளுக்கு லினக்ஸைப் பயன்படுத்துகின்றார்கள்; இன்னும் பலர் அதற்கு மாறிவருகின்றார்கள். அமெரிக்க விண் ஆராய்ச்சி நிறுவனமான நாஸா அதன் விண்கலன் வடிவமைப்பில் லினக்ஸைப் பயன்படுத்துகின்றது. இதற்கெல்லாம் அது இலவசமாகக் கிடைப்பது காரணமாக இருக்கமுடியாது. நன்றாக விஷயமறிந்த அவர்கள் பைசாவில் மிச்சம்பிடித்து ரூபாயில் இழக்க மாட்டார்கள். இதற்கு லினக்ஸின் தரம்தான் முக்கியக் காரணமாக இருக்கமுடியும். இன்னும் பல பேரால், உதிரியாக உலகெங்கிலும் பரவிக்கிடக்கும் சிலர் ஏதோ ஒரு ஆர்வத்தில் எழுதி வெளியிடும் செயலிகளின் ஒரு தொகுப்பு தரத்தில் எப்படி உயர்ந்ததாக ருக்கமுடியும் என்பதை நம்பமுடியவில்லை. தங்கள் பெயருக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்று தரக்கட்டுப்பாட்டில் அதிமுக்கிய கவனம் செலுத்தும் நிறுவனங்களைப் போல இதில் தரக்கட்டுப்பாட்டுக்கு எந்த வழியில் உத்தரவாதம் இருக்கின்றது என்று கேட்கின்றார்கள். முதலில் லினக்ஸ் உருவாகும் விதத்தைத் தெரிந்துகொண்டால் இதில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். இதற்கு வணிக நிறுவனங்களின் மென்கலன் வடிவமைப்பையும் தளையறு கலன்கள் உருவாகும் முறையையும் தெரிந்து கொள்வது அவசியம்.

முதலாவதாக, லினக்ஸ்க்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. து உலகெங்கிலும் உள்ள பல புத்திசாலி நிரலர்களின் கூட்டு முயற்சி. ப்படிப்பார்த்தால் வணிக அளவிலான மைக்ரோஸாப்ட், மாக்-ஓஎஸ், ஆரக்கிள், நெட்வேர் போன்றவற்றுக்கும் து பொருந்தும். எல்லாமே ஆயிரக்கணக்கான நிரலர்களின் கூட்டு முயற்சியால் வருபவைதான். மென்கலங்கள் வடிவமைக்கப்படும் பொழுது அதன் பாகங்கள் பகுக்கப்பட்டு நிறுவனத்தில் வேலைபார்க்கும் பலரிடம் சிறு துண்டுகளாக அளிக்கப்படுகின்றன. பின்னர் அவை ஒன்றாகக் கோர்க்கப்படுகின்றன. கோர்க்கும் பொழுது அவை ஒன்றுடன் ஒன்று பொருந்துவது தரக்கட்டுப்பாட்டால் உறுதி செய்யப்படுகின்றது. உதாரணமாக ஒரு மேசையின் நான்கு கால்களை நால்வர் செய்வார்கள், மேல்பலகை ன்னும் ஒருவரால் ழைக்கப்படும், பிறகு அவர்களிலேயே உயர்ந்த தச்சன் முன்னிலையில் அவை ஒன்றாக ணைக்கப்படும், ஒருவர் அதற்கு வண்ணம் பூசுவார். மேசைப் பிரிவிற்கு மேலாளராக ருப்பவர் அதன் தரத்தை உறுதி செய்தபின் அது கடையில் விற்பனைக்கு வரும். விற்கப்படும்பொழுது அதில் கடையின் பெயர் பொறிக்கப்படும். ஆனால் அதற்குக் கால்கள் செய்த சாதாரணத் தச்சரோ, அவற்றைப் பொருத்திய குழுத்தலைவரோ அதில் தெரியமாட்டார்கள். மேசையின் ஒட்டுமொத்த தரத்திற்குக் கடை உத்தரவாதம்; ஆனால் மேசையின் கீழ்பரப்பில் ருக்கும் ஒரு சிறு துளையை எளிதில் மக்கு ட்டு அடைத்து தன்மேல் வண்ணம் பூச முடியும்; தகுந்த வண்ணம் பூசி மாம்பலகையைத் தேக்கு மரமாக் காட்டமுடியும், விபரம் தெரியாதவர்களிடம் அதிக விலைக்குத் தள்ள முடியும். அதற்கு ஒரு வருட உத்தரவாதம்; அதன் தரக்கட்டுப்பாட்டில் அது ஒரு வருடம் பல்லைக் காட்டாமல் காலந்தள்ளுமா என்பதுதான் உறுதி செய்யப்படும். பொருளின் தரத்தைவிட கடையின் பெயர்தான் முக்கியம்.

ஆனால் தளையறு மென்கலன்கள் வேறு முறையில் உருவாகின்றன. மொத்தத்தில் லினக்ஸை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, ஆனால் அதன் ஒவ்வொரு பகுதியை வடிவமைத்தவர்களின் பெயரும் அதில் எளிதில் வெளியில் தெரியும், அதன் உறுதிக்கு அவரே மனசாட்சிப்படி பொறுப்பு. உதாரணமாக, அச்சுபொறிகளை நிர்வகிக்கும் கோஸ்ட்ஸ்கிரிப்ட் எனும் செயலியைச் ஆரம்ப காலத்திலிருந்து வடிவமைத்து வழி நடத்தி வருபவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரஸல் லாங் என்பவர்; லினக்ஸின் ஆதார தயத்தை வடிவமைப்பவர்களில் அதன் தோற்றுநரான லினஸ் டோர்வால்டும் ஒருவர். லினக்ஸிடம் அடிமைப்பட்டுப் போன பலருக்கு வர்கள் குட்டித் தெய்வங்களைப் போல; தங்களுடைய கஷ்டங்களையும் தேவைகளையும் பலர் நேரடியாக வர்களிடம் முறையிடுகின்றார்கள்; அல்லது தன் கூறுகளை விவாதிக்க என்று உள்ள பயனர்வலையில் தெரிவிக்கின்றார்கள். அதற்கான தீர்வும் யோசனைகளும் விரைவில் உருவாகின்றன. தில் முக்கியமான ஒரு விஷயம்; ந்தச் செயலிகள் சரியில்லை என்றானால் ந்தக் குட்டிக் கடவுள்களின் வழிபாடு உடனே நின்றுவிடும். துபோன்ற நேரடிப் பெயர் ணைப்பு லினக்ஸின் பலகூறுகளின் தரத்தைத் தானாக உறுதிப்படுத்துகின்றது. பலநேரங்களில் ந்தக் குட்டித் தெய்வங்கள் தங்களை நாடிவருபவர்களைக் கைவிடுவதில்லை, சில சமயங்களில் அவை கையை விரித்தால் அல்லது கண்டுகொள்ளாமல் போனால் அந்த டத்தை வேறொரு திறமைமிகுந்த நிரலர் எடுத்துக்கொள்கின்றார். எப்படி ஆதிமூலத்தால் கையொப்பமிடப்பட்ட படத்தின் ஒவ்வொரு பூச்சையும் அவர் மனப்பூர்வமாகச் செய்கின்றாரோ, எப்படி தி.ஜானகிராமன் கதாபாத்திரங்களைச் செதுக்கினாரோ அப்படிப்பட்ட கவனத்துடன் ந்த நிரல்கள் தனிப்பட்டவர்களால் உருவாக்கப்படுகின்றன. தங்கள் தனித்தன்மை பளிச்சிட அவர்கள் தங்கள் உடல், மனம், நேரத்தை அதற்கு அர்ப்பணிக்கின்றார்கள்.

இன்னும் ஒரு முக்கிய காரணம் தளையறு பொருள்களின் மூல ஆணைத்தொடர்களும் இலவசமாக, திறந்த புத்தகமாகக் கிடைப்பது. இதைவிட ஒரு தெளிவான தரக்கட்டுப்பாடு இருக்க முடியாது. இந்தக் கடையில் விற்கும் தோசை மாவை யார் அறைத்தார்கள்; மாவு எப்படி ஊறவைக்கப்பட்டது, அரிசி எங்கிருந்து வந்தது, நிலத்தில் எப்படிப்பட்ட உரம் இடப்படுகின்றது – எல்லாமே அதைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்குக் கிடைக்கும். அதில் ஏதாவது ஒருமுறையில் தவறு என்றால் விஷயம் தெரிந்தவர்கள் உடனே சுட்டிக் காட்டலாம், மாற்றவும் உரிமையுண்டு. மக்களாட்சித் தத்துவங்கள் நல்லமுறையில் வேலைசெய்வதை இவற்றில் எளிதில் காணலாம். நல்லவை தானாக மேலே வரும்; கழிவுகள் அடியில் தேங்கி விரைவில் மறக்கப்படும். பல வணிக நிறுவனங்கள் அவற்றின் விற்பனைக்குத் திறந்துவிடப்படும் நிலையில் உள்ள நிரல்களை இறுதிக்கட்டச் சோதனை (beta testing) எனும் பெயரில் இலவசமாக சில காலங்களுக்கு அளிக்கின்றன – இதில் மைக்ரோஸாப்டும் அடக்கம். அந்தச் செயலிகளில் ஆர்வமுள்ளவர்கள் உடனே அவற்றைப் பெற்றுச், சோதித்து குறைகளையும் நிறைகளையும் நிறுவனத்திற்கு உடனே தெரிவிக்கின்றார்கள் – இது ஒரு நீட்டிக்கப்பட்டத் தரக் கட்டுப்பாடு எனலாம் – நிறுவனத்திற்கு வெளியேயும் தரத்தை உறுதிசெய்யும் முயற்சி. இதில் மேசையின் வடிவமைப்பையும், அதன் தாங்குதிறனையும் பற்றித்தான் தெரியவரும். அதன் அடிப்படை மரத்தைப் பற்றிய நிறைகுறைகளை யாரும் தெரிந்து கொள்ள முடியாது.

ஆனால் தளையறு பொருள்களில் இது இன்னும் உறுதியாக நிச்சயிக்கப்படுகின்றது. மேசையின் ஒரு கால் செய்யப்பட்ட மரம் சரியில்லை என்றால் அது உடனே தெரியவருக்கின்றது – மாற்றப்படுகின்றது. இந்தத் தரக்கட்டுப்பாடு பொருள் கடைக்கு வந்தபின்னும் (இலவசமாக விற்கப்பட!!) தொடர்ந்து நடைபெறுகின்றது. இறுதியில் நுகர்வோருக்கே வெற்றி. தளையறு மென்கலன் உருவாகும் இந்த அடிப்படை முறையிலேயே அதன் தரக்கட்டுப்பாடும் அடங்கியிருக்கின்றது. இது பலருக்குத் தெரியவருவதில்லை.

உதாரணத்திற்கு ஒரு நிகழ்சியைப் பார்ப்போம்; இணையத்திற்கான உலாவிகளில் (web browsers) இரண்டாம் இடத்தை வகிக்கும் நெட்ஸ்கேப் நாவிகேட்டர் (Netscape Navigator) என்பதன் அடிப்படை ஆணைக்குறியீடுகளை அந்நிறுவனம் 1999 மார்ச்சு மாதம் வெளியிட்டது. அது தளையறு மென்கலன் கொள்கைகளைத் தழுவிக்கொள்வதாக அறிவித்தது. இதற்கான காரணம் நெட்ஸ்கேப் உலாவியில் எழுத்துருக்களையும் படங்களையும் காட்டும் முறை சற்றுத்தெளிவில்லாமல் இருந்தது – அந்நிறுவனம் ஆணைக்குறியீடுகளைத் திறந்துகாட்டினால் புத்திசாலி நிரலர்கள் அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுவார்கள் என்று நம்பியது. அதன் இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியளித்தது – ஒரு வணிக நிறுவனம் தன் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அதன் தோல்வியில் முடியும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அடிப்படையில் இலவசச் செயலிகளை வடிவமைத்தவர்களான அந்நிறுவனத்தின் தலைவர்களோ திறந்த புத்தகமாக்குவது அவர்கள் செயலியைத் தரப்படுத்த உதவும் என்று உறுதியாக நம்பினார்கள்.

ஆனால் விளைவு முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. நிரல்தொடர்களைப் பார்த்த கெட்டிக்கார இளைஞர்கள் அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டத் தொடக்கினார்கள். ஒரு கட்டத்தில் அதன் அடிப்படை அமைப்பிலுள்ள குறைகளும் மாற்றமுடியாத பிழைகளும் விவாதிக்கப்பட்டன. தன்னார்வ நிரலர்கள் ஒரு கட்டத்தில் அதைப் பழுதுபார்க்கும் முயற்சியைக் கைவிட்டனர். ஆனால் அவர்களிடையே புதிய சிந்தனைகள் வலுப்பெறத் தொடங்கின. முற்றிலும் புதிய, அடக்கமான, செயல்திறன்மிக்க உலாவி இயந்திரம் உருவானது – அதற்கு அவர்கள் ‘கெக்கோ ‘ (Gecko) என்று செல்லப் பெயரிட்டார்கள். அது நடைமுறையிலிருக்கும் இணைய உலாவிகளைவிடப் பலமடங்கு திறன் வாய்ந்தது. நெட்ஸ்கேப் நிறுவனம் மகிழ்ச்சியுடன் அதைத் தழுவிக்கொண்டது. விரைவில் வெளிவரவிருக்கும் நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டர் 6.0 அதன் இதயத்தில் கெக்கோவை உள்ளடக்கியது.

இந்நிகழ்வு வணிக நிறுவனச் செயல்பாடுகளைப் பற்றிய ஒரு அரிய உண்மையை நமக்கு உணர்த்துகின்றது. கொக்கோ யந்திரம் ஒருக்காலும் நெட்ஸ்கேப் நிறுவனத்தின் உள்ளிருந்து உருவாகியிருக்காது. இதற்குப் பல காரணங்கள் உண்டு; முக்கியமானது, நெட்ஸ்கேப் நிறுவனத்தினர்தான் உலகில் முதல்முறையாக உலாவியொன்றை வடிவமைத்தவர்கள், அந்த காக்கைக்கு அதன் குஞ்சு பொன்குஞ்சு; அதிலுள்ள அடிப்படைக் குறைகள் அவர்கள் கண்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதை ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையிலிருந்து காண்பவர்களுக்குத்தான் அது தெரிந்தது. இது அதிர்ச்சியாக இருக்கலாம்; என்னுடைய படைப்பின் அடிப்படை இயலாமைகளை ஒருவன் வெளிச்சம்போட்டுக் காட்டுவது என்பதைப் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாது, அது அவர்களின் மேதாவித்தனத்திற்கு பேரிடியாக அமையும் – ஆனால் ஒரு பொருளைப் பயன்படுத்துபவர்கள் என்ற வகையில் நமக்கு அதனால் கிடைக்கும் ஒரு பெரிய ஆதாயத்தை பயனர்களாகிய நாம் வரவேற்க வேண்டுமல்லாவா ?

இதுதான் தளையறு மென்பொருள்கள் சிறப்பானவை என்பதன் ஆதார உண்மை. ஆமாம் இதெல்லாம் சரிதான் – எனக்குத் தோசை சுடுவதைப்பற்றித் தெரியாது, அரிசியையும் உளுந்தையும் பற்றியும் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ளும் பொறுமையும் அவசியமும் எனக்கு இல்லை. எனக்கு வேண்டியதெல்லாம் சுவையான தோசை என்று சொல்பவர்கள்தான் நிறைய பேர். இவர்களுக்கும் தெரியவேண்டிய உண்மையிது – தளையறு மென்கலன்கள் பொதுவில் சொல்லப்படுவதைப்போல் பலர் சேர்ந்து சமைக்கும் ஒரு குழப்பமான செரிக்காத உண்வு இல்லை; அந்தச் சமையல் முறையின் அடிப்படையிலேயே பல நல்ல விஷயங்கள் உறுதியாகின்றன – நல்ல அரிசியாக இல்லையென்றால் அரிசியைப் பற்றித்தெரிந்த யாராவது ஒருவர் நல்ல அரிசியைத் தெரிந்தெடுக்க உதவியிருப்பார். அதை வேறொருவர் சரியான பதத்தில் ஊறவைத்து அறைத்திருப்பார் – எனவே அது நல்லமுறையில்தான் இறுதியாக அமையும். எல்லாவற்றையும் விட முக்கியமானது – இந்த சமையலறையில் யார் வேண்டுமானாலும் நுழைந்து பார்க்கலாம் – கழுவாத பாத்திரங்கள் பயன்படுத்தாதையும், வயிறைக் கெடுக்கும் சமையல் சோடா அதிகம் உபயோகப்படுத்தாதையும் தெரிந்து கொள்ளலாம். இவற்றைப் பற்றித் தெரியாதவர்கள், அல்லது ஆர்வமில்லாதவர்கள் கூட இதை விஷயம் தெரிந்த இன்னொருவர் மேற்பார்வை பார்த்திருக்கின்றார், நம் வயிறு கெடாது என்று மனநிம்மதியுடன் சாப்பிடலாம்.

நீகாத்தா, ஜப்பான்

24 செப்டம்பர் 2000

naadodi@hotmail.com

Series Navigation

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com