ர்வாண்டா, ஏன் எப்படி இனப்படுகொலை நடந்தது

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue


ஏப்ரல் 1994இலிருந்து சூன் 1994 வரை இருந்த 100 நாட்களில் சுமார் 8 லட்சம் ர்வாண்டா மக்கள்

இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மை டுட்ஸி ஜாதியைச் சேர்ந்தவர்கள். கொன்றவர்களில் பெரும்பாலானோர் பெரும்பான்மையாக இருக்கும் ஹுடு ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

ர்வாண்டா போன்ற வன்முறை நிறைந்த நாட்டுக்குக் கூட இந்த அளவு படுகொலைகளும், அது நடந்த வேகமும் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ர்வாண்டா ஜனாதிபதியான சுவெனில் ஹாப்யாரிமானா (ஹுடு இனத்தைச் சேர்ந்தவர்) 1994 ஏப்ரலில் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டு இறந்ததிலிருந்து ஆரம்பித்தது.

சில மணிநேரங்களில் தொடங்கப்பட்ட வன்முறை வெறியாட்டம் கிகாலி என்ற தலைநகரத்திலிருந்து ஆரம்பித்து நாடு முழுவதும் பரவியது. அந்த வன்முறை நிற்க 3 மாதங்களாயின.

ஜனாதிபதி கொலையுண்டது மட்டுமே ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இனப்படுகொலைக்குக் காரணமல்ல.

வன்முறையின் வரலாறு

ர்வாண்டாவுக்கு இனத்தகராறு புதியதல்ல. காலனியாதிக்கம் ஆரம்பித்ததிலிருந்து பெரும்பான்மையான ஹுடுக்களுக்கும் சிறுபான்மையான டுட்ஸிகளுக்கும் இடையேயான விரோதம் வளர்ந்து வந்திருக்கிறது.

உண்மையில் இந்த இருவருமே ஒரே மாதிரியானவர்கள். இவர்கள் ஒரே மொழி பேசுகிறார்கள். ஒரே இடங்களில் வசிக்கிறார்கள். ஒரே பழக்க வழக்கங்களை உடையவர்கள். ஒரே பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். காலனியாதிக்கம் வருமுன்னர் அவர்கள் வித்தியாசமின்றி பழகியவர்கள்.

பெல்ஜிய நாட்டினர் 1916இல் இந்த இடத்துக்கு வந்ததும் அவர்கள் இந்த இருவரையும் தனித்தனியான இனங்களாகப் பார்த்தார்கள். அவர்களைப் பிரிப்பதற்கென்று அவர்களுக்குத் தனித்தனி அடையாள அட்டைகளையும் கொடுத்தார்கள்.

சிறுபான்மை டுட்ஸிகளை பெல்ஜியர்கள் உயர்ந்தவர்களாகவும் பெரும்பான்மை ஹுடுக்களுக்கு மேம்பட்டவர்களாகவும் நடத்தினார்கள். ஆச்சரியத்துக்குத் தேவையில்லாமல், டுட்ஸிகள் இதை வரவேற்றார்கள். அடுத்த 20 வருடங்களுக்கு டுட்ஸிகள் மேலான அரசாங்க வேலைகளும், படிப்பு வசதிகளும் பெற்றார்கள்.

ஹுடுக்களுக்குள் டுட்ஸிகளைப் பற்றிய வெறுப்பு இதனால் வளர்ந்தது. இது இறுதியில் தொடர்ச்சியான கலவரங்களாக 1959ல் வெடித்தது. 20000க்கு மேற்பட்ட சிறுபான்மை டுட்ஸிகள் கொல்லப்பட்டார்கள். பலர் பக்கத்து நாடுகளான புருண்டி, டான்ஸானியா, உகாண்டா தேசங்களுக்கு ஓடினார்கள்.

1962இல் ர்வாண்டாவுக்கு பெல்ஜியம் சுதந்திரம் வழங்கியது. பெரும்பான்மையாக இருந்ததால், ஹுடுக்கள் அதிகாரத்தைப் பெற்றார்கள். பின்னர் வந்த வருடங்களில் நாட்டின் எல்லாப்பிரச்னைகளுக்கும் சிறுபான்மை டுட்ஸிகளே காரணமாகச் சொல்லப்பட்டார்கள்.

இனப்படுகொலைக்கு ஆரம்பம்.

இது இனப்படுகொலைகள் எல்லாம் நடப்பதற்கு வெகு முந்தி. ஜனாதிபதி ஹாப்யாரிமானா, ர்வாண்டாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், கெட்டபெயர் அடைந்தார்.

அதே நேரம், உகாண்டாவில் இருந்த டுட்ஸி அகதிகள் Rwandan Patriotic Front (RPF) என்ற ர்வாண்டா தேசபக்தி முன்னணியை உருவாக்கினார்கள். அதற்கு நடுநிலையாளர்களாக இருந்த பல ஹுடுக்களும் ஆதரவு தெரிவித்தனர். அவர்களது நோக்கம் ஹாப்யாரிமானாவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதும், டுட்ஸி அகதிகள் மீண்டும் ர்வாண்டா தேசத்துக்கு வரும் உரிமையைப் பெறுவதும்தான்.

இதை ஹாப்யாரிமானா பயன்படுத்திக்கொண்டு இதன் மூலம் ஹுடுக்களை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்தார். ர்வாண்டாவுக்குள் இருந்த சிறுபான்மை டுட்ஸிகளை முன்னணியின் ஆதரவாளர்கள் என்று பிரச்சாரம் செய்தார்.

பல போர்களுக்குப் பின்னர், பல பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் சமாதான ஒப்பந்தம் ஆகஸ்ட் 1993இல் எழுதப்பட்டது. ஆனால் சமாதானம் வரவில்லை.

1994 ஏப்ரலில் ஹாப்யாரிமானாவின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும், பொய்ச்சமாதானத்தின் முகமூடி கழன்றது.

யார் ஜனாதிபதியையும் கூட இருந்த புருண்டி தேச ஜனாதிபதியையும் அவரது மந்திரிகளையும் சுட்டு வீழ்த்தியது என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அதன் விளைவு உடனடியாகவும் படு பயங்கரமாகவும் இருந்தது.

இனப்படுகொலை

தலைநகரம் கிகாலியில் ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் படை உடனடியாக பழிவாங்குவதில் இறங்கியது. உடனே எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். நடுநிலையாளர்களாக இருந்த ஹுடுக்களும், சிறுபான்மை டுட்ஸிகளும் கொல்லப்படுவது உடனே ஆரம்பித்தது.

சில மணிநேரங்களுக்குள் நாடெங்கும் ஆட்கள் அனுப்பப்பட்டு எங்கும் இந்த இனப்படுகொலை நடத்த ஆரம்பிக்கப்பட்டது.

முதலில் இதை நடத்தியவர்கள் ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள், வியாபாரிகள். பின்னர் எல்லோரும் இதில் இணைந்தார்கள்.

ஜனாதிபதியின் படையாலும், வானொலியில் நடந்த பிரச்சாரத்தாலும், ஒரு தனியார் போராளிப்படையைத் தொடங்கினார்கள். (இந்தரஹாம்வே என்று இது அழைக்கப்பட்டது). சில சமயங்களில் இந்தப்படையில் 30000 பேர் இருந்தார்கள்.

அரசாங்கப் போர்வீரர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்றவர்கள் சாதாரண மக்களை படுகொலையில் சேர ஊக்கப்படுத்தினார்கள். சில நேரங்களில் பக்கத்து வீட்டு டுட்ஸியை கொல்ல ஹுடு மக்களை வற்புறுத்தினார்கள்.

பங்கு பெற்றவர்களுக்கு பணமும், சாப்பாடும் வழங்கப்பட்டன. டுட்ஸிகள் இறந்துவிட்டால் அவர்களது சொத்துக்களை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தப்படுகொலைகள் நடந்து கொண்டிருக்கும்போது, அதைத் தடுக்காமல், ஐக்கியநாடுகள் படை அதன் 10 போர்வீரர்கள் கொல்லப்பட்டதை காரணம் காண்பித்து தன் படைகளை ர்வாண்டாவிலிருந்து விலக்கிக் கொண்டது. இது ர்வாண்டா கொலையாளிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.

ஹாப்யாரிமானா இறந்ததன் பின்னர், முன்னணி தன் போரை தீவிரமாக நடத்தியது. பல ஐக்கியநாடுகள் அமைப்பு முயன்ற போர்நிறுத்த முயற்சிகள் தோல்விஅடைந்தன.

பின்னர்

இறுதியாக முன்னணி கிகாலியைக் கைப்பற்றியது. அரசாங்கம் வீழ்ந்தது. முன்னணி போர்நிறுத்தம் அறிவித்தது.

முன்னணி வெற்றி பெற்றதும் சுமார் 20 லட்சம் ஹுடு ஜாதி மக்கள் அருகே இருந்த ஜெய்ர் நாட்டுக்கு அகதிகளாக ஓடினார்கள். இந்த அகதிகளில் பெரும்பாலானோர் இந்த இனப்படுகொலையை நடத்தியவர்கள்

ர்வாண்டா நாட்டுக்கு மீண்டும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தன் போர் வீரர்களையும் அதிகாரிகளையும் அனுப்பி அங்கு சட்டம் ஒழுங்குக்கும், மீண்டும் அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கும் அனுப்பியது.

சூலை 19இல் பல இனமக்கள் இணைந்த ஒரு அரசாங்கம் எல்லா அகதிகளும் திரும்பி ர்வாண்டா வர வைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது.

பாஸ்டியர் பிஜிமுங்கு என்ற பெரும்பான்மை ஹுடு இனத்தலைவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். அமைச்சரவையில் பெரும்பான்மை டுட்ஸிகளைச் சேர்ந்தது.

ர்வாண்டா மக்களின் நீதித்தேடல் நீண்டது கடினமானது. 500 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 10000 மக்கள் சிறையில் இருக்கிறார்கள்.

இந்த இனப்படுகொலையை நடத்திய பலர் பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.

******

கன்யாஸ்திரிகளுக்கு இனப்படுகொலை புரிந்ததால் 12 வருட கடுங்காவல் தண்டனை.

ர்வாண்டாவில் 1994இல் நடந்த இனப்படுகொலைகளில் பங்கு பெற்றதற்காக இரண்டு கன்யாஸ்திரிகள், ஒரு பேராசிரியர் ஒரு தொழிலதிபர் ஆகியோருக்கு தண்டனை வழங்கியிருக்கிறது பெல்ஜிய நீதிமன்றம்.

இந்த எட்டு வார வழக்கு இந்த நான்கு மனிதர்களை மட்டுமே குறித்தாலும், அது இனப்படுகொலையையே மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது.

இன்னும் ஆழமான முறையில், முன்னாள் காலனிய ஆட்சி புரிந்த பெல்ஜிய நாடு எப்படி இந்த இனப்படுகொலைக்கு ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறது என்பதையும் விவாதத்துக்கு கொண்டுவந்திருக்கிறது.

ஒரு கருத்துக்கணிப்பில் சுமார் 42 சதவீத பெல்ஜிய மக்கள், இனப்படுகொலையின் ஆரம்ப நாட்களில் பெல்ஜியப் படைகளை பெல்ஜியம் வாபஸ் வாங்கிக் கொண்டதை தவறு என்று குறித்திருக்கிறார்கள். இந்த பெல்ஜிய அரசின் முடிவு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டம் ஒழுங்கு சீர்படுத்தும் திட்டத்துக்கு பெருத்த அடியாக அமைந்தது.

துரோகம்

பெல்ஜிய காலனியாதிக்கம் பற்றிய குற்ற மனப்பான்மை பெல்ஜிய மக்களுக்கு இருக்கலாம் என்றும் சிலர் பேசுகிறார்கள்.

10 பெல்ஜிய போர் வீரர்கள் ர்வாண்டாவில் கொல்லப்பட்டதை எல்லோரும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதன் காரணமாக பெல்ஜியப்படைகள் ர்வாண்டாவிலிருந்து வாபஸ் பெறப்பட்டதற்கு அப்போது ஆதரவு தெரிவித்தவர்கள், இன்று அந்த முடிவு தவறு எனக்கூறுகிறார்கள். அது ர்வாண்டா மக்களுக்குச் செய்த துரோகம் எனவும் இன்று கூறுகிறார்கள்.

சென்ற வருடம் பெல்ஜிய பிரதம் கை வெர்ஹோஃப்ஸ்டாட் அவர்கள் கிகாலிக்குத் தானே சென்று பகிரங்கமாக ர்வாண்டா மக்களிடம், அவர்களை கைகழுவி விட்டதற்கு மன்னிப்புக் கேட்டார்.

இந்த விசாரணை பெல்ஜிய நாட்டிற்கும், ர்வாண்டா படுகொலைக்கும் உள்ள ஆழமான தொடர்புகளை வெளிப்படுத்தி இருக்கிறது. பெல்ஜியத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச், அங்குள்ள கிரிஸ்தவ சோஷியல் ஜனநாயகக் கட்சி, பெல்ஜிய ராணுவம், பத்திரிக்கையாளர்கள், அறிவு ஜீவிகள் போன்றோருக்கும் இதில் உள்ள பங்கும் வெளிவந்திருக்கிறது.

படுகொலைகள் புரிந்த இந்த கன்யாஸ்திரிகள் எவ்வாறு இந்தக்குழுக்களால் பாதுகாக்கப்பட்டார்கள் என்பதையும் இந்த வழக்கு வெளிக்கொணர்ந்திருக்கிறது.

***

சகோதரி ஜெர்ட்ரூட் முகங்காங்கோ Sister Gertrude Mukangango அவர்களுக்கு 15 வருடக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. சகோதரி மரியா கிஸிட்டோ முகபுடேரா Sister Maria Kisito Mukabutera அவர்களுக்கு 12 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் இருவரும் சுமார் 7000 டுட்ஸிகளை சர்ச்சுக்குள் அழைத்து ஆதரவு தருவதாகக்கூறிவிட்டு, பின்னர் ஹுடு போராளிகளை அழைத்துக்கொண்டு வந்து இந்த அகதிகளைக் கொன்றார்கள்.

மற்ற இருவரும், திட்டமிட்டு கொலை செய்ததற்க்காக 20 வருடமும் 12 வருடமும் கடுங்காவல் தண்டனை பெற்றார்கள்.

***

இந்தத் தண்டனைகள் இந்த வாரம் வழங்கப்பட்டன. இந்த விஷயம் எந்த இந்தியப்பத்திரிக்கையிலும் வெளிவரவில்லை. வெளிவந்திருந்தால் இந்த மொழிபெயர்ப்பு திண்ணையில் வந்திருக்காது.

Series Navigation