ரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ? ‘ – நூல் அறிமுகம்

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

ஸ்ரீராம் சாவ்லியா ( தமிழில் : புதுவை ஞானம் )


இந்தியாவின் துடிப்பு மிக்க முற்போக்கு சிந்தனையாளர்களில் ஒருவரான முனைவர் ரஃபீக் ஜகாரியா போன்ற வெகு சிலரே, இந்து இசுலாமிய மத நல்லிணக்கத்துக்காண பிரதி பலன் கருதாத சாலையில் விடாப்பிடியாக நடந்து வந்துள்ளனர்.ஜகாரியாவின் பதினேழாவது நூலான இதன் ஆய்வுப் பொருளானது, இந்திய சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் இந்து -இசுலாமிய சமுதாய ஒற்றுமை குறித்து, இசுலாமிய தலைவர்கள் வகித்த இழிவான பாத்திரம் பற்றியதாக இருக்கிறது.

‘1857 -க்குப் பிந்தைய இசுலாமிய அரசியலில் ஏற்பட்ட கெடுதி என்னவெனில், இந்தியாவின் மக்கள் தொகையில் இசுலாமியர்களின் பங்கு கால் வாசி மட்டுமே என இருப்பதனால் என்றென்றும் இந்துக்களுக்கு அடங்கி நடக்க வேண்டியதாகி விடும் என்ற அச்சத்தின்

காரணமாக உருவான தாழ்வு மனப்பான்மை ஆகும் ‘என எழுதுகிறார் ,இந்நூலுக்கான முன்னுரையில்-அறிஞர்களின் சமூகத்தில் மற்றொரு அரிய மாதிரியானவரான, திரு.எம்.ஜே.அக்பர் அவர்கள். . ‘இந்திய இசுலாமியர்கள் எங்கே தவறி விட்டனர் என்றால் எப்போதெல்லாம் தமது இந்திய மூல வேர்களை மறந்து விட்டார்களோ அப்போதெல்லாம் தடுமாறி விட்டனர். ‘ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த காலத்திலும் சரி , நிகழ் காலத்திலும் சரி – இந்திய இசுலாமியத் தலைமை எடுத்த தவறான முடிவுகளின் விளைவாக , தற்போதைய இசுலாமியத் தலைமுறையினர் அனுபவிக்கும் இடர்பாடுகளை, மஞ்சு விரட்டின் போது முரட்டுக் காளையின் கொம்புகளைத் திருகி அடக்கும் அத்தகைய தீரத்துடனும் லாவகத்துடனும் அம்பலப்படுத்துகிறார் ஜகாரியா. 1940-களில் தெற்காசியக் கண்டத்தின் இசுலாமிய மேட்டுக்குடியினர் பிரிவினைக்கு வித்திட்ட முகமது அலி ஜின்னாவுக்குத் தேவைப்பட்ட அனைத்து ஆதரவினையும் வழங்கினர். 1947-க்குப் பிறகு அதே மாதிரியான மோதல் போக்கை முன்னணி இந்துக்களுக்கு எதிராக எடுத்தனர். வேற்றுமையை விரிவு படுத்தி வெறுப்பினை ஆழப்படுத்தினர்.( பக். 27 முன்னுரை ) சாமானிய இசுலாமியர்கள் யூத எதிர்ப்பு வெறி மனப்பான்மை ஊட்டப்பட்டு – காலம் கடந்த மரபுகளை விடாப்பிடியாய்க் கடைப்பிடிப்பதன் காரணத்தாலும் , மதகுருக்களான உலாமாக்கள் மீதான அச்சத்தாலும் ,தேசீய நீரோட்டத்தில் இருந்து அப்புறப் படுத்தப் பட்டனர் .

இந்து சமயத்துக்கும் இசுலாமிய சமயத்துக்கும் குணாம்சத்தில் வேறுபாடுகள் இருந்த போதிலும்,இந்திய வரலாற்றின் இடைக்காலத்தில் பிரிவினைக்கான முயற்சிகள் ஏதும் நடைபெறவில்லை. இந்துக் குடிமக்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்த போதிலும் கூட சமயத்தின் / மதத்தின் அடிப்படையில் அவர்களைப் பிரித்து வைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.சாமானிய இந்துக்களும் இசுலாமியர்களும் பெரும்பாலும் நல்லுறவு பூண்டிருந்தனர்.ஒருவர் பண்டிகையயை மற்றவரும் கொண்டாடினர்.இரு சமயங்களின் ஆளும் வர்க்கத்தினரிடையே மோதல்கள் இருந்த போதிலும் கூட ; இந்திய- அரபுக்கலைகள், இசை, இலக்கியம் , மற்றும் கட்டிடக்கலைகள் சிறப்பாகப் பரிணமித்தன.இசுலாமியக் கவிஞர்களும் தத்துவ ஞானிகளும் – பகவத் கீதையில் சொல்லப்பட்ட

மானிட விடுதலை ( முக்தி ) பற்றிய இரகசியங்கள் மீது மெய் மறந்த காதல் கொண்டிருந்தனர்.( பக்.38 ). இசுலாமியப் பாடகர்கள் இந்து தெய்வங்களான சிவனைப் பற்றியும் கிருஷ்ணனைப் பற்றியும் புகழ்ந்து பாடும் இராகங்களை வடிவமைத்துப் பாடினர்.உருது இலக்கியம் படைத்த அமீர் குஸ்ருவில் இருந்து ஹஸ்ரத் மெஹானி வரை பலரும் இந்துத் துறவிகள்- மெய்ஞானியர் மீது பெரும் மரியாதையை வெளிப்படுத்தினர்.

இந்திய ஒற்றுமையக்கு முதல் உண்மையான அச்சுறுத்தல் ஜின்னாவின் முரட்டுத்தனமான பிரிவினைக் கொள்கையிலிருந்து வந்தது . அவரது நாசகாரமான/கேடு பயக்கும் -இரு தேசக் கொள்கை – முன்னெப்போதும் இல்லாத அளவு சமையப் பிணைப்புகளில் நஞ்சூட்டியது. இசுலாமியர்களைப் பயமுறுத்துவதற்காக; உங்களை இந்துக்கள் அடிமைப் படுத்தி விடுவார்கள் அல்லது அழித்தொழித்து விடுவார்கள் என்று அவர் தொடங்கிய தவறான பிரச்சாரம்,தவறான புரிதலையும் வெறியுண்ர்வையும் பற்ற வைத்தது. ஆயிரக்கணக்கான இந்திய இசுலாமியர்கள் இந்த மத வெறியூட்டும் நச்சுக் கிருமியை எதிர்த்துப் போராடினர். பத்ருதீன் தியாப்ஜி ,ரகமதுல்லா சயானி, சிப்லி நோமனி, எம். ஏ.அன்சாரி, ஹக்கீம் அஜ்மல் கான்,ம்வுலானா ஆசாத்,அப்துல் கஃபார் கான்,ஹுசேன் அஹமத் மதானி,ரஃபி அஹமத் கித்வாய்,சையித் அப்துல்லா பரேல்வி , ஹுமாயூன் கபூஃர் போன்றவர்கள்; எல்லா மதங்களும் ஒன்றே என்னும் தத்துவத்தை உயர்த்திப் பிடித்ததனால், தமது சொந்த மதத்தினரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டனர்.இருந்தபோதிலும், ‘எல்லா பேச்சு வார்த்தைகளிலும் ஆங்கிலேயர்கள் ஜின்னாவை முன்னணியில் இருக்க வைத்ததோடு,அவரைத் தனிமைப் படுத்துவதையும்

அனுமதிக்கவில்லை. ‘ (பக்.100).பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் ‘ ஜின்னாவை ஒதுக்கி வைக்க சரியான வழி , இந்தியப் பிரிவினை தான். எந்த ஒரு வடிவத்திலான ஒன்று பட்ட இந்தியாவும் உள் நாட்டு யுத்தத்தில் தான் கொண்டு போய் விடும் ‘ என்று காங்கிரஸ் தலைவர்களை நம்ப வைத்தார். (பக்.115 )

பிரிவினைக்குப் பிந்தைய கலவரங்களில் அப்பாவி இசுலாமிய மக்களின் பாதுகாப்புக்கு பிரதமர் நேரு விரைந்து உதவினார். ‘அவரது மத வாத எதிர்ப்பானது ஒருதலைச் சார்பானதன்று , இசுலாமிய மத வாதத்தையும் அவர் தீவிரமாக எதிர்த்தார். ‘( பக்.125) சிறுபான்மையினருக்கான தனி வாக்காளர் பட்டியலையும், இட ஒதுக்கீட்டையும் அவர் எதித்தார். அவரது புதல்வியான இந்திரா இசுலாமியர்கள் சந்தித்து வரும் மனக்கிலேசம் பற்றி எப்போதுமே மிகுந்த கவலை அடைந்தார். ‘ இந்துக்களைப் போலவே இசுலாமியர்களும் இந்தியாவின் ஒன்றிணைந்த பிரிக்க முடியாத அங்கம் என்று உணரச் செய்தாலொழிய மதச்சார்பின்மையோடு அவர்களுக்கு இருக்கும் பிணைப்பு போலியானதாகவே இருக்கும்- ‘ (பக் . 199) என்பது அவரது அபிப்ராயம் ஆகும்.

பாகிஸ்தான் பிரிவினை, இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையிலான கசப்புணர்வை அகற்றுவதற்குப் பதிலாக, அதிகப்படியாகத் தூண்டி விட்டு விட்டது.1947-க்கு முன் இருந்ததை விட இந்திய இசுலாமியர்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர். ‘இந்தியாவுக்குள் அவர்களது பாதுகாப்புக்கும் நிலைப்புக்கும் பாகிஸ்தான் ஒரு நிரந்தர மிரட்டல் என்றாகி விட்டது. ‘ ‘வேதனைக்கு ஆளான வங்கத்து இசுலாமியர்கள் காலம் செல்லச் செல்ல பெரும்பாலும் இந்துக்களை உள்ளடக்கிய இந்திய ராணுவத்தால் காப்பாற்றப்பட வேண்டியவர் ஆயினர். ‘ பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் உள்ள சாமானிய இசுலாமியர்கள்

இராணுவத்தால் ஆதரிக்கப்படும் நிலப்பிரபுத்துவத்தின் இரும்புக் குளம்படியில் இன்னமும் மிதி பட்டுக் கதறுகின்றனர். ‘ (பக்.162)

‘காஷ்மீர் தகராறு குறித்து பாகிஸ்தான் விரும்புவது போன்ற ஒரு தீர்வு எட்டப்படுமானால் அது பயங்கரமான இனக்கலவரத்துக்கு வழி வகுத்து விடும் என ஜகாரியா தீர்க்கமாக வலியுறுத்துகிறார். பாகிஸ்தானியரின் வாயை அடைக்கவும் இந்தியாவுடனான காஷ்மீரத்தின் ஒன்றினைப்பைக் காப்பாற்றுவதற்கும் சிறந்த வழி காஷ்மீர இசுலாமியர்களுக்கும் இந்திய இசுலாமியர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதுதான். ‘( பக்.405 ).ஜிகாத்-புனிதப்போர் என்ற பெயரால் இந்தியக் காஷ்மீரப் பகுதியில் தொடரப்படும் பயங்கர வாதம்

இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே தொடரும் விரோதத்துக்கு பிரதான காரணம் ஆகும்.

‘ இசுலாமிய சமயத்துக்கு புத்துணர்வு வழங்கியவர் ‘ என்று போற்றப்படும்,இமாம் கசாலி, ‘இசுலாமியர்கள் பயங்கர வாதத்தை ஒழிக்காவிட்டால்- பயங்கரவாதம் இசுலாமியர்களை ஒழித்து விடும் ‘ என்று கூறுவதை ஜகாரியா சுட்டிக் காட்டுகிறார். பயங்கர வாத நடவடிக்கைகளைக் கண்டு இறுமாப்பில் நகைப்பதும், கொண்டாட்டங்கள் நடத்துவதும் ‘ முற்றிலும் மடத்தனமானதும் பைத்தியக்காரத்தனமானதும் ஆகும் ‘ என்கிறார் அவர்.

இசுலாமியர்களின் சமூக- பொருளாதார நிலைமை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை விட மோசமானதாக இருக்கிறது.கல்வியில் உள்ள பின்னடைவைப் பொறுத்தவரை முஸ்லீம்கள், அரசு இரு சாராருமே குற்றவாளி ஆகின்றனர். கல்வி முன்னேற்றத்துக்கான பொதுவான வசதிகளைப் பயன் படுத்த அவர்கள் தவறி விடுகின்றனர். பர்தா அணிவதும் கல்வி பற்றிய அச்சமும் மதச்சார்பற்ற உலகில் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தைத் தடை செய்து விடுகின்றன. இந்திய இசுலாமியர்கள் தினம் தினமும் இந்துக்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என ஜகாரியா வற்புறுத்துகிறார். ‘ இந்திய இசுலாமியர்களுக்கான இடம்

இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறது .எனவே இந்திய விவகாரங்களில் போக்குகளில் சமூகப்பண்புகளில் சடங்குகளில் மரபுகளில் உணர்வு பூர்வமான பங்கு ஏற்க வேண்டும் ‘ என வற்புறுத்துகிறார். ( பக்.450 )

பகைமையை அன்பினால் தான் வெல்ல முடியும். மக்கள் தொகையில் தம்மை விட மிஞ்சி விடுவார்கள் என்ற பொதுவானதொரு அச்சம் இந்துக்கள் மத்தியில் நிலவுகிறது.எனவே, இசுலாமியர்கள் பலதார மணத்தைத் தவிர்த்து தீவிரமான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், என ஜகாரியாவேண்டுகோள் விடுக்கிறார் தலாக் சொல்லி விவாகரத்து செய்வதும் ஹாஜிக்களுக்கு மானியம் வழங்குவதும் தடை செய்யப்பட வேண்டும். இனக்கலவர குரோத மனப்பான்மையைத் தக்க வைக்கும் சையத்சகாபுதின் , இமாம் புகாரி போன்றவர்களின் ,நெருப்புக்கோழி போல் மண்ணுக்குள் தலை புதைத்துக் கொள்ளும் போக்கு, இசுலாமியர்களுக்குத் தீங்கு பயப்பதாகும்.மறுபுரம் இந்துக்களோ , தள்ளிவிட / அசட்டை செய்ய முடியாத 150 மில்லியன் இசுலாமியர்களுடன் வாழவேண்டி உள்ளது. இசுலாமியர்களை ஒழித்துக் கட்டுவோம் என்று இந்துத்துவத்துக்காக வரிந்து கட்டிக் கொண்டு வரும் சண்டியர்களின் மிரட்டல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

வரலாற்று நாயகர்களின் முற்போக்கான கருத்துக்கள் சிலவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் மனதில் படிந்திருக்கும் சிலந்தி வலைகளை அப்புறப்படுத்தித் தூய்மைப் படுத்த முடியும். மராத்திய மாவீரரான சிவாஜி தனது இராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கு இசுலாமிய சிப்பாய்களைப் பணிக்கு அமர்த்தி இருந்தார்.

அவரது கடற்படையின் தலைமைத் தளபதி ஒரு இசுலாமியராவார். எந்த ஒரு போரிலும் வெற்றி பெற்றவுடனே அவர் பிறப்பித்த முதல் ஆணை – மசூதிகளையும் தர்காக்களையும் யாரும் சேதப்படுத்தக்கூடாது என்பதாகும். ஆங்கிலேய ஆளுநர்களை விட அவர் சகிப்புத் தன்மை உடையவராகவும் முற்போக்காளராகவும் இருந்தார். (பக்.315 )மனித குல சீர்திருத்த வாதியான துறவி விவேகானந்தர் , கிராமப்புறங்களில் நிலவிய இந்து-இசுலாமிய ஒற்றுமையில் தான் இந்தியாவின் உண்மையான ஒற்றுமை இருப்பதைக் கண்டார். ‘வேதாந்த மூளையும் இசுலாமிய உடலும் ஆன இரு அமைப்புகளின் சங்கமம் தான் நம்பிக்கை தரும் ஒரே வழி ‘ என வலியுறுத்தினார்.(பக்.327)

குரோத அரசியல் இந்தியாவின் உயிர் ஆற்றலை அரித்துத் தின்று கொண்டு இருக்கிறது. சமீபத்தில் குஜராத்தில் நடந்தேறிய மதக்கலவரங்களின் கொடூரம் இதை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது. மின்னணு ஊடகங்களில் இசுலாமிய கருத்துக்களை அலட்சியப் படுத்தும் போக்கு ஆழமாக வேரூன்றி இருப்பதனை ஜ்காரியா வன்மையாகச் சாடுகிறார். முல்லாக்களும் முரடர்களும் வெளிப்படுத்தும் கருத்துகளுக்கு மட்டு மீறிய விளம்பரம் தருகின்றன இந்த ஊடகங்கள். ‘ஒரு இசுலாமியர் பிற்போக்குத் தனத்தை வெளிப்படுத்தினால் அது செய்தி ஆகிறது.அவரே முற்போக்கான கருத்தை வெளிப்படுத்தினால் அது செய்தி ஆவதில்லை. ‘ (பக்.327 )இந்து இசுலாமிய உறவுகளை வளர்ப்பதற்குத் தடையாக இருக்கும் முக்கியமான விஷயம் மதக்கலவரம் ஆகும்.அரசும் அரசியல் கட்சிகளும் இவற்றை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கிறார்களே ஒழிய எல்லா மதத்தைச் சார்ந்தவர்களுக்குமான பொருளாதார வாழ்க்கை பற்றியதாகப் புரிந்து கொள்வதில்லை.

இந்திய இசுலாமியர்கள் தெள்ளத்தெளிவான நடுத்தர வர்க்கமாக அல்லாமல் கசாப்புக் கடை உணவுக்கடை நடத்துபவர்களாகவும், நீர் சேந்தி வருபவர்களாகவும் சோர்வுற்றுக் கிடக்கிறார்கள்.மனத் திடத்தை வலுப்படுத்தி சுய சார்பு உடையவர்களாக மாற வேண்டும் அவர்கள். ‘யாசகம் கேட்பதை நிறுத்த வேண்டும்….வள்ளல்களின் ஆதரவை நாடக்கூடாது. ‘ (பக்.427 ) என ஜகாரியா அவர்களைக் கேட்டுக் கொள்கிறார். ‘பயங்கர வாதிகளின் ஆயுதங்களைக் களைவதன் மூலமும் , மத வெறியைக் கை விடுவதன் மூலமும் ‘ அந்தச் சமுதாயத்தின் மனப்பான்மை முற்றமுழுக்க மாற்றப்பட வேண்டும். (பக்,464) இந்திய இசுலாமியர்களின் கண்ணோட்டத்தில் கடலளவு பெரு மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

சூஃபி மகான் ஜலாலுதீன் போன்றவர்களின் உபதேசங்களை ஒப்பு நோக்கி.மத மாச்சரியங்களையும் குறுகிய மனப்பான்மையையும் வென்றெடுக்க வேண்டும்.அவர் பாடினார் :

‘இன்னும்கேளுங்கள் :

நேசத்தை நேசிப்பவன் நான் -எனது

நேசம் எல்லா சமயக் கோட்பாடுகளையும்

கடந்து செல்வதாகும் ! ‘

இவ்வாறு உருது,பெர்சியன்,இந்திக் கவிதைகளின் மேற்கோள்கள் விரவிய ஜகாரியாவின் புலமை வாய்ந்த இந்நூல் இந்திய இசுலாமியர்களின் வரலாற்றுப் பயணத்தில் மற்றொரு மைல்கல் என்று போற்றப்படும் அளவு தகுதி வாய்ந்தது.

Indian Muslims :Where they have gone wrong ?

By. Rafiq Zakaria

Bharatiya Vidhya Bhavan

Mumbai. Oct.2004.


Series Navigation