ராம்தாஸ் – சேது – திருமாவளவன் சூளுரை

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

வரதன்


தமிழகத்தில் சில பகுதிகளில் இரட்டைத் டம்ளர் முறை இருப்பதாக வரும் செய்தி கொடியது தான். அது ஒழிய வேண்டும்.

ஆனால், வன்னியரின இராமதாஸ், தேவரின சேதுராமன் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டு, அவர்களும், திருமாவளவனும் இரட்டைத் தம்ளர் முறையை ஒழிக்காவிடில்…. என்று முழக்கமிட்டது, கூடியிருந்த தலித்துகளை ஏமாற்றுவது போல் இருந்தது.

ஒரு வேளை விடுபட்டு போன ஒரு சில ஜாதியினரை தாக்க இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

மற்றபடி, வன்னிய, தேவரின சாதி ஆதிக்கம் உள்ள இடத்தில் இனி இந்த இரட்டைக்குவளை ( நமக்காவது எழுதும் போதே ‘குவளை ‘ என்று தான் வருகிறது. ஆனால் தமிழ் காக்கும் இவர்களோ ‘டம்ளர் ‘ என்று தான் சொன்னார்கள் ) முறை இருக்காது அப்படி இருந்தால் நாங்கள் நேரில் வந்து போராடுவோம் என ராமதாஸ், சேதுராமன் அறிவித்து தங்கள் ஜாதியினருக்கு கட்டளை இட்டிருக்கலாமே… ?

நமக்குத் தெரிந்து விடுபட்ட பெருவாரிவாரி இதர ஜாதியினரை, இந்த கூட்டம் சிந்திக்க வைக்கும். அதுவும் எப்படி, தஙகளின் சூழலை ஜாதிய அணுகுமுறையில் கொண்டு செல்லலாமா.. ? என்று. இந்த நாகரீகமற்ற சூழ்ச்சிக்கு மற்ற ஜாதியினர் பலியாகி விடக்கூடாது.

திருமாவளவன் குழம்பிப் போன நிலையில் உள்ளது காந்தி மீதான அவரின் தாக்குதலுக்கு ஒரு சாட்சி.

இது எப்படியிருக்கு என்றால், முதல் வகுப்பில் அ. ஆ சொல்லிக்கொடுத்த வாத்தியாரை, காலேஜ் வந்தவுடன், ‘ஏன் எனக்கு முதல் வகுப்பிலேயே ‘JAVA ‘ சொல்லிக் கொடுக்கவில்லை ‘ என்று தாறுமாறாகத் திட்டுவது போல்.

காந்தி போன்றவர்கள் அன்ற கைதூக்கி விட்டதால் தான் , திருமாவளவனால் அவரின் முதுகில் குத்த முடிகிறது.

தடுமாறிப் போன திருமாவளவனின் சிந்தனைக்கு ஒரு அடையாளம் , எந்த இயக்கம் அடிவயிற்றில் தலித்துக்களை அடிக்கிறதோ, அந்த இயக்கத்தினருடன் மேடையில் மாலை, மரியாதையுடன் தலையாட்டிக் கொண்டு.

ஆனால், அந்த இயக்கத்தினருக்கோ, கோவில் பூசையில் வெட்டரிவாள் வீசப்படுவதற்கு முன் தலையாட்டும் ஆடு போல் தான் திருமாவளவன்.

பூனை, எலி விளையாட்டு விளையாடும் இவர்கள் அடித்துக் கொள்ளும் சுயரூப நாள் தூரத்தில் இல்லை.

ஆனால், அரசியல் ரீதியாகச் சிந்தித்துப் பார்த்தால், இவர்களின் தாக்குதல் கருணாநிதி நோக்கித் தான்.

இவர்களுக்கு வரும் தேர்தலில் ஒரு நல்ல டால் வேண்டும். அதற்கு எடுக்கப்பட்ட ஆயுதம் தான், ‘தமிழ் காப்பு ‘.

தங்களின் ஜாதிய அடையாளத்தை மறைத்துக் கொள்ள இவர்களுக்கு தேவைப்பட்ட பசுத்தோல் தான் ‘தமிழ் நலன் ‘.

தமிழுக்கு கருணாநிதி செய்ததில் ஒரு சதவிகிதம் கூட இவர்கள் செய்ததில்லை. சினிமா, டி.வி, பத்திரிக்கை எனப் பலவற்றில் ஆழக்காலூன்றி உள்ள கருணாநிதி விட இவர்கள் தமிழுக்கு என்ன செய்து விட்டார்கள்.

அது தாண்டி, தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அதிக வழக்குகள், தேவர் மற்றும் வன்னிய இனத்தினர் பெருவாரியாக வாழும் பகுதியில் தான் உள்ளது. அதன் தலைவர்களை வைத்துக் கொண்டு திருமாவளவன், தலித் இரட்டை டம்ளர் முறை பற்றி சூளுரைப்பது சும்மா உணர்ச்சி தூண்டுதல் கூச்சல் தான்.

தலித்துக்களை திருமாவளவனிடமிருந்து ஆண்டவன் தான் காக்க வேண்டும்.

அதிகார மோகத்தால், எப்படியாவது ஆட்சி காண வேண்டும் என்ற மூவரின் கூட்டணி இது.

அதிலும், குழம்பிப் போன தமிழர் போல, ‘கம்யூனல் ‘ குற்றச்சாட்டுகள் வேறு. ஜாதிய இனவாத மொழி அரசியலை இவர்களும் கையில் எடுப்பது தமிழக மக்களை வளர்ச்சியடையாதவர்கள் என்ற நம்பிக்கையுடன்.

இதன் அரசியல் ஆபத்தை கருணாநிதி உணர வேண்டும்.

இவ்வளவு பேசும் இவர்கள் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தால் ஆச்சரியமில்லை. அதிலும், ஜெயெந்திரர் விஷயத்தில் சந்தோஷமாயிருக்கும் சோனியாவும் ஜெயலலிதாவுடன் சேர்ந்தால் அதிர்ச்சியுமில்லை.

அப்படியானல், தனித்து விடப் போவது திமுக மற்றும் கம்யூனிஸ்டுகள். அதிலும் திண்ணை எப்போ காலியாகும் என்று திமுக தலைமைக்கு இலவு காத்த கிளியாக உள்ள வை.கோ.

இதனைக் கருத்தில் கொண்டு, திமுக தனது அரசியல் அணுகுமுறையில் குடும்ப நலன் தாண்டி செயல்பட்டால் தான் நல்லது.

எப்படியோ, தமிழக தேர்தல் அரசியல் தொடங்கி விட்டது.

இம்முறையாவது ஜாதிய , மத அரசியில் இன்றி தமிழகத்திற்கு புதிய தலைவர் கிடைப்பாரா…. ?

— வரதன் —-

பி.கு: காந்தியின் பெயரால் அரசியல் நடத்தும் காங்கிரஸ்காரர்கள் பா.ம.க கட்சியனரை மத்திய அரசில் இருந்து தூக்குவார்களா… ?

சோனியாவின் தேசபக்திக்கு ஒரு டெஸ்ட் இந்தச் சம்பவம். பார்ப்போம், சோனியா என்ன செய்கிறார் என்று.

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்